கடந்த 2023 ஆகஸ்ட் 12-15 நக்கீரன் இதழில் "வில்லங்க குற்றச்சாட்டில் விருதுநகர் மாவட்ட கல்வி அதிகாரி!' என்னும் தலைப்பில் விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமன் குறித்து செய்தி வெளியிட்டிருந்தோம்.
அக்கட்டுரையில், அவ ரது தகாத ஆர்வத்தையும், தனியார் பள்ளிகளில் நடத்தும் லஞ்ச வேட்டையையும் குறிப்பிட்டிருந்தோம். பாலியல் மற்றும் லஞ்சக் குற்றச்சாட்டு குறித்து சி.இ.ஓ. ராமனின் விளக்கத்துடனே செய்தி வெளியிட்டோம். ஆனாலும், அடுத்தடுத்து விருதுநகர் மாவட்ட பள்ளிகளின் அவலம் குறித்து அவரிடம் எடுத்துக்கூறி தீர்வுகாண முயற்சித்தபோதெல்லாம், நம்மைத் தொடர்ந்து தவிர்த்துவந்தார்.
விருதுநகர் மாவட்ட பள்ளிகள் நலனில் அக்கறையில்லாமல், சி.இ.ஓ. ராமன் காட்டிவந்த அலட்சியத்தை, தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிவொளியின் கவனத் துக்குக் கொண்டுசென்றோம். அவர் நம்மிடம் விருதுநகர் "சி.இ.ஓ. ராமன் செய்தியாளர்கள் லைனுக்கு வருவதில்லையா?''’என்று வியந்தார்.
இந்நிலையில், விருதுநகர் மாவட்ட கல்வித்துறை வட்டாரத்தினர் நம்மிடம் “ஆரம்பத்திலிருந்தே நக்கீரன் எடுத்து வந்த முயற்சியால் சி.இ.ஓ. ராமன் தமிழ்நாடு அளவில் அம்பலப்பட்டுப் போனார். இளநிலை உதவியாளர் சாணக்கியன், லஞ்சப் பணத்தைப் பெற்றுத்தரும் புரோக்கராக செயல்படுவதையும் நக்கீரன் சுட்டிக்காட்டியது. "பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பது தற்போது நிரூபணமாகியிருக்கிறது'’என்று கொண்டாட்டமாகத் தெரிவித்துவிட்டு “தனியார் மெட்ரிக் பள்ளிகளை நடத்துபவர்கள், "சென்னையில் ‘ராஜ’ அதிகாரம் உள்ள அந்த அதிகாரியை நேரடியாகச் சந்தித்து, லட்சம் லட்சமாக லஞ்சப் பணம் தருகின்றனர். அவர் எப்போது மாட்டுவாரோ?''’என கேள்வி எழுப்பினர்.
சி.இ.ஓ. ராமன் எப்படி சிக்கினார்?
தொடர்ந்து புகாருக்கு ஆளான விருதுநகர் சி.இ.ஓ. ராமன், சென்னை ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், பிரிவு உபசார நிகழ்ச்சியெல்லாம் நடந்தது. ராமனோ கடைசி நேரத்திலும் கல்லா கட்டியிருக்கிறார். விருதுநகர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளில், முதுகலை பட்டதாரி ஆசிரியராக பணி நியமனம் பெற்றுள்ள ஆசிரியர்களுக்கு பணி ஒப்புதல் அளிப்பதற்கு, ஒவ்வொரு பணியிடத்துக்கும் ரூ.8 லட்சம் பெறுவதில் குறியாக இருந்திருக்கிறார்.
மேலும், தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் புதுப்பித்தலுக்கும், ஆசிரியர் பணியிட மாறுதலுக்கும் லஞ்சம் பெற்றுள்ளார். இவ்வாறு லஞ்சமாகப் பெற்ற பெரும்தொகை, முதல் நாள் விருதுநகரிலிருந்து பத்திரமாக வெளியே கொண்டு செல்லப்பட்டுள்ளது. இத்தகவல், விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத்துறையினருக்கு மறுநாள் கிடைத்தது.
விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமன், தனது அலுவலகத்தில் இருந்தபோதே லஞ்ச ஒழிப்பு கூடுதல் கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் தலைமையில் அங்கு சோதனை நடத்தப்பட்டது. ராமனின் நேர்முக உதவியாளர் செல்வராஜுவிடமிருந்து ரூ.13 ஆயிரமும், ராமன் வீட்டிலிருந்து ரூ.3 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டது. லஞ்சம் வாங்கிய ராமன், அதற்கு உடந்தையாக இருந்த செல்வராஜ் மற்றும் சாணக்கியன் மீது வழக்கு பதிவாகியுள்ளது.
அரசு உதவிபெறும் பள்ளிகள், ஆசிரியர் பணி நியமன ஒப்புதலுக்காக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு லட்சங் களில் லஞ்சப் பணத்தை வாரியிறைப்பது ஏன்?’ என்று தனியார் பள்ளிகளின் செயல் பாட்டை நன்கறிந்த ‘சோர்ஸ்’ ஒருவரிடம் கேட்டோம்.
"தெற்குத் தெரு இந்து நாடார் மேல்நிலைப்பள்ளி, ராஜபாளையத்தை அடுத்துள்ள முகவூரில் உள்ளது. அந்தப் பள்ளியில் முதுநிலை பட்டதாரி ஆசிரியரை நியமனம் செய்வதற்கு ஏலம் நடத்தினார்கள். ஏலம் எப்படி நடந்ததென்றால், அந்த போஸ்டிங் வேண்டுமென்று போட்டிபோட்ட நான்கு பேருக்கு மறைமுக டென்டர் விட்டார்கள். பட்ட தாரி ஆசிரியர் நிய மனத்துக்கு தங்களால் எவ்வளவு கொடுக்க முடியும் என்று அந்த நான்குபேரும் மூடிய கவரில் தொகையைக் குறிப்பிட்டு தந்தார்கள். பள்ளி நிர்வாகத்தினர் அந்த நான்கு பேரையும் அழைத்து, அவர்கள் முன்னிலையிலேயே கவரைப் பிரித்தார்கள். ஒருவர் 45 லட்சம், இன்னொருவர் 60 லட்சம், மற்றொருவர் 61 லட்சம் எனக் குறிப்பிட்டிருந்த நிலையில், ஆசிரியை ஒருவர் ரூ.69 லட்சத்துக்கு ஏலம் கேட்டிருந்தார். அந்த ஆசிரியைக்கே போஸ்டிங் என்று முடிவாகி, ரூ.23 லட்சம் முன்பணமாகப் பெறப்பட்டுள்ளது. ஆனாலும், ஊர் முக்கியஸ்தர்கள் இதில் தலையிட்டு குழப்பம் ஏற்படுத்திவிட, அந்த ஆசிரியை பரிதவிப்புடன் புலம்ப, விவகாரம் ‘லீக்’ ஆகிவிட்டது.
அரசாங்க சம்பளம் பெறும் பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கு ரூ.69 லட்சமா? என்று மலைக்கத் தோன்றும். ஆனால், 10 வருடங்களில் கொடுத்த பணம் அரசாங்க சம்பள மாக ஏறக்குறைய திரும்பக் கிடைத்துவிடும். மரியாதையைப் பெற்றுத்தரும் அரசு ஆசிரியர் வேலை.. வாழ்நாள் பாதுகாப்பு என்ற கணக்கோடுதான், சும்மா கிடக்கும் பூர்வீக நிலத்தை விற்றோ, வேறு ஏதாவது முயற்சியில் கிடைத்த பணத்தையோ, பள்ளி நிர்வாகத் திடம் தருகிறார் கள்.
இந்தப் பள்ளி மட்டு மல்ல.. தமிழ் நாட்டில் அரசு உதவிபெறும் பல பள்ளிகளும், ஆசிரியர் பணி நியமனத்துக்கு பெரும் தொகை பெறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளன''’என்றார்.
"உங்களது பள்ளியில் பட்ட தாரி ஆசிரியர் போஸ்டிங் ஏலம் விடப்பட்டதா?''’ என்று முகவூர் - தெற்குத் தெரு இந்து நாடார் மேல்நிலைப்பள்ளியின் செயலாளர் ஆதிநாராயணனிடம் கேட்டோம். “
"உங்களுக்கு யார் சொன்னது? சி.இ.ஓ. அலுவலக ஒப்புதலுக்காக பட்டதாரி ஆசிரியர் நியமனத்தை இன்னும் நாங்கள் கொண்டு செல்லவில்லையே? கொடுப்பவர்கள் கொடுக்கிறார்கள். வாங்குபவர்கள் வாங்குகிறார்கள். எவ்வளவு பணம் கொடுத்தார்கள் என்று பணம் கொடுத்தவர்கள் சொல்லட்டும். ஏலம் நடந்ததென்று யாரும் எது வேண்டுமானாலும் சொல்லலாம். அது குறித்தெல்லாம் நான் பேச முடியாது. வேறு எதுவும் சொல்ல முடியாது''” என்று டென்ஷனாகி, குரலை உயர்த்தி, லைனைத் துண்டித் தார்.
சேவை என்ற உன்னத நிலை யிலிருந்து எப்போதோ கீழிறங்கி கல்வி, பணம் கொழிக்கும் வியா பாரமாகிவிட்டது. அதனால், ‘கொடுக்கல் வாங்கல்’ நடக்கத்தானே செய்யும். கல்விப் புரட்சிக்கு வித்திட்ட தமிழ்நாட்டில் இப்படியொரு அவலம் தொடரலாமா?