தமிழக சட்டமன்ற நிகழ்வுகள் குறித்து இந்த இதழில் நம்மிடம் மனம் திறக்கிறார் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா.
"பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியின் மானிய கோரிக்கை கடந்த 26-ந் தேதி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சபை தொடங்கியதும் 110 விதியின் கீழ் தொழிற்கல்வி குறித்த வரலாற்று சிறப்புமிக்க சட்ட மசோதா ஒன்றைத் தாக்கல் செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்விகளிலும் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் அமைச்சரவையின் ஒப்புதலுக்கு சட்ட வடிவம் கொடுப்பதற்கான மசோதாதான் இது. விதிகளைத் தளர்த்தி மசோதா அறிமுகம் செய்யப்பட்ட அன்றே விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் இனி பொறியியல், கால்நடை மருத்துவம், விவசாயம், சட்டம், மீன்வளம் உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள்இடஒதுக்கீடு கிடைக்கும். மசோதாவை உறுப்பினர்கள் எல்லோரும் வரவேற்றுப் பேசினர்.
மசோதா மீது நான் பேசும்போது,”"தனியார் பள்ளிகள் பெருகிவரும் சூழலில், அரசுப் பள்ளிகளை நோக்கி மாணவர்களை அதிகளவில் ஈர்க்கவும், அரசு பள்ளிகளின் கல்வி தரம் அதிகரிக்கவும் இந்த சட்ட மசோதா பெரிதும் நன்மைப் பயக்கும். உயர்கல்வி அமைச்சர் பொன்முடி இங்கு பேசும்போது, "பள்ளிக் கல்விக்கு காமராஜர் எனில், உயர்கல்விக்கு கலைஞர்' என்று சொன்னார். இனி, உயர்கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஸ்டாலின் என வரலாறு பேசும். அப்படிப்பட்ட சிறப்புமிக்க மசோதா இது'’என்றேன்.
பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வித் துறைகளுக்கான மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய பள்ளிக்கல்வியின் முன்னாள் அமைச்சர் செங் கோட்டையன்,”"ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மிக சகஜமாகவும், இயல்பாகவும் பழகும் கண்ணிய மிக்க சபையாக இந்த சட்டமன்றம் இருக்கிறது. நான் அமைச்சராக பொறுப்பேற்றதுமே அண்ணா நூலகத்தைப் போய்ப் பார்த்தேன். மிக பிரமாண்டமாகவும் வியக்கத்தக்க வகையிலும் இருந்தது'' என்றார்.
தனக்கான வாய்ப்பு வந்தபோது செங்கோட்டை யன் பேசியதை சுட்டிக்காட்டிய விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர் ஆளுர் ஷாநவாஸ், "செங்கோட்டை யனின் பேச்சைக் கேட்டபோது இது ஆளும்கட்சி உறுப்பினரின் பாராட்டு உரையா? என என்னை நானே கிள்ளிப் பார்த்துக்கொண்டேன்'’என்றவரின் பேச்சு சபையில் கலகலப்பைக் கூட்டியது.
அன்பில் தாத்தாவின் பேரனான பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷை, பேராசிரியரின் பேரனான நான் வாழ்த்துகிறேன் என்ற தி.மு.க உறுப்பினர் வெற்றிச்செல்வன், (பேராசிரியர் அன்பழகன் பேரன்),‘’"தமிழை டமில் என உச்சரிக்கிறார்கள். காரணம், தமிழை ஆங்கிலத்தில் எழுதும்போது பஆஙஒக என எழுதுவதால்தான். இதற்கு பதிலாக, பஐஆஙஒழஐ என மாற்றினால்தான் தமிழை, ஆங்கிலத்திலும் சரியாக உச்சரிப்பார்கள்' என்ற கோரிக்கையை வைத்தார்.
பள்ளிக் கல்வித்துறையில் அகஸ்தியா நிறுவனத்தை அனுமதித்திருப்பது குறித்து பேசிய ம.ம.க. உறுப்பினர் அப்துல்சமது, விடுதலை சிறுத்தைகள் ஆளுர் ஷாநவாஸ் இருவரும், "அந்த நிறுவனம் வலதுசாரி சிந்தனை உள்ள நிறுவனம். அதனை எப்படி அனுமதிச்சீங்க?' என்று கேள்வி எழுப்பியபோது, "கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்சிபிலிட்டி அடிப்படையில் லேப்புக்கு மட்டும்தான் அனுமதிச்சிருக்கோம். அவர்களின் சிந்தனைகளை அனுமதிக்க மாட்டோம்' என பதிலளித்தார் அமைச்சர் அன்பில்மகேஷ்.
தொடர்ந்து பேசிய அப்துல் சமது,”"உயர்கல்வி படிப்புகளில் பாடத் திட்டங்களை நாங்கள்தான் வகுத்துத் தருவோம்னு பல் கலைக்கழக மானி யக்குழு சொல் கிறது. தமிழக அரசு இதற்கு இசைந்து கொ டுக்கக் கூடாது. 1991-க்கு பிறகு தொடங்கப் பட்ட அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி தமிழ்வழி பள்ளிக் கூட ஆசிரியர்களின் பணியை நிரந்தரம் செய்வதற்கு 2011-ல் கலைஞர் உருவாக் கிய ஆணையம், கடந்த ஆட்சியில் செயல்படாத தால் அதனை செயல் படுத்தணும்''’ ’என்றார். இதற்கு, செங்கோட்டையன் சில கருத்துக் களைச் சொல்ல, அதனை மறுத்து நான் பேசினேன்.
உயர்கல்வியின் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசும்போது, "நான் சுட்டிக்காட்டுகிறேன்; சுட்டிக்காட்டுகிறேன்' என சொல்லிக் கொண்டே வந்தார்.ஒரு கட்டத்தில் பெல் அடித்த சபாநாயகர், "நானும் சுட்டிக்காட்டுகிறேன்; இன்னும் 5 நிமிஷம்தான் இருக்கு' என்று சொல்ல, முதல்வர் ஸ்டாலின் உள்பட உறுப்பினர்கள் அனைவரும் ரசித்தனர். பேசிக்கொண்டிருந்த அன்பழகனும், சபா நாயகரின் டைமிங் கமெண்ட்டை ரசித்து சிரித்தார்.
தொடர்ந்து பேசிய அன்பழகன், "ஜெயலலிதா பெயரிலான பல்கலைக் கழகத்தை காழ்ப்புணர்ச்சியோடு மூடுகிறீர்கள்' என்ற குற்றச்சாட்டை முன்வைத்ததுடன், "புதிய பல்கலைக்கழகம் உருவாக்கப்படுவது கல்வியின் தரத்தை உயர்த்துவதற்காகத்தான்'' என்றார். அப்போது பேசிய அமைச்சர் பொன்முடி, "புதிய பல்கலைக்கழகம் உருவாக்குவதால் கல்வியின் தரம் உயரும்ங்கிறது ஏற்கக்கூடியதல்ல. இதை நான் சொல்லலை; உங்க அம்மாவே (ஜெயலலிதா) சொல்லியிருக்காங்க'' என்றார்.
அப்போது முதல்வர் ஸ்டாலின், "காழ்ப்புணர்ச்சி இருந்திருந்தா, அம்மா உணவகத்தை மூடியிருப்போம். இயங்கத் தானே விட்டிருக்கோம்'' என்றார். இவ்வளவு விளக்கம் சொன்ன பிறகும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி தலைமையில் அ.தி.மு.க. வெளிநடப்பு செய்தது.
இறுதியாக, பள்ளிக்கல்வித் துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதத்தை முழுமையாக உள்வாங்கி தெளிவாக பதிலுரைத்தார் அமைச்சர் அன்பில்மகேஷ். "புத்தகப் பைகளில் அ.தி.மு.க.வின் முந்தைய முதல்வர்களின் படங்கள் இருப்பதை முதல்வரிடம் சொன்னபோது, "புதுசா பைகளை அச்சடிக்கணும்னா எவ்வளவு செல்வாகும்'னு கேட்டார். "13 கோடி ரூபாய் ஆகும்'னு சொன்னேன். "அப்படின்னா இந்த பைகளையே கொடுத்திடுங்க. அந்த 13 கோடியை பயனுள்ளதற்கு செலவிடலாம்' என உத்தரவிட்டார்'' என்று முதல்வரின் பெருந்தன்மையைப் புகழ்ந்து பேசினார்.
அதேபோல தனது பதிலுரையில் பேசிய அமைச்சர் பொன்முடி, "புதிதாக 10 கலை அறிவியல் கல்லூரிகள் திறக்கப்படும். முஸ்-ம்கள் அதிகமுள்ள கூத்தாநல்லூரில் பெண்களுக்கான கல்லூரி துவக் கப்படும்' என அறிவித்தது பாராட்டுதற்குரியது.
இந்த துறைகளின் மீதான விவாதங்களின் போது, "எங்க பகுதிகளிலெல்லாம் அரசு நிதி உதவி பெறும் பள்ளிக்கூடங்கள்தான் நிறைய இருக்கு. அதனால் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு அந்தப் பள்ளி மாணவர்களுக்கும் கிடைக்குமா?' என்று சபாநாயகர் ஒரு கோரிக்கை வைத்தார். பொதுவாக, சபாநாயகராக இருப்பவர்கள் கோரிக்கை வைப்பதில்லை. அப்பாவு அவர்கள் அந்த கோரிக்கை வைத்ததை சபை உற்றுக் கவனித்தது. சபாநாயகரின் கோரிக்கையைக் கேட்ட முதல்வர், "பேரவைத் தலைவர் பேசுவதைப் பார்க்கும்போது, அவர் சட்டமன்ற உறுப்பினராகவே இருந்திருக்க லாம் போலிருக்கிறது' என கமெண்ட் அடித்தது சுவாரஸ்யம்.
மறுநாள் 27-ந் தேதி மேகதாது விவகாரம் குறித்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தோடு சபை துவங்கியது. மேகதாது அணை கட்டும் பிரச்சனை, பிரதமரை சந்தித்து கர்நாடக முதல்வர் சந்தித்துப் பேசுவது என்பதெல்லாம் கவலை அளிப்பதாக இருப்பதை சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, நான், வேல்முருகன், ஈஸ்வரன் உள்ளிட்ட அனைவரும் பேசினோம். அதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், "இந்தியாவில் ஆட்சி கவிழ்க்கப்படுவதற்கு எதிராக வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பைப் பெற்றுத் தந்த எஸ்.ஆர்.பொம்மையின் மகன்தான் இப்போது கர்நாடக முதல்வர். அவர், நீதியை சீர்குலைக்க மாட்டார்னு நினைக்கிறேன்'’என்றார்.
இதனையடுத்து தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள் முகாமிலிருக்கும் ஈழத் தமிழர்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்காகவும், மாணவர்களின் படிப்பிற்காகவும் 312 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவிலான நலத்திட்ட உதவிகளை 110 விதியின் கீழ் முதல்வர் அறிவித்தார். இந்த நலத்திட்ட உதவிகள் ஈழத்தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றும். நானும் வேல்முருகனும் இதனை வரவேற்று பேசிவிட்டு, திருச்சி முகாமின் நிலைமைகளைச் சொன்னதும், அதனை கவனித்து தேவையான நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் பதிலளித்தார்.
நீதிமன்றங்கள் கட்டிடங்கள் குறித்து ஒரு சட்ட முன்வடிவை சட்ட அமைச்சர் ரகுபதி அறிமுகப்படுத்தும்போது, கலைஞரையும் ஸ்டாலினையையும் வானளாவப் புகழ ஆரம்ப்பிச் சிட்டாரு. இதனை முதல்வர் ரசிக்கவில்லை. உடனே முதல்வர் குறுக்கிட்டு, "நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன்; மீண்டும் சொல்றேன்;உறுதியா சொல்றேன்; கட்டளையா சொல்றேன். என்னை புகழ்ந்து பேசக்கூடாது'' என எச்சரிக்கை செய்ததை மிக ஆரோக்கியமாகப் பார்த்தது சபை.
பொதுப்பணி,நெடுஞ்சாலை ஆகிய 2 துறைகளின் மானியக்கோரிக்கைகள் மீது பேசிய தி.மு.க.வின் துரை சந்திரசேகரன், "சிவாஜி சிலையை மீண்டும் அதே இடத்தில் வைக்க வேண்டும்' என்றபோது, "நாங்கள் ஒன்றும் சிலையை அப்புறப்படுத்தவில்லை; நீதிமன்றம்தான் அப்புறப்படுத்திச்சி' என அ.தி.மு.க. ஓ.எஸ்.மணியன் சொல்ல, "போக்குவரத்துக்கு இடையூறில்லாமல் சிலையை வையுங்கள் என்றுதான் நீதிமன்றம் சொல்லிச்சி. ஆனா, நீங்க எங்கே வெச்சிருக்கீங்க? இது நியாயமா?' என்று எதிர்கேள்வி எழுப்பினார் செல்வப்பெருந்தகை.
தொடர்ந்து பேசிய துரை.சந்திரசேகரன், "நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றணும்' என கோரிக்கை வைத்தார். அதற்கு அமைச்சர் எ.வ.வேலு, "முதல்வர் இதைப் பற்றி அறிவுறுத்தியிருக்காரு. சட்டமன்றம் முடிந்ததும் ஒன்றிய அமைச்சர் நிதின்கட்கரியை சந்தித்து நடவடிக்கை எடுக்கப்படும்' என உறுதி தந்தார்.
விவாதத்தில் பேசிய தி.மு.க. எழிலரசன், "இந்த சபையில் கலைஞரின் பேரன், பேராசிரியரின் பேரன், அன்பிலின் பேரன், சி.வி.அண்ணாமலை யின் பேரன் (எழிலரசன்) இருக்கிறோம்' என்று பேச்சைத் துவக்கியது சுவாரஸ்யமாக இருந்தது. "நெடுஞ்சாலைத் துறையில் முறைகேடுகளுக்கு காரணமான பேக்கேஜ் சிஸ்டத்தை கைவிடணும்' என்று எழிலரசன் கோரிக்கை வைக்க, அந்த சிஸ்டத்தை ரத்து செய்வதாக அறிவித்தார் அமைச்சர் வேலு.
உடனே எழுந்த எடப்பாடி பழனிசாமி, "அந்த முறை சிறப்பானதுதான். கைவிடுவது தவறு' என எதிர்த்தபோது, "தகுதியானவர்கள் உள்ளூரிலேயே இருக்கிற நிலையில், வெளி மாநிலத்தவர் கலந்துகொள்ளும் வகையில் இருக்கும் பேக்கேஜ் சிஸ்டம் எதற்கு?' என்றார் வேலு. பேக்கேஜ் சிஸ்டத் திற்கு அ.தி.மு.க. ஆதரவாகவும் மற்றவர்கள் எதிர்ப் பாகவும் இருந்தது விவாதத்தின் சுவாரஸ்யம்.
விவாதத்தில் விடுதலை சிறுத்தைகள் எஸ்.எஸ்.பாலாஜி, காங்கிரஸ் ராஜ்குமார், ம.தி.மு.க. சதன் திருமலைக்குமார் பேசினார்கள். "கலைஞர் கட்டிய புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றிட்டாங்க. தென் சென்னையில்தான் அரசு மருத்துவமனைகளே இல்லை. அதனால் ஓமந்தூரார் அரசு மருத்துவ மனையை தென்சென்னைக்கு மாற்றிவிட்டு கலைஞர் கட்டிய புதிய தலைமைச்செயகத்தில் சட்டமன்றம் நடக்கவேண்டும்' என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
விவாதங்களுக்கு பதிலளித்து ஏறத்தாழ 1 மணி நேரம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, "சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தருகிற இந்த அரசு, காலநிலை மாற்றத்திற்காக தனி அமைச்சகத்தையே உருவாக்கியிருக்கிறது. அதனால் சாலைகள் ஓரம் மரம் நடுவதை ஒரு இயக்கமாக எம்.எல்.ஏ.க்கள் நடத்த வேண்டும்' என்பதை வலியுறுத்திவிட்டு, பொதுப்பணித்துறையின் பெருமைகளை விவரித்தவர், கலைஞருக்கு நினைவிடம் கட்டப்படுவதை அறிவித்தபோதும், சுதந்திர தினத்தில் முதன்முறையாக ஸ்டாலின் கொடியேற்றியதை சொன்னபோதும் உணர்ச்சி வயப்பட்டார் வேலு. 75-வது சுதந்திர தின நினைவு ஸ்தூபி குறித்து கூறுகையில், "75-வது சுதந்திர தினத்திற்காக அமைக்கப்பட்ட நினைவு ஸ்தூபியை பலரும் பாராட்டினார்கள்; ஒரு பத்திரிகையாளரும் பாராட்டினார், அவர்... நக்கீரன் கோபால்'' என்றார் அமைச்சர் வேலு.
ஆரோக்கியமான விவாதங்கள், சுவாரஸ்யமான நினைவுகள், ரசிக்கும்படியான நகைச்சுவை ததும்பும் சொல்லாடல்கள் என கலகலப்பாக இருந்தது சட்டமன்ற கூட்டம். ஏற்கனவே 2011-2016-ல் நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறேன். அன்றைக்கு சபையில் வெறும் புகழுரைகளாகவே இருக்கும். சில நேரங்களில், இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருக்க வேண்டுமா என்றெல்லாம் தோன்றியது உண்டு. ஆனால், இன்றைக்கு, தன்னை புகழ்வதைவிட இந்த அரசு என்ன செய்யணும், எதை செய்யணும் என்று உறுப்பினர்கள் பேசக்கூடிய, ஆலோசனை வழங்கக்கூடிய சபையாக சட்டமன்றத்தை முதல்வர் ஸ்டாலின் நடத்திச் செல்வது சமீபகால தமிழக அரசியலுக்குப் புதியது.''
-தொகுப்பு: இரா.இளையசெல்வன்