தமிழக காவல்துறை வரலாற் றில், ஒரு குற்ற வழக்கில் முதன்முதலாக 15 லட்சம் பக்க குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல்செய் யப்பட்டுள்ளது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பு பேச்சாக மாறியிருக்கிறது.
சேலம் அழகாபுரம் பெரியபுதூரைச் சேர்ந்தவர் சிவக்குமார். ரியல் எஸ்டேட் அதிபர். இவர், சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் வின் ஸ்டார் இண்டியா சிட்டி டெவலப்பர்ஸ், சவுபாக்கியா சிட்டி டெவலப்பர்ஸ் என்ற பெயர்களில் ரியல் எஸ்டேட் நிறுவனங்களை நடத்திவந்தார்.
இந்நிறுவனத்தில் முதலீடு செய்தால், 11 மாதத்தில் முதலீட்டுத் தொகையை இரட்டிப்பாகப் பெற்றுக்கொள்ளலாம் அல்லது அதன் மதிப்பிற்கு நிகரான நிலத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்தார் சிவக்குமார். மார்க்கெட்டிங் செய்ய 100-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை பணிக்கமர்த்தினார். கவர்ச்சிகரமான அறிவிப்பில் மயங்கிய ஏராளமானோர் இந்நிறுவனத்தில் முதலீட்டைக் கொட்டினர்.
வின் ஸ்டார் பெயரில் உள்ளூர் கேபிள் டிவி, நெல்லிச்சாறு விற்பனை, அழகு நிலையம், ஸ்டேஷனரி கடை, ஜவுளிக்கடை, பட்டாசு, மளிகை, பேக்கரி கடைகள் எனப் புது வியாபாரங்களையும் தொடங்கினார் சிவக்குமார்.
அ.தி.மு.க.வில் எந்தப் பொறுப்பிலும் இல்லாவிட்டாலும்கூட, விரலில் ராட்சத சைசில் ஜெயலலிதா உருவம் பொறித்த மோதிரத்தை அணிந்துகொண்டு, அப்போதைய ஆளுங்கட்சி மேலிடத்துடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். கடந்த 2011 முதல் 2017-ஆம் ஆண்டு வரை சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மாவட்டங் களைச் சேர்ந்த 3500-க்கும் மேற் பட்ட முதலீட்டா ளர்கள், 500 கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்திருந்தனர். குறித்த காலத்தில் அவர் களுக்கு இரட்டிப்பு மடங்கில் பணமோ, அசலோ தராமல் திடீரென்று கம்பிநீட்டினார் சிவக்குமார்.
இதற்கிடையே, இந்நிறுவனத்தில் 15 லட்சம் ரூபாய் முதலீடு செய்த, சேலத்தைச் சேர்ந்த அக்காள், தங்கைகள் 3 பேர், தங்களுடைய பணத்தை திருப்பிக்கேட்டுள்ளனர். அவர்களிடம் பணத்தைத் தரமுடியாது என மிரட்டி அனுப்பியுள் ளார் சிவக்குமார். இதனால் விரக்தியடைந்த சகோதரிகள் மூவரும், திடீரென்று மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதில் இருவர் இறந்துவிட்டதையடுத்தே, சிவக்குமாருக்கு எதிராக புகார்கள் குவியத்தொடங்கின.
இந்தப் புகார்கள் மீது சேலம் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, கடந்த 2018-ஆம் ஆண்டு சிவக்குமாரை கைதுசெய்தனர். முதலீட்டாளர்களுக்கு பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடுவதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து பிணையில் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து, ஓய்வுபெற்ற நீதிபதி தங்கராசு தலைமையில் ஒரு நபர் செட்டில்மெண்ட் கமிஷன் அமைத்து, புகார்கள் பெறப்பட்டன. சிவக்குமார் மீது இதுவரை 1686 முதலீட்டாளர்களிடமிருந்து புகார்கள் வந்துள்ளன. முதல்கட்டமாக 200 கோடி ரூபாய்க்கு மோசடி நடந்துள்ளது உறுதிப்படுத்தப் பட்டு உள்ளது. சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் சிவக்குமார் வாங்கிக் குவித்துள்ள நிலங்கள், வீட்டு மனைகளை காவல்துறையினர் முடக்கியுள்ளனர்.
இந்த வழக்கில் வின் ஸ்டார் இண்டியா மற்றும் சவுபாக்கியா சிட்டி டெவலப்பர்ஸ் ஆகிய இரு நிறுவனங்கள் மட்டுமின்றி, சிவக்குமார், மேலாளர் மணிமாலா, பங்குதாரர்கள் மோகன கண்ணன், சுகுமார், பாலகிருஷ்ணன் உள்பட மொத்தம் 31 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
குற்றம்சாட்டப்பட்ட ஒவ்வொருவருக்கு எதி ராகவும் 50 ஆயிரக்கணக்கான பக்கங்களில் குற்றப் பத்திரிகை தயாரிக்கப்பட்டுள்ளது. சிவக்குமார் உள்பட 31 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆவணங்களின் நகல்களை குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு வழங்க, இத்தனை பக்கங்களை நகலெடுக்கவே காவல்துறை 14 லட்ச ரூபாய் செலவழித்துள்ளது.
இதுகுறித்து பாதிக்கப் பட்டவர்களை ஒருங்கிணைத் துப் போராடிவந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சேலம் மாவட்டச் செயலாளர் மோகன் கூறுகையில், “"குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யவே கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் ஆகிவிட்டன. புகாரளித் தவர்களில் இதுவரை 35 பேர் இறந்துவிட்டனர். இனியும் காலதாமதம் செய்யாமல் வழக்கை விரைவாக முடித்து, பாதிக்கப்பட்ட தரப்புக்கு வட்டியுடன் உரிய முதலீட்டுத் தொகையையோ நிலத்தையோ வழங்கவேண்டும். 1,650 பேரிடம் இன்னும் காவல்துறை புகார்களை வாங்காமல் உள்ளது. அவர்களிடமும் புகார்களைப் பெற்று நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்றார்.
"இப்போதும் திருச்சி, நாமக்கல்லில் வீட்டு மனைகள் விற்பனைக்கு உள்ளதாகக் கூறி புதிய பெயரில் யூடியூப் சேனல் வழியாக சிவக்குமார் விளம்பரம் செய்துவருகிறார். மீண்டும் அவர் இன் னொரு மோசடித் திட்டத்தை அரங்கேற்றுவதற்குள் காவல்துறை விழிப்புடன் தடுக்கவேண்டும்' என்கிறது பாதிக்கப்பட்ட தரப்பு.
___________________
முதலீட்டாளர்கள் சிலர், "கடந்த 2016-ஆம் ஆண்டு நவ. 8-ஆம் தேதி இரவு 8 மணியுடன் பழைய 1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகளை இந்திய அரசு மதிப்பிழப்பு செய்தது. அதன்பிறகும் பழைய பணத்தை தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்யலாம் என வின் ஸ்டார் சிவக்குமார் துணிகரமாக அறிவித்தார். பணமதிப்பிழப்பு காலத்தில் மட்டும் 18 கோடி ரூபாய் இந்த நிறுவனத்திற்குள் முதலீடாகக் குவிந்துள்ளது. அந்தப் பணத்தையெல்லாம் அவர் எப்படி புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றினார்? என்பதில் மர்மம் உள்ளது. அதுகுறித்தும் காவல்துறை விசாரிக்கவேண்டும்'' என்கிறார்கள்.