(சென்ற இதழ் தொடர்ச்சி)
கடந்த 17-01-2025 அன்று “"சிறைச் சாலையில் ஜாமர் இல்லையா?'’என கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.செந்தில்குமார் அடங்கிய அமர்வு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ள சிறையில் கைதிகளுக்கு எப்படி செல்போன் கிடைக்கிறது? அதனை எப்படி பதுக்கி வைக்கின்றனர்? சிறைப் பணியாளர்களின் ஒத்துழைப்பில்லாமல் சிறைக்குள் எப்படி செல்போன்களைக் கொண்டுசெல்ல முடியும்? சிறைக்குள் செல்போன் பயன்படுத்துவது அபாயகரமான சூழல் அல்லவா?” என்று மேலும் சில கருத்துகளை அழுத்தமாகத் தெரிவித்தனர்.
தமிழ்நாடு அரசாணை எண்: 1447, 16.10.2007 மற்றும் சிறை விதி 298 (rr)/1983, 308(b)/2024 ன்படி செல்போன் மற்றும் சிம் கார்டுகள் சிறையில் தடைசெய்யப்பட்ட பொருள்களாகும். சிறையில் கைப்பற்றப்படும் செல்போன் மற்றும் சிம் கார்டுகள் தொடர்பான வழக்குகள் அடையாளம் காணமுடியாத குற்றம்(Non#cognizable offence) என்பதால் அதனை நேரடியாகக் காவல் நிலையத்தில் வழக்காகப் பதிவு செய்ய முடியாது. மேலும், சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகள், "நீங்களே செல்போனைக் கொடுத்துவிட்டு, நீங்களே கம்ப்ளைன்ட் செய்தால் எப்படி?'’என்று வசைபாடுவார்கள்.
சிறை விதிகள் 301/1983 மற்றும் 312/2024 -ன்படி, சிறையின் எல்லைக்குட்பட்ட நீதித்துறை நடுவரிடம் சம்பந்தப்பட்ட சிறையின் கண்காணிப்பாளர் பெயரில் தனிப் புகாராக (private complaint) மனு அளித்து, நீதித்துறை நடுவரிடமிருந்து காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டி உத்தரவுபெற்ற பின்பே வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். ஆனால், இவர்கள் சிறை அலுவலரின் பெயரில் புகார் தெரிவிப்பதாகக் கூறிவிட்டு, சிறை அலுவலரின் சார்பில் உதவிச் சிறை அலுவலரைக் காவல் நிலையத்துக்கு அனுப்பி, காவல்துறை மேலதிகாரிகளிடம் கெஞ்சி வழக்குப் பதிவு செய்யவைப்பார்கள்.
இவ்வாறு உரிய நடைமுறைகளைப் பின்பற்றத் தவறிய காரணத்தினாலேயே, சிறைகளில் செல்போன்களைக் கைப்பற்றிய வழக்குகள் அனைத்தும் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்படுகின்றன. மேலும் செல்போன் கைப் பற்றப்பட்டவுடன் சம்பந்தப்பட்ட சிறைவாசிக்கு சிறைச் சலுகைகளை சிறை கண்காணிப்பாளர்கள் ரத்து செய்துவிடுவர். அதன்பிறகும், காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தால், ஒரு குற்றத்திற்கு இரண்டு தண்டனையா எனக்கூறி, வழக்கினை நீதிமன்றம் ரத்து செய்துவிடும்.
ஒருவேளை மேற்கூறிய நடைமுறைகள் அனைத்தையும் முறையாகப் பின்பற்றி சிறை வாசிக்குத் தண்டனை பெற்றுத்தந்தாலும் கூட சொற்பமான சிறைத்தண்டனையே கிடைக்கும். ஏற்கனவே வருடக்கணக்கில் சிறையில் அடைபட்டுள்ள சிறைவாசியை இந்தத் தண்டனை ஒன்றும் பாதிக்காது. இதில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு பாதிக்கப்படுவது என்னவோ பணியாளர் மட்டும்தான். தமிழகச் சிறைகளில் இதுவரை பிடிபட்ட 200க்கும் மேற்பட்ட செல்போன்கள் தொடர்பான வழக்குகளில் எத்தனை சிறைவாசிகளுக்குத் தண்டனை பெற்றுத் தரப்பட்டது என்ற புள்ளி விவரத்தை ஆராய்ந் தாலே இது தெரிந்துவிடும்.
உதாரணத்துக்கு நளினி விவகாரத்தை எடுத்துக்கொள்வோம். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு வேலூர் பெண்கள் சிறையிலிருந்த நளினியிடமிருந்து 20-4-2010 அன்று செல்போன் கைப்பற்றப்பட்டது. அதனால், நளினிக்கான சிறை சலுகைகளை 21-4-2010 அன்று சிறை கண்காணிப்பாளர் ரத்து செய்துவிட்டார். மேலும் பாகாயம் காவல்நிலையத்தில் குற்ற வழக்கு (231/2010) பதிவாகி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. இந்நிலையில் சிறை விதி 301/1983ன்படி சிறை கண்காணிப்பாளருக்கு உள்ள அதிகாரத்தின்படி தண்டனைகள் வழங்கலாம், அல்லது நீதித்துறை நடுவரிடம் புகார் அளித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தலாம் என்றிருப்பதைக் குறிப்பிட்டு, ஏற்கனவே சிறை சலுகைகள் ரத்து செய்யப்பட்டதால், ஒரு தவறுக்கு இரண்டு தண்டனைகள் வழங்குவது இந்திய அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானது எனக் கூறி, அந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தால் (Crl.O.P.No.22192 of 2013, 11#9#2013) ரத்து செய்யப்பட்டது.
இந்தச் சட்ட நடைமுறைகளை அறிந்திருப்ப தாலேயே, எந்தச் சிறைவாசிக்கும் செல்போன் பயன்படுத்துவது குறித்த பயம் வருவதில்லை. பிடிபட்ட செல்போன் மற்றும் சிம்கார்டு யார் பெயரில் வாங்கப் பட்டது? எவ்வ ளவு காலமாகச் சிறையில் பயன் படுத்தப்பட்டுள் ளது? கைபேசி அழைப்பு மூலம் எந்தெந்த நம்பர் களில் பேசியுள்ள னர்? குறிப்பாக எந்த நேரங்களில் இந்த செல்போன் அழைப்புகள் பேசப்படுகின்றன? என்பது குறித்தெல்லாம் யாரும் ஆய்வுகள் மேற்கொள்வதில்லை. மேலும், சிறையில் ஒரு செல் போனை ஒரு சிறைவாசி மட்டுமே பயன்படுத்து வது கிடையாது. அந்த செல்போனை வைத்திருப் பவரால் மற்ற சிறைவாசிகளுக்கு உள்வாடகைக்கும் விடப்படும். அதை சார்ஜ் செய்து தருவதற்கும் தனிக் கட்டணங்கள் உண்டு.
சேலம் மத்திய சிறையில் அடைக்கப் பட்டிருந்த பிரபல ரவுடி லாலி மணிகண்டனிடம் செல்போன் மூலம் பேசி, வன்னியர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் ம.க.ஸ்டாலினை கொலை செய்ய முயற்சித்ததாக, பா.ம.க. மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் கே.ஆர். வெங்கட் ராமன் கைது செய்யப்பட்டார். மயிலாடுதுறையைச் சேர்ந்த சகோதரர்களுக்கு இடையிலான சொத்துப் பிரச்சனையில் கட்டப்பஞ்சாயத்து செய்வதற்காக, புழல் சிறையிலிருந்தே ஆயுள் தண்டனைக் கைதி கேப்ரியல் மூலம் செல்போனில் கொலை மிரட்டல் விட்டதால், அவர் மீது வழக்கு பதிவானது. இதுபோன்ற சம்பவங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். இனிவரும் காலங்களிலும் இது தொட ரவே செய்யும். குற்றம் நடந்ததும் சிறையிலிருந்து செல்போனை எடுப்பதும், சிறையிலுள்ள குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்வதும் கண்துடைப்பு நாடகமாகவே தொடர்ந்து நடக்கிறது.
பூந்தமல்லி உயர் பாதுகாப்புச் சிறையில் செல்போன் மற்றும் கஞ்சா போன்ற பொருள்கள் 10.12.2024 அன்று கைப்பற்றப்பட்டன. அதனால் அப்போது பணியிலிருந்த 10 பணியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சிறைவாசிகள் 38 பேரும் டிரான்ஸ்பர் செய்யப்பட்டனர். இதற்கு ஒருவருடத்திற்கு முன்பே, 08.11.2023 அன்று பூந்தமல்லி தனி கிளைச் சிறையில் நடத்தப்பட்ட சோதனையில் பிரபல ரவுடிகளான சி.டி.மணி, அரும்பாக்கம் ராதா, வெற்றிவேல் ஆகியோ ரிடமிருந்து விலை யுயர்ந்த ஐபோன், சிம்கார்டு, சார்ஜர் மற்றும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன. அதற்கும் ஒரு வருடத்திற்கு முன் 30.07.2022 அன்று பூந்தமல்லி தனி கிளைச் சிறையில் பாஸ்கர் மற்றும் கார்த்திகேயன் ஆகிய இரு சிறைவாசிகளின் அறையிலுள்ள கழிவறைக் குள் பதுக்கி வைத்திருந்த செல்போன், சார்ஜர், சிம் கார்டு, பேட்டரி ஆகியவை கைப்பற்றப்பட்டன.
ஒரே பூந்தமல்லி தனி கிளைச்சிறையில் ஒவ்வொரு வருடமும் செல்போன்கள் பிடிபடு கின்றன. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மத்திய சிறை, மாவட்ட சிறை, கிளைச் சிறைகளிலிருந்து இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் காவலர்கள் பணியமர்த்தப்படுகின்றனர். அவர்களில் யாரேனும் சிறைவாசிகளிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு செல்போனைக் கொடுத்து விட்டு, பணி முடிந்து சொந்த ஊருக்குச் சென்றுவிடுவர். அதன்பிறகு, எப்போது அந்த செல்போன் கைப்பற்றப்படுகிறதோ, அப்போது பணியிலுள்ள பணியாளர்களை மட்டும் கடுமையான தண்டனைகளுக்கு உள்ளாக்கி, மற்றவர்களைத் தப்பிக்கவிடுவது தொடர்ந்து நடக்கின்றன. இச்சிறையில் செல்போன் புழக்கம் அதிகமாக இருப்பதற்கு முக்கிய காரணம், பூந்தமல்லி கிளைச் சிறைக்கென்று நிரந்தரமாகப் பணியாளர்களை நியமிக்காததுதான்.
செல்போன் எடுத்ததால் பூந்தமல்லி கிளைச் சிறை கண்காணிப்பாளரை சஸ்பெண்ட் செய்துள்ளனர். அதன்பின் 07.02.2025ல் கோவை மத்திய சிறையிலிருந்து சிறைவாசி ஒருவர் செல்போன் மூலம் வீடியோ எடுத்து வெளியிட் டுள்ளார். புழல்-ஒ மத்திய சிறையில் 16.04.2025 அன்று செல்போன் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து மத்திய சிறையிலும் இது தொடரத்தான் போகிறது. இந்த விவகாரத்தில், மத்திய சிறை கண்காணிப்பாளர்களை ஏன் சஸ்பெண்ட் செய்வதில்லை என்பது சிறைச் சாலையின் சுவர்களுக்கே வெளிச்சம்.
சிறைகளில் தீவிர வாதிகள், நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள், பயங்கர வாதிகள், வரலாற்றுப் பதிவேடு கொண்ட பெரிய ரவுடிகள், தாதாக்கள் போன்றோர் செல்போனைப் பயன்படுத்தி வெளியிலுள்ள தங்களது கூலிப்படையைத் தொடர்பு கொண்டு, சிறைக்கு உள்ளேயிருந்து திட்டம் தீட்டி, வெளியே பல கொலைகள், கட்டப் பஞ்சாயத்துகள், மாமூல் வசூல், போதைப் பொருள் விற்பது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடு கின்றனர். இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம், செல்போன் ஜாமர் கொள்முதலில் நடந்த ஊழல்தான்.
சிறைக்குள் ஜாமர் கருவி இருப்பதால் செல்போனைப் பயன்படுத்த முடியாது என்ற எண்ணம் கைதிகளுக்கும் சிறைப் பணியாளர் களுக்கும் இருந்திருந்தால், சிறைக்குள் செல்போன் கடத்துவது தொடர்ந்து நடக்குமா? சிறையிலுள்ள குற்றவாளிகளால் வெளியில் உள்ளவர்களை வைத்து குற்றச்செயல்கள் நடத்தப்படும்போது, இனியாவது பாதுகாக்கப்பட்ட சிறையின் முழு நிர்வாகப் பொறுப்பினை வகிக்கும் சிறைக் கண்காணிப்பாளர் மீதும் வழக்கு பதிவு செய்யவேண்டும்.