இந்த ரெய்டு திங்கள்கிழமை நடக்கப் போகிறது என சனிக்கிழமையே ஒரு வருமான வரித்துறை அதிகாரி தகவல்களை கசிய விட்டார். அதன்பிறகு வருமான வரித்துறை கூடுத;ல் கமிஷன ராக இருப்பவருக்கு கொரோனா வந்துவிட்டது என்பதால் நடவடிக்கை எதுவும் இருக்காது என தகவல் பரவியது. இவையெல்லாம் ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் இருக்கும் பணம் எப்படி வெளியே செல்கிறது என்பதைக் கண்காணிக்க வருமான வரித்துறை மேற்கொண்ட நடவடிக்கை. திங்கள் கிழமை காலை ஆறு மணிக்கு சென்னை, திருச்சி, ஹைதராபாத், பெங்களூர் உட்பட அறுபதுக்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் குவிந்தனர்.
அண்ணா நகர் தி.மு.க. எம்.எல்.ஏ. மோகன் மகன் கார்த்திக் நிறுவனத்தின் ஆடிட்டர் சண்முகராஜ், சபரீசனின் உறவினர் பிரவீன், அ.தி.மு.க.வைச் சேர்ந்த இசக்கி சுப்பையாவின் மகன் கார்த்திக் என தி.மு.க.வினரை குறிவைத்து இந்த ரெய்டு நடத்தப்பட்டது. இந்த ரெய்டைக் கண்டித்து அண்ணா நகர் கார்த்திக் வீட்டின் முன்பு தி.மு.க.வினர் திரண்டார்கள்.
ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் தலைவர் பாலா ராமஜெயம், திருப்பூரில் பேபி எலக்ட் ரானிக்ஸ் என்கிற கடையை அ.தி.மு.க. ஆட்சியின்போது ஆரம்பித்தார் அதில் பொதுமக்கள் பணத்தை போலி விளம்பரங்கள் மூலம் ஏமாற்றினார். அதன்பிறகு கோவை பகுதியில் உள்ள லட்சுமி மில்ஸ் என்கிற மில்லின் சொத்துக்களை மோசடி செய்தார் என இவர் மீது அ.தி.மு.க. ஆட்சி யிலேயே மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அ.தி.மு.க. ஆட்சியுடன் நெருக்கமாக இருந்த இவர் தி.மு.க. ஆட்சி வந்ததும் தி.மு.க.வினருடன் நெருக்கமாகிவிட்டார். அ.தி.மு.க. ஆட்சியில் ஐம்பது கோடி அளவில் வணிகம் செய்துவந்த ஜிஸ்கொயர், தி.மு.க. ஆட்சியில் முப்பதாயிரம் கோடி ரூபாய்க்கு வணிகம் செய்துவருகிறது என குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்தக் குற்றச்சாட்டு களை பா.ஜ.க.வின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் வெள்ளிக்கிழமை டெல்லியில் வெளிப்படுத்தினார். அதைத்தொடர்ந்து திங்கள்கிழமை ரெய்டு பாய்ந்தது. ரெய்டு பற்றிய விபரங்கள் குறித்து வருமான வரித்துறை தெளிவான விளக்கம் தர இருக்கிறது.
ஸ்டாலின் மருமகன் சபரீசன்மேல் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க இருக்கிறது. அவரது வீட்டில் ஏற்கெனவே ஒருமுறை வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது. இம்முறை அமலாக்கத்துறை, சி.பி.ஐ. உட்பட அனைத்து மத்திய அரசு நிறுவனங்களும் பாய்வதற்கு தயாராக உள்ளது என தகவல்கள் அவ்வப்போது டெல்லியில் இருந்து வந்துகொண்டிருந்தன. தற்பொழுது ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் மீது வருமான வரித்துறை பாய்ந்திருக்கிறது.
அடுத்த கட்டமாக அமலாக்கத்துறை, சி.பி.ஐ. என மத்திய அரசு நிறுவனங்கள் தி.மு.க.வினர் மீது பாயும் என்கிறது மத்திய அரசு வட்டாரங்கள். கர்நாடகத் தேர்தலில் மிகக்கடுமையான தோல்வியை பா.ஜ.க. சந்திக்கிறது என்பதால் 2024ல் நடக்கும் பாராளுமன்றத் தேர்தலில் இருபது சீட்டுகளை பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணி வெல்வ தற்கு வாய்ப்பிருக்கிறது என்பதை கணக்குப் போட்டே தி.மு.க.வின் இமேஜைக் கெடுக்கும் ரெய்டு நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கி யுள்ளது என்கிறது பா.ஜ.க. வட்டாரங்கள். பா.ஜ.க. வின் இந்த முயற்சிகளுக்கு தமிழகத்தில் உள்ள ஐ.ஏ .எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் துணை நிற்கிறார்கள்.
தமிழக காவல்துறையின் உயர்பொறுப்பில் இருக்கும் ஒருவர் தினமும் அரைமணி நேரத்திற் கொருமுறை அண்ணாமலையுடன் பேசுகிறார். உள்துறையின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் அதிகாரி, தி.மு.க.வை எதிர்க்கும் நபர்களுடன் தொடர்பு வைத்துள்ளார். அந்தத் தொடர்பின் காரணமாகத்தான் சமீபத்தில் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் வெளியிட்ட "துணிவு' படத்தின் சிறப்புக் காட்சிகளை எப்படி வெளி யிட்டீர்கள்? என தியேட்டர் அதிபர்களுக்கு நோட்டீஸ் பறந்தது. தமிழகத்தில் பவர் ஃபுல்லாக இருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரி எனக்கு ஆபாச மெசேஜ்களை அனுப்புகிறார் என ஒரு பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமைச் செய லாளருக்கு புகார் அளித்தார். அந்த பவர்ஃபுல் அதிகாரி யின் சேட்டைகளை மத்திய புலனாய்வு நிறுவனம் படமாக எடுத்து தலைமைச் செயலாளருக்கு அனுப்பி வைத்தது என ஒரு செய்தி சில மாதங்களுக்கு முன்பே வெளிவந்தது.
என்னுடைய தனிப் பட்ட வாழ்க்கையில் மத்திய அரசு தலையிடுகிறது என அந்த பவர்ஃபுல் அதிகாரி தனது பதவி விலகல் கடி தத்தை தலைமை செயலாள ருக்கே அனுப்பிவிட்டார். தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு பிரிவில் இருக்கும் அதிகாரிகள், கடலோர காவல் பிரிவில் இருக்கும் ஒரு அதிகாரி என எல்லோ ருமே கவர்னர் ஆர்.என். ரவியுடன் தொடர்பில் இருக்கிறார்கள். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான அதிகாரிகள் பலர் தி.மு.க. ஆட்சியிலும் பவர்ஃபுல்லாக இருக்கிறார்கள் இவர்கள் அனைவரும் பா.ஜ.க.வுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்கிறது கோட்டை வட்டாரங்கள்.
___________
இறுதிச் சுற்று!
ஏப்ரல் 24, திங்களன்று சென்னையிலுள்ள செட்டிநாடு குழும நிறுவனங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். செட்டிநாடு குழுமத்துக்குச் சொந்தமான 6-க்கும் மேற்பட்ட இடங்களில் காலை முதலே தொடர்ந்து சோதனை நடைபெற்றது. சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் செட்டிநாடு குழுமத்தின் மீது பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த எஃப்.ஐ.ஆர். அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இக்குழுமத்தில் ஏற்கனவே 2015, 2020ஆம் ஆண்டுகளிலும் ரெய்டு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.