அரசியல் கட்சிகளும், மாநில அரசுகளும் ஏழை எளிய மக்களுக்கு வழங்கும் இலவசங்கள், அதற்கான அறிவிப்புகள், மானியங்கள் தான் தற்போது நாடு தழுவிய பேசுபொருளாகியுள்ளது. சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய பிரதமர் மோடி, தனது பேச்சின் ஒரு பகுதியாக, "சுயநல அரசியலில் ஈடுபடுபவர்கள் யார் வேண்டுமானாலும் வந்து இலவசமாக பெட்ரோல், டீசல் அறிவிக்கலாம். இத்தகைய நடவடிக்கைகள், நமது குழந்தைகளிடம் இருந்து உரிமைகளைப் பறிப்பதுடன், நாடு தன்னிறைவு பெறுவதைத் தடுக்கும். நேர்மையாக வரி செலுத்துபவர்கள் மீது சுமையை ஏற்றிவிடும். புதிய தொழில்நுட்பங்களில் முதலீடுகளையும் தடுக்கும்'' என்றெல்லாம் இலவச, மானியத் திட்டங்களின்மீது கடுமையான விமர்சனத்தை வைத்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/freethings.jpg)
மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்தே மானியங்களை ஒழித்துக்கட்டுவதில் தீவிரம் காட்டினார். அதற்கு உலக வங்கியின் நிபந்தனை முக்கிய காரணமாக அமைந்தது. கேஸ் சிலிண்டருக்கு வழங்கப்பட்டுவந்த மானியம், 500 ரூபாய் என்ற அளவிலிருந்து கொஞ்சம் கொஞ்ச மாகக் குறைந்து தற்போது பூஜ்ஜியத்துக்கு அருகே வந்துவிட்டது. மானியத்தை விட்டுக்கொடுக்க வேண்டுமென்றும் கோரிக்கை வைத்திருந்தார். ஆனால் அதேவேளை, ஏழைகளுக்கு இலவச கேஸ் சிலிண்டர்கள் வழங்கும் திட்டத்தை அவர் கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் அத்திட்டத்திலுள்ள குறைபாடுகள் காரணமாக அதனைப் பயன்படுத்தும் பொதுமக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவருவதை புள்ளிவிவரங்கள் காட்டின.
இந்நிலையில் பா.ஜ.க.வைச்சேர்ந்த மூத்த தலைவர் அஸ்வினி குமார், உச்ச நீதிமன்றத்தில், இலவசத் திட்டங்களுக்கு எதிராக ஒரு பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில், அரசியல் கட்சிகள் இலவசங்களை தேர்தல் வாக்குறுதிகளாக வழங்க கூடாது என்றும், அப்படி வழங்கினால் தேர்தல் ஆணையம் அந்த கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யவேண்டும் என்றும் கேட்டிருந்தார். இவ்வழக்கை ரத்து செய்ய வேண்டுமென்று ஆம் ஆத்மி கட்சி எதிர் மனுத்தாக்கல் செய்திருந்தது.
இந்த வழக்கு விசாரணையில் கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி, இலவசங்களை அறிவிக்கும் கட்சிகளின் பதிவை ரத்து செய்வது ஜனநாயக விரோத செயல் என்றும், அதனை பரிசீலிக்க மாட்டோம் என்றும் குறிப்பிட்டார். இவ்வழக்கில், தி,மு.க. சார்பாக, வழக்கறிஞரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வில்சன் ஆஜராகி இடையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில், "இந்தியா என்பது சோசலிச நாடு. இதனை மத்திய அரசு முதலாளித்துவ நாடாக மாற்ற முயற்சிக்கிறது' என்று குற்றம்சாட்டினார். மேலும், மாநிலக் கொள்கைகளின் வழிகாட்டு நெறிமுறைகளை தடுப்பதாக ரிட் மனு உள்ளதாகக் குறிப்பிட்டார்.
வழக்கு விசாரணை, இலவச அறிவிப்புகளுக்குச் சாதகமாகச் செல்வதை உணர்ந்துகொண்ட ஒன்றிய அரசு, நாங்கள் அத்தனை சமூகநலத் திட்டங்களையும் எதிர்க்கவில்லை. சமூகநலத் திட்டங்கள் என்ற பெயரில் அனைத்தையும் இலவசமாக வழங்குவது ஏற்கத்தக்கதல்ல என்று வாதிட்டது. இருதரப்பு வாதங் களையும் கேட்ட நீதிபதி, "மாநில அரசியல் கட்சிகள் வாக்குறுதிகள் அளிப்பதை தடுக்க முடியாது' என்று குறிப்பிட்டார். மேலும், "நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டம் மக்களின் வாழ்வை மேம்படுத்தும் திட்டம்' எனவும், "கண்ணியமாக வாழ வழி வகுத்துள்ள திட்டம்' என்றும் குறிப்பிட்டார். இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடை பெற்று வருகிறது. எனினும், இலவசங்களைத் தடுக்க முடியாது என்பதே நீதிமன்றத்தின் நிலைப் பாடாகத் தெரிகிறது.
இந்நிலையில், அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், "ஒரு சமுதாயத்திற்கு கலாச்சாரமும், மொழியும் எவ்வளவு முக்கியமோ, ஒரு இயக்கத்துக்கு கொள்கையும், தத்துவமும் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் ஒரு அரசுக்கு மனிதநேயமும், செயல்திறனும். இலவச திட்டங்கள் குறித்து பெரிய அளவில் விவாதங்கள் நடக்கின்றது. அந்த விவாதங்களுக்கு அப்பால் முக்கியமானது செயல்திறன் தான். அரசு செயல்படுத்தும் திட்டம் சரியாக அனைத்து மக்களுக்கும் சென்று சேர்கிறதா என்பதே முக்கியம்'' என்று குறிப்பிட்டார். அதேபோல், இலவசங்கள் குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றில் நடந்த விவாதத்தில் பேசிய தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், "இலவசத் திட்டங்கள் கூடாது என மாநில அரசுகளிடம் மத்திய அரசு கூறுவதற்கு என்ன உரிமை இருக்கிறது? எந்த அடிப்படையில் இந்த கருத்தைக் கூறுகிறது? இலவசத் திட்டங்கள் கூடாது என அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ளதா?'' என்று ஒரு பிடி பிடித்துவிட்டார். அவரது பதிலடி சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்காகிவிட்டது.
சென்னையில் உள்ள கபாலீஸ்வரர் கல்லூரியில் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "இலவசங்கள் வேறு, சமூகநலத் திட்டங்கள் வேறு என்று உச்சநீதிமன்றமே தெரிவித்துள்ளது. இப்போது இலவசங்கள் பற்றி நாட்டில் பெரும் விவாதமே சென்றுகொண்டிருக்கிறது. கல்வி மற்றும் மருத்துவம் ஆகியவற்றுக்காக செலவு செய்வது இலவசம் கிடையாது. இதுதொடர்பாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் இலவச திட்டங்கள் அல்ல... சமூகநீதி திட்டங்கள்'' என்று மோடிக்கு பதிலடி கொடுத்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-08/freethings-t.jpg)