(சென்ற இதழ் தொடர்ச்சி...)

மிழகச் சிறைகளில் கொள்முதல் செய்யப்படும் சில உணவுப் பொருள்களின் விலை வித்தியாசத்தைப் பட்டியலிட்டு கடந்த ஜுலை 02-04 இதழில் வெளியிட்டிருந்தோம். அதைப் படித்துவிட்டு, "கோழிக்கறிக்கு 2 மடங்கு விலையா? தேங்காய்க்கு 3 மடங்கு விலையா? முட்டைக்கோஸுக்கு 5 மடங்கு விலையா? 10 ரூபாய் கீரையை 10 மடங்கு விலைக்கு 100 ரூபாய்க்கு வாங்குகிறார்களா? உண்மையான சந்தை விலையை மறைத்து பலமடங்கு விலைக்கு வாங்கியதாக போலி பில் தயாரித்துக் கொள்ளையடித்து வருகின்றார்களா சிறைத்துறையினர்?''’ என்று ஆதங்கத்துடன் கேட்கிறார்கள் நக்கீரன் வாசகர்கள். 

சிறை விதிகள் பலவும் குறுக்கு வழிகளில் எப்படியெல்லாம் மீறப்படுகிறது தெரியுமா? 

Advertisment

சிறைவாசிகளுக்கு உணவு சமைப்பதற்கு மளிகைப் பொருள்களும், சிலிண்டர்களும் எவ்வளவு தேவைப்படும் என்பதைக் கணக் கிட்டு,  டி.ஜி.பி. அலுவலகமும் சிறை விதிகளும் (பழைய சிறை விதி எண்: 387 முதல் 390 வரை, புதிய சிறை விதி எண்:394 முதல் 397 வரை) தரவு அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, சிறையிலுள்ள சிறைவாசிகளை நாள் தோறும் கணக்கீடு செய்து மளிகைப் பொருள் கள், காய்கறிகள் மற்றும் உணவு சமைப்பதற்குத் தேவைப்படும் சிலிண்டர்களை மொத்தமாகக் கொள்முதல் செய்து, சிறையிலுள்ள உணவுக் கிடங்கில் இருப்பு வைப்பார்கள். உண்மையில், தரவில் குறிப்பிட்டுள்ள அளவில் 35 சதவீதப் பொருள்களைக் கொண்டு சமைக்கப்படும் உணவே, 1000 சிறைவாசிகள் திருப்தியாகச் சாப்பிட  போதுமானது. 

உதாரணமாக, வெள்ளிக்கிழமையன்று ஒரு நாளைக்கு 10 சிறைவாசிகளுக்கு சாம்பார் வைப்பதற்கு 1.5 கிலோ துவரம் பருப்பு என தரவுகளில்  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது சிறை அதிகாரிகளுக்கு வசதியாகப் போய்விட்டது. 10 பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு ஒரு நாளைக்கு தரமான சாம்பார் வைப்ப தற்கு 300 கிராம் துவரம் பருப்பே போதுமானது. 10 கைதிகளுக்கு 1.5 கிலோ பருப்பு என நிர்ணயம் செய் திருப்பதை ஒரு சதியாகத் தான் பார்க்கவேண்டும். 10 பேருக்கான சாம்பாரில் 1.5 கிலோ துவரம் பருப்பை பயன்படுத்தினால் அதனைச் சாப்பிட முடியுமா? சிறை அதிகாரிகள் சுரண்டுவதற்கு வசதியாக உள்ள இந்த அக்கிரமமான விகிதம்,  துவரம் பருப்பில் மட்டுமல்ல, நூற்றுக்கும் மேற் பட்ட காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருள் களிலும் இதே உத்திதான் கையாளப்படுகிறது. 

எரிவாயு சிலிண்டர் மோசடியும் இதே ரகம்தான். தரவு அட்டவணையின்படி,  ஒரு நாளைக்கு 10 சிறைவாசிகளுக்கு 1.41 கிலோ எரி வாயு (சிலிண்டர்) என்று நிர்ணயிக்கப்பட்டுள் ளது. அந்த வகையில் ஒரு மாதத்துக்கு 10 சிறை வாசிகளுக்கு 42.3 கிலோ  சிலிண்டர் தேவைப் படுகிறது. சிறையில் பயன்படுத்தப்படும் ஒரு சிலிண்டரின் சராசரி எடை 12 கிலோ ஆகும். அப்படியென்றால், 10 நபர்கள் கொண்ட குடும்பத்துக்கு ஒரு மாதத்துக்கு மூன்றரை சிலிண்டர்களா தேவைப்படுகின்றன? என்னே ஒரு பித்தலாட்டமான நிர்ணயம்?

Advertisment

jail1

உள்துறை அரசாணைகள் எண்: 457, தேதி: 7-6-2005 மற்றும் 1179 தேதி: 8-12-2006 பிரகாரம், ஒவ்வொரு மத்திய சிறையிலும் பிரமாண்டமான கொதிகலன் செயல்படும். எரிபொருளின் தேவையைக் குறைப்பதற்கும், சிக்கனமாகப் பயன்படுத்தவும் கொதிகலனைப் பராமரிப்பதற்கு ஒருவர் பணியமர்த்தப்பட்டிருப்பார். அந்த கொதிகலனில் சிலிண்டர்களின் துணை கொண்டு நீரை ஆவியாக்கி, அதன்மூலம் துரிதமாக உணவு சமைக்கப்படுகிறது. அதனால், மிகவும் சொற்ப அளவிலேயே எரிபொருள் தேவைப்படும். தவறான கணக்கீடால் மீதமாகும் சிலிண்டர்களை சிறையின் உள் மற்றும் வெளி கேன்டீன்களில் உணவுக் கிடங்கு காவலர்கள் மூலம் விற்றுவிடுவார்கள். 

சிறையின் உணவுக் கூடத்தில் இரண்டு விதமான ஊழல்கள் நடக்கின்றன. ஒன்று, கொள்முதல் செய்யப்படும் உணவுப் பொருள் களைச் சந்தை மதிப்பைவிட இரண்டு மடங்கு அதிக விலைக்கு வாங்குவது. மற்றொன்று, 50% பொருள்களை மட்டுமே சிறைக்குள் கொண்டு வந்துவிட்டு,  100 சதவீதப் பொருள்கள் சிறைக் குள் வந்ததுபோல் போலியாகக் கணக்கு காட்டிவிட்டு, அதில் கிடைக்கும் பெரும் தொகையை சிறைத்துறை உயர் அதிகாரி களும், கான்ட்ராக்டர்களும் பங்கு போட்டுக் கொள்வது.  

உணவுப் பொருள்களை கூடுதல் விலைக்கு வாங்கியதாக அடிக்கும் கொள்ளை யைவிட, வாங்காத 50 சதவீதப் பொருள்களை வந்ததாகக் காண்பித்து  போலி பில்கள் மூல மும், சிறைக்குள் வந்த  50 சதவீதப் பொருள் களில் 15 சதவீதத்தை சிறையின் உள் கேன் டீனிலும், சிறை வெளி உணவகங்களுக்கும் விற்பதன் மூலமும்,  மொத்தமாக 65 சதவீதம் அடிக்கும் கொள்ளையே பெரிது.

சிறை உள் கேன்டீன்கள் மற்றும் சிறை வெளி உணவகங்களுக்குத் தேவையான மளிகைப் பொருள்கள் மற்றும் காய்கறிகளின் 70 சதவீதத்தை, சிறைக்குள் வரும் பொருள் களில் இருந்து கள்ளத்தனமாக எடுக்கப்படும் 15 சதவீதமே பூர்த்தி செய்துவிடும். சிறை உள் கேன்டீன்களுக்கும் சிறை வெளி உணவகங் களுக்கும் தேவைப்படும் மீத 30 சதவீத மளிகைப் பொருள்கள், காய்கறிகள் மற்றும் சிலிண்டர்களை ஏதேனும் ஒரு கடையி லுருந்து வாங்கிவிட்டு, போலியான பில் களைப் பெற்று கணக்கு காண்பித்து,  அந்தக் கடைக்காரருக்கு ஒரு குறிப்பிட்ட தொகை யைக் கொடுத்துவிடுவார்கள். இதில் சுரண்டப்படும் பெரும் தொகை சிறை அதிகாரி களுக்குப் போய்விடும். தமிழகத்தில் கோயம்புத் தூர், சேலம் உள்ளிட்ட அனைத்து மத்திய சிறை களிலும் இந்தக் கொள்ளைதான் நடக்கிறது.  

உண்மையிலேயே சிறை உணவுக்கூடத்தில் தரவுகளின்படி சமைத்துப் பார்க்கும்போது,  எத்தனை சிறைவாசிகள் சாப்பிடும் விகிதத்தில் உள்ளதென்று கணக்கிடப்பட்டதா? உபரியின் விகிதம் சரிபார்க்கப்பட்டதா?  எவ்வளவு உணவுப்பொருள் வீணாகிறது என்பதை தணிக்கைத்துறை மற்றும் உயர் அதிகாரிகள் சோதனை செய்கிறார்களா? தரவுகளில் உள்ள கணக்கீட்டை மத்திய மற்றும் மாநில புள்ளியியல் நிறுவனங்களுக்கு அனுப்பி நியாயமான கணக்கீடுதானா என்பதைச் சரிபார்த்து சான்று பெறப்பட்டதா? என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன.   

உணவுப் பொருள்களில் எத்தனை சதவீதம் கழிவாகிறது என்பதைக் கணக்கீடு செய்யும்போது, அதிக சதவீதப் பொருள்கள் வீணானால், அதற்கு அதிகாரிகள் பதில் சொல்லவேண்டியது வரும். அதனாலேயே, கழிவு காட்டவேண்டிய தேவையில்லை என, அரிசிக்கு அரசாணை எண்: 1421, தேதி: 22-10-2028,  காய்கறிகளுக்கு அரசாணை எண்: 135 தேதி: 10-2-2009 ஆகிய இரண்டு அரசாணைகளை, தங்களுக்கு வசதியாக சிறைத்துறை அதிகாரிகள் பெற்றுள்ளனர். 

புழல்-2 மத்திய சிறையில் ஒரு கிலோ தேங்காய் விலை ரூ.200 எனக் கொள்முதல் செய்யப்பட்டு, ரூ.20 லட்சம் தேவையென்று சிறைத்துறை தலைமை அலுவலகத்துக்கு கடிதம் மூலம் கேட்க, தேங்காய் விலை குறித்து சந்தேகமடைந்த சிறைத்துறை டி.ஜி.பி. மகேஸ்வர் தயாள், புழல்-2 சிறைக்கு திடீரென்று வந்து ஆய்வு நடத்தியபோது, சிலிண்டர் ஊழலும் வெளிச்சத்துக்கு வந்தது. உணவுக் கிடங்கில் சிலிண்டர் கொள்முதலில் ஊழல் நடந்தது கண்டறியப்பட்டது. எப் படியென்றால், பில்லில் குறிப்பிடப்பட்டு உள்/வெளி பதிவேடு மற்றும் இருப்பு புத்தகத்தில் 29-2-2024ல் 130, 10-3-2024ல் 135, 14-3-2024ல் 130, 5-4-2024ல் 140 சிலிண்டர்கள் என்ற எண்ணிக்கை பதி வாகியிருந்தது. ஆய்வு நடத்தியபோதோ, அந்த நான்கு தேதிகளிலும் 80, 90, 90, 95 ஆகிய எண்ணிக்கையிலேயே சிலிண்டர்கள் இருந்துள் ளன. ஆக, மொத்தம் 170 சிலிண்டர்கள் கம்மியாக இருந்திருக்கின்றன. இதனைத் தொடர்ந்து, துணைச் சிறை அலுவலர் சரண்யா பணியிட மாற்றம் செய்யப்பட்டார். 

பணியிட மாற்றத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சரண்யா தொடர்ந்த வழக் கின் தீர்ப்பில், முதலில் இது ஒரு தொடர்ச்சி யான மோசடி என்பதைக் காணலாம். ஒவ்வொரு முறையும் அதிக எண்ணிக்கையிலான எரிவாயு சிலிண்டர்கள் பொருத்தமான லெட்ஜர்களில் உள்ளிடப்படும். அதே நேரத்தில், குறைந்த எண்ணிக்கையிலான எரிவாயு சிலிண் டர்கள் மட்டுமே உண்மையில் வழங்கப்பட்டுள் ளன. மனுதாரரால் இதைத் தனியாக நிறைவேற்ற முடியாது. எரிவாயு சிலிண்டர்கள் கொள்முதல் விஷயத்தில் ஒரு தீவிரமான மற்றும் தொடர்ச்சி யான மோசடியைக் குற்றச்சாட்டுகள் சுட்டிக் காட்டுகின்றன. சிறைத்துறை அதிகாரிகள் இந்த விஷயத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது மிகவும் தெளிவாகிறது. இது சப்ளையர்களுடனான சதித்திட்டத்தையும் வெளிப்படுத்துகிறது. அரசு வழக்கறிஞர் வாதிட்டபடி விரிவான விசாரணை அவசியம். விசாரணை மேற்கொள்ளப்பட்டு மோசடியில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்’எனக் குறிப்பிடப் பட்டுள்ளது. 

கைதிகளின் உணவில் கைவைக்கும் மோசடியில் சிறைத்துறை அதிகாரிகளே தொடர்ந்து ஈடுபட்டுவருவது கொடுமை அல்லவா?

(ஊழல் தொடர்ந்து கசியும்...)