(சென்ற இதழ் தொடர்ச்சி...)
ஆரோவில்லில் விவசாயம் செய்யும் உ.பி., வாராணாசியை சேர்ந்த ஆரோவில் ஒர்க்கிங் கமிட்டி செயற்குழு உறுப்பினராக இருந்த அரவிந்த மகேஸ்வர், "எனக்கு நிர்வாகம் ஒதுக்கிய இடத்தில் பல ஆண்டுகளாக பயிர் செய்துவருகிறேன். திடீரென இது என் இடமென ஒருசிலர் ஜே.சி.பி. இயந்திரத்தால் தோண்டி கம்பி வேலி போட்டார்கள். அப்பகுதியில் நான் தங்கியிருந்த வீடு இருந்தது. இதுகுறித்து பவுண்டேஷன் அலுவலகத்தில் முறையிட்டபோது, "நீங்கள் இடத்தை காலிசெய்து பக்கத்தில் இருந்துகொள்ளுங்கள்' என சர்வசாதாரணமாகக் கூறினார்கள். குறைந்தபட்சம் இதுகுறித்து எங்களிடம் தகவல் சொல்ல வேண்டுமென்று நினைக்கவில்லை'' என்றார்.
புதுவை டூ மயிலம் சாலையில் விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா புளிச்சப்பாலம் கிராமத்தில் ஆரோவில் நிர்வாகத்துக்கு சொந்தமாக, ஆரோவில் அன்னபூர்ணா பார்ம் என்கிற பெயரில் 135 ஏக்கரில் விவசாயப் பண்ணை உள்ளது. ஹாலந்து நாட்டைச் சேர்ந்த தாமஸ், ஆன்ட்ரோ இருவரும் கடந்த 40 ஆண்டுகளாக இப்பண்ணையை பராமரித்து வருகிறார்கள். இந்த பண்ணை வளாகத்திற்குள் இரண்டு குளங்கள், நெல்வயல் உள்ளன. புதிய நெல் ரகங்கள் இங்கே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இங்கே நடப்பது முழுக்க முழுக்க இயற்கை விவசாயம் தான். இந்த பண்ணையில் விளைவிக் கப்படும் நெல்லை அரைக்க ரைஸ்மில்லும் உள்ளது. இந்த அரிசியையே ஆரோவில் நிர்வாகம் பயன்படுத்துகிறது, விற்பனையும் செய்கிறது. அதோடு, இங்குள்ள மாட்டுப்பண்ணை பால் தான் ஆரோவில் நடத்தும் ஹோட்டல் உட்பட அனைத்து இடங்களிலும் பயன்படுத்தப் படுகிறது. இப்போது இந்த இடத்தை குறிவைத்துவிட்டது நிர்வாகம்.
இதுகுறித்து கடந்த 2025, ஆகஸ்ட் 11ஆம் தேதி தாமஸூக்கு மின்னஞ்சல் வழியாக கடிதம் அனுப்பியுள்ளார்கள். அதில், "130 ஏக்கரில் 100 ஏக்கரை சென்னை ஐ.ஐ.டி.க்கு தருவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதனால் மற்ற இடத்தை காலி செய்யுங்கள்' என உத்தரவாக சொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து விசாரித்தபோது, எலக்ட்ரிக் வாகனங்கள் டெஸ்ட் ட்ரைவ் செய்வதற்காக சாலை அமைக்க இந்த இடத்தை ஐ.ஐ.டி.க்கு தர ஒப்பந்தம் போட்டுள்ளதை தெரிந்து அதிர்ச்சியாகியுள்ளார்கள். கடந்த 40 ஆண்டு களாக உரம், பூச்சிக்கொல்லி மருந்தில்லாமல் இயற்கை விவசாயம் நடப்பதாகவும், 130 ஏக்கரும் பயன்பாட்டில் இருப்பதாகவும் இவர்கள் பதிலளித் துள்ளனர். இதற்கே அவர்களை ஆன்ட்டி இன்டி யன் எனச்சொல்லி மிரட்டுவதால் பயந்துபோயுள் ளார்கள். காரணம், ஆரோவில்லில் தங்கியுள்ள வெளிநாட்டினருக்கு 5 ஆண்டுகள் தங்குவது போல் ஸ்பெஷல் விசா இந்திய தூதரகம் தந்து வருகிறது. அந்த ஸ்பெஷல் விசா வாங்குவதற்கு ஆரோவில் பவுண்டேஷன் அலுவலகத்திலிருந்து தூதரகத்துக்கு கடிதம் தரவேண்டும். இப்போது வெளிநாட்டினர் எதிர்த்து கேள்வி கேட்பதால் விசா தருவதில் சிக்கலை உருவாக்குகிறார்கள். இதனால் ஆரோவில் வளர்ச்சிக்காக உழைக்கும் வெளிநாட்டினர் நொந்துபோய் இருக்கிறார்கள்.
ஜெர்மனியை சேர்ந்த ப்ரடெரிக்தான் முதல் ஆரோவில்லியன். அவர் எதிர்ப்பு தெரிவித்ததால் அவரை வெளியே போகச் சொல்லிவிட்டது பவுண்டேஷன் அலுவலகம். அதேபோல் பல ஆராய்ச்சிகள் செய்து ஆரோவில்லுக்கு பெருமை சேர்த்தவருக்கும் நெருக்கடிகள் தந்துவருகிறது. 30 வருடங்களுக்கு முன்பே தங்கள் சொத்துக்களை விற்றுவிட்டு, அப்பணத்தை ஆரோவில் பவுண்டேஷ னுக்குத் தந்துவிட்டு இங்கிருப்பவர்களை விரட்டிவிட்டால் எங்கே செல்வார்கள்? அவர்களின் சொந்த நாட்டில் அவர்களுக்கென வீடோ உறவுகளோ இல்லை. இதனால் வேதனையில் இருக்கிறார்கள். ஆரோவில்லின் விவசாய நிலத்தை அழிப்பது ஆரோவில்லின் கொள்கைகளுக்கு முரணானது என்கிறார்கள்.
இதேபோல் "புத்த கார்டன் எனப் பெயரிடப் பட்ட 15 ஏக்கர் நிலம் உள்ளது. அங்கு ஷாப்பிங் மால், வி.ஐ.பி.களுக்கான கார் பார்க்கிங் போன்றவற்றை கொண்டுவரப் போவதாகச் சொல்லி புத்த கார்டனை நடத்திய வரை காலி செய்யச்சொல்லியுள்ளது பவுண்டேஷன் அலுவல கம். அந்த இடத்துக்கு பல கோடிக்கு பரிமாற்றம் நடக்கிறது எனத் தகவல் வந்துள்ளது' என்கிறார்கள்.
ஆரோவில்வாசியான பிரபு என்பவர், "விதிகளை மீறி செயல்படுவதை யாரும் கேள்வி கேட்கக்கூடாது என்கிறது பவுண்டேஷன் செயலகம். இதற்கு முன்பு இங்கு அதிகாரிகளாக இருந்தவர்கள், ஆரோவில் வளர்ச்சிக்காக பணியாற்றினார்கள். இப்போதோ மக்களுக்கு எதிரானவர்களாக இருக்கிறார்கள். கேள்வி கேட்கும் வெளிநாட்டினரை துரத்துறாங்க. பாழடைந்த கட்டடங்களை இடிக்கிறோம் என வெளிநாட்டினர் தங்கியுள்ள வீடுகளை இடிச்சுத் தள்ளுறாங்க. குஜராத்திகளைக் கொண்டுவந்து ஆரோவில்லில் குவிக்கிறாங்க. இப்போது முழுக்க முழுக்க குஜராத்திகள்தான் இருக்கிறார்கள்.
1989-ல் கலைஞர் முதலமைச்சராக இருந்த போது 50 ஆயிரம் ரூபாய் சொந்த நிதி தந்து தமிழ் மரபு மையத்தை உருவாக்க வச்சாரு, தமிழுக்காக உருவாக்கப்பட்ட அந்த மையத்தை எப்படி சீரழிச்சி வச்சிருக்காங்க பாருங்க. திருவள்ளுவர் சிலையை கொண்டு போய் பாத்ரூம் பக்கத்துல வச்சிருக்காங்க. அதே நேரத்தில் சமஸ்கிருத பயிற்சிக்கு ரொம்ப முக்கியத்துவம் தர்றாங்க. இங்கே நடக்கும் அநியா யங்களை எதிர்ப்போரை அடக்க சி.ஆர்.பி.எப். கொண்டுவரத் திட்டமிடறாங்க. இதன்பின்னால் வேறு பயங்கர திட்டமுள்ளது'' என்றவரிடம், "அதென்ன திட்டங்கள்'' என விசாரித்தோம்...
(அடுத்த இதழில் தொடரும்)
-தமிழ்குரு