தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ஜெயராஜ், பெனிக்ஸ் காவல்நிலைய மரணத்தின் அதிர்வலைகளே தமிழகத்திலிருந்து விலகாத நிலையில், தென்காசி மாவட்டம் வாகைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த அணைக்கரை முத்து வனத்துறையின் விசாரணையின்போது மரணமடைந்திருப்பது மாவட்டம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

ff

கடந்த 22-ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் கடையம் வனச்சரகத்தைச் சேர்ந்த வன அலுவலக அதிகாரி நெல்லை நாயகம், சக அலுவலர்களுடன் வந்து வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த அணைக்கரை முத்துவை விசாரணைக்கு அழைத்துச்சென்றிருக்கிறார். முத்து, மலையடிவாரத்திலுள்ள தனது விளைநிலத்தில் காட்டுப் பன்றிகளால் பயிர்களுக்கு சேதம் ஏற்படுவதைத் தடுக்க தனது மின்சாரவேலிக்கு திருட்டுத்தனமாக மின்சாரம் எடுத்தது தொடர்பாக விசாரிக்க வேண்டுமெனச் சொல்லி அழைத்துச் சென்றிருக்கின்றனர்.

Advertisment

அன்று இரவு 12.30 மணிக்கு வன அலுவலகர் ஒருவரிடமிருந்து அணைக்கரை முத்துவின் மூத்த மகன் நடராஜனுக்கு சிவசைலம் வனச்சரக அலுவலகத்துக்கு வரச்சொல்லி அழைப்பு வந்திருக்கிறது. நடராஜன் தன் மைத்துனருடன் அங்குசெல்ல, ffஇடையிலேயே வனத்துறை அலுவலக வாகனத்தில், தனது தந்தை படுக்கைவசத்தில் கொண்டுசெல்லப் படுவதைக் கவனித்திருக்கிறார் நடராஜன்.

கடையம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்குக் கொண்டுசெல்லப்பட்ட முத்துவை, அவர்கள் தென்காசி பொதுமருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல பரிந்துரைக்க, தென்காசி பொதுமருத்துவமனையில் முத்து இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்து விட்டனர்.

Advertisment

இந்நிலையில் அணைக்கரை முத்துவின் மரணத்துக்கு எதிராக வாகைக்குளம் கிராம மக்கள் ஆழ்வார்குறிச்சி காவல்நிலையத்துக்கு எதிரே போராடும் தகவல் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் தி.மு.க.வின் பூங்கோதை ஆலடி அருணாவுக்குத் தெரியவர, அவர் காவல்நிலையத்துக்கு வந்து போராட்டக்காரர்களுடனும் போலீசாருடனும் பேசி, உடல்நலமில்லாத அணைக்கரை முத்துவை அழைத்துச்சென்றதில் தொடர்புடைய வனத்துறை அதிகாரிகளின் பெயர்களை இந்த வழக்கில் சேர்த்துக்கொள்ள வகைசெய்தார்.

""உடல்நலமில்லாமல் இருந்த அணைக்கரை முத்துவை நேரம் கெட்ட நேரத்தில் மேல்சட்டையைக்கூட அணிய அவகாசம் தராமல் இழுத்துச் சென்றிருக்கின்றனர். அவரை விசாரணைக்குக் கொண்டுசெல்வது குறித்து அவர் குடும்பத்துக்கு தகவல் தரவில்லை'' என்கிறார் பூங்கோதை ஆலடி அருணா.

வனத்துறையோ, விசாரணையின்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதே மரணத்துக்குக் காரணம் என்கிறது. முத்துவின் குடும்பத்தினரோ அவரது உடலில் நிறைய அடிபட்ட காயங்கள் இருந்தன. ஈவிரக்கமற்ற வனத்துறை அலுவலர்களின் தாக்குதலே இந்த மரணத்துக்குக் காரணம் என்கிறார்கள்.

இந்நிலையில் அணைக்கரை முத்து மரணம் தொடர்பாக, அம்பாசமுத்திரம் மாஜிஸ்திரேட் கார்த்திகேயன் தலைமையில் நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.

-சுப்பிரமணி, பரமசிவன்