சிறைத்துறையின் சொந்தங்களே! ரத்தங்களே! சிங்கங்களே!’ என விளித்து,  அத்துறையினரின் அனைத்து வாட்ஸ்-அப் குழுக்களிலும் நக்கீரனில் தொடர்ந்து வெளிவரும்  ‘"தமிழகச் சிறைகளில் ரூ.500 கோடி ஊழல்!'’ செய்திக் கட்டுரை குறித்து அவர்களது கருத்துகளைப் பகிர்வதோடு, கடிதங்கள் வாயிலாக இந்தக் கொடுமையும் நடக்கிறது..’ என அவரவர் ஆதங்கத்தை நம்மிடம் வெளிப்படுத்திவருகின்றனர். 

சிறைத்துறை டி.ஜி.பி. மகேஸ்வர் தயாளின் அலுவலகத்தில் கடந்த 14-7-2025 அன்று சிறைக் கண்காணிப்பாளர்களுடனும், அதனைத் தொடர்ந்து 15 & 16 தேதிகளில்  அலுவலகக் கண்காணிப்பாளர்களுடனும் கூட்டம் நடை பெற்றது. இந்தக் கூட்டத்தில் சிறைக் கண் காணிப்பாளர்களுக்கு கடுமையாக டோஸ்விட்ட மகேஸ்வர் தயாள், “சிறைத்துறை தலைமை அலுவலகத்திலிருந்து பட்ஜெட் பணம் ஒதுக்காததால், தற்போதுவரை கான்ட்ராக்ட் காரர்களுக்கு பணம் வழங்காத பில்கள் அனைத்துக்கும், பொருள்களின் சந்தை மதிப்பில் மட்டுமே பணம் வழங்கப்படவேண்டும்’என உத்தரவிட்டுள்ளார். 

ஊழல் மூலம் கிடைக்கும் பெரும் தொகைக்கு டி.ஜி.பி. வேட்டு வைத்துவிட்டாரே’ என்ற கடுப்பில்தான், சென்னை புழல் பெண்கள் சிறையில் கைதியாக அடைபட்டுள்ள நைஜீரியாவைச் சேர்ந்த மோனிகாவால் முதல் நிலைக் காவலர் சரஸ்வதி தாக்கப்பட்டதாக, அந்த உள்குத்து செய்தி மீடியாக்களில் பரபரப்பாக்கப்பட்டது. சிறைப் பணியாளர்கள் திருடித் தின்பதற்காகத்தான் சிறைக்கே வருகிறார்கள்’ என்று டி.ஜி.பி. மகேஸ்வர் தயாள் கூறியதாக, அத்தனை அழுத்தமாக சரஸ்வதி பேட்டி அளித்ததிலிருந்தே, உயர்அதிகாரிகளுக்கு உதறல் ஏற்பட்டிருப்பது வெட்ட வெளிச்சமாகி யிருக்கிறது.

Advertisment

ஐந்து பேர் கொண்ட குடும்பத்திற்குத் தேவையான பொருள்களை மார்க்கெட் விலையில் கொள்முதல் செய்யலாம். அதே பொருள்களை ஆயிரக்கணக்கான சிறைவாசிகளுக்கு கொள்முதல் செய்வதென்றால், மார்க்கெட் விலையைக் காட்டிலும் குறைவான விலையிலேயே வாங்கமுடியும். அந்த விலை வித்தி யாசத்தைக் கணக்கில்கொண்டு கான்ட் ராக்டர்களுக்கு பணம் வழங்கவேண்டுமே தவிர, மார்க்கெட் விலைப்படி கொடுத்தால் பல லட்சங்கள் அரசுக்கு நஷ்டமாகும். இதைக் கவனத்தில்கொண்டு டி.ஜி.பி. உத்தரவிடுவதே சரியாகும்.

சிறைத்துறை ஊழலானது காலகாலமாக ஒரு நடைமுறையாகவே இருந்துவந்தாலும்,  அது எப்போது பொதுவெளியில் தெரிகிறதோ, அதிர்வலை களை உண்டுபண்ணுகிறதோ,  அன்றி லிருந்து இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குப் பின்னோக்கிச் சென்று, அதனைத் தணிக்கை செய்து  ‘இந்த ஆண்டுகளில் மட்டுமே ஊழல் நடந் துள்ளது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் இவர்கள்தான்..’ என்னும் அளவிலேயே முடித்துவிடுவார்கள். 

jail1

Advertisment

2013 காலகட்டத்தில் மதுரை மத்திய சிறையில் ஸ்டோர் கீப்பராக இருந்தார் ராஜவேலு. பதவி உயர்வே வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்து அந்தப் பொறுப்பிலேயே தொடர்ந்தார். ஏனென் றால், அந்த அளவுக்கு சிறைத்துறையில்  அவருடைய செல்வாக்கு மேல்மட்டம் வரையிலும் கொடிகட்டிப் பறந்தது.  தற்போது நடவடிக்கைக்கு ஆளாகியிருக்கும் அந்த மத்திய சிறைக் கண்காணிப்பாளர், தனக்குக் கீழே உதவியாளராக இருந்த  ராஜவேலுவுடன் நெருக்கமாக இருந்து, அவரையே இரண்டாவது கணவராகக் கரம்பிடித்தார் என்றால் பார்த்து கொள்ளுங்களேன். ஸ்டோர் கீப்பர் ராஜவேலு, சிறைக்குள் மாதம் ஒருமுறை பணிக்கு வந்தாலே ஆச்சரியம் இவரைப் போல் FORTUNER கார் வைத்திருந்த சாதாரண ஊழியரை தமிழகச் சிறைத்துறை வட்டாரம் இதுவரை கண்டதில்லை. அந்தக் கார் போதாதென்று 2020ல் ரூ.25 லட்சத்துக்கும் மேல் மதிப்புள்ள வெள்ளை நிற INNOVA CRYSTA (TOP END MODEL) கார் வாங்கினார். அந்த இன்னோவா கார் இப்போது யாரிடம் உள்ளதோ?

மத்திய சிறைகளில் தணிக்கை செய்பவர்களின் நேர்மை குறித்து இங்கே குறிப்பிட்டாக வேண்டும். அப்போது மதுரை மத்திய சிறைக்கு தணிக்கைக்காக வந்திருந்த அனைவரையும் காளவாசலில் உள்ள தங்கம் கிராண்ட் ஹோட்டலில் தங்கவைத்து, அவர்களது மனம் குளிரும் அளவுக்கு அத்தனை ஏற்பாடுகளையும் செய்திருந்தார் ராஜவேலு. மதுரையில் தணிக்கை அதிகாரிகள் ஒருபைசா கூட செலவு செய்திருக்கமாட்டார்கள். கேட்டதையும் கேட் காததையும்கூட அவர்களுக்கு வாங்கித் தந்தார். தணிக்கைக்கு வந்தவர்களின் அந்த நாள் வங்கிக் கணக்கை ஆராய்ந்தாலே தெரிந்துவிடும்,  செலவு இருக்காது; வரவு மட்டுமே இருக்கும். 

2019ல் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சிறைத் துறை டி.ஐ.ஜி.களும், காவலர்கள் பதவி உயர்வுக்கான செலக்ஷன் போர்டில் கலந்துகொள்ள மதுரை மத்திய சிறைக்கு வந்தனர். இவர்கள் அனைவரையும் மதுரையில் நீச்சல் குளத்துடன் உள்ள ஹெரிடேஜ் ஹோட்டலில் தங்கவைத்து லட்சங்களை வாரியிறைத்தார் ராஜவேலு.  

ராஜவேலு ஒரு போன் போட்டால் போதும். சிறைத்துறை டி.ஜி.பி. அலுவலகத்திலிருந்து பட் ஜெட்டுக்கான கோடிக்கணக்கான பணம் உடனே வந்துவிடும். கோரிக்கைக் கடிதங்கள் எல்லாம் பின்னர்தான் அனுப்பிவைக்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அமைச்சுப் பணியாளர்களுக்கும் சனி, ஞாயிறு விடுமுறை அளிக்கப்படும். சிறைத்துறையிலோ சனிக்கிழமை வேலைநாள் என்பதே தொடர்ந்தது. சிறைத்துறை தலைமை அலுவலகத்திலிருந்து தலைமைச் செயலகத்துக்கு சனிக்கிழமை விடுமுறை வேண்டி கோப்பு அனுப்பப்பட்டது. அங்கும் நெருக்கமான தொடர்புள்ளவர் என்பதால், ராஜவேலுவால் அந்த ஆணையைப் பெற்றுத்தர முடிந்தது. 

jail2

தமிழ்நாட்டில் உள்ள மற்ற மத்திய சிறைகளைக் காட்டிலும் பண்டிகை நாள்களை அமோகமாகக் கொண்டாடியது மதுரை மத்திய சிறைதான். சிறைக்காவலர் குடியிருப்பில் பொங்கல் விழா, தீபாவளி விழா போன்றவற்றை தனது சொந்தச் செலவில் வெகுவிமரிசையாக நடத்துவார் ராஜவேலு. எப்படியென்றால், கோலப் போட்டியில் முதல் பரிசு ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள அதிநவீன வாஷிங் மெஷின், இரண்டாம் பரிசு அத்தனை வசதிகளும் கொண்ட ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள பிரிட்ஜ்,  மூன்றாம் பரிசு ஏர் கண்டிஷனர் போன் றவை கொடுக்கப்படும். இதிலும்கூட ஒரு சூட்சுமம் உண்டு. மதுரையின் பிரபல ஹோட்டல் உரிமையாளர்  ‘ஸ்பான்சர்’ செய்கிறார் என்று கூறப்பட்டாலும், பணம் செலவு செய்வ தென்னவோ ராஜவேலு தான். 18 வகையான தோசை வகைகள் பஃபே சிஸ்டத்தில் வழங்கப்     படும். யார் வேண்டு மானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டுக்கொள்ளலாம். ஆடல், பாடல், உஓ கச்சேரி என அமர்க் களப்படுத்திவிடுவார். 

இத்தனை தாராளம் காட்டுவதால், விழாவின் முதல் மரியாதை ஸ்டோர் கீப்பர் ராஜவேலுவுக்கே கிடைக்கும். வாழ்க்கைத் துணையாகிவிட்ட சிறைக் கண்காணிப்பாளர் எல்லாம் அவருக்கு அடுத்த இடத்தில்தான். ராஜவேலுவை எப் போதும் சூழ்ந்திருப் பவர்களை பஞ்ச பாண்டவர்கள் என்பார்கள். அவர்களின் வீடுகளுக்கு மளிகைப் பொருள்கள் ராஜவேலுவின் கணக்கிலிருந்து மாதம்தோறும் சென்று    விடும்.  

ராஜவேலுவின் அன்றைய ஆடம்பர வாழ்க்கைக்கு காரணியாக இருந்தது, அந்தக் கண்காணிப் பாளரும் ராஜவேலுவும் மதுரை மத்திய சிறையின் தொழிற்கூடத்தில் ஊழல் செய்து குவித்த கோடிகள் தான். இத்தனை ஆட்டம் ஆடியும் எந்த நடவடிக்கைக் கும் ஆளாகாத ராஜவேலுவை 2021ல் காலம் அழைத்துக் கொண்டது. 

(ஊழல் தொடர்ந்து கசியும்...)

_____________
நாங்களும் போலீஸ்தான்! ஆனா... இல்ல!

-சிறைக் காவலர்களின் ஏக்கம்!  

சிறைகளில் காக்கிச் சீருடை அணிந்து பணிபுரியும் அனைவருக்கும், காவலர் முதல் ஐ.ஜி.வரை, நாம் காவல்துறையில் இல்லையே என்கிற ஏக்கம் நிறைந்திருக்கும். சிறைத்துறையில் பதவி எதுவாக இருந்தாலும், சிறையின் சீருடைப்  பணியாளருக்கு பிரச்சனை எது வந்தாலும்,   நாம்தான்  காவல்துறை  இல்லையே.. காவல் துறையாக இருந்திருந்தால் இவ்வளவு அசிங்கப்படவேண்டியது இருந்திருக்காதே என்கிற தாழ்வு மனப்பான்மை, பணியிலிருந்து ஓய்வுபெறும் நாள்வரை இவர்களைத் துரத்திக்கொண்டே இருக்கும். அதிகாரிகளும்கூட இப்படியொரு தாழ்வு மனப்பான்மையிலேயே பணிபுரிந்து வருகின்றனர். மேலும், காவல்துறையைவிட சிறைத்துறையில் சம்பளமும் ஒருபடி குறைவுதான். 

காவல்துறையில் இரண்டாம் நிலைக் காவலர் முதல் டிஜிபி வரை இடதுகையில் பேட்ஜ் அணிந்துகொள்வது  2022ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது. அப்போது சிறைத்துறைப் பணியாளர்கள் பலரும் பேட்ஜ் அடையாளத்தின் மூலம் நாம் வேறு; போலீஸ் வேறு’ என்பதை மக்களால் எளிதில் கண்டுபிடித்துவிட முடியும் என்ற மனஉளைச்சலுக்கு ஆளானார்கள்.  உண்மையைச் சொல்வதென்றால், இப்போதும்கூட சிறைக் காவலர்கள் தங்களது வாகனங்களில் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு,  போலீஸாகத் தங்களைப் பாவித்தபடியே வலம் வருகின்றனர். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் இப்படித்தான் நடந்துகொள்கின்றனர். இது சிறைக் காவலர்களுக்கு ஒருவித குற்றவுணர்ச்சியை ஏற்படுத்தியதால், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் அவர்களுக்கு பேட்ஜ் வழங்கப்பட்டுள்ளது. அதுபோல் தங்களுக்கும் பேட்ஜ் வேண்டுமெனக் கூறி, அமரேஷ் பூஜாரி டி.ஜி.பி.யாக இருந்தபோது மனுக்கள் அளித்தனர். அந்தக் கோரிக்கை இன்றுவரையிலும் கண்டுகொள்ளப்படவில்லை.