FOLLOW-UP தமிழக சிறைகளில் ரூ.500 கோடி ஊழல்! சப்ளையிலிருந்து சகலமும் மர்மம்!

jail

 

(சென்ற இதழ் தொடர்ச்சி...)

ரு சிறை வாசிக்கு ஒரு நாளைக்கு கொள்முதல் செய்யப்படும் உணவுப் பொருட்களின் உண்மையான மதிப்பு என கடந்த ஜூன் 28 -ஜூலை 01 இதழில் வெளிவந்த கட்டுரையில் இடம்பெற்ற அட்ட வணையில்,  2023-க்கு முன் சராசரியாக சிறைத் துறை கொள்முதல் செய்யும் விலை ரூ.186 என குறிப்பிட்டி ருந்தோம். 

அனைத்து மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக 72 பொருட்களுக்கு சேர்த் துக் கணக்கிடும்போது,  சந்தை விலையைக் காட்டிலும் 86 சதவீதம் அதிக விலை (உதாரணத்துக்கு சிலவற்றை பட்டியலில் காண்க) கொடுத்து வாங்கியுள்ளனர். அதாவது, ஒரு பொருளின் விலை, சந்தை மதிப்பில் ரூ.100 என வைத்துக்கொண்டால், ரூ.186 கொடுத்து வாங்கி வருகின்றனர். இதை வைத்துத்தான் அந்தச் சிறு கணக்கீட்டில் சராசரியாக ரூ.186 எனக் கணக்கிடப்பட்டுள்ளது. 

இரண்டு மத்திய சிறைகள் தவிர, தமிழகத்தில் உள்ள அனைத்துச் சிறைகளுக்கும் மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகள் சப்ளை செய்துவரும் தமிழ்நாடு மாநில பனைவெல்லம் (ம) தும்பு விற்பனை கூட்டுறவு இணையம் என்ற நிறுவனம்,  கூட்டுறவு சங்கங்களின் கீழ் இயங்கும் பதிவு செய்யப்பட்ட அமைப்பு என்றாலும், காகிதத்தில் மட்டுமே இயங்கக்கூடிய ஒரு ஷெல் கம்பெனி போல் செயல்படுகிறது  என்பதை சிறைத்துறை வட்டாரத்தினர் சுட்டிக்காட்டினர். கோடிக்கணக்கில் அந்த நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்யும் சிறைக் கண்காணிப்பாளர்கள் யாரும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் முகவரிக்கு ஒருமுறைகூட சென்று பார்த்ததில்லை என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும். 

சிறைக் கண்காணிப்பாளர்கள் கண்டு கொள்ளாத நெருடலான சில விஷயங்களைப்   பார்ப்போம்.   

அந்நிறுவனம் எவ்வளவு தொகைக்கு கான்ட்ராக்டர்களிடமிருந்து சிறைக்குத் தேவையான காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட் களை வாங்குகிறது? ஒவ்வொரு கான்ட்ராக்டரும்  எத்தனை வருடங்களுக்கு அந்நிறுவனத்துக்கு பொருட்கள் வழங்க ஒப்பந்தம் போட்டுள்ளனர்?  அவ்வாறு ஒப்பந்தம் போட்டுள்ள அங்கீகரிக் கப்பட்ட கான்ட்ராக்டர்கள் யார் யார்? அந்நிறுவனம் எவ்வளவு லாபம் வைத்து சிறைத் துறைக்கு  மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறி களை விற்பனை செய்கிறது? கான்ட்ராக்டர்களால் சிறைகளுக்கு சப்ளை செய்யப்படும் மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகளை யாரிடமிருந்து என்ன விலைக்கு வாங்குகிறார்கள்? கான்ட் ராக்டர்களின் அலுவலகங்கள் எந்தெந்த இடங்களில் எத்தனை பணியாளர்களைக் கொண்டு எவ்வளவு காலமாகச் செயல்படுகின்றன? இதில் கான்ட்ராக்டர்கள் எந்தெந்த வகையில் எவ்வளவு லாபத்தொகை ஈட்டுகின்றனர்? தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு சிறைக்கும் எந்தெந்த ஊரிலிருந்து பொருட்களை ஏற்றிவந்து லாரிகள் இறக்குகின்றன? அதற்கான டிரான்ஸ்போர்ட் கட்டணம் எவ்வளவு?

jail1

இது குறித்தெல்லாம் எந்தவித ஆய்வும் மேற்கொள்வதில்லை. இவையனைத்தும் வெளிப்படைத்தன்மை இல்லாமல் மர்மமாகவே நடக்கின்றன. 

காய்கறிகளோ, மளிகைப் பொருட்களோ காதைச் சுற்றி மூக்கைத் தொடுவதுபோல்  தமிழகச் சிறைகளுக்கு சப்ளை செய்யப்பட்டு பணம்பெறும்  தில்லாலங்கடி சங்கிலித் தொடரைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

தமிழ்நாடு மாநில பனைவெல்லம் (ம) தும்பு விற்பனை இணையம் என்ற பெயரை மட்டும் வைத்துக் கொண்டு,  அதன் பின்னால் இருந்து செயல்படும் கான்ட்ராக்டர்கள், ஒவ்வொரு மத்திய சிறை, மாவட்ட சிறை மற்றும் கிளைச் சிறையின் அருகிலுள்ள ஒரு காய்கறி வியாபாரியிடமிருந்து, காய்கறிகளை சம்பந்தப்பட்ட சிறை களுக்கு பனைவெல்லம் சொசைட்டி பெயரில் அனுப்பிவைப்பார்கள். மேலும் குறிப்பிட்ட ஒரே ஊரிலிருந்து பல லாரிகளில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்துச் சிறைகளுக் கும்  பனைவெல்லம் சொசைட்டி பெயரில் மளிகைப் பொருட்கள் வந்துசேரும்.  

காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்களை ஒவ்வொரு சிறைக்கும் சப்ளை செய்யும்போது,  என்னென்ன பொருட்கள் என்னென்ன விலை யில் எத்தனை அளவு வந்துள்ளது என்பதைத் தெரிவிக்கும் பில்லை மின்னணு  வடிவத்தில்  தராமல்,  துண்டுச் சீட்டில் எழுதி,  பொருட்கள் சிறைக்கு வரும் போது கொடுத்துவிடுவார்கள்.    பனைவெல்லம் சொசைட்டியிடம் இருந்து பெறப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வெற்று பில்களின்  கீழே அதன் பொறுப்பு அதிகாரி கையெழுத்திட்டு,  எதையும் நிரப்பாமல் அப்படியே மத்திய சிறை ரேஷன் ஸ்டோர்களுக்கு முன்கூட்டியே கொடுத்துவிடுவார். குறைவான எண்ணிக்கையில் பொருட்களைப் பெற்று,  அதிகமான எண்ணிக்கையில் வந்ததுபோல், துணைச் சிறை அலுவலரும் (உணவுக் கிடங்கு),  ரேஷன் ஸ்டோர் காவலரும் வெற்று பில்களைப் பூர்த்தி செய்துவிடுவார்கள்.

இவ்வாறு ஒவ்வொரு முறையும் அதிகமான பொருட்கள் வந்ததுபோல் பூர்த்தி செய்யப்பட்ட பில்களை, மத்திய சிறையில் உள்ள ரேஷன் ஸ்டோர் காவலர், காண்ட்ராக்டர்களிடம் கொடுப்பார்.   அந்த பில்களை மாதவாரியாக அடுக்கி,  அதனை மொத்தமாகக் கூட்டி,  இரண்டு மூன்று மாதங்களுக்கு மொத்தமாகச் சேர்த்து,  ஒட்டுமொத்த மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகளுக்கான பில்கள் அனைத்தும் தமிழ்நாடு மாநில பனைவெல்லம் (ம) தும்பு விற்பனை கூட்டுறவு இணையத்தின் பெயரில் ஒவ்வொரு மத்திய சிறைக்கும் அனுப்பப்படும்.  

மேலும் கிளைச் சிறை மற்றும் மாவட்ட சிறைகளில் பெறப்படும் பொருட்களுக்கு, அதன் அருகிலுள்ள மத்திய சிறை கண்காணிப் பாளர்களே கட்டுப்பாட்டு அலுவலர்களாகச்  செயல்படுவதால், கிளைச் சிறை, மாவட்டச் சிறை மற்றும் மத்திய சிறைகள் அனைத்திற்கும்      சேர்த்து, மத்திய சிறைக் கண்காணிப்பாளரே அனைத்து பில்களிலும்  கையெழுத்திட்டு, அதனைக் கருவூலத்தில் கொடுத்து பணமாக மாற்றி பனை வெல்லம் சொசைட்டியிடம் தந்துவிடுவார்கள்.  

அந்த சொசைட்டி யானது, மொத்த பில் தொகையில் 3 சதவீதத்தை தனக்கான கமிஷனாக எடுத்துக்கொண்டு, மீதமுள்ள தொகையைக் கான்ட் ராக்டர்களிடம் கொடுத்து விடும். கான்ட்ராக்டர்கள் அந்தப் பணத்தை மூன்று பங்குகளாகப் பிரித்து, தனக்கொரு பங்கினை லாபமாக வைத்துக்கொண்டு, இரண்டாவது பங்கினை காய்கறிகள் சப்ளை செய்த சம்பந்தப்பட்ட சிறைகளுக்கு அருகிலுள்ள வியாபாரிகளுக்கும், மூன்றாவது பங்கினை அனைத்துச் சிறைகளுக்கும் மளிகைப் பொருட்கள் சப்ளை  செய்துவரும் செல்வாக்கானவருக்கும் கொடுத்துவிடுவார்கள்.

இதில் கொடுமை என்னவென்றால், கொள்ளை விலை கொடுத்து வாங்கப்படும் உணவுப் பொருட்களோ, காய்கறிகளோ தரமற்றவையாக இருப்பதும், சிறைவாசிகள் முகம் சுளிக்கும் விதத்தில் உணவாகப் போய்ச் சேர்வதும்தான். இன்னும் அதிர்ச்சியூட்டும் விவகாரங்கள் தமிழகச் சிறைகளில் மலிந்து கிடக்கின்றன. 

(ஊழல் தொடர்ந்து கசியும்...)

 

 

nkn020725
இதையும் படியுங்கள்
Subscribe