எஸ்.எழில் டைரக்ஷனில் ஜெயம் ரவி-பாவனா நடித்த ‘தீபாவளி’ படத்தில் ஒரு காட்சியில் நூற்றுக் கணக்கான துணை நடிகர்களுக்கு மத்தியில் அழுக்கு கைலி, மெலிந்த தேகத்துடன் உள்ள ஒரு கேரக்டர் ஒங்கி குரல் கொடுக்கும். அந்த துணை நடிகர்தான் இன்று சூரி என அறியப்படும் நாடறிந்த காமெடி நடிகர். "வெண்ணிலா கபடிக்குழு'வின் "பரோட்டா' காமெடியினால் "பரோட்டா சூரி' என்றே பெயர் பெற்றுவிட்டார். வாய்ப்பும் முன்னேற்றமும் வரிசைகட்டியது. "அண்ணாத்தே' ரஜினிவரை பட வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.
கொரோனா லாக்டவுன் கெடுபிடிகள் உச்சத்தில் இருந்தபோது இ-பாஸ் இல்லாமல் விமல் உட்பட சில நடிகர்களை அழைத்துக்கொண்டு கொடைக்கானல் போனார் சூரி. இது மீடியாக்களில் ஃப்ளாஷ் ஆனதும் ஃபைன் கட்டினார்.
கடந்த செப்டம்பர் மாதம் சூரி மீது ஒரு நில மோசடி புகார் கிளம்பியது. அதாவது இராமநாதபுரம் மாவட்டம் ஈ.சி.ஆர். சாலையில் சாயல்குடி அருகே உள்ள கன்னிராஜபுரம் என்ற கிராமத்தில், அதே ஊரைச் சேர்ந்த -சர்ச்சை ஆசாமி பூவாசலிங்கம் என்பவரிடம் கடற்கரை ஓரம் சொகுசு பங்களா கட்ட நிலம் வாங்கியுள்ளார் சூரி. அந்த நிலம் சம்பந்தமாக சூரி தன்னை ஏமாற்றிவிட்டதாகச் சொல்லி தனது குடும்பத்துடன் சாயல்குடி பத்திரப் பதிவு அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்று திகில் கிளப்பினார் பூவாசலிங்கம். இந்த வழக்கு கடலாடி தாலுகா நீதிமன்றத்தில் இப்போது நடந்துவருகிறது.
இந்நிலையில், கடந்த அக்.-09-ஆம் தேதி சென்னை அடையாறு போலீஸ் ஸ்டேஷனில் முன்னாள் டி.ஜி.பி.ரமேஷ் குடவாலா (நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை ) மீதும் சினிமா தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் என்பவர் மீதும் நில மோசடி புகார் கொடுத்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளார் சூரி.
விஷ்ணு விஷாலை ஹீரோவாகப் போட்டு அன்புவேல் ராஜன் தயாரித்த ‘"வீரதீர சூரன்'’ என்ற படத்தில் நடிப்பதற்காக எனக்கு பேசப்பட்ட சம்பளத்திற்குப் பதிலாக சென்னை சிறுசேரியில் உள்ள ஒரு இடத்தை எனக்கு எழுதிக் கொடுத்தார் அன்புவேல் ராஜன். அந்த நிலத்தை அதிக விலைக்கு என்னிடம் விற்று 2 கோடியே 70 லட்சத்தை அன்புவேலும் ரமேஷ்குடவாலாவும் மோசடி செய்துவிட் டார்கள்’-இதுதான் சூரி புகாரின் சுருக்கம்.
இந்தப் புகாரைக் கொடுப்பதற்கு முன்பாக உதயநிதி ஸ்டாலின் மூலமாக மு.க.ஸ்டாலினைச் சந்திக்கிறார் சூரி. இந்த விஷயம் உளவுத்துறை மூலமாக முதல்வர் எடப்பாடிக்கு பாஸ் செய்யப்படுகிறது. உடனே மத்திய குற்றப் பிரிவுக்கு (சி.சி.பி.) வழக்கு மாற்றப்பட்டு ரமேஷ் குடவாலா மீதும் அன்புவேல் ராஜன் மீதும் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படுகிறது.
அக்.11-ஆம் தேதி முதல்வர் எடப்பாடியை மரியாதை நிமித்தமாக சந்திக்கிறார் சூரி. அதையடுத்த இரண்டு நாட்களில் "தனது புகாரை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும்' என சென் னை உயர்நீதிமன்றத்தில் மனு போட்டார் சூரி. முன்ஜாமீன் மனு போட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார் முன்னாள் டி.ஜி.பி. இந்த விவகாரம் மீடியாக்களில் பரபரப்பானது.
வழக்கு தொடர்பாக, பாதிக்கப்பட்ட சூரியைத் தொடர்புகொள்ள எடுத்த முயற்சிகளுக்குப் பின், அவரது பி.ஆர்.ஓ., "பதினஞ்சுநாளா போனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வச்சிருக்காரு'’என்பதுடன் முடித்துக்கொண்டார்.
தொடர்ந்து பல கோணங்க ளிலும் விசாரித்தோம்.
முன்னாள் டி.ஜி.பி.ரமேஷ் குடவாலாவின் ஆடிட்டர் மூலம் ஆறேழு வருடங்களுக்கு முன்பு குடவாலாவுக்கு அறிமுகமாகி யிருக்கிறார் அன்புவேல் ராஜன். கிட்டத்தட்ட 20 வருடங்களாக சென்னையில், குறிப்பாக ஈ.சி.ஆர். சாலையில் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்பவர். ரமேஷ் குடவாலா அறிமுகத்தால் சினிமா தயாரிப்பிலும் நடிப்பிலும் ஆர்வம் காட்டினார் அன்புவேல்ராஜன். அந்த ஆர்வம், குடவாலா மகன் நடிகர் விஷ்ணு விஷால் வழியாக டைரக்டர் சுசீந்திரனிடம் போனது. அவர் சிபாரிசின் பேரில் "சகுனி'’பட டைரக்டர் சங்கர்தயாளை டைரக்டராக கமிட் பண்ணி ‘"வீரதீர சூரன்'’ என்ற படத்தை ஆரம்பிக்க முடிவானது.
"வெண்ணிலா கபடிக்குழு'’ படத்தில் தனக்கு அறிமுகமானவர் என்ற முறையில் சூரியிடம் பேசி, "வீரதீர சூரன்'’ படத்தில் கமிட் பண்ணியுள்ளார் விஷ்ணு விஷால். ஹீரோயினாக யாரையும் புக் பண்ணாமல், விஷ்ணு-சூரி சம்பந்தப்பட்ட சீன்களின் ஷூட்டிங் மட்டும் நடந்துள்ளது. விஷ்ணு விஷாலுடனான நெருக்கமான நட்பால், அவரது தந்தை ரமேஷ் குடவாலாவிடம் அறிமுகமாகி யிருக்கிறார் சூரி. சென்னை வளசரவாக்கத்தில் சூரி வீடு வாங்க பணம் கொடுத்து பஞ்சாயத்தானபோது ரமேஷ் குடவாலா உதவியால் பணத்தை திரும்ப வாங்கிவிட்டார் சூரி. இப்படி முன்னாள் டி.ஜி.பி. மூலம் பல உதவிகள்..
‘"வீரதீர சூரன்'’’ஷூட்டிங் ஸ்பாட்டில், சிறுசேரியில் நிலம் வாங்கும் விஷயத்தை அன்புவேல்ராஜனிடம் சூரி சொல்லியுள்ளார். அந்த ஏரியாவில் குறிப்பிட்ட அளவு ஏக்கர் நிலத்திற்குச் சொந்தக்காரர்கள் பலரிடம் எழுத்துப்பூர்வமாக அக்ரிமெண்ட் போட்டு, வைத்திருந்தார் அன்புவேல் ராஜன்.
சூரி குறிப்பிட்ட நிலம் அன்பு அக்ரிமெண்ட் போட்டிருந்த உலகநாதன், ஆனந்தன் என்ற அண்ணன்-தம்பிகளுக்குச் சொந்தமானது. அதனால் அன்பு, அவர்களிடமே நேரடியாக பணத்தைக் கொடுத்து நிலத்தை வாங்கிக்கொள்ளுமாறு சூரியிடம் கூறிவிட்டார். நிலம் வாங்கப்போகும் விஷயத்தை ரமேஷ் குடவாலாவிடம் சொல்லி ஆசி வாங்கியபோது, பேப்பர்ஸை பக்காவா செக்பண்ணிட்டு வாங்கும்படி சூரியிடம் சொன்ன குடவாலா, "சூரிக்கு ஹெல்ப் பண்ணுங்க' என அன்புவிடமும் சொல்லியிருக்கிறார்.
2015 மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட அந்த நிலம் வாங்கும் பிராசஸ் ஆறு மாதங்கள் கழித்து, அதாவது நவம்பர் மாதம் முடிந்து திருப்போரூர் ரெஜிஸ்டர் ஆபீசில் பத்திரம் பதிவாகியுள்ளது. இந்த ஆறு மாதத்தில் தனது வக்கீல், ஆடிட்டர், மேனேஜர் ஆகியோருடன் அடிக்கடி அந்த நிலத்தைப் பார்வையிட்டு, பாதை இருக்கிறதா என்பதையெல்லாம் உறுதி செய்துள்ளார் சூரி. 05-04-2016-ல் சூரி பேருக்கு பட்டா கிடைத்ததும், அந்த இடம் வீடு கட்ட உகந்தது என திருப்போரூர் ஊ.ம. தலைவர் ஏகாம்பரத்திடம் சான்றிதழ் வாங்கியுள்ளார் சூரியின் அண்ணன். 7 மீட்டர் பாதையும் சூரியின் நிலத்திற்கு அருகே இருந்துள்ளது.
இது நடந்து சில நாட்களிலேயே, ‘‘"வீரதீர சூரன்'’’ படம் கால்வாசி ஷூட்டிங்குடன் கைவிடப்பட்டது. ஆனாலும் விஷ்ணு விஷாலுடன் "வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்', ‘"கதாநாயகன்', "மாவீரன் கிட்டு'’ என மூன்று படங்களில் நடித்து முடித்துவிட்டார் சூரி. இந்நிலையில்தான், ‘"இப்போது கொஞ்சம் கஷ்டமாக உள்ளதால், நான் வாங்கிய சிறுசேரி இடத்தை விற்றுக்கொடுங்க, இல்லேன்னா நீங்களே வாங்கிக்கங்க'’’ என அன்புவிடம் சூரி சொல்ல... பலகட்ட யோசனைக்குப் பின் அந்த இடத்தை வாங்க ஒத்துக் கொள்கிறார் அன்பு.
அதன்பேரில் 15-02-2018 அன்று அன்புவுக்கும் சூரிக்குமிடையே சேல் அக்ரிமெண்ட் கையெழுத்தாகி, 1 கோடியே 10 லட்ச ரூபாயை ஆக்சிஸ் வங்கி மூலம் செக்காகவும் ரொக்கமாகவும் கொடுக் கிறார் அன்பு. எம்.ஓ.யூ. ( Memorandum of Understanding ) என்ற அக்ரிமெண்டும் சூரிக்கும் அன்புவுக்குமிடையே கையெழுத் தாகிறது. என்ன நினைத்தாரோ சூரி, திடீரென ஒரு நாள் ரமேஷ் குடவாலா விடம் போய், “"அங்கிள் ஒங்களால தான் நான் மோசம் போய்ட் டேன்'’எனச் சொன்னதும் டென்ஷ னாகிவிட்டார் குடவாலா.
வைகைப்புயல் வடிவேலுவுக்கு சிலரின் கூடாநட்பு கிடைத்ததால் ஏற்பட்ட நிலைமை போல சூரிக்கும் சில கூடாநட்பு கிடைத்தது. தனது ஊரான ராஜாக்கூர் அருகில் வரிச்சூர் இருப்பதாலும் சொந்தம் என்ற முறையிலும் பிரபல ரவுடி வரிச்சூர் செல்வத்தைச் சந்தித்து சிறுசேரியில் நிலம் வாங்கியதில் தான் ஏமாற்றப்பட்டதாக புலம்பி யுள்ளார் சூரி.
வரிச்சூர் டிராக்கில் போய்க் கொண்டிருந்தபோதே மதுரை தி.மு.க.வில் தடாலடி பார்ட்டியான சோலை ரவியிடமும் போயிருக்கிறார் சூரி. இதனால் ஒருமுறை சோலை ரவி உட்பட மதுரை ஆட்கள் 18 பேருடன் சென்று அன்புவிடம் மிரட்டல் தொனியில் பேசியுள்ளார் சூரி என்கிறார்கள். அசராத அன்பு, "அந்த லேண்ட் இன்னும் கூடுதல் விலைக்குப் போகும்போது நானே நல்ல ரேட் கொடுக்குறேன்'’எனச் சொல்லி அனுப்பியுள்ளார்.
அதற்கடுத்ததாக வரிச்சூர் செல்வமும் அன்புவிடமும் போய் பேசிவிட்டுத் திரும்பியுள்ளார். "நம்ம சொந்தக்காரன் ஒரு பிரச்சனைன்னு வந்தான், அதனால அன்புவிடம் பேசினேன், அவ்வளவுதான் நம்ம ரோல்' என்பதுடன் ஆஃப்பாகிவிட்டார் வரிச்சூர் செல்வம்.
சூரியை தப்பான வழியில் ஆபரேட் பண்ணுகிறார்கள் என்பதற்கு உதராணமாக சூரி கொடுத்துள்ள புகாரில் இருந்தே சில கோளாறுகளை விளக்கினார் சூரியின் பழைய நண்பர் ஒருவர். “""சிவில் வழக்குகளில் சிக்கல் வந்தால், மூன்று வருடத்திற்குள் வழக்குத் தொடுக்க வேண்டும். இப்ப கொடுத்திருக்கும் கம்ப்ளெய்ண்ட்டில் கூட "ரமேஷ் என்பவர் என்னை ஏமாற்றிவிட்டார்' என பல இடங்களில் குறிப் பிட்டுவிட்டு, ஒரே ஒரு இடத்தில் மட்டும் போலீஸ்காரர் அதுவும் கவர்மெண்ட் போலீஸ் எனச் சொல்லியிருப்பதி லிருந்தே தெரிஞ்சுக்கணும் சூரி எப்படி இந்த டீமிடம் சிக்கியிருக்கார்''னு’என்றார் அக்கறையும் கவலையுமாக.
ரமேஷ் குடவாலா மீதான புகார் -முன்ஜாமீன் மனு பற்றி அவரது மகன், நடிகர் விஷ்ணு விஷாலிடம் கேட்டபோது, “""இது சட்டப்படியான உரிமை, அதில் ஒன்றும் தப்பில்லையே. மேலும் 30 வருட போலீஸ் சர்வீஸில் அப்பாவிற்கு எத்தனையோ எதிரிகள் முளைத்திருக்கலாம். எங்களையும் தற்காத்துக் கொள்ளணும்ல''’ என்பதுடன் முடித்துக் கொண்டார்.
பிரச்சனையின் மையப்புள்ளியாக சூரி குறிப் பிட்டுள்ள அன்புவேல் ராஜனை தொடர்புகொண்டோம். சோலை ரவி உட்பட மதுரை குரூப்புடன் சூரி வந்ததை ஒத்துக் கொண்ட அன்பு, ‘“""எல்லா டாக்குமெண்டுகளும் பக்காவாக உள்ளது. நாங்க யாரும், ராத்திரி 12 மணிக்கு கண்ணைக் கட்டி அழைச்சுக்கிட்டுப் போய் ரெஜிஸ்டர் ஆபீசில் சூரியிடம் கையெழுத்து வாங்கல. கோர்ட்டில் கேஸ் நடப்பதால் இதற்குமேல் விரிவாக என்னால் சொல்ல முடியாது''’என்றார் தெளிவாகவும் உறுதியாகவும்.
சூரியைச் சுற்றியடிக்கும் நில சர்ச்சை எப்போது ஓயுமோ?
-ஈ.பா.பரமேஷ்வரன்