(சென்ற இதழ் தொடர்ச்சி)
சிறையின் ரேஷன் ஸ்டோர்களுக்கு வரும் மளிகைப் பொருள்கள் மற்றும் சிலிண்டர்களை, சிறை உள் கேன்டீன் மற்றும் வெளி கேன்டீன்களில் விற்பது, போலி பில்கள் தயாரிப்பது போன்ற மோசடிகளைத் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறோம்.
சிறைவாசிகளின் உழைப் புச் சுரண்டல்: அரசாணை 360 & 721-ன்படி தமிழகச் சிறைத்துறையில் 09.12.2013 முதல் சிறைவாசிகளால் தயார் செய்யப்பட்ட பொருள்களை பொதுமக்களுக்கு விற்பனை செய்வதற்காக FREEDOM என்ற பிராண்ட் பெயரில், சிறைச் சந்தையில் உணவகம், அங்காடி மற்றும் பேக்கரி நடத்தப்படுகிறது. இதில் தின்பண்டங்கள், துணிவகைகள், காய்கறிகள் மற்றும் இதரப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
சிறை அங்காடிகளில் சிறைவாசிகளால் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை வெளி கேன்டீன்களில் விற்பதால் பெறப்படும் லாபத் தொகையில் 40% உற்பத்திக் கணக்கிலும், 20% அரசுக் கணக்கிலும், 20% சிறைப் பணியாளரின் நலனுக்காகவும், 4% சிறைவாசிகளால் பாதிக்கப்பட்டோருக்கும், 16% பொருளை உற்பத்தி செய்த சிறைவாசிக்கு ஊதியமாகவும் வழங்குகிறார்கள். இதன்படி ஒரு சிறைவாசி, தனது உற்பத்தித் திறனால் வெளி கேன்டீனில் ரூ.10,000க்கு லாபம் பெற்றுத் தந்தால், பிடித்தம் போக அவருக்கு மாதத்திற்கு ரூ.1600 சம்பளமாகக் கிடைக்கும். இதனை உழைப்புச் சுரண்டல் என்றும் சொல்லலாம்.
சிறை அதிகாரிகளின் சர்வாதிகாரப் போக்கு: தமிழகத்திலுள்ள அனைத்துச் சிறைவாசிகளையும், மாலை 6 மணிக்குள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பிளாக்குகளில் அடைத்து, கணக்கைச் சரிபார்த்து சிறைத் துறையின் டி.ஜி.பி. அலுவலகம் வரை தகவல் தெரிவிப்பார்கள். ஒருவேளை கணக்கு சரியாக வரவில்லை என்றால், அது மிகப்பெரிய அவசரநிலையாகப் (Emergency) பார்க்கப்படும். மாலை 6 மணிக்குப் பிறகு, அடைப்புக்குள் இருக்கும் சிறைவாசியை சட்டவிரோதமாக வெளியில் எடுத்து, சிறைச் சந்தைகளுக்குத் தேவையான முறுக்கு, மிக்சர் போன்ற நொறுக்குத் தீனிகளைத் தயாரிப்பது மற்றும் இதர வேலைகளுக்குப் பயன்படுத்துவார்கள். ஒருவேளை அந்த இடத்தில் சிறைவாசிக்கு ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால், சிறை அடைப்புக்குள் இருந்த சிறைவாசி எப்படி வெளி இடத்தில் அசம்பாவிதத்துக்கு ஆளானார் என்ற கேள்வி எழும். இதற்கு யாராலும் எந்த பதிலும் சொல்லமுடியாது. வேறு வழியின்றி, சம்பந்தப்பட்ட சிறைவாசி அடைக்கப்பட்ட பிளாக்கில் பணிபுரியும் காவலர்களை பலிகடா ஆக்குவார்கள்.
சிறைவாசிகளால் தயாரிக்கப்படும் தின்பண்டங்கள் தரமில்லாமலிருந்தால், சிறைச் சந்தைகளில் வாங்குகின்ற பொதுமக்கள் நிராகரிப்பார்கள்; புகார் அளிப்பார்கள். சிறைவாசிகளால் அப்படிச் செய்ய முடியாது என்பதால், அந்தத் தின்பண்டங்களை வலுக் கட்டாயமாக சிறை நிர்வாகம் அவர்கள் மீதே திணித்துவிடும். நாங்கள் என்ன குப்பைத் தொட்டியா என்று நொந்துபோய் எகிறினால், வன்மம் வைத்து வேறு ஏதேனும் ஒரு விஷயத்தில் அந்தச் சிறைவாசியைத் தாக்கி, தண்டனை செல்களில் அடைத்துவிடுவார்கள்.
தொலைதூரங்களிலிருந்து சிறைவாசிகளைக் காணவரும் உறவினர்கள், அவர்களுக்காகத் தின்பண்டங்கள் வாங்கி வந்தால்கூட, அதனைச் சிறைக்குள் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பிவிட்டு, சிறை நிர்வாகம் தயார் செய்த பொருள்களை மட்டுமே வாங்கி சிறைக்குள் வழங்கவேண்டும் என சிறைவாசிகளின் உறவினர்களைக் கட்டாயப்படுத்தி வாங்கச் செய்வார்கள். சிறை அதிகாரிகளின் சுய லாபத்திற்காக சிறைக்கு உள்ளேயும் அதே தின்பண்டங்கள், உறவினர்கள் மூலம் வெளியி லிருந்து வருவதும் அதே தின்பண்டங்கள் என்பது சிறைவாசிகளுக்கு இழைக்கப்படும் அநீதியாகப் பார்க்கப்படுகிறது. சிறை நிர்வாகத்தின் இந்தச் சர்வாதிகாரப் போக்கால், வெளியே சொல்ல முடியாத துயரத்திற்கு கைதிகள் ஆளாகிறார்கள். இவ்வாறு தரம் குறைந்த தின்பண்டங்களிலும்கூட பெரிய அளவில் சிறை உயர் அதிகாரிகள் கொள்ளையடிக்கின்றனர்.
பங்கு பிரிக்கும் பெட்ரோல் பங்க்: சிறை அங்காடித் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பெட்ரோல் பங்கில், வாகனங்களுக்குக் காற்றடிக்கும் இடத்தில் பணிபுரியும் சிறைவாசிகள் மீது பொதுமக்கள் இரக்கப்பட்டு கொடுக்கின்ற டிப்ஸானது, நாள் ஒன்றுக்கு ரூ.1000 முதல் ரூ.3500 வரை கிடைக்கும். இதனை ஒரு மாதத்திற்கு கணக்கிட்டால் ரூ.30000 முதல் சுமார் ரூ.1 லட்சம் வரை வரும். அந்தத் தொகையை அங்கு பணிபுரியும் பணியாளர்கள் பிரித்துக்கொள்வ தோடு, அதில் பெரும் தொகையை கண்காணிப் பாளருக்கும் கொடுப்பார்கள். பெட்ரோல் மற்றும் டீசலை சாம்பிள் பார்த்த பின்பு, அதை அதே இடத்தில் ஊற்றாமல், தனித்தனி டின்களில் ஊற்றிச் சேமித்து, வெளிச் சந்தையில் விற்றுவிடுவார்கள். அதில் கிடைக்கும் மோசடிப் பணத்திலும், மாதம் ரூ.30,000 முதல் ரூ. 40,000 வரை கண்காணிப் பாளருக்குப் போய்ச் சேர்ந்துவிடும்.
வண்டிகளுக்கு ஆயில் மாற்ற வரும்போது, அந்த பழைய ஆயில்களைச் சேமித்து வெளியில் விற்றுவிடுவார்கள். புது ஆயிலை ரூ.250க்கு வாங்கி ரூ.450க்கு விற்பார்கள். ஆனால், ரூ.300க்கு விற்றதாக கணக்கு காண்பிப்பார்கள். அந்த ரூ.150ஐ பங்கு போட்டுக் கொள்வார்கள். இப்படிச் செய்வதன் மூலம் ஒருநாளில் தோராயமாக ரூ.1500 முதல் ரூ.2000 வரை வருமானம் பார்த்துவிட முடியும். இதிலும் ஒரு பங்கு கண்காணிப்பாளருக்கு உண்டு. மேலும், சிறை உயர் அதிகாரிகள் தங்க ளுடைய தனிப்பட்ட வாகனங்களுக்கு இங்கு பெட்ரோல் போட்டுவிட்டு, அதைப் பொது மக்களுக்கு நிரப்புவதிலிருந்து சரிசெய்துகொள்ளச் சொல்வது கொடுமையின் உச்சம்.
சிறை நிலங்களைக் குத்தகைக்கு விட்டதில் அரசுக்கு பெருநஷ்டம்: தமிழ்நாடு வருவாய் நிலை ஆணை எண்: 24ஆல், அரசு நிலங்களை விவசாயம் அல்லாத பயன்பட்டிற்கு, தனிநபர்கள், தனியார் நிறுவனங்கள், அறக்கட்டளைகள் மற்றும் பிற அமைப்புகளுக்கு வாடகைக்கு விடும்போது, வருவாய்த்துறை அரசாணை எண்: 460, நாள்: 04-06-1998ன்படி, ஒரு வருடத்தின் வணிகப் பயன்பாட்டிற்கு சந்தை மதிப்பில் 14 சதவீதம் வாடகையாக நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது.
வருவாய்த்துறை அரசாணை எண்: 324, நாள்: 10-09-2001ன்படி, 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை, வாடகைக்கு விடப்படும் இடத்தின் வாடகை உயர்த்தப்படும் என்ற நிபந்தனையின் கீழ், அரசாங்க நிலங்களை 20 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடலாம். உள்துறை அரசாணை எண்: 343, நாள்: 21-05-2018ன்படி, பாளையங் கோட்டை மத்திய சிறையின் நகர சர்வே எண்: 960/1ல் உள்ள 1225 சதுர மீட்டர் நிலத்தை இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு 19 வருடங்கள், 11 மாதங்களுக்கு (239 மாதங்கள் -09/2018 -07/2040), மாதம் ரூ.47,639/- என வாடகை நிர்ணயம் செய்து 24-09-2018 அன்று பத்திரப் பதிவு செய்யப்பட்டது.
அது என்ன 19 வருடங்கள் 11 மாதங்கள்? ஏன் ஒரு மாதம் சேர்த்து 20 வருடங்களுக்குப் போடவில்லை?
இந்த நிலத்திற்கு அருகி லுள்ள நிலங்களின் நகர சர்வே எண்: 982/1 மற்றும் 982/5 ஆகிய இடங்களுக்கு, ஒரு சதுர மீட்டர் இடத்திற்கு அரசு நிர்ணய மதிப்பு (guideline value) ரூ. 4960/- ஆகும். எனவே, பாளையங்கோட்டை மத்திய சிறை, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு ஒதுக்கிய 1225 சதுர மீட்டர் நிலத்தின் அரசு நிர்ணய மதிப்பு (1225 ள்வ். ம்ற்ள் ல தள்.4960) ரூ.60,76,000/- ஆகும்.
இந்நிலத்தின் மதிப்பு 3 வருடங்களுக்குப் பின்னால், ஒவ்வொரு வருடமும் 12% அதிகரிக்கிறது என வைத்துக்கொண்டால், ஒவ்வொரு வருடமும் 14% வாடகையாக 19 வருடம் 11 மாதங்களுக்கு ஒப்பந்தம் போட்டதற்குப் பதிலாக, கூடுதலாக ஒரு மாதத்தைச் சேர்த்து 20 வருடங்களுக்கு ஒப்பந்தம் போட்டிருந்தால், தமிழக அரசுக்கு ரூ. 4,91,24,218/- என வருவாய் கிடைத்திருக்கும். ஆனால், இவர்கள் 19 வருடம் 11 மாதங்களுக்கு வாடகை ஒப்பந்தம் போட்டதால், தமிழக அரசு பெறக்கூடிய வருமானம் ரூ. 1,13,85,721/- ஆகும். இதனால், தமிழக அரசுக்கு ரூ. 3 கோடியே 77 லட்சம் (ரூ. 4,91,24,218/- - ரூ.1,13,85,721/- =ரூ. 3,77,38,497/-) நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது எனத் தணிக்கை அறிக்கை, சிறைத்துறையினரின் கள்ளத்தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் என்ற பொதுத்துறை நிறுவனத்துக்கு சாதகமாகவும் தமிழ்நாடு அரசுக்கு பாதகமாகவும் நடந்து நிதி இழப்பை ஏற்படுத்திய இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரிகள் ஊதிய மகுடிக்கு, தமிழ்நாடு அரசுக்கு கொஞ்சம்கூட விசுவாசமில்லாமல் சிறைத்துறை உயர் அதிகாரிகள் மயங்கியது கொடுமையிலும் கொடுமை அல்லவா?
(ஊழல் தொடர்ந்து கசியும்…)