"ஹலோ தலைவரே, இந்த கொரோனா முடக்க காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முடக்கப்பட்டிருப்பதும், துறைச் செயலாளரான பீலா ராஜேஷுக்கு அதிமுக்கியத்துவம் தரப்பட்டிருப்பதும்தான் அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாபிக்கா இருக்கு.''
""ஒவ்வொரு நாளும் கொரோனா நிலவரம் அறிவித்துவந்த அமைச்சர் விஜயபாஸ்கர் இப்ப, ஏதாவது ஒரு மருத்துவமனையை ஆய்வு செய்வதுதான் ஊட கங்களில் வருது. பெரும்பாலும் சொந்த மாவட்டமான புதுக்கோட்டையிலேயே இருக்காராமே..?''
""கொஞ்சம் விரிவாவே பேசலாம். கொரோனா தொடர்பான மருத்துவ உபகரணங்களைக் கொள்முதல் செய்ய அரசு முடிவெடுத்துச்சு. இது தொடர்பான பர்சண்டேஜ் பிரச்சினையில்தான், முதல்வர் எடப்பாடிக்கும் அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் இடையில் முதலில் உரசல் தீப்பொறி ஏற்பட்டுச்சு. இந்த நிலையில் கொரோனா தடுப்புப்பணியில், விஜயபாஸ்கர் பம்பரமா செயல்படறார்னு, அவரை ஏகத்துக்கும் பாராட்டி விளம்பர மீம்ஸ்கள் வெளியானதில் எடப்பாடி உள்பட சீனியர் அமைச்சர்கள் பலருக்கும் எரிச்சல். அதை யடுத்துதான், அமைச்சர் ஓரங்கட்டப்பட்டு, சுகா தாரத்துறை செயலாளர் முன்னிறுத்தப்பட்டிருக்காரு.''
""விஜயபாஸ்கர் இதை எப்படி எடுத்துக் கிட்டாராம்?''
""அவரை பொறுத்தவரை 25 எம்.ஏல்.ஏ.க்கள் சப்போர்ட்டா இருக்காங்க. அவங்களுக்கு மாதா மாதம் எனர்ஜி டானிக் கிடைத்துவிடுவதால், விஜயபாஸ்கர் கிழிச்சக்கோட்டை அவங்க தாண்டமாட்டாங்க. அந்த தைரியத்தில்தான், இப்பவும் ஆய்வு பணிகளில் ஜரூரா இருக்கார். கொரோனாவுக்காக அவசரமா பணி நியமனம் செய்யப்பட்ட ஏறத்தாழ ஆயிரம் லேப் டெக்னீஷியன்களும், எங்களை சொந்த ஊர்களில் அப்பாயின்மெண்ட் போடுங்கன்னு, விஜயபாஸ்கர் தரப்பை வெயிட்டாவே துரத்திக்கிட்டிருக்காங்க.''
""எடப்பாடி அரசால் ஓரங்கப்பட்டதா அரசியலில் பரபரப்பா பேசப்பட்டாலும், விஜயபாஸ்கருக்கு ஆதரவான பிரச்சாரங்களும் போஸ்டர் களும் பரபரப்பை கிளப்பிக் கிட்டிருக்கே?''’
""தமிழகத்தின் பல இடங்களிலும் ’முதல்வர் பழனிச்சாமியே, பாஜகவுக்கு நன்றி விசுவாசம் செய்யும் நேரமா இது? கொரானா வைரஸை கட்டுப் படுத்தும் பொறுப்பை மீண்டும் விஜய பாஸ்கருக்கு வழங்கிடு! பா.ஜ.க பொன்.ராதா கிருஷ்ணனின் உறவின ரான பீலாவை டிஸ்மிஸ் செய்யின்னு’ போஸ்டர் களை வெளியிட ஆரம்பிச்சிட்டாங்க. உச்சகட்டமா விஜயபாஸ்கரை முதல்வராக்குன்னும் அதிரடி கிளப் பறாங்க. இது எடப்பாடித் தரப்புக்கு ஹை வோல்ட் அதிர்ச்சியை ஏற்படுத்தியதால், இந்த போஸ்டர் களின் பின்னணியில் இருப்பது யாருன்னு உளவுத் துறையை அவர் விசாரிக்கச் சொல்லியிருக்கிறார்.''
""டெல்லி மாநாட்டுக்குப் போய்வந்தவர்களால் தான் இங்கே அதிகமா கொரோனா பரவியிருக்குன்னு சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஒவ்வொரு பேட்டியிலும் அழுத்தம் கொடுத்துச் சொல்றார். அதுதான் இந்த போஸ்டரில் அவர் பெயரையும் சேர்த்து போட்டதற்கு காரணமா?''
""பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பீலா ராஜேஷ் நேரடி உறவினர் அல்லன்னு விவரம் தெரிஞ்சவங்க சொல்றாங்க. அதிகாரிக்குரிய தொனியில் நாள்தோறும் கொரோனா பாதிப்புகள் பற்றிய விவரங்களை பீலா வெளியிடுகிறார். அமைச்சர் விஜயபாஸ்கர் அரசியல்ல அனுபவசாலி. அதனால், எல்லோருடைய ஆதர வும் நமக்குத் தேவைன்னு நினைச்சி, அவர் பாதிக்கப் பட்டோர் எண்ணிக் கையை மட்டும் சொல்லி வந்தார். குறிப்பிட்ட நிகழ்வுன்னு சுட்டிக் காட்டி பாதிப்புக்கு சாயம் பூசலை.''’
""செயலாளரும் அதையே கடைப் பிடிச்சிருந்தா அநாவசிய டென்ஷனும் சந்தேகமும் வந்திருக்காதே!''
""தலைவரே.. கொரோனா நேரத்தில் மத்திய-மாநில அரசுகளுக்கு இடையில் பாலமாக செயல்படுபவர் சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ்தான். டெல்லி எஃபெக்ட் இருக்கும்னு கோட்டை வட்டாரத்தில் சொல்றாங்க. மத்திய சுகாதார அமைச்சகத்துக்கும், இங்க உள்ள நிலவரத்தை டெய்லி அப்டேட்டும் பண்ணிடறாராம். அதேசமயம், தமிழகத்தின் பிற நிகழ்வுகள் மூலம் பரவிய கொரோனா தொற்று எண்ணிக்கையை குறைச்சிச் சொல்லி, பீலா, பீலா விடறார்ங்கிற முணுமுணுப்பும் கோட்டைக்குள்ளே கேட்குது.''
""எடப்பாடி இதையெல்லாம் கவனிச்சி சரி செய்றாரா?''
""அவர் கவனமெல்லாம் தன் பதவிக்கு எதிரான வைரஸ் எதுவும் உருவாகிவிடக்கூடாதுங் கிறதுதான். ஏற்கனவே கட்சிப் பதவி பறிக்கப்பட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, எடப்பாடிக்கு எதிரா முணுமுணுக்குறாராம். இப்ப ஓரங்கட்டப் பட்டிருக்கும் விஜயபாஸ்கரும், எடப்பாடிக்கு உரிய பாடம் புகட்டும் நேரத் துக்காகக் காத்திருக்கா ராம். இவங்க ரெண்டு பேருக்கும் பொது எதிரியான அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு எடப்பாடி அதிக முக்கியத்துவம் கொடுப்பது, மேற்கண்ட ரெண்டு அமைச்சர்களையும் கடுப்பாக்கியிருக்கு. இதே போல் மேலும் சில அமைச்சர்கள் எடப்பாடிக்கு எதிரான கருத்துக்களைப் பரவவிட்டு, வேடிக்கை பார்க்கறாங்களாம். கோட்டைக்குள் அமைச்சர்களின் கோஷ்டி வைரஸ் பரவுவதை அறிந்த எடப்பாடி, இவர்களின் பின்னணியில் அ.ம.மு.க. தினகரன் இருக்கலாமோன்னு சந்தேகப்படறாராம்.''
""நெருப்பில்லாமல் புகையாதுன்னு சொல்லுவாங்க.. அ.ம.மு.க. ஏரியாவில் என்ன நடக்குது? பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா வியூகம் என்னவாம்?''
""டெல்லியின் கரிசனப் பார்வை இப்ப சசிகலாப் பக்கம் திரும்பியிருக்குதாம். மந்திரிகள் தொடங்கி, கீழ்மட்ட தொண்டர்கள் வரை பலரும் எடப்பாடி மீது அதிருப்தியில் இருப்பதாலும், அ.தி.மு.க.வில் கோஷ்டி யுத்தம் தொடர்வதாலும், அ.தி.முக.வை வலிமைப்படுத்த, சசிகலாவை ரிலீஸ் செய்யலாமான்னு பா.ஜ.க. தலைமை ஆலோசிக்குதாம். அவர் மூலம் அ.தி.மு.க ஒருங்கிணைந்து வலிமையானால் தங்கள் அரசியல் எதிர்காலத்துக்கு அது பயன்படும் என்பது பா.ஜ.க. கணிப்பு. இது சசிகலா காதுக்கு வந்ததில் இருந்து அவர் பரபரப்பாயிருக்காரு. அடிக்கடி தினகரனைத் தொடர்பு கொண்டும் அவர் உற்சாகமாப் பேச ஆரம்பிச்சிருக்காராம்.''
""கொரோனா நெருக்கடி முடிந்ததும், மோடி தன் அமைச்சரவையை விரிவுபடுத்தப் போகிறா ராமே?''
""ஆமாங்க தலைவரே, டெல்லியில் இருந்து வரும் தகவல்கள் அப்படித்தான் சொல்லுது. அ.தி.மு.க. தரப்போ, சீனியர்ங்கிற வகையில் வைத்திலிங்கத்தையும், ஜூனியர்ங்கிற வகையில் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத்தையும் மத்திய மந்திரி சபைக்குப் பரிந்துரைக்கத் திட்டமிட்டிருந்தது. இந்த நிலையில் மாநிலங்களவை எம்.பியா தேர்வாகும் தம்பிதுரையோ, வைத்திலிங்கத்தின் எம்.பி.பதவி இன்னும் ரெண்டு வருசத்தில் முடியுது. என் பதவிக் காலமோ 6 வருசத்துக்கு இருக்கு. அதனால் எனக்குத்தான் மத்திய மந்திரி பதவியை வாங்கிக் கொடுக்கனும்ன்னு எடப்பாடிக்கு நெருக்கடி கொடுக்க, தம்பிதுரைக்கு க்ரீன் சிக்னல் கிடைச் சிருக்குதாம்.''
""இந்த நேரத்திலும் அவங்கவங்க பதவியிலே குறியா இருக்காங்க. ஆனா, பல இடங்களிலும் தமிழர்கள் படாதபாடுபடுறாங்க. நாலு வருசத்துக்கு ஒரு முறை நடக்கும் உலகக் கால்பந்துப் போட்டி இந்த முறை கத்தாரில் நடப்பதால், ஸ்டேடி யங்களை உருவக்கும் பணி இந்தக் கொரோனா ஆபத்துக்கு மத்தியிலும் விறுவிறுப்பா நடக்குது. இதில் நம் தமிழகத்தைச் சேர்ந்த 700 கூலித் தொழி ளாளர்களும் ஈடுபடுத்தப்பட்டி ருக்காங்க. அந்தத் தொழிலாளர்களும் அவங்க குடும்பத்தினரும் பீதியிலும் பதட்டத்திலும் இருக்காங்க.''
""மோடி கேட்டுக் கொண்ட படி பாலிவுட், கோலிவுட் நட்சத்திரங்கள் விளக்கேற்றிய நிலையில், மக்கள் நீதி மய்யத் தலைவரும் நடிகருமான கமல், மோடிக்கு எழுதிய கடிதம் அதற்கு நேர்மாறா இருக்குது. நீங்கள் சொன்னதைக் கேட்க இத்தனை கோடி மக்கள் இருப்பது போன்ற தலைவர் உலகத்தில் எங்கும் வாய்க்கவில்லைன்னு அந்தக் கடிதத்தில் சொல்லியிருக்கும் கமல், பணமதிப்பிழப்பு நடவடிக்கை தொடங்கி, கொரோனாவுக்கு எதிரா பால்கனியில் கைதட்டுவது- விளக்கு ஏற்றுவது உள்பட எதுவும் அடித்தட்டு மக்களுக்குப் பலன் தராதுன்னு காட்டமா எழுதி யிருக்காரு. நோய்த்தொற்றைத் தடுப்பதில் உங்கள் பக்கம் நிற்போம். ஆனா, நீங்கள் திரும்பவும் தவறு செய்கிறீர்கள்னும், மக்கள் ஏமாற் றப்படுறாங்கன்னும் கமல் தன் னோட கடிதத்தில் எழுதி யிருப்பது மோடியையும் பா.ஜ.கவினரையும் அதிர வச்சிருக்கு.''
__________
இறுதிச் சுற்று
மேலும் 15 நாட்கள்!
ஊரடங்கின் 14வது நாள் செவ்வாயுடன் நிறை வடைந்த நிலையில், ஏப்ரல் 8ந் தேதி அனைத்துக்கட்சித் தலைவர்கள் ஆலோசனை, அதன்பின் துறை வாரியான ஆலோசனைகள் என பிஸியான மோடி, கொரோனா குறித்த முழுமையான விவரங்களைத் திரட்டியபின், ஏப்ரல் 10ல் அடுத்தகட்டம் குறித்து முடிவெடுக்கிறாராம். 21 நாட்கள் ஊரடங்கிற்குப் பிறகு நான்கைந்து நாட்கள் நிபந்தனைகளுடன் தளர்வை ஏற்படுத்தி, அரசு சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், மக்களும் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ள அவகாசம் தந்து, அதன்பின் மேலும் 15 நாட்கள் ஊரடங்கை எமர்ஜென்சி பாணியில் கடுமையாக அமல்படுத்துவது பற்றி தீவிரமாக ஆலோசிக்கிறாராம்.