"கல்லூரி முதல்வர் நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பதால் அவரது நியமனத்தை ரத்து செய்வதோடு… லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தவேண்டும்'’என்று சென்னை பச்சையப்பன் கல்லூரி முதல்வர் நியமனம் குறித்து உயர்நீதிமன்றம் ஓங்கிக் கொட்டினாலும்கூட பணபேரம் அதிகார பலத்துடன் முதல்வர்கள் நியமனத்தில் முறைகேடுகள் தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது’’ என்ற பகீர் குற்றச்சாட்டுகளை வீசுகிறார்கள் சென்னை எஸ்.ஐ.வி.இ.டி. மற்றும் திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரிகளின் முதல்வர் நியமன முறைகேட்டிற்கு எதிராக போராடும் பேராசிரியர்கள்.

c

இதுகுறித்து பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கத்தலைவர் காந்திராஜன் நம்மிடம், “""முதல்வ ராக தேர்ந்தெடுக்கப்படுகிறவர் 15 வருடங்கள் தொடர்பணியில் இருந்து கல்லூரி கல்வி இணை இயக்குநரிடம் இணை பேராசிரியர் தகுதிக்கான ஆணையை பெற்றிருக்கவேண்டும்.

Advertisment

மேலும், யு.ஜி.சி. விதிகளின்படி வெளிநாடு, உள்நாட்டு கருத்தரங்கங்கள் நடத்துவது; கலந்து கொள்வது, தமிழக அரசிடமிருந்து நிதிபெற்று நீண்டகால-குறுகியகால ஆய்வுத்திட்டங்களை மேற்கொள்வது, மாநில-தேசிய-பன்னாட்டு அளவில் துறைசார்ந்த நூல்கள் வெளியிடுவது, வெளி அமைப்பு களோடு இணைந்து கருத்தரங் கங்களில் பங்கெடுப்பது; அமர்வுக்கு தலைமைதாங்குவது, ஐ.எஸ்.பி.என். எண்ணோடு புத்தகங்கள் வெளியிடுவது, ஐ.எஸ்.எஸ்.என் எண் கொண்ட யு.ஜி.சி. அப்ரூவல் வழங்கிய ஜர்னல்களில் கட்டுரை வெளியிடுவது, வேறு கல்லூரிகளின் பாடத்திட்டக்குழுவில் இடம்பெறுவது, என்.சி.சி., என்.எஸ்.எஸ். உள்ளிட்ட அமைப்புகளில் பொறுப்பு வகிப்பது என ஒவ்வொன்றுக்கும் மதிப்பெண்கள் உண்டு. ஏ.பி.ஐ. ஸ்கோர் 300 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருக்கவேண்டும். இத்தகுதிகளைக் கொண்ட வர்கள்தான் முதல்வராக விண்ணப்பிப்பார்கள்.

சிறுபான்மை அந்தஸ்து பெற்ற திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரியில் முதல்வராக நியமிக்கப்பட்டார் கிறிஸ்டினா பிரிட்ஜெட். ஆனால், இவரோ 11 வருடங்கள் மட்டுமே தொடர் பணியில் இருந்ததால் இணைப் பேராசிரியர் என்ற தகுதியே இல்லை என்று குவாலிஃபிகேஷன் அப்ரூவல் கொடுக்க மறுத்துவிட்டது பாரதிதாசன் பல்கலைக் கழகம்.

ஆனால், விடுமுறை எடுத்தவர்களுக்கு பதிலாக கிறிஸ்டினா பிரிட்ஜெட் "பதிலி'யாக சில மாதங்கள் அங்கங்கு பணிபுரிந்திருக்கிறார்.

Advertisment

gaஅதையெல்லாம் கணக்கில் எடுத்து 15 வருடங்கள் பணி புரிந்ததுபோல் கணக்கு காண்பித்து இணைப் பேராசிரியருக்கான அரசாணையில் வெளியிடாமலேயே உயர்கல்வித் துறை மூலம் முறைகேடாக தகுதிச்சான்று வாங்கியிருக்கிறார் கிறிஸ்டினா பிரிட்ஜெட். உடனே, முறைகேடு தகுதி ஆணையை திரும்பப் பெறவேண்டும்''’என்று சுட்டிக்காட்டுகிறார்.

குற்றச்சாட்டுக்குள்ளான ஹோலிகிராஸ் பேராசிரியர் கிரிஸ்டினா பிரிட்ஜெட், ""பல்கலைக் கழகமும் கல்லூரிக் கல்வி இயக்குனரகமும் முறையாக பரிசீலனை செய்துதான் எனக்கு இணைப் பேராசிரியருக்கான கல்வித் தகுதியை வழங்கியுள் ளன. பேராசிரியர்கள் நெடுஞ்செழியன், பெலிசியா ஆகியோர் இது குறித்த தெளிவின்மையால் வழக்குத் தொடுத்திருக்கிறார்கள்'' என்கிறார் தன் தரப்பு விளக்கமாக.

இதேபோன்ற முறைகேடுதான் சென்னை எஸ்.ஐ.வி.இ.டி. கல்லூரியில் நடந்துள்ளது என்று குற்றஞ்சாட்டும் பேராசிரியர்கள் நம்மிடம், ""கல்லூரியின் முதல்வர் பணிக்கு அழைப்பாணை கொடுத்தார்கள்.

33 வருட அனுபவம் வாய்ந்த பாலசுப்பிர மணியம், 31 வருடம் அனுபவம் வாய்ந்த கே. திரிசங்கு, 25 வருடம் அனுபவம் வாய்ந்த லூர்து இனிதா, 19 வருடம் அனுபவம் வாய்ந்த பாலசரவ ணன் உள்ளிட்ட பேராசிரியர்கள் விண்ணப்பித்தார்கள்.

விண்ணப்ப தேதி முடிந்ததும் திடீரென்று 15 வருடங்கள் ஜூனியர் பேராசிரியர் எஸ். உஷாராணியை பட்டியலில் இணைத்து விட்டார் கல்லூரியின் செயலாளர் செல்வ நாதன். சென்னை பல்கலைக்கழக தேர்வுக்குழு உஷாராணிக்கு குவாலிஃபிகேஷன் அப்ரூவல் கொடுக்க மறுத்துவிட்டது. அரசு உதவிபெறும் கல்லூரி… பென்ஷன்கூட வராமல் நிறுத்திவிடுவார்கள் என்பதால் பயந்துகொண்டு முதல்வருக்காக விண்ணப்பித்த பேராசிரியர்கள் யாரும் நீதிமன்றத்துக்கு செல்லவில்லை.

இதனைப் பயன்படுத்திக்கொண்ட கல்லூரி யின் செயலாளர் செல்வநாதன் நீதிமன்றத்துக்கு சென்று ஸ்டேட்டஸ்கோ -அதாவது இப் போதைய நிலையே தொடரும் என்று தீர்ப்பு வாங்கிவிட்டார்.

இதைவிடக்கொடுமை, மூன்று முறை இருந்துவிட்டு நான்காவது முறை செயலாளர் ஆனதால் செயலாளரின் நியமனத்திலும் இதேமாதிரி பிரச்சனையாகி தற்போது எங்களுக்கு கடந்த மாதத்திலிருந்து சம்பளமும் வரவில்லை'' என குமுறி வெடிக்கிறார்கள். கல்லூரி கல்வி இணை இயக்குனர் வெண் ணிலாவிடம் பேசியபோது, ""நாங்கள் உஷா ராணியை இன்னும் முதல்வராக நியமனம் செய்யவில்லை''’என்று முடித்துக் கொண்டார்.

இதுகுறித்து, சென்னை கௌரி வாக்கத்திலுள்ள எஸ்.ஐ.வி.இ.டி. கல்லூரியின் செயலாளர் செல்வநாதனிடம் கேட்டபோது, ""குளறுபடிகள் இல்லை'' என்று மறுத்தவர், ""நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் இதுகுறித்து பேச இயலாது'' என்று மறுத்துவிட்டார்.

இதுபோன்ற நியமனங்களுக்கு உயர்கல்வித்துறையில் 50 லட்சம் ரூபாய்க்கு மேல் கைமாறுவதாக குற்றச்சாட்டு எழும்புகிறது.

தகுதியில்லாமல் இப்படி பணம் கொடுத்துவிட்டு முதல்வர் பதவியை பிடிப்பவர்கள் பேராசிரியர்களையும் மாணவர்களையும் எப்படி வழிநடத்து வார்கள்?

-மனோசௌந்தர்

படம் : அசோக்