ன்றிய அரசு, கடந்த 2009-ஆம் ஆண்டு, கல்வி பெறும் உரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்தது. அச் சட்டத்தின்(RTE Act) அடிப்படை யில், தமிழ்நாட்டில் 23.08.2010 முதல் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாகப் பணி நியமனம் பெறுபவர்கள், தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வில் (TNTET) தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம் என்ற ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதன்படி 2011 முதல், ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சியானவர்கள் மட்டுமே அரசுப் பள்ளிகளில் பணிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டனர். ஆனால், அரசு உதவி பெறும் பள்ளிகளைப் பொறுத்தவரை, தமிழக பள்ளிக்கல்வி இயக்குனரின் 16-11-2012-ஆம் தேதியிட்ட செயல்முறை அறிவிப்பில்தான் இங்குள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு, தகுதித் தேர்வின்படி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது கொண்டுவரப்பட்டது. இடைப்பட்ட காலத்தில், அரசு உதவி பெறும் பள்ளிகளில், 2011, 2012-ம் ஆண்டுகளில் 1,454 ஆசிரியர்களும், 2013-ம் ஆண்டில் 46 ஆசிரியர்களும் ஆக மொத்தம் 1,500 ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாமலேயே நியமிக்கப்பட்டனர்.

teachers

அப்படி நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், அடுத்த ஐந்தாண்டுகளில் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்வெழுதி, தேர்ச்சி பெற வேண்டுமென்று நிபந்தனை வைக்கப்பட்டது. ஆனால் அந்த ஐந்தாண்டு காலத்தில் பத்து முறை நடத்தப் பட்டிருக்க வேண்டிய தகுதித்தேர்வு, மொத்தமே 3 முறை தான் நடத்தப்பட்டது. இத்தேர்வில், அவரவர் சப்ஜெக்ட்டில் 100% மதிப்பெண்களைப் பெற முடிந்த அவர்களால், மற்ற பாடங்களில் நன்முறையில் தேர்ச்சிபெற இயலவில்லை. எனவே இந்த 1,500 ஆசிரியர்களும் கடந்த பத்தாண்டுகளாக, தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத நிலையிலேயே பணியில் தொடர வேண்டியிருந்தது.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியிடங்களுக்கு பெரிய அளவில் பணம் விளையாடுவது அனைவரும் அறிந்ததே. அந்த எதிர்பார்ப்பில் கடந்த அ.தி.மு.க. அரசில் நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக இங்கே ஆசிரியர்களை நியமித்துள்ளார்கள். அதுதான் தற்போது அந்த ஆசிரியர்களைச் சிக்கலுக்குள் ஆழ்த்தியிருக்கிறது. ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெறாத ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி அல்லது சிறப்புத் தேர்வு விரைவில் நடத்தப்படும் என்று 2020 பிப்ரவரி மாதம், அப்போதைய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உறுதியளித்திருந்தார். அதையும் செயல்படுத்தாத தால் தற்போது இவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளது. டெட் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு தீர்வு காணும்படி தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சரை, தமிழ்நாடு ஆசிரியர் சங்க தலைவர் பி.கே.இளமாறன் தலைமையில் கோரிக்கை வைத்தனர்.

பத்தாண்டுகளுக்கு மேலாகியும் கடந்த ஆட்சியில் சம்பள உயர்வு அளிக்கப்படாததை எதிர்த்து பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் போடப்பட்டன. போதிய அவகாசம் வழங்கியும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஊதிய உயர்வு பெற உரிமையில்லை என்று அரசுத் தரப்பில் வாதாடப்பட்டது. மொத்தமே 5 முறைதான் தகுதித்தேர்வு நடத்தப்பட்டதாக மனுதாரர்கள் வாதிட்டனர். இருதரப்பு வாதங்களும் நிறைவுபெற்ற நிலையில், "கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என அறிவித்து 12 ஆண்டுகள் கடந்தும் தகுதி பெறாத ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு பெற உரிமையில்லை" என்று தீர்ப்பளித்தது, 1,500 ஆசிரியர்களின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கி யுள்ளது.

Advertisment

teachers

இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் தலைவர் இளமாறன் கூறுகையில், "டெட் தேர்வு பற்றிய புரிதல் இன்றி பணி நியமனத்திற்கு அனுமதி அளித்ததால் தற்போது வரை சுமார் 1500 ஆசிரி யர்கள் பாதிக்கப்பட்டுள்ள னர். தமிழக பள்ளிக்கல்வி இயக்குனர் 2012-ஆம் ஆண்டில் வெளிட்ட உத்தரவில், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் களுக்கும் டெட் தேர்வு கட்டாயம் என்று கூறப்பட்டது. அதனால், அதற்கு முந்தைய இரண்டாண்டுகளில் பணி நியமனம் செய்யப்பட்ட சுமார் 1500 அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு தற்போது உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பேரிடியாக அமைந்துள்ளது. அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு தேர்விலிருந்து விலக்களிக்குமாறு கடந்த 10 ஆண்டுகளாக அரசிடம் தொடர்ந்து தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வலியுறுத்தி வந்தோம். ஆனால் அப்போதைய கல்வி அமைச்சர், ஒவ்வொரு முறையும் ஆசிரியர்களை கைவிட மாட்டோம் என்று கூறிவந்தார். ஆனால் இறுதியில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களைக் கைவிட்டது வேதனையளிக்கிறது.

தற்போது நீதிமன்றத் தீர்ப்பினால், தேர்ச்சிபெறாத ஆசிரியர்கள் பணியில் நீடிப்பது கேள்விக்குறியாகியுள்ளது. இந்தியா விற்கே முன்மாதிரியாக முதல்வராகத் திகழும் தமிழக முதலமைச்சர், கருணை அடிப்படை யில் நல்ல அறிவிப்பை வெளியிடுவார் என்ற நம்பிக்கையிலிருக்கும் பாதிக்கப்பட்ட ஆசிரியர் களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றும்படி தமிழக முதல்வரை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறோம்" என்றார்.

முந்தைய அரசை நம்பி பணியில் சேர்ந்து பரிதவிக்கும் ஆசிரி யர்களைக் கரையேற்றுமா தற்போதைய அரசு?

Advertisment