"துணிவு' படத்தில், வங்கி, பங்குச்சந்தை முதலீட்டில் நடக்கும் பித்தலாட்டங்கள் குறித்த உண்மையை, லைவ்வாக, சம்பந்தப்பட்ட தலைமைப் பொறுப்பாளர்களின் மூல மாகவே பேச வைக்கும்போது, அதிலிருந்து தப்பிப்பதற்காக, அஜீத்தையும் அவரது கூட்டாளிகளையும் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி, தீவிரவாதிகள் வங்கியைக் கைப்பற்றியதாக செய்தியை மடைமாற்றுவார்கள். தற்போது, அதேபோன்று அதானி குழுமத்தின் பங்குச்சந்தை மோசடி, வரி ஏய்ப்பு மோசடிகளை ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளிப்படுத்திய சூழலில், அந்நிறுவனம் நம்பகத்தன்மையற்றது என்று ஹிண்டன்பர்க் நிறுவனத்தைக் குற்றம்சாட்டிய அதானி குழுமம், அதுவும் எடுபடாமல் போகவே, 'ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையில் இடம் பெற்றுள்ள பொய்யான கூற்றுகள் இந்தியா மீதான தாக்குதல்' என்று தேசபக்தி அரசியலை கையிலெடுத்துள்ளது!
"துணிவு' படத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் என்றவர்கள், இங்கே தேசத்தின் மீதான தாக்குதல் என்கிறார்கள்! மோடி எப்படி ஒவ்வொரு தேர்தலின் போதும் இந்திய ராணுவத்தின் பெருமை பேசுவதும், பாகிஸ்தானுக்கு சவால் விடுவதுமாக அரசியல் செய்து ஓட்டுக்களை அறுவடை செய்யத் திட்டமிடுவாரோ, அதேபோல அவரது செல்லப்பிள்ளையான அதானியின் குழுமமும் இவ் விவகாரத்தை திசை திருப்பப் பார்க்கிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டர்பர்க் ஆய்வு நிறுவனம், 2017ஆம் ஆண்டில் நாதன் ஆண்டர்சன் என்பவரால் தொடங்கப்பட்டது. கடந்த ஜனவரி 24-ஆம் தேதி, அதானி குழுமம், பங்குச் சந்தையில் மோசடி செய்து, வரி ஏய்ப்பு, போலியான பங்கு விலையேற்றம் எனப் பல்வேறு குற்றச்செயல் களில் ஈடுபட்டது குறித்து, 106 பக்கங்களில், சுமார் 720க்கும் மேற் பட்ட ஆதாரங் களைக் காட்டி, 'கார்ப்பரேட் வரலாற்றிலேயே நடந்திராத மிகப்பெரிய மோசடியை செய்துள்ளது' என்று ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை வெளி யானது. அதேபோல் அந்த அறிக்கையின் இறுதியில் கேட்கப்பட்டிருந்த 88 கேள்விகளுக்கு பதிலளிக்க இயலாமல் அதானி குழுமம் திகைத்துப்போனது. அந்த அறிக்கையின் உண்மைத்தன்மையை உணர்ந்ததால் பங்குச்சந்தையில் அதானி குழுமத்தின் 7 நிறுவனங்களின் பங்கு விலையில் சரிவு ஏற்பட, நான்கே நாட்களில், அதானி, உலகப் பணக்காரர் களின் வரிசையில் மூன்றாவது இடத்தி லிருந்து பத்தாவது இடத்துக்கும் கீழே தள்ளப்பட்டுள்ளார்.
ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கைக்கு எதிராக வழக்குத் தொடர உத்தேசித் திருப்பதாக அதானி குழுமம் அறிவிக்க, "அதைத்தான் ராசா நாங்களும் எதிர் பார்க்கிறோம்! வழக்கு தொடருங்கள்... நீதிமன்றத்திலேயே விரிவாகப் புட்டுப் புட்டு வைக்கிறோம்!' என்று ஹிண்டர்பர்க் காத்திருக்க, அதானி குழுமமோ, 413 பக்கங்களில் தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துக்கூறி மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையானது, இந்தியாவிலுள்ள நிறுவனங்களின் ஒருமைப்பாட்டுக்கும், சுதந்திரமான செயல்பாட்டுக்கும், தரத்துக்கும், இந்தியாவின் வளர்ச்சிக்கும் எதிராகத் திட்டமிட்டுத் தொடுக்கப்பட்ட தாக்குதல்' என்று விவகாரத்தையே திசைதிருப்பியுள்ளது.
இந்நிலையில், அதானி குழுமத்துக்கு கடுமையான பதிலடியை ஹிண்டன்பர்க் நிறுவனம் கொடுத் துள்ளது. "எங்க ளுடைய அறிக்கையில் நாங்கள் 88 கேள்வி களை முன்வைத் திருந்தோம். ஆனால் இதுவரை அவற்றில் 26 கேள்விகளுக்கு மட்டுமே பதிலளித்த அதானி குழுமம், 62 கேள்விகளுக்கு பதில் தரவேயில்லை. மிகப்பெரிய ஜன நாயக நாடாக, நல்லதொரு எதிர்காலத்தை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கும் இந்தியாவுக்கு, அதானி குழுமத்தின் மோசடியான செயல்பாட்டால் பின்னடைவு ஏற்படுமென்று நாங்கள் நம்புகிறோம். இந்தியாவின் பொருளாதாரத்தைத் திட்டமிட்டுச் சுரண்டுகின்ற இந்நிறுவனம், தங்கள் தவறுகளை மறைக்கத் தன்மீது தேசக்கொடியைப் போர்த்தியுள்ளது' என்று குறிப் பிட்டுள்ளது.
ஹிண்டன்பர்க்- அதானி விவகாரம் குறித்து, பேங்க் ஆப் சார்ஜாவின் தலைமை தகவல் பாதுகாப்பு அலுவலர் விமலாதித்தன் மணியிடம் கேட்டபோது, "ஹிண்டன்பர்க்கின் முக்கிய பணியே, உலகளாவிய பெருநிறுவனங்கள் செய்யும் வணிகத்தில் ஏதேனும் முறைகேடுகள் நடந்துள்ளதா? அவற்றின் வரவு செலவுக் கணக்குகளில் எம்மாதிரியான தில்லுமுல்லுகளைச் செய்கிறார்கள் என்பதை ஆய்வு செய்து கண்டு பிடிப்பதாகும். தில்லுமுல்லுகளைக் கண்டறிவதன்மூலம், குறிப்பிட்ட நிறுவனத்தின் பங்குகளின் உண்மையான மதிப்பீட்டைக் கண்டறிந்து, குறைந்த விலைக்கு அப்பங்குகளை வாங்குவார்கள். இப்படி வாங்குவதற்கு "ஷார்ட் செல்லிங்' என்று பெயர். பங்கு வர்த்தகத்தில் பலரும் இம்முறையைச் செய்துவருகிறார்கள்.
இந்த ஹிண்டன்பர்க் நிறுவனம், இந்தியா மீது தொடுக்கும் தாக்குதல்தான் அதன் அறிக்கை என்று இந்நிறுவனத்தின்மீது குற்றச்சாட்டு வைக்கிறார்கள். ஆனால், ஷார்ட் செல்லிங் என்பது பங்குச்சந்தையில் அனுமதிக்கப்பட்ட ஒன்றுதான். அதேபோல், இவர்கள் இந்தியாவிலுள்ள நிறுவனத்தை மட்டுமே ஆய்வு செய்யவில்லை, ஏற்கெனவே அமெரிக்காவைச் சேர்ந்த நிகோலோ கார்ப்பரேஷன் (Nikola Corporation) என்ற மிகப்பெரிய எலக்ட்ரிக் வாகனத் தயாரிப்பு நிறுவனத்தின் செயல்பாட்டின்மீதும் ஆய்வு நடத்தினார்கள். 34 பில்லியன் டாலர் சந்தை மதிப்புள்ள அந்த நிறுவனத்தை, 1.5 பில்லியன் டாலர் சந்தை மதிப்புக்கு குறையும்படி செய்தார்கள். அந்நிறுவனத்தின்மீது ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு வைத்தபோது, நிகோலோ கார்ப்பரேஷனின் தலைமை நிர்வாகி அதனைக் கடுமையாக மறுத்தார். ஆனால் ஒரே ஆண்டில் அந்நிறுவனத் தின்மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, அத்தலைமை நிர்வாகி சிறைக்குள் அடைக்கப்பட் டார். இதுபோல பல நிறுவனங்களை இவர்கள் ஆய்வு செய்திருக்கிறார்கள். ஹிண்டன்பர்க்கின் கணிப்புகள் பெரும்பாலும் தவறியதில்லை.
2014ஆம் ஆண்டில் உலகப் பணக்காரர்கள் வரிசையில் 609வது இடத்தில் இருந்தவர் தான் இந்த கௌதம் அதானி. அவரது நிறுவனத்தின் சொத்து மதிப்பு 7 பில்லியன் டாலர்களாக இருந்தது. அடுத்த எட்டே ஆண்டுகளில், ஒரு வாரத்துக்கு முன்னர்வரை 119 பில்லியன் சந்தை மதிப்புடன், உலகப் பணக்காரர்களில் மூன்றாவது இடத்துக்கு அசுர வளர்ச்சியுடன் முன்னேறினார். இதனை இயல்பான வளர்ச்சியென்று யாராலும் சொல்ல முடியாது. எனவே இந்நிறுவனத்தைக் குறிவைத்து ஆய்வில் இறங்கி, தனது முடிவுகளை வெளியிட்டுள்ளது. இப்படி வெளியிடப்பட்டதால் நான்கே நாட்களில் 36 பில்லியன் அளவுக்கு அவரது சொத்து மதிப்பில் சரிவு ஏற்பட்டு தற்போது 84.4 பில்லியன் டாலர் அளவுக்கு இறங்கி, உலகப் பணக்காரர்கள் வரிசையில் டாப் 10 இடத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
அதானி குழுமத்தின் 7 நிறுவனங்களின் பங்கு விலையை 819% அளவுக்கு மிகைப்படுத்தி பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுவதை ஹிண்டன்பர்க் கண்டறிந்துள்ளது. செபியின் விதிமுறைப்படி பங்குச்சந்தையில் பப்ளிக் லிமிடெட் நிறுவனமாக பட்டியலிடப்பட்ட நிறுவனத்தில், மொத்த பங்குகளில் 75% மட்டுமே நிறுவன உரிமையாளர் களின் கைகளில் இருக்க வேண்டும். மீதி 25% பொதுமக்களிடம் இருக்க வேண்டும். அதன்படி, 74.97% பங்குகளை அதானி வைத் துள்ளார். அடுத்து 20% பங்குகள் 7 வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் இருப்பதாகக் காட்டப்பட்டுள்ளது. அந்த 7 முதலீட்டாளர்கள் தான் அதானி குழுமத்தின் போலி ஷெல் நிறுவனங்கள். ஆக, மொத்தம் 95% பங்குகள்வரை அதானி குழுமத்தின் வசமே உள்ளது. 5% மட்டுமே பொதுவான முதலீட்டாளர்களின் பங்களிப்பாக உள்ளது. இது செபியின் விதியை மீறிய மோசடியாகும்.
மொரீஷியஸில் 38 ஷெல் கம்பெனிகளைத் தொடங்கி, அதானியின் மூத்த சகோதரர் வினோத் அதானி நடத்திவருவதையும், அதானி குழுமத்தின் நிதி, போலி நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து வெளிநாட்டு முதலீடாகக் காட் டப்பட்டு அதானி குழுமத்திலேயே முதலீடு செய்யப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளது. இதில் எல்லோரா கேப்பிட்டல் 3 பில்லியன் டாலர், மோன்டிரோசா 4.5 பில்லியன் டாலர், மொரீஷியசிலுள்ள இன்னொரு நிறுவனம் 11 பில்லியன் டாலர், ஐக்கிய அமீரகத்திலுள்ள ஒரு நிறுவனம் 1 பில்லியன் டாலர் என 4 போலி நிறுவனங்கள் பெரிய அளவில் அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ளதை ஹிண்டன்பர்க் கண்டுபிடித்துள்ளது. இப்படி 95% அளவுக்கு பங்குகளை அதானி குழுமமே வைத்திருப்பதால் அவர்கள் நினைத்தால் பங்கு விலையை உயர்த்தவும் முடியும், குறைக்கவும் முடியும். இது செபி விதிமுறைப்படி மிகப்பெரிய பங்குச்சந்தை மோசடியாகும். இதை ஏற்கெனவே செபி கண்டறிந்து எச்சரித்ததும் கண்டறியப்பட்டுள் ளது. இதேபோல் பங்குச்சந்தைக்குள் பல்வேறு விதமான மோசடி பங்கு விற்பனையில் இந்நிறுவனம் ஈடுபட்டிருக்கிறது'' என்கிறார். ஆக, தனது மோசடிகளை மறைப்பதற்காக தேசபக்தி அரசியலில் அதானி குழுமம் இறங்கியிருப் பது அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது. மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை யால், கூடா நட்பால் இந்தியா சூறை யாடப்படுவதை தோலுரித்துக்காட்டியுள்ளது. இவ்விவகாரத்தில் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் மவுனம் சாதிப்பதோடு, எதிர்க்கட்சிகளின் கேள்விகளையும் புறக்கணித்து வருகிறார்கள்.
தேசத்தின் மீது அக்கறை கொண்டவர்கள் இனியேனும் விழித்துக்கொள்ள வேண்டும். நமக்குத் தேவை தேச பக்தியே... அதானி பக்தியல்ல!
-தெ.சு.கவுதமன்