அரசு வருடந்தோறும் பொங்கலுக்கு இலவச வேட்டி சேலையை மக்களுக்கு வழங்கி வருகிறது. தமிழ்நாட்டிலுள்ள 216 விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங் களின் மூலமாக நூல் கொடுக்கப்பட்டு, ஒரு வேட்டிக்கு 157 ரூபாய் என நிர்ணயம் செய்யப் பட்டு, அவர்களிடமிருந்து கொள்முதல் செய்து, 1 கோடியே 77 லட்சம் சேலையும், 1 கோடியே 75 லட்சம் வேட்டியும் வழங்கி வருகிறது.
அதேபோல இந்தாண்டும் பொங்கலுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி சேலையை புதிதாக மாற்றம் செய்து மக்களுக்கு வழங்க வேண்டுமென நினைத்த கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, வேட்டியி லுள்ள பார்டரை மாற்றியமைக்கலாமென முடிவெடுத்தார். இத்தகவலை, அத்துறையின் ஜாய்ன்ட் டைரக்டர்(ஜெ.டி.) கிரிதரன், தனது விசுவாசியான விசைத்தறியாளர் எஸ்.எஸ்.எஸ். சரவணனிடம் கூறினார். இந்த எஸ்.எஸ்.எஸ். சரவணன், ஏற்கெனவே கடந்த ஆண்டுகளில் மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் கொடுத்தது போக, 45 கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 30 லட்சம் வேட்டிகளைப் பதுக்கியுள்ளார். இந்நிலையில், பார்டர் மாற்றப்பட்டால், பதுக்கிவைத்தவற்றை மறுசுழற்சி செய்ய இயலாதென்பதால் பதட்டமானார். உடனே அமைச்சரின் பி.ஏ.வான பக்தவச்சலம் மற்றும் ஜெ.டி. கிரிதரன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி, "இத்திட்டத்தை எப்படியாவது நிறுத்திவிட்டால் உங்களுக்கு 10 சதவீதம் என 5 கோடியை கொடுத்துவிடுகிறேன்'' என பேரம் பேசியிருக்கிறார். அதையடுத்து, அமைச்சரிடம் ஜெ.டி. கிரிதரன் மற்றும் அமைச்சரின் பி.ஏ. என இருவரும், "இப்படி பார்டரை மாற்றினால், ஏதோ கமிஷனுக்காகத்தான் அமைச்சர் செய்கிறார் என உங்கள் மீது கெட்டபெயர் உண்டாகும்'' எனக்கூறி குழப்பி விட்டு, பழைய பார்டரே தொடர அமைச்சரைச் சம்மதிக்க வைத்திருக்கிறார்கள்.
இந்த எஸ்.எஸ்.எஸ். சரவணன், தனது கட்டுப் பாட்டில் 8 விசைத்தறி நெச வாளர்களை வைத்துக் கொண்டு ஒவ்வொரு வருட மும் மக்களுக்கு வழங்கப்பட்ட வேட்டி களில் எஞ்சியிருக்கும் வேட்டிகளை, நியாயவிலைக்கடை அலுவலரை கைக்குள் போட்டு, ஒரு வேட்டிக்கு 25 ரூபாய் என்ற கணக்கில் அவற்றை திரும்பப்பெற்று, அடுத்தாண்டு அதையே மறுசுழற்சிக்கு விடுவாராம். இதன்மூலம் நெசவே செய்யாமல் அரசை ஏமாற்றி சம்பாதித்துவந்துள்ளார். இதுபோன்ற மோசடிகளைத் தடுக்க, இனிவரும் காலங்களில், 'இலவச வேட்டி சேலை சரியாக மக்களுக்குக் கொடுக்கப்படுகிறதா? எவ்வளவு மிச்சமாகிறது? அவற்றை முறையாகக் கணக்கெடுக்கிறார்களா?' என்று ஆய்வுசெய்து, இதில் தவறுகள் நடக்காமல் தடுக்க வேண்டும். அதேபோல் ஒவ்வொரு ஆண்டும் வேட்டியின் பார்டரை மாற்றுவதன்மூலம் மறுசுழற்சிக்கு விடும் முறைகேடுகளைத் தடுக்கலாம். அதன் மூலம் நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பு பாதிக்கப்படாது''" என்கிறார்கள் மற்ற விசைத்தறி நெசவாளர்கள்.