கோவை -செல்வபுரம் காவல் எல்லைக்குட்பட்ட ஓட்டைக்குளத்தை ஒட்டி வசிப்பவர்களுக்கு கெடுநாளாய் விடிந்தது அன்றைய தினம். குளத்தில் தூண்டிலிட்டு மீன் பிடித்துக்கொண்டிருந்த சிறுவர்கள் கண்ணெதிரே கழுத்திலிருந்து மார்புவரையிலான உடல்பகுதி மிதந்து வர... அலறியபடியே ஓட்டம் பிடித்தனர்.
அப்பகுதியே பரபரப்பாக, செல்வபுரம் போலீஸ் அங்கே குவிந்தது. மிதந்து வந்தது பெண்ணின் உடல் பாகம் எனத் தெரிய வந்தபோது மேலும் அதிர்ச்சி. பரிசல்காரர்களின் உதவியோடு கரை சேர்க்கப்பட்ட உடல் பாகம் தீயிலும் வாட்டப்பட்டிருந்தது, மேலும் அதிர்ச்சியைக் கிளப்பியது. எஞ்சிய உடல் பாகங்களுக்காக தேடுதல் வேட்டையைத் துவக்கியது போலீஸ். மாலைவரை தேடியதில் தலை, இரண்டு கைகள் அரிசி சாக்கில் சுற்றப்பட்ட நிலையில் கிடைத்தன.
பெண்ணின் தலை மொட்டையடிக்கப்பட்டிருக்க... கை, தலை எல்லாம் அறுத்த கோழியைப்போல் தீயில் வாட்டப்பட்டிருந்தன. இடுப்புக்குக் கீழான பாகங்கள் அன்று கிடைக்கவில்லை. இது நடந்தது ஜூலை 25-ல். அடுத்தநாள் காலை குளத்தைச் சுற்றியுள்ள சுற்றுவட்டார மக்கள் காலைக்கடன் கழிக்க ஒதுங்க, ஓரிடத்திலிருந்து மட்டும், "ஐயோ என்னமோ கோரமா மிதக்குதே...'’என அலறல் எழுந்தது.
செல்வபுரம் போலீஸ் மீண்டும் ஸ்பாட்டுக்கு வந்தது. அதுவரை கிடைக்காமலிருந்த அந்தப் பெண்ணின் இடுப்பிலிருந்து தொடை வரையிலான பாகம்தான் அது. நன்கு மழை பெய்திருந்ததால் எல்லா குளங்களும் நிரம்பி வழிந்துகொண்டிருந்தன. அதனால் போலீஸார் நீச்சலில் கரைகண்ட சொக்கம்புதூரைச் சேர்ந்த பெரியவர் சண்முகத்தை அழைத்துவந்து இடுப்புப் பகுதியைக் கரைக்குக் கொண்டுவந்தனர்.
அதுவும் நெருப்பில் வாட்டப்பட்டிருந்தது. போலீஸ் குழம்பிப்போய்விட்டது. யார் இந்தப் பெண்? எதற்காக இப்படி அறுக்கப்பட்டிருக்கிறாள்? தொடைக்குக் கீழான கால்கள் எங்கே? அரிவாள், கத்தியால் இத்தனை சீராக அறுக்கமுடியாது. நவீன மரஆலை எந்திரங்களால்தான் இப்படி நேர்த்தியாக அறுக்கலாம். சுற்றுப்புறத்தில் மர ஆலைகள் இத்தனை நவீன கருவிகள் கொண்டவையில்லையே என குழம்பினர்.
அடுத்த நான்கு நாட்களும் கால்கள் தேடும் பணியில் எந்த முன்னேற்றமும் நடக்கவில்லை. சுற்றுவட்டாரத்தில் 20-லிருந்து 28 வயதுக்குள் பெண் யாராவது காணாமல் போயிருக்கிறாளா என செல்வபுரம் போலீசார் விசாரணையிலிறங்கினர். கால்களும் கிடைக்கவில்லை. சுற்றுவட்டார போலீஸ் ஸ்டேஷன்களிலிருந்து மிஸ்ஸிங் என தகவலும் கிடைக்கவில்லை.
31-ஆம் தேதி அதிகாலை ஓட்டைக்குளத்தின் பக்கமாக ஒதுங்க வந்தவர்களுக்கு குட்மார்னிங் சொன்னன, அதுநாள் வரை கிடைக்காத கால்கள். கண்ணாடிக் குடோன் மக்கள் சொன்ன தகவல் கேட்டு விரைந்து வந்த போலீஸ், சண்முகம் உதவியுடன் கால்களைக் கைப்பற்றியது. கால் விரல்களில் இருந்த வடநாட்டுப் பெண்கள் அணியும் வகையிலான, மெட்டிதான் இந்த வழக்கில் முதல் துப்பைத் தந்தது.
நாளுக்கொரு உடல்பாகம் கிடைத்ததில் ஓட்டைக்குளம் சுற்றுவட்டார மக்கள் அச்சத்தில் திக்குமுக்காடிப் போய்விட்டனர். உடல்பாகங்களை மீட்க போலீசாருக்கு உதவிய சண்முகம், “""நீச்சல் தெரியாம, தெரிஞ்சும் சேற்றில் சிக்கி இறந்த எத்தனையோ பேர் உடலை மீட்டிருக்கேன். ஆனா இப்படி துண்டு துண்டா அறுத்துப் போட்ட உடலை எடுக்கும்போது ரொம்ப பயந்துட்டேன்''’என்கிறார் பீதி படிந்த முகத்தோடு.
""இந்தக் குளத்தோர ரோட்டை, மாநகராட்சிக்காரங்க பாதாளச்சாக்கடை போடுறேன்னு தோண்டி வழியை மறைச்சுட்டாங்க. கொஞ்சநாளா இந்த ரோடு யாரும் பயன்படுத்த முடியாம இருக்கு. இந்த வழியா நடந்து போகமுடியுமே தவிர, வாகனங்கள் வர முடியாது''’என்கிறார் பூசாரிபாளையம் பகுதியைச் சேர்ந்த பாபு.
ஓட்டைக்குளத்தை இணைக்கும் சொக்கம்புதூர், செல்வபுரம், காந்தி பார்க், தெலுங்குபாளையம் ஊர்களில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமராக்களை ஆராயத் தொடங்கியது போலீஸ். உடல் பாகங்கள் அரிசி மூட்டையில் கிடைத்ததால், கட்டாயம் ஏதாவது காரில்தான் கொண்டுவந்திருக்க முடியும். அதனால் சந்தேகத்துக்குரிய கார்கள் ஏதாவது போய் வருகிறதா என சோதித்ததிலும் முன்னேற்றம் கிடைக்கவில்லை. கோவை மாநகர போலீஸ் கமிஷனர் இந்த வழக்கை விசாரிக்கவெனவே தனி டீமை அமைத்தார்.
இதற்கு நடுவில், ஆகஸ்டு 24-ஆம் தேதி ஓட்டைக்குளத்தை அடுத்துள்ள நரசாம்பதி குளத்தில் ஒரு ஆணின் பிணமும் ஆகஸ்ட் இறுதியில் நரசாம்பதி குளத்தின் கரையோரத்தில் மீண்டுமொரு ஆண் பிணமும் கண்டுபிடிக்கப்பட்டன. நரசாம்பதி குளத்தில் முதலில் கிடைத்த ஆண்பிணம் சீரநாய்க்கன்பாளையத்தைச் சேர்ந்த மனநிலை பிசகிய இளைஞர் எனவும், இரண்டாவதாய் கிடந்த ஆண் பிணம் முத்தண்ணன்குளம் பகுதியைச் சேர்ந்த வேலாயுதம்- உஷா தம்பதியின் மகன் ஆனந்த்ராஜ் எனவும் கண்டறிந்தது போலீஸ்.
ஆனால், ஓட்டைக்குளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வடநாட்டுப் பெண்ணின் கொலையில் இன்னும் கொலையாளிகளைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறுகின்றது போலீஸ். தனிப்படை டீமைச் சேர்ந்த அதிகாரி ஒருவரை கேட்டபோது, “""இது சாதாரண கொலையா எங்களுக்குத் தெரியலை. கொலையுண்ட பெண் ஒரு கும்பலால் பலாத்காரம் செய்யப்படிருக்கலாமென யூகிக்கிறோம். அந்தப் பெண்ணின் உடலை அறுக்கும்போது ரத்தம் சிந்தாமலிருக்க தீயில் வாட்டி ரத்தத்தை சுண்டவைத்திருக்கிறார்கள். கொடிய வக்கிரம் கொண்டவர்களால்தான் இப்படி கொன்று துண்டுதுண்டாய் அறுக்க முடியும். பனைமரத்தூரைக் குறிவைத்து நாங்கள் எங்கள் தேடலைத் தொடங்கியிருக்கிறோம். பனைமரத்தூரில் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் அடுக்குமாடிக் கட்டடத்தில் நூற்றுக்கணக்கான வடமாநிலத் தொழிலாளர்கள் வேலைசெய்துவருகிறார்கள். நிறைய நவீன ரக மிசின்களின் சத்தம் எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கிறது. கட்டுமானத்திலிருக்கும் அடுக்குமாடிக் கட்டடமும் ஓட்டைக்குளத்திலிருந்து நடந்துபோகும் தொலைவில்தான் இருக்கிறது.
ரேஷன்கடை சாக்கில்தான் பெண்ணின் வெட்டப்பட்ட தலையும் கைகளும் கிடைத்தன. இங்குள்ள வடநாட்டுத் தொழிலாளர்கள் ரேஷன் கடை அரிசியை கள்ளத்தனமாக வாங்கிச் சாப்பிடுகிறார்கள். சுற்றுவட்டாரத்திலுள்ள ரேஷன் கடைகள், மளிகைக் கடைகளில் ரெகுலராய் வந்து அரிசி வாங்கும் வடநாட்டவர்கள் பற்றிய விவரங்களைச் சேகரித்துள்ளோம்.. தொடர்ந்து விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. விரைவில் கொலையாளிகளைப் பிடித்துவிடுவோம்''’’ என்கிறார்.
என்னதான் உறுதி சொன்னாலும், அந்த வடஇந்தியப் பெண்ணின் பிணம் ஸ்காட்லாந்து போலீசுக்கு இணையானதாகச் சொல்லப்படும் தமிழக போலீசை சுற்றலில் விட்டதுதான் நிஜம். பார்க்கலாம்,…எந்தத் தீரன் இந்த வழக்கின் முடிச்சை அவிழ்க்கிறாரென.
-அருள்குமார்