விவசாய நில மின் மோட்டாருக்கு மீட்டர் பொருத்தப்பட்டதால், இலவச மின்சாரம் ரத்து செய்யப்படுகிறதா? என்று கடலூர் விவசாயிகள் கொந்தளிக்கிறார்கள். மத்திய, மாநில அரசுகளின் மின் கொள்கைகள் தமிழக விவசாயிகளை அழிக்க நினைக்கின்றன என்று விவசாய சங்கங்களை ஒன்றிணைத்து போராட்டத்திற்கும் ஆயத்தமாகிறார்கள்.
விருத்தாசலம் அருகேயுள்ள கோ.ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் இலவச மின்சார இணைப்பு பெறுவதற்காக விண்ணப்பித்து கடந்த 5 ஆண்டுகளாக காத்து கொண்டிருந்தும் பிரயோசனம் இல்லாததால், கடந்த ஆண்டு தட்கல்’முறையில் 4 லட்சம் ரூபாய் பணம் செலுத்தி மின் இணைப்பை பெற்றுள்ளார். தட்கல் முறையில் பெற்ற மின் இணைப்பு கொடுக்கும் போது மின்சார பயன்பாட்டை அளவிட பயன்படுத்தப்படும் மின் மீட்டரையும் மின்சாரத்துறை ஊழியர்கள் பொருத்தியுள்ளனர். இதையடுத்து, இலவச மின்சாரத்தை ரத்து செய்வதற்காகத்தான் மீட்டர் பாக்ஸ் பொருத்தப்படுகிறதோ எனும் அச்சம் கடலூர் மாவட்ட விவசாயிகளிடம் பரவியுள்ளது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய விவசாயி வெங்கடேசன், ""மீட்டர் வச்சி பின்னால கரண்டு பில் கட்டச் சொல்லுவாங்களோன்னு அச்ச மாயிருக்கு. இலவச மின்சாரம் இருக்கும்போதே விவசாயம் முழுசா பண்ண முடியலை. எனக்கு 4 ஏக்கர் இருக்கு. அதுக்கு தண்ணீர் பாயணும்னா 4, 5 மணி நேரம் மோட்டார் ஓடணும். அதுக்கு கரண்டு பில் கட்டணும்னா விவசாயமே செய்ய முடியாது, விவசாயம் சுத்தமா அழிஞ்சுடும்'' என ஆதங்கப்படுகிறார்.
மின்சார ஒழுங்கு முறை ஆணைய விதிப்படி மீட்டர் பொருத்தாத இணைப்புகள் இருக்கக் கூடாது. ஆனால், தமிழகத்தில் இலவச மின்சாரத்துக்கு மீட்டர் பொருத்தும் திட்டம் நடைமுறைப் படுத்தப்படவில்லை. அதே நேரத்தில், மானிய திட்டங்களை ரத்து செய்யும் மத்திய அரசுக்கு அடிபணிந்து மாநில அரசு மீட்டர் பொருத்த முடிவெடுத் துள்ளதோ என்றும் சந்தேகிக்க வேண்டியுள்ளது.
இதுகுறித்து கடலூர் மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் கார்மாங்குடி வெங்கடேசனிடம் பேசியபோது, ""கடந்த 1985-ஆம் ஆண்டு முதல் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசு சுயநிதி திட்டத்தின் அடிப்படையில் தட்கல் முறையில் முன் பணம் பெறுவதை போலவே விவசாய மோட்டார்களில், 5 குதிரைத்திறனுக்கு மேல் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு குதிரைத் திறனுக்கும் 20 ஆயிரம் ரூபாய் டெபாசிட் கட்ட வேண்டும் என்று அறிவித்து, அதனை வருகின்ற ஜூன் 30-ஆம் தேதிக்குள் டெபாசிட் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்புவரை நிலத்தடி நீர் மட்டம் 100 அடிகளுக்குள் இருந்தது. 5 குதிரைத்திறன் மோட்டார் பயன்படுத்தினர் விவசாயிகள். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை இல்லாத காரணத்தினாலும், கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனம் நிலத்தடி நீரை உறிஞ்சுவதாலும் நிலத்தடி நீர்மட்டம் அதள பாதாளத்திற்கு சென்று விட்டது. தற்போது 500 அடிக்கு மேல் ஆழ் துளை கிணறு அமைத்துள்ளதால் 15 முதல் 20 குதிரைத்திறன் கொண்ட மின் மோட் டார்களையே பயன்படுத்தி வருகின்றனர்.
தமிழக அரசு கூறுவதுபோல் டெபா சிட் கட்ட வேண்டுமென்றால் ஒவ்வொரு விவசாயியும் 2 லட்ச ரூபாய்க்கு மேல் கட்ட வேண்டும். அப்படி ஒரு நிலை ஏற்படுமாயின் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்படுவதுடன் தங்களின் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக இழக்க நேரிடும். விவசாயமும் அழிந்துவிடும். எனவே இத் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்''’’ என்றார்.
மேலும், ""மத்திய அரசு அறிவித்துள்ள புதிய மின் திட்டம் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதாவது மின்சாரத்தை இலவமாக தரக்கூடாது. ‘கியாஸ் சிலிண்டர்’ போல பயனாளிகளிடம் தொகையை பெற்றுக்கொண்டு, மானியத்தை வங்கி கணக்கில் போட வேண்டும். அப்போதுதான் மத்திய மின் தொகுப்பில் தொடர முடியும் என்கிறது. இது இலவச மின்சாரத்திற்கு வேட்டு வைப்பது. முதலில் மானியத்தை வங்கி கணக்கில் போடுவார்கள். சில மாதங்களில் போட மாட்டார்கள். பின்னர் முற்றிலும் நிறுத்தப்படவும் வாய்ப்புண்டு. எனவே இலவச மின்சாரத்திற்கு எதிரான அந்த திட்டத்தை தமிழ்நாட்டில் நடை முறைப்படுத்தக்கூடாது. அதற்கு ஏதுவாக இருக்கும் மீட்டர் பொருத்துவதை நிறுத்த வேண்டும். இந்த கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் விவசாய சங்கங்கள் ஒருங்கிணைந்து பெரும் போராட்டத்தில் ஈடுபட நேரிடும்'' என எச்சரித்தார்.
இந்த விவகாரம் குறித்து மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, ""கடலூர் மாவட்டத்தில் விவசாய மின் இணைப்புக்கு மீட்டர் பொருத்தப்படுவதாக வெளியான தகவல் தவறானது. தமிழகத்தை பொருத்தவரை விவசாயத்துக்கு இலவச மின்சாரம் என்பதுதான் தமிழக அரசின் கொள்கை'' எனக் கூறியுள்ளார்.
இது உண்மையாக இருக்க வேண்டும். இதே நிலைப்பாடு நீடிக்க வேண்டும் என்பதே, தமிழக விவசாயிகளின் பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
- சுந்தரபாண்டியன்