ர்மஸ்தலா விவகாரத்தில் வழக்கைத் திசைதிருப்பும் நோக்கோடு கோயில் நிர்வாகத்தைச் சேர்ந்த சிலர், லோக்கல் யூடியூபர்களை தாக்கியதில் பலத்த காயத்துடன் மருத்துவமனை யில்  இரண்டு பேர் தொடர் சிகிச்சை யில் உள்ளனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட ஆறு பேர் மட்டுமே கைது செய்யப்பட்ட நிலையில் மறுநாளே அவர்கள் விடுவிக்கப்பட்டனர். 

Advertisment

இதையடுத்து கர்நாடக முதல்வர் சித்தராமையா, "யார் இந்த கலவரச் செயலில் ஈடுபட்டாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் படும்'” என்று கூறியுள்ளார். இந்த நிலையில் கன்னட செய்தித் தொலைக்காட்சியான ஏசியா நெட், கோயில் சார்பாக செய்தி வெளியிட்டதால்... அவர்களை போராட்டக் குழுவைச் சேர்ந்த சிலர் தாக்கச்சென்றனர். அவர்களைத் தடுத்து போராட்டக் குழு தலைவர் மகேஷ் ஷெட்டி மீது வழக்குப் பதிந்துள்ளனர். 

நக்கீரனுக்கு வைத்த குறியே அந்த யூடியுபர்கள் தாக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு போராட்டக் குழு தலைவர் மகேஷ் ஷெட்டியை பேட்டியெடுத்தபோது, நக்கீரனுக்கு வீடியோ எடுத்துக்கொடுத்து உதவிய அபிஷேக் தாக்கப்பட்டுள்ளார். தாக்குதலில் ஈடுபட்டவர்  நக்கீரனை ஆரம்பத்திலிருந்தே பின்தொடர்ந்தார். டி கேங்கைச் சேர்ந்த சிலர் கலவரத்தை ஏற்படுத்தியதால், சர்ச்சைக்குரிய     "சைட் 13' தோண்டும் பணி தற்போதுவரை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் பிணங்களைப் புதைத்த 3 புதிய இடங்களை பீமா அடையாளம் காட்டியுள்ளார். சைட் 16 தர்மஸ்தலா கோயில் அருகேயுள்ள பகுதி, 16 ஏ பாகுபலி பெட்டா மற்றும் தர்மஸ்தலா கோயில் அருகேயுள்ள பகுதியாகும். இந்த பாகுபலி பெட்டா, சௌஜன்யா வழக்கில் போலியாகச் சேர்க்கப்பட்ட குற்றவாளி சந்தோஷ்ராவின் வீடுள்ள பகுதி.

Advertisment

dharmasthala1

சைட் 13-ல் தோண்டும் பணி வி.ஐ.பி.க்களின் தூண்டுதலால் நிறுத்தி வைக்கப்பட்டாலும் ஜி.பி.ஆர். எனப்படும் (ஞ்ழ்ர்ன்ய்க் ல்ங்ய்ங்ற்ழ்ஹற்ண்ய்ஞ் ழ்ஹக்ஹழ்) கருவியைப் பயன்படுத்தவுள்ளனர். இதனால் நிலத்தின் அடியில் நிலத்துக்கு சம்பந்தம் இல்லாத வேற்றுப்பொருள் எது இருந்தாலும் 2டி, 3டி வசதி யுடன் அடையாளம் காட்டும். பெங்களூரிலுள்ள இதற்கான நிபுணர்களையும், கருவிகளையும் வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

ஏற்கெனவே தோண்டப்பட்ட பகுதிகளில் கிடைத்த எலும்புக்கூடுகள், மண்டை ஓடுகள், மனித எச்சங்கள், தடயங்களை பிளாஸ்டிக் பக்கெட் மற்றும் பாலிதீன் கவர்களில் சேகரித்து எடுத்துச்செல்கின்றனர்.

Advertisment

அவை, பெங்களூர் மடிவாலாவிலுள்ள தடய அறிவியல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளன. எலும்புகளிலுள்ள எலும்பு மஜ்ஜைகளில் இருந்துதான் டி.என்.ஏ.வை எடுக்கமுடியும். நான்காண்டுகள் முதல் ஐந்தாண்டுக்குட்பட்ட எலும்பாக இருந்தால்தான் டி.என்.ஏ. சோதனை செய்யமுடியும். அதைவிட வருடங்கள் அதிகமாக இருந்தால் டி.என்.ஏ. சோதனை செய்யமுடியாது என தடய அறிவியல் நிபுணர்கள் தெரிவித் துள்ளனர். ஆனால் இவை, மனித எலும்புகளா, ஆணா -பெண்ணா என்று அடையாளம் காணமுடியும். 

கிடைத்துள்ள மண்டை ஓடுகளை வைத்து சூப்பர் இம்போசிஷன் மற்றும் அட்வான்ஸ் வீடியோ சூப்பர் இம்போசிஷன் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி மண்டையோட்டின் உண்மையான முகத்தை 3டி வடிவில் அடையாளம் காணமுடியும். அதற்கான முயற்சிகளை தற்போது தடயவியல் வல்லுநர்கள் முயன்றுவருகின்றனர். 

பீமாவை அடுத்து ஜெயந்த் ஷெட்டி என்பவர் தாமாக முன்வந்து சில தகவல்களை எஸ்.ஐ.டி. டீமிடம் தெரிவித் துள்ளார். இவரைத் தொடர்ந்து துக்கா ராம் கவுடா என்பவர் பிணங்கள் புதைக்கப் பட்டுள்ள பல இடங்கள் அவருக்கும் தெரியும் என்றும், உரிய பாதுகாப்பு அளித்தால் தகவல் தருவதாகவும், எஸ்.ஐ.டி.யிடம் மனு அளித்துள்ளார். 

தொடர்ந்து பாபு கௌடா என்பவர், இங்கு பல வருடங் களாக பிணங்களைப் புதைப்பது தெரியும் என்றும், அவர் நேத்ராவதி ஆற்றுக்கு எதிரே கடை வைத் துள்ளதாகவும், அந்தக் கடை அருகே துப்புர வுத் தொழிலாளிகள் பிணத்தைப் புதைப்பது பற்றி பேசுவார்கள் என்றும், பீமா போன்று மேலும் சில துப்புரவுத் தொழிலாளிகளுக்கு இந்த விவரம் தெரியுமென்றும் அவர் தெரிவித்துள்ளார். 

இதற்கிடையில் ஸ்பெஷல் இன்வெஸ்டி கேஷன் டீமைச் சேர்ந்த அதிகாரிகள் தற்போது தர்மஸ்தலா பஞ்சாயத்து அலுவலகத்தில் சென்று விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கடந்த 30 வருடங்களாக பணியாற்றிய அலுவலர்கள்      மற்றும் ஊழியர்களைப் பற்றிய விவரங்களைச் சேகரித்துள்ளனர். காரணம், இப்பகுதியில் இறந்தவர்களைப் புதைக்க பஞ்சாயத்து அலுவலக அனுமதி தேவை. இந்த பஞ்சாயத்தில் எத்தனை பிணங்களைப் புதைக்க கடந்த காலத்தில் அனுமதி வழங்கியுள்ளார்கள் என்பதைப் பற்றிய விசாரணைகளை நடத்தி வருகின்றனர். 

நம்மிடம் பேசிய பெயர் கூறவிரும்பாத காவல்துறை அதிகாரியொருவர், "2014 வரை பிணங்களைப் புதைத்த இடத்தை அடையாளம் காட்டியுள்ளார் பீமா. ஆனால் இதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்கள் தற்போது வரை இந்த குற்றச் செயல்களில் ஈடுபட்டுவருவதற்கு வாய்ப்புள்ளது. விசாரணை விரைவாகவும் துல்லியமாகவும் இருந்தால் அவர்கள் காவல்துறையிடம் சிக்குவார்கள்''’என்று தெரிவித்தார். 

(ஜெயந்த் ஷெட்டி, காவல்துறை அதிகாரி நேர்காணல் வரும் இதழில்….)