ஆட்சி, அதிகாரத்தில் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்காகத்தான் உள்ளாட்சித் தேர்தல் முதல் நாடாளுமன்றத் தேர்தல் வரை இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அப்படியே தேர்தலில் வெற்றிபெற்றாலும் அவர்கள் உண்மையான அதிகாரத்தை அடைய விடாமல் எப்படி தடுக்கப்படுகிறார்கள் என்பதை தெற்குத்திட்டை ஊராட்சி விவகாரம் வெளிப்படுத்தியிருக்கிறது.
கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே தெற்குத்திட்டை ஊராட்சியில் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த 100 குடும்பங்களும். மாற்று சமூகத்தினர் 600-க்கு மேற்பட்டோரும் உள்ளனர். தற்போது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி சரவணகுமார், ஊராட்சிமன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். ஆறு உறுப்பினர்கள் கொண்ட இந்த ஊராட்சியில் 1 உறுப்பினர் ஆதிதிராவிடர் மீதி 5 பேர் மாற்று சமூகத்தினர்.
கடந்த சுதந்திர தினத்தின்போது ஊராட்சி மன்றத் தலைவரை கொடி ஏற்றவிடாமல் ஊராட்சி செயலாளர் சிந்துஜா மற்றும் துணைத் தலைவர் மோகன்ராஜா தடுத்ததுடன் துணைத் தலைவர் தேசியக்கொடியை ஏற்றியுள்ளார்.
இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற ஊராட்சிக் கூட்டத்தில் ஊராட்சித் தலைவர் தரையில் உட்கார்ந்திருக்க, மற்றவர்கள் நாற்காலியில் அமர்ந்த புகைப்படம் வெளியாகியது.
இதுகுறித்து ராஜேஸ்வரியின் கணவரிடம் கேட்டபோது, “உண்மை தான், கீழ்சாதி என்று தரை யில் உட்கார வைக்கிறார் கள். எனது மனைவியை கொடியேற்ற விடவில்லை. மேலும் துணைத் தலைவர் எப்போது சொல் கிறாரோ அப்போது தான் ஊராட்சிக் கூட்டத்தை நடத்த வேண்டுமென மிரட்டுகிறார். இது வெளியே தெரிந்தால் எது வேண்டுமானாலும் நடக்கும் என்கிறார். இதனால் வெளியே சொல்வதற்கு பயமாக இருந்தது. மற்ற ஊராட்சி உறுப்பினர்கள் அவர்கள் சமூகம் என்பதால் அவர்களின் மிரட்டல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஊராட்சியை நடத்த எந்த ஒத்துழைப்பும் கொடுக்க மறுக் கிறார்கள்.’’ என்றார்.
கடந்த ஜூலை மாதம் நடந்த இந்த சம்பவத்தின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. பல தரப்புகளிலிருந்து ஆதரவு கிடைத்த நிலையில் புவனகிரி காவல் நிலையத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரி புகார் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் தற்போது கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சகாமுரி, ஊராட்சி செயலாளர் சிந்துஜாவை இடைநீக்கம் செய்துள்ளார். சிந்துஜாவும், மிரட்டல் விடுத்ததற்காக வார்டு உறுப்பினர் சுகுமாரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். துணைத்தலைவர் மோகன் மீதும் வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது.
துணைத்தலைவர் மோகனோ, “""நாற்காலியில் அமரவிடாமலோ, கொடியேற்றவிடாமலோ நாங்கள் தடுக்கவில்லை. இராஜேஸ்வரியே தாழ்வுமனப்பான்மையால் அப்படி நடந்து கொண்டார்'' என்கிறார்.
99.9 சதவிகித கிருமிகளை அழிக்கும் நாசினிகளாலும் அழிக்கமுடியாதது, இந்த சாதியக் கிருமி.
-காளிதாஸ்