தி.மு.க.வினருக்கு நெருக்கமான ஜி-ஸ்கொயர் ரியல் எஸ்டேட் நிறுவனம் தொடர்புடைய இடங்களில் மூன்று நாட்களாக நடந்த வருமானவரித்துறை சோதனை, அதிகபட்ச பரபரப்புகளை ஏற்படுத்தி ஓய்ந்திருக்கிறது.
"எங்கள் நிறுவனத்துக்கும் தி.மு.க.வுக்கும் சம்மந்தமில்லை என்று ஜி-ஸ்கொயர் நிறுவனத்தின் உரிமையாளர் பாலா கூறினாலும், இரு தரப்புக்கும் உண்டான தொடர்புகள் குறித்த ஆதாரங்களை வைத்துக்கொண்டுதான் இந்த சோதனையை நடத்தியிருக்கிறது' என்கிறார்கள் வருவாய் புலனாய்வுத் துறையினர். ஜி-ஸ்கொயரில் நடந் துள்ள ரெய்டு தி.மு.க. தலைமைக்கு நெருக்கடியை கொடுத்திருக்கும் சூழலில், வருமானவரித்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, "எங்கள் துறையினர் நடத்தியிருக்கும் இந்த ரெய்டு, தி.மு.க. தலைமையை குறிவைத்து நடத்தப்பட்டதுதான். டெல்லியோடு தி.மு.க.வுக்கு இருக்கும் தொடர்புகளைப் பொறுத்து, இதன் விளைவுகளில் மாறுபாடு இருக்கும். ரெய்டுகள் இத்தோடு நின்றுவிடாது''’என்று புதிர் போடுகிறார்கள்.
மேலும் நாம் விசாரித்தபோது, "ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில் பிரபலமாக இருந்த ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில்தான் அன்றைக்கு அமைச்சர்களாக இருந்த நத்தம் விஸ்வநாதன், ஓ.பி.எஸ். உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் பலரும் தங்களின் கருப்புப் பணத்தை முதலீடு செய்திருந்தார்கள். ஜெயலலிதாவுக்கு தெரியாமல் சசிகலா தரப்பும் முதலீடு செய்திருந்தது. அந்த நிறு வனத்தின் மூலம் வெளிநாடுகளில் கோடிக்கணக்கான தொகை முதலீடானது. இதனை மோப்பம் பிடித்த எங்கள் துறை, அந்த நிறுவனத்தின் மீது ரெய்டு நடத்தி அன்றைய ஜெயலலிதாவுக்கு சிக்கலை ஏற்படுத்தியது. டெல்லியில் தனக்கிருந்த லாபி மூலம் சிக்கலை சரி செய்தார் ஜெயலலிதா.
அதேபோல எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் நிதித்துறை மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தார் ஓ.பி.எஸ். சம்பாதிக்க வேண் டும் என்பதற்காகவே வீ.வ.துறையை மல்லுக்கட்டி வாங்கினார். அவரது கட்டுப்பாட்டில்தான் கோடி களில் கொழிக்கும் சி.எம்.டி.ஏ. துறையும் இருந்தது. எடப்பாடி ஆட்சியில் திடீரென அசுர வளர்ச்சி யடைந்தது ஓ.பி.எஸ்.ஸின் பினாமி என சொல்லப் படும் "பாஷ்யம் கன்ஸ்ட்ரக்ஷன்' எனும் ரியல் எஸ்டேட் நிறுவனம். ஓ.பி.எஸ்.ஸின் கோடிகள் இதில் முதலீடுகளாக குவிந்தன. சி.எம்.டி.ஏ.வில் பாஷ்யம் வைத்ததுதான் சட்டமாக இருந்தது. அந்த நிறுவனத்தின் கோப்புகளுக்கு எந்த தடையு மின்றி அனுமதி கிடைத்தது. அப்போதுதான், தற்போ தைய அண்ணாநகர் தி.மு.க. எம்.எல்.ஏ. மோகனின் மகன் கார்த்தியும் ஜி-ஸ்கொயர் பாலா ராமஜெய மும் நெருங்கிய நண்பர்களானார்கள். பாலாவை வைத்து ஜி-ஸ்கொயர் நிறுவனம் தொடங்கப்படு கிறது. உதயநிதி, சபரீசன் இருவரிடமும் கார்த்திக்கு நல்ல நட்பு உண்டு. ஜி-ஸ்கொயர் நிறுவனத்தின் பாலாவை இருவருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தவர் அண்ணாநகர் கார்த்திதான்.
எடப்பாடி ஆட்சியில் ஜி-ஸ்கொயர் சம்பந்தப்பட்ட விண்ணப்பம் எதுவும் அவ்வளவு எளிதாக க்ளியர் ஆகாது. இந்த நிலையில்தான், ஆட்சியைப் பிடிக்கிறது தி.மு.க. ஜி-ஸ்கொயர் அசுர வளர்ச்சி அடைகிறது. அ.தி.மு.க. ஆட்சியில் பாஷ்யம் எனில், தி.மு.க. ஆட்சியில் ஜி-ஸ்கொயர்.
சென்னை மட்டுமல்லாமல் தமிழகத்தின் முக்கிய நகரங்கள், கர்நாடக-ஆந்திரா மாநிலங்கள் என ஜி-ஸ்கொயரின் சாம்ராஜ்ஜியத்தை கார்த்தியும் பாலாவும் ஏகத்துக்கும் விரிவுபடுத்துகிறார்கள். தான் விரும்பும் நிலங்களில் ரியல் எஸ்டேட் தொழிலை ஜி-ஸ்கொயர் கட்டமைக்க, அந்த நிலங்களுக்கு மட்டுமே குறுகிய காலங்களில் அப்ரூவல் கிடைக்கிறது.
நட்டத்தில் இயங்கியதாக கணக்கு காட்டப் பட்ட ஜி-ஸ்கொயர் நிறுவனம் கடந்த 2 ஆண்டு களில் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டுகிறது. அதா வது, ஒரு லட்சம் முதலீட்டில் 2017-ல் தொடங்கி யிருக்கிறது இந்த நிறுவனம். இதன் இயக்குநரான பாலா, ஜி-ஸ்கொயர் மட்டுமல்லாமல் வேறு 48 நிறுவனங்களில் இயக்குநராக இருக்கிறார். குறுகிய காலத்தில் எப்படி 48 நிறுவனங்களுக்கு இயக்குந ரானார் என்பதுதான் வருமானவரித் துறையின் முதல் சந்தேகம். இந்த நிறுவனம் 2020-ல் காட்டியுள்ள கணக்குகளில் நீண்டகால கடன், குறுகியகால கடன், இதர கடன்கள் என சுமார் 12 கோடி ரூபாயை கடன்களாகவும், சொத்து மதிப்பு 70 லட்சம் என்றும் காட்டியிருக்கிறது. அதேபோல, 2021-ல் சுமார் 22 கோடி ரூபாய் கடன்களாகவும், சொத்து மதிப்பு 50 லட்சமாகவும் கணக்கு காட்டியுள்ளது ஜி-ஸ்கொயர்.
ஆனால் இந்த நிறுவனம் 2020-ல் நீண்ட காலம் மற்றும் குறுகிய காலம் என முன்பணமாக வும் கடனாகவும் சுமார் 31 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறது. அதேபோல 2021-ல் 114 கோடி ரூபாய் கொடுத்துள்ளது. அதேசமயம், 2017 முதல் 2021 வரையிலான 5 ஆண்டுகளில் 2,210 கோடி நட்டம் ஏற்பட்டதாக கணக்கு காட்டியிருக்கிறது ஜி-ஸ்கொயர் நிறுவனம்.
இப்படி நட்டத்தில் இயங்கியதாக காட்டப் பட்ட இந்த நிறுவனம், கடந்த 2 ஆண்டுகளில் பல நூறு கோடி லாபம் ஈட்டியதாக கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில்தான் ஜி-ஸ்கொயர் நிறுவனம், அதன் உரிமையாளர் பாலா, இவரது ஆடிட்டர் சண்முகராஜ், அண்ணாநகர் கார்த்தி உள்பட இந்த நிறுவனத்தோடு சம்மந்தப்பட்டவர் களின் 50 இடங்களில் இந்த ரெய்டு நடத்தப் பட்டது.
நடத்தப்பட்ட ரெய்டில் பல ஆவணங்களை கைப்பற்றியிருக்கிறார்கள் எங்கள் அதிகாரிகள். அந்த ஆவணங்களின் அடிப்படையில் சம்மந்தப் பட்டவர்கள் அனைவரையும் நேரில் அழைத்து விசாரணை நடத்த எங்கள் அதிகாரிகள் முடிவு செய்திருக்கிறார்கள். அந்த நடவடிக்கையை எப்போது தொடங்க வேண்டும்'' என டெல்லியிலிருந்து உத்தரவு வரும்..
ரியல் எஸ்டேட் தொழில் நிறுவன வட்டாரங்களில் விசா ரித்தபோது, தமிழகத்தின் நீண்டகால தொழில் குடும்பத்தின் வாரிசான வினோத் என்பவர் லீகல்-இல்லீகல் நிலங்கள் எது வானாலும் அது குறித்த சட்ட நுணுக்கங்களை அறிந்தவர். வழக்குகளுக்கு கவலைப்படாதவர். அண்ணாநகர் கார்த்தியின் நன்பரான வினோத் மூலம் ஜி-ஸ்கொயருக்கான நிலங்கள் கண்டறியப்பட்டு, பேச்சுவார்த்தை மூலம், சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர் பெயரிலேயே ஒரு அக்ரீமெண்ட் போட்டு, அவர்கள் பெயரிலேயே நிலங்களுக்கு ப்ளாட் அப்ரூவல் வாங்கி விற்பனை செய்வது இவர்களின் சூட்சுமம். அந்த வகையில், சென்னை யில் கிழக்கு கடற்கரை சாலை, ஐ.டி.காரிடரான பழைய மாமல்லபுரம் சாலை ஆகிய இடங்களில் உள்ள நிலங்களை பேசி ஜி-ஸ்கொயருக்கு வாங்கி கொடுத்து வருகிறார். தன் பிசினஸுக்கு சபரீசன் பெயரையும் அதிகாரிகளிடம் பயன்படுத்துவது வினோத்தின் வழக்கமாம்.
தமிழ்நாடு அரசின் வருவாய் நிர்வாக ஆணையத்துறை அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்கள், கோட்டாச்சியர்கள், தாசில்தார்கள், காவல்துறையினர் என அனைவருமே ஜி-ஸ்கொயர் டீமுக்கு உதவி இருக்கிறார்கள். கிழக்கு கடற்கரை சாலையில் நிலம் வைத்திருக்கும் வி.ஐ.பி.க்கள் பலருக்கும் இதன் தாக்கம் புரியும்''” என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.
ஜி-ஸ்கொயரை மையப்படுத்தி ரெய்டை நடத்தி முடித்திருக்கும் வருமான வரித்துறை, வினோத் தொடர்பான ஆதாரங்களையும் திரட்டியுள்ளது. தற்போது லண்டனிலுள்ள வினோத், சென்னை திரும்பியதும் அவரிடம் தங்களின் கிடுக்கிப்பிடி விசாரணையை நடத்த முடிவு செய்துள்ளது வருமானவரித்துறை.
பா.ஜ.க.வுக்கு அடங்கிப் போகாத அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் ஆட்சியாளர் களுக்கு எதிராக ரெய்டு என்கிற அஸ்திரத்தை ஏவி மிரட்டிப் பார்க்கும் ஒன்றிய அரசு, நாடாளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க.வுக்கு அதிகபட்ச நெருக்கடியை உருவாக்கப் போகிறது. முதல்வர் மு.க. ஸ்டாலினும் அவரது குடும்ப உறவுகளும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம் இது'' என்கிறார்கள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்.