பள்ளிக்கூடம் என்றாலே கசப்பாகப் பார்க்கும் சூழலில், "ஸ்கூல் தெறந்துட்டாங்க டோய்' என்று பள்ளிக்கூடம் திறப்பதை, 9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் உற்சாகமாகக் கொண்டாடும் மனநிலையை இந்த கொரோனா லாக்டௌன் உருவாக்கியிருக்கிறது என்றால் மிகையாகாது. "செப்டம்பர் 1-ம் தேதி பள்ளிக்கூடம் செயல்படத் தொடங்கும்' என்று தமிழ்நாடு அரசு அறிவித்ததிலிருந்தே, எப்படா பள்ளி திறக்கும், நண்பர்களை எப்படா மீண்டும் சந்திப்போம் என்று நாட்களை எண்ணத் தொடங்கினார்கள் மாணவர்கள். இப்போது பள்ளிக்கூடத்தில், கொரோனா கட்டுப்பாடுகளையும் தாண்டி உற்சாக வெள்ளத்தில் மாணவர்களும் ஆசிரியர்களும் இருப்பதைக் காணமுடிகிறது.
கொரோனா சூழலால் திடீரென ஆன்லைன் கல்விக்கு ஆசிரியர்களும் மாணவர்களும் தள்ளப்பட்டனர். ஆன்லைன் கல்வியின் அடிப்படைத் தேவையான நெட்வொர்க் கவரேஜ் என்பதே கிராமப்புறங்களிலும், மலைப் பிரதேசங்களிலும் வசிக்கும் மாணவர்களுக்கு மிகப்பெரிய சிக்கலாக இருந்தது. பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் செல்போன் வாங்கிக் கொடுத்து, அதில் மாத
பள்ளிக்கூடம் என்றாலே கசப்பாகப் பார்க்கும் சூழலில், "ஸ்கூல் தெறந்துட்டாங்க டோய்' என்று பள்ளிக்கூடம் திறப்பதை, 9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் உற்சாகமாகக் கொண்டாடும் மனநிலையை இந்த கொரோனா லாக்டௌன் உருவாக்கியிருக்கிறது என்றால் மிகையாகாது. "செப்டம்பர் 1-ம் தேதி பள்ளிக்கூடம் செயல்படத் தொடங்கும்' என்று தமிழ்நாடு அரசு அறிவித்ததிலிருந்தே, எப்படா பள்ளி திறக்கும், நண்பர்களை எப்படா மீண்டும் சந்திப்போம் என்று நாட்களை எண்ணத் தொடங்கினார்கள் மாணவர்கள். இப்போது பள்ளிக்கூடத்தில், கொரோனா கட்டுப்பாடுகளையும் தாண்டி உற்சாக வெள்ளத்தில் மாணவர்களும் ஆசிரியர்களும் இருப்பதைக் காணமுடிகிறது.
கொரோனா சூழலால் திடீரென ஆன்லைன் கல்விக்கு ஆசிரியர்களும் மாணவர்களும் தள்ளப்பட்டனர். ஆன்லைன் கல்வியின் அடிப்படைத் தேவையான நெட்வொர்க் கவரேஜ் என்பதே கிராமப்புறங்களிலும், மலைப் பிரதேசங்களிலும் வசிக்கும் மாணவர்களுக்கு மிகப்பெரிய சிக்கலாக இருந்தது. பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் செல்போன் வாங்கிக் கொடுத்து, அதில் மாதாமாதம் நெட்கார்டு போடுவது, கல்விக் கட்டணம் செலுத்துவதைத் தாண்டி பெற்றோர்களுக்கு கூடுதல் செலவாக இருந்தது. குழந் தைகள் சற்றே வளர்ந்ததும், அவர்களைப் பள்ளியில் சேர்த்துவிட்டு, தினமும் அவர்களைப் பள்ளிக்குக் கிளப்பிவிடுவதோடு தங்கள் கடமையை முடித்துக்கொண்ட பெற்றோருக்கு, 24 மணி நேரமும் பிள்ளைகளைத் தங்களோடு வைத்துக்கொண்டு ஆன்லைனில் பாடங்களைக் கவனிக்க வைப்பது பெரும் பிரச்சனையாக இருந்தது.
அவர்கள் பாடத்தைக் கவனிக்கிறார்களா அல்லது செல்போனில் கேம்ஸ் விளையாடு கிறார்களா என்பதைக் கவனிப்பது கடினமாக இருந்தது. பெற்றோர்கள் இருவரும் வேலைக்குச் செல்லும் வீட்டுச்சூழலில் வளரும் மாணவர்கள், கடிவாளமில்லாத குதிரைகளைப் போலதான். அப்படியான மாணவர்களில் பலரும், ஃபயர் சூட்டிங் கேம்களில் அடிமையாகிப்போனதாகப் புலம்பிய பெற்றோர்கள் பலருண்டு. அதேபோல, ஆபாசப் பேச்சுக்களுடன் வீடியோ வெளியிடு பவர்களால் தவறாகச் சென்றுவிடுவார்களோ என்று அஞ்சிய பெற்றோர்களும் உண்டு. இதன் காரணமாகவே, வெகுவிரைவில் கொரோனா பரவல் குறைந்து, பள்ளிக்கூடங்கள் திறக்க வேண்டுமென்று வேண்டத் தொடங்கினார்கள்.
பள்ளி ஆசிரியர்களைப் பொறுத்தவரை, ஆன்லைன் கல்வியில் முழுமையாகப் பாடங்களை நடத்த முடியவில்லை. வழக்கமான அவர்களின் பணிகளோடு, மாணவர்களுக்காக வீடியோ தயாரிக்கும் பணிகளும் கூடுதல் சுமையாகிவிட்டது. மாணவர்களுக்கு வகுப்பறையில் அமரவைத்து பாடம் நடத்தியபோது இருந்த ஆர்வம், ஆன்லைன் வகுப்பு நடத்தும்போது இல்லாததை ஆசிரியர்களும் உணர்ந்தனர். தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு பணிச்சுமை ஒருபுறம் அதிகரிக்க... இன்னொருபுறம், கட்டண வசூல் பாதிப்பு என்று காரணம் காட்டி, அவர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்தது பள்ளி நிர்வாகம். சில தனியார் பள்ளிகளில் மாதக்கணக்காக ஆசிரியர்களுக்குச் சம்பளமே கொடுக்காத நிலையும் உண்டு.
அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரை, பல மாணவர்கள், கூலித்தொழிலாளர்களாகிப்போன அவலமும் நேர்ந்தது. இப்படி மாணவர்களின் எதிர்காலம் வீணாகக்கூடாதென்பதற்காகத்தானே தமிழ்நாட்டை ஆண்ட காமராஜர் தொடங்கி இன்றைய ஆட்சியாளர்கள் வரை மாணவர் களுக்காக இலவச கல்வி, சத்துணவு, இலவச பஸ் பாஸ், இலவச சைக்கிள், லேப்டாப் என்று பலவற்றையும் வழங்கி, ஏழை மாணவர்களைப் பள்ளிகளை நோக்கி இழுத்தார்கள். அவை அனைத்தும் இந்த லாக்டௌனால் பின்னடைவைச் சந்தித்தது. இவற்றுக்கிடையே சமூக அக்கறையோடு, மாணவர்களைத் தேடிச்சென்று பாடம் எடுத்த ஆசிரியர் களையும், ஏழை மாணவர்களுக்குச் சொந்த முயற்சியில் உணவளித்து வந்த அர்ப்பணிப்பான ஆசிரியர்களையும் கண்டு வியக்க முடிந்தது.
மொத்தத்தில் இந்தியா போன்ற ஏழைகளின் எண்ணிக்கை மிகுந்துள்ள நாட்டில், திடுதிப்பென்று ஆன்லைன் கல்வி முறையைப் புகுத்தக் காரணமான கொரோனா, நம் கல்விச்சூழலை பெரிதும் புரட்டிப்போட்டதே உண்மை. இச்சூழல்தான், பள்ளிக்கூடம் சென்று படிப்பதன் நன்மையை, மேன்மையை நமக்கு உணர்த்தியுள்ளது.
பள்ளிக்கூடம் என்பது வெறுமனே கல்வி கற்பிப்பதற்கு மட்டுமானதல்ல. இங்குதான் மாணவர்களுக்கு ஒழுக்கம், சமூகப் பொறுப்புணர்வு என பலவும் கற்பிக்கப்படுகிறது. சரியான நேரத்தில் சீருடை அணிந்து பள்ளிக்கு வருவது, வகுப்பறை யில் பாடவேளைக்கேற்ப ஒவ்வொரு பாடத்தையும் முழுமனதோடு உள்வாங்குவது, சக மாணவர் களோடு தோழமையுடன் உரையாடுவது, ஆசிரியர்களுக்குக் கீழ்ப்படிந்து நடப்பது, படிப்பு தவிர்த்த பல்வேறு கலைகளையும், விளை யாட்டுக்களையும் கற்பது என பல வழிகளில் மாணவர்களைப் பண்படுத்தும் ஓர் இடமாக இருப்பதே பள்ளிக்கூடம். ஆசிரியர்களின் நேரடிப் பார்வையில் மாணவர்கள் படிக்கும்போது, ஒவ்வொரு மாணவரின்மீதும் தனிக்கவனம் செலுத்தி அவர்களைப் பொறுப்பானவர்களாக வளர்த்தெடுக்க, வார்த்தெடுக்க பள்ளிக்கூடக் கல்வி முறையே எளிதான வழியாக உள்ளது.
பள்ளி மாணவர்களைப் போல், கல்லூரியில் முதலாண்டு, இரண்டாமாண்டு படிக்கும் மாணவர்கள், சக மாணவர்களோடு நட்போடு, "முஸ்தபா... முஸ்தபா' என்று பாடிக்களிக்கும் நிலையை இந்த கொரோனா முற்றாகச் சிதைத்துவிட்டது. எனவே இப்போதுதான் அவர்களும் தங்களுக்கான கல்லூரி நட்புகளோடு கை குலுக்கும் உற்சாகத்தோடு கல்லூரிகளுக்குச் செல்கிறார்கள். கொரோனா மூன்றாம் அலையில் அச்சுறுத்தல் அதிகரிக்கும் நிலையில்... அதன் தாக்கத்தைப் பொறுத்தே இந்த மகிழ்ச்சி நீடிக்கும்.