சென்னையை அடுத்த தாம்பரம் சானடோரியத்தில் தலைமை மருத்துவமனை மற்றும் பயனாளி களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் அரசு நிகழ்ச்சி கடந்த ஆகஸ்டு 9ஆம் தேதி சனிக்கிழமை பல்லாவரம் கன்டோன்மெண்ட் மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. சுமார் 20,000-க்கு மேற்பட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். தாம்பரம் சானடோரிய மருத்துவமனை திறப்பு விழாவை முடித்துவிட்டு, மேடைக்கு வந்து பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கி உரையாற்றினார் முதல்வர். பின்னர், தாம்பரத்தில் செங்கல்பட்டு மாவட்ட அரசு மருத்துவமனையைத் திறந்து வைத்துவிட்டு, பல்லாவரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவுக்கு வந்த முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தாம்பரம் சானடோரியம் பஸ் நிலையம் அருகே ரூ.115.38 கோடி மதிப்பில் 2,27,320 சதுர அடி பரப்பில் ஆறு மாடிகள், புதிய படுக்கைகள் 400, 6 அறுவைச் சிகிச்சை அரங்கங்கள், 40 ஐ.சி.யு. படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை முதல்வர் மு.க..ஸ்டாலின் திறந்துவைத்துப் பேசினார்.
“முதல்வர் தனது உரையில் "ஆகஸ்ட் 8-ஆம் தேதி வெள்ளிக்கிழமை, மாநிலக் கல்விக் கொள்கை வெளியிட்டதை பெருமையாக நினைக்கிறேன். கல்வி மற்றும் மருத்துவம், திராவிட மாடல் அரசின் இரு கண்கள். இந்த நிகழ்ச்சியை பிரமாண்டமாக ஏற்பாடு செய்திருக்கும் மாவட்ட பொறுப்பு அமைச்சர் தா.மோ.அன்பரசன், நான் என்ன சொன்னாலும் தட்டாமல் செய்துகாட்டுவார். தாம்பரம் அரசு மருத்துவமனை, செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவமனை திறப்பு விழா நடைபெற்றுள்ளது.
எந்த ஒரு அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் எனக்கு முதல் கேள்வி எத்தனை பட்டாக்கள் வழங்கப்போகிறோம் என்பதுதான். ஏனென்றால், மனிதனின் அடிப்படைத் தேவைகளில் உணவு, உடை, உறைவிடம் முக்கியமானவை. இதில் உணவு, உடை எளிதில் கிடைத்து விடும். ஆனால் உறைவிடம் என்பது பலருக்கு எட்டாக் கனியாக உள்ளது. அதை நிறைவு செய்வதே திராவிட மாடல் அரசின் கனவு.
ஒரு மனிதனுக்கு வசிக்க நிரந்தர இடம் தேவை. ஏற்றத்தாழ்வு இல்லாத சமத்துவ சமுதாயத்தை கட்டமைப்பதே நமது அரசின் கொள்கையாக வைத்துள்ளோம். கடந்த 2021 முதல் 2024 டிசம்பர் வரை 10,24,724 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. ஐந்து மாதத்தில் 5 லட்சம் வீட்டு மனை பட்டாக்கள் வழங்கத் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் 7,27,660 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதுவே நமது அரசின் சாதனை. நகர்ப்புற மற்றும் புறநகர்வாசிகளுக்கு, தகுதியுள்ள 63,419 பேருக்கு பட்டா வழங்க ஒப்புதல் வழங்கப் பட்டது. அதில் 21,221 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளோர்க்கு ஒரு மாதத்தில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் 41,858 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.
தமிழகம் பொருளாதாரத்தில் 11.9% வளர்ச்சி பெற்றுள்ளது. இதுவே திராவிட மாடல் ஆட்சியின் வளர்ச்சிக்கு தலைசிறந்த எடுத்துக்காட்டு. தலைவர் கலைஞர் ஆட்சிக்குப் பிறகு இரட்டை இலக்கத்தில் தமிழகப் பொருளாதாரம் வளர்ச்சி பெற்றுள்ளது என்பது பெருமைக்குரியது. கடந்த 2015- 2021 வரை 10 ஆண்டுகள் பின்னே சென்ற தமிழகத்தை நான்கு வருடத் தில் நமது ஆட்சி மீட்டெடுத்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அவர்களின் நண்பரான மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்த புள்ளிவிவரமே தவறு என்கிறார். மோடியால் முடியாததை ஸ்டாலின் சாதிக்கிறார் என்பதே அவர்களின் வயிற்றெரிச்சல். இந்திய அளவில் மோடி மட்டுமல்லாமல் மற்ற முதல்வர்கள் செய்யாத சாதனையை திராவிட மாடல் ஆட்சி செய்து வருகிறது. இந்த வேகம் மேலும் அதிகரிக்கப்படும். தமிழக மக்கள் ஆதரவுடன் எங்களின் பயணம் தொடரும்'' என்று முத்தாய்ப்பாக பேசியமர்ந்தார்.
பயனாளிகளில் சிலர் தங்கள் மகிழ்ச்சியை நம்மோடு பகிர்ந்துகொண்டனர்.
தெரசா: நாங்க தாம்பரம் பகுதியில் பல வருஷமா குடியிருக்கிறோம். பட்டா இல்லாததால எந்த உதவித்தொகையும் எங்களுக்கு கிடைக்காது. பட்டாவுக்காக ரொம்பவே கஷ்டப்பட்டோம். இப்ப, ஒரு ரூபா கூட செலவு பண்ணாம பட்டா கிடைச்சிருக்கு. முதல்வரோட சேவை தொடர வாழ்த்துகள்!
சோனியா: பல்லாவரம் துலுக்கத்தம்மன் கோயில் பகுதியில் குடியிருக்கிறோம். எங்க வீட்டுக்காரரும், மாமனாரும் பட்டாவுக்காக பல வருஷமா முயற்சி பண்ணினாங்க. கடைசியா இப்ப வீடு தேடி அழைப்பு வந்துச்சு. போன கொஞ்ச நேரத்திலேயே பட்டா கொடுத்துட்டாங்க. கனவா நிஜமான்னே தெரியல!
ரஞ்சிதம்: எனக்கு 70 வயசு. பாரதி நகர் பகுதி பல்லாவரத்தில் 50 வருஷமா குடியிருக்கிறோம், இவ்ளோ காலமா பட்டா இல்லாததால, வீட்டையே இடிச்சிடுவாங்களோ, கவர்மென்ட் எடுத்துடுமோன்னு பயந்துட்டு இருந்தோம். தி.மு.க. ஆட்சியில பட்டா கிடைச்சத எப்பவும் மறக்க மாட்டோம்!
செந்தாமரை: 40 வருஷமா இந்த பகுதியில குடியிருக்குற என்னால பட்டா வாங்கவே முடியல. கடந்த பத்து வருஷமா யார் யார்ட்டயோ ரூவா குடுத்து ஏமாந்துட்டோம். இப்ப எங்களுக்கு வீடு தேடி வந்து பட்டா குடுத்திருக்காங்க!
பட்டா பெற்ற அனைவர் முகத்திலும் மனநிறைவைக் காண முடிந்தது.