கொடைக்கானல் வட்டம் வில்பட்டி கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட கோவில்பட்டியில் தமிழக எம்.எல்.ஏ.க்கள் நான்கு பேர் நிலம் வாங்கிய விவ காரத்தை கடந்த வார நக்கீரன் இதழில் “எம்.எல். ஏ.க்களுக்கு உல்லாச விடுதி! எடப்பாடியின் "ஸ்பெஷல் கிஃப்ட்' என்ற தலைப்பில் அம்பலப் படுத்தியிருந்தோம்.
அந்த பரபரப்பு அடங்குவதற்குள்ளாகவே, நிலம் வாங்கியது நாலுபேர் மட்டும்தானா என்ற கேள்வி எழுந்துள்ளது. தி.நகர் சத்யா, விஜயகுமார், விருகை ரவி, கள்ளக்குறிச்சி பிரபு ஆகியோர் மட்டுமல்லாமல் மேலும் இரண்டு பிரபலங்கள் கோவில்பட்டி கிராமத்தில் நிலம் வாங்கியதற்கான ஆவணங்கள் நம் கைவசம் சிக்கியுள்ளன.
வேடசந்தூர் எம்.எல்.ஏ. பரமசிவன், தனது மனைவி கீர்த்தனா பெயரில் பதிவு செய்துள்ளார். அமைச்சர் பெஞ்சமினுக்கு நெருக்கமான ஒருவரின் பெயரிலும் நிலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நான்கு பேரில், கடைசியாக நிலம் வாங்கிப் பதிவுசெய்தவர் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு. அவரது ஆவணம் பதிவான தினத்தில் கொடைக் கானலுக்கு தி.நகர் சத்யாவும் பெஞ்சமினும் விசிட் செய்திருக்கிறார்கள். சட்டப்பேரவை ஏடுகள் குழுத் தலைவரான பெஞ்சமின் தலைமையில் ஒரு குழு கொடைக்கானலை ஆய்வுசெய்ய சென்றிருக்கிறது. அப்போது அரசு அலுவலோடு இந்த ஆதாய அலுவலும் நடந்திருக்கிறது.
எம்.எல்.ஏ.க்களுக்கு இதுபோன்ற ஆதாயம் தரும் வேலைகள் அனைத்தையும் சத்யா செய்து தருவதனால், சமீபத்தில் அவருக்குப் பின்னால் எம்.எல்.ஏ.க்கள் கூட்டமொன்று சேர்ந்திருக்கிறது. சில மாதங்களுக்கு முன் தென்சென்னை வடக்கு மாவட்டத்தில் 500 க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை தி.நகர் சத்யா மாற்றியும் பொறுப்பிலிருந்து நீக்கியும் உத்தரவிட்டார். இந்த உத்தரவில் முதல்வரான எடப்பாடியும் துணைமுதல்வரான பன்னீர்செல் வமும் கையெழுத்திட்டு அங்கீகரித்தனர்.
இருந்தபோதும், முன்னாள் அமைச்சர் வளர்மதி, ஆதிராஜாராம் உள்ளிட்டவர்கள் தி.நகர் சத்யாவின் இந்த தன்னிச்சையான சர்வாதிகாரப் போக்குக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் கட்சிக்குள் சத்யாவின் முடிவு விவாதப் பொரு ளானது. அப்போது பல எம்.எல்.ஏ.க்கள் ஒன்றுசேர்ந்து முதல்வர் எடப்பாடியிடம் சென்று சத்யாவின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்தனர். அந்த பல எம்.எல்.ஏ.க்களில் விருகை ரவி, கும்மிடிப்பூண்டி விஜயகுமார், பெஞ்சமின் ஆகியோரும் அடக்கம். இதையடுத்து தி.நகர் சத்யாவின் இந்த முடிவுக்கு எடப்பாடி ஒப்புதல் தெரிவிக்கிறார்.
தி.நகர் சத்யாவிடம் தனக்கு ஆதரவான எம்.எல்.ஏ.க்களுக்கான உல்லாச விடுதி கட்டித் தரும் பொறுப்பை மேற்பார்வையிடுவதற்கான பொறுப் பையும் முதல்வர் அளித்திருந்ததும், அப்போது பெரிய எதிர்ப்பைத் தெரிவிக்க முடியாததற்கான காரணமாகும். ஏற்கெனவே முதல்வரிடம் செல்வாக்கை வளர்த்துக்கொண்டிருக்கும் தி.நகர் சத்யா, சமீபகாலமாக எடப்பாடி எப்போது பத்திரி கையாளர் சந்திப்பை மேற்கொண்டாலும் அங்கு தன் முகம் தெரியும்படி பார்த்துக்கொள்கிறார்.
துணைமுதல்வர் ஓ.பி.எஸ்.ஸுக்கு மத்திய அரசின் பொறுப்பிலுள்ள காவலர்கள் இருப்பதால், அங்கு தன் கைவரிசையைக் காட்டமுடியாத சத்யா, மாநில அரசின் பொறுப்பிலுள்ள காவலர்களைப் பாதுகாப்புக்கு வைத்திருக்கும் இ.பி.எஸ். விஷயத்தில் அதை மேற்கொள்கிறார். காவலர்களை லட்சக்கணக்கில் வெயிட்டாகக் கவனித்து, முதல்வரின் செய்திச் சந்திப்பிலெல்லாம் தன் முகம் தெரியவேண்டும் என்பதில் தீவிர அக்கறைகாட்டி வருகிறார்.
தி.நகர் சத்யாவுக்கு நெருக்கமான டாக்டர் கணேஷ்குமார்தான் முதலில் இந்த நிலத்தை வாங்கியவர். அவரிடமிருந்துதான் ஒவ்வொருவருக் காக 25 சென்ட் நிலம் பிரித்துக் கொடுக்கப்பட்டது. தற்சமயம் இந்த 25 சென்ட் நிலம் வாங்கியவர்களின் பட்டியலில் ராம்குமார், பானுபிரசாத் என்ற பெயர்களும் இடம்பெற்றுள்ளது. இவர்கள் யாரெனத் தெரியவில்லை என்றாலும் இவர்கள் தமிழக எம்.எல்.ஏ.க்களின் பினாமிகளாக இருக்கக்கூடுமென யூகிக்கலாம்.
கொடைக்கானலில் இருந்து எட்டுக் கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் கிராமப் பஞ்சாயத்துதான் வில்பட்டி. இதில்தான் நிலம் வாங்கப்பட்டிருக்கும் கோவில்பட்டி வருகிறது. ஆரம்பத்தில் கோவில்பட்டியில் மட்டும் நிலம் வாங்கப்பட்டிருப்பதுபோல் தெரிந்தாலும், விசாரணையில் இறங்க இறங்க வரும் தகவல்கள் திகைப்பூட்டுகின்றன. ஆளும்கட்சி வில்பட்டி யையே வளைத்துப் போட்டிருப்பதாகத் தெரிகிறது. ஆங்காங்கே காம்பவுண்ட் சுவர்களும் கட்டட வேலைகளும் நடைபெற்று வருகின்றன.
நமது செய்தியின் தாக்கம் அ.தி.மு.க. தரப்பை அசைத்திருக்கிறது. செய்தி தெரிந்தவுடன் இது தொடர்பான தங்களுக்குத் தெரிந்த தகவல்களைக் கொட்ட அ.தி.மு.க. தரப்பிலிருந்தே பலர் நம்மைத் தொடர்புகொண்டு பேசமுயற்சிக்கின்றனர். அதேசமயம் வில்பட்டி விவகாரத்தில் சத்யாவின் பெயர் அடிபடுகிறதே என சத்யா தரப்பில் நெருக்கமானவர்களைக் கேட்டபோது, ""படட்டுமே, இதெல்லாம் அவருக்கு ஒரு விளம்பரம்தானே'' என அலட்சியமான ரியாக்சனே வெளிப்பட்டது.
""இந்த நான்கு எம்.எல்.ஏ.க்கள் மட்டுமில்லை… இன்னும் பல எம்.எல்.ஏ.க்கள் வாங்கியிருக்காங்க. ஆளுங்கட்சியினருக்கு முதல்வர் ஆதரவுடன் அடிக்கும் "லக்கி' ப்ரைஸால் கொடைக்கானல் கபளீகரமாகிறது'' என்றனர் வில்பட்டி கிராம மக்கள். இப்படியே போனால் நாம் இங்கு வசிக்கமுடியுமா என்ற திகைப்பை அவர்கள் கண்களில் பார்க்கமுடிந்தது.
டெயில்பீஸ்: இதெல்லாம் ஒருபக்கமிருக்க, கள்ளக்குறிச்சி தொகுதியில் நெடுஞ்சாலைக்கு நெருக்கமாக இரண்டு இடங்களில் தி.நகர் சத்யா சூதாட்ட க்ளப் தொடங்கியிருப்பதாகவும் அதற்கு தொகுதி எம்.எல்.ஏ. பிரபுவின் சப்போர்ட் இருப்பதாகவும் ஒரு தகவல் கசிகிறது.
-தாமோதரன் பிரகாஷ்