டவுளின் பூமி சாத்தான் கைகளில் சிக்கிய பொம்மையைப் போலாகிவிட்டது. மழையின் கொடூரம் சற்றே தணிந்ததையடுத்து, கேரளாவில் ரெட் அலர்ட் திரும்பப் பெறப்பட்டது. நிவாரண முகாம்களில் எட்டுலட்சம் பேர் தஞ்சமடைந்துள்ளனர். கேரளாவில் மொத்தமுள்ள 80 அணைகளும் அதன் கொள்ளளவை எட்டி திறந்துவிடப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 16,000 கிலோமீட்டருக்கு சாலைகள் சேதமடைந்துள்ளன. 8,000 வீடுகள் முழுமையாகவும் 26,000 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.. மழையால் ஏற்பட்ட அதிகாரப்பூர்வ இறப்பின் எண்ணிக்கை 400-ஐ நெருங்க, நடுங்கிப்போயிருக்கிறார்கள் கேரள மக்கள்.

kerala-floods

கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி மழை தொடங்கியபோது வழக்கமான பருவமழை என்றே அனைவரும் நினைத்தனர். நாட்கள் நகர... நகரத்தான் மழையின் கொடூரம் புலப்பட்டது. அணைகள் ஒவ்வொன்றாய் நிறைந்து திறந்துவிடப்பட்டன. அங்கொன்றுமாய் இங்கொன்றுமாய் மழைப்பலி குறித்த சேதிகள் வரத்தொடங்கின.

Advertisment

இந்த ஆண்டு இதுவரைக்கும் 2091 மி.மீ. மழை பதிவாகியிருக்கிறது. இது கடந்த ஆண்டு பெய்த மழையைவிட 30% அதிகமாகும். இருந்தும் இதனை மத்திய அரசு தேசியப் பேரிடராக அறிவிக்காமலிருப்பதால், அனைத்து தரப்பிலிருந்தும் கண்டனக் குரல்கள் வந்துகொண்டிருக்கின்றன .

. இடுக்கி, கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர், வயநாடு பகுதிகள் முதற்கட்ட மழையின் தாக்குதலில் பலமாகப் பாதிக்கப்பட்டன. இதையடுத்து முப்படைகளும் மீட்புப் பணிகளுக்கு அனுப்பப்பட்டன. மாநில அரசின் காவல்துறை, தீயணைப்புத் துறை, நிர்வாகத் துறைகள் அனைத்தும் பாதிப்பின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தவும் ஆபத்திலிருப்பவர்களை பாதுகாப்பான பகுதிகளுக்குக் கொண்டுசெல்வதிலும் இறங்கின. பினராயி விஜயன் கேட்டுக்கொண்டதற்கிணங்க படிப்படியாக பேரிடர் மீட்புப் படைகளைக் கூடுதலாக அனுப்பி வைத்திருக்கிறது மத்திய அரசு. 67 ஹெலிகாப்டர்கள், 24 சரக்கு விமானங்கள், 548 மோட்டார் படகுகள் மீட்புப் பணியில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

கேரள மீனவர்கள் தங்களின் சொந்தப் படகுகள் மூலம் ஒருலட்சம் பேரை மீட்டிருக்கிறார்கள். ராணுவம் செல்லாத இடங்களுக்கும் தங்கள் படகுகளின் மூலம் சென்று மக்களைக் காப்பாற்றியிருக்கிறார்கள். இதையடுத்து மீனவர்களுக்கு கேரள அரசானது ஒரு நாளைக்கு 3,000 ரூபாய் ஊக்கத்தொகையும் படகுகளுக்கு எரிபொருளும் வழங்குமென்றும் படகுகள் பழுதடைந்தால் அரசு அதைச் சரிசெய்து கொடுக்குமென்றும் முதல்வர் பினராய் விஜயன் அறிவித்திருக்கிறார்.

Advertisment

விடாமல் வாள்சுழற்றிய மழையை, புறமுதுகு காட்டாமல் போராடி எதிர்கொண்டுள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன். பாதிப்புக்குள்ளான பகுதிகளை எதிர்க்கட்சி தலைவரை இணைத்துக்கொண்டும், மத்திய அரசிடம் உதவியைகோரி பெற்றும், பாராட்டும்படியாக நிவாரணப் பணிகளைத் தொடர்ந்துவருகிறார்.

கிட்டத்தட்ட 20,000 கோடிக்கு சேதம் நிகழ்ந்திருப்பதாகவும், நிவாரண நிதிக்கு முதற்கட்டமாக 1200 கோடி நிதி ஒதுக்கும்படியும் மத்திய அரசிடம் கோரிக்கைவைத்தார். முதலில் 100 கோடி ஒதுக்கிய மத்திய அரசு, நிலைமையைக் கவனித்துவிட்டு கூடுதலாக ரூ 500 கோடி ஒதுக்கியுள்ளது. பிடிவாதமாகக் கொட்டிய மழையால், கேரள அரசு, அரசுசார்பில் நடக்கும் ஓணம் திருவிழா நிகழ்ச்சிகளை ரத்துசெய்தது..

பல்வேறு மாவட்டங்களில் பள்ளிக்கு விடுப்பு அறிவிக்கப்பட்டதுடன். பள்ளி, கல்லூரித் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. கொச்சி விமான நிலையத்தின் நுழைவுவாயில் வரை வெள்ளம் பெருகியதால், விமான நிலையம் சில நாட்களுக்கு மூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் சேவையும் கொச்சியில் நிறுத்தப்பட்டிருக்கிறது.

"சாலக்குடியில் ஆற்று வெள்ளத்தில் சிக்கிய யானையை மீட்க, சிறிதுநேரம் அணையின் மதகை மூடியது, ஐ.ஏ.எஸ். அதிகாரிகளே நிவாரண மையங்களுக்கு நிவாரணப் பொருட்களைச் சுமந்தது, 35 அடி நீளத்துக்கு அவசரப் பாலம் அமைத்து மலம்புழா கிராம மக்கள் 100 பேரை ராணுவத்தினர் மீட்டது, மீன் விற்று படிப்புச் செலவுக்கு சம்பாதிப்பதாக சமூக ஊடகங்களில் கேலி செய்யப்பட்ட மாணவி ஹனன் ஹமித், முதல்வருக்கு ரூ.1.5 லட்சம் நிவாரண நிதியளித்தது...' என வெள்ளத்துக்கு நடுவில் உள்ளத்தைத் தொடும் நிகழ்வுகளும் நிறைய நடைபெற்றன.

kerala-floods

வெள்ளம், நிலச்சரிவில் பயணிகள் சிக்கிக்கொள்ளக் கூடாது என்பதற்காக கேரள ஹோட்டல்களில் 80 சதவிகித அறைகளின் முன்பதிவு ரத்துசெய்யப்பட்டுள்ளது. நிலச்சரிவு முன்னெச்சரிக்கை காரணமாக, நெல்லை வழியாக கொல்லம் செல்லும் வாகனங்களை மாவட்ட எல்லையிலே தடுத்து நிறுத்த மாவட்ட ஆட்சியர் ஷில்பா உத்தரவிட்டுள்ளார். கேரள மாநிலத்தின் மழை மற்றும் வெள்ளத் தாக்கத்தின் எதிரொலியாக தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தின் சில பகுதிகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.

இத்தனைக்கும் நடுவில் முகநூலில், மழைவெள்ளத்தில் சிக்கியிருக்கும் கேரள மக்களுக்கு ஆர்.எஸ்.எஸ். உதவி என புகைப்படங்களுடன் கூடிய பதிவுகள் வேகமெடுக்க, அது குஜராத் மழைவெள்ளத்தின்போது அளிக்கப்பட்ட நிவாரண உதவி என சுடச்சுட புலனாய்வு செய்து போட்டோஷாப் வேலையை அம்பலப்படுத்திய நிகழ்வுகளும் நடந்தன.

அதேசமயம் மழைவெள்ளப் பாதிப்புக்குள்ளான மலைப்பகுதிகளில் வாழும் பழங்குடியினருக்கு முறையான நிவாரண உதவிகள் கிடைக்கவில்லையென குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. இடுக்கி, தென்மலை, பத்தனம்திட்டா, நிலம்பூர், மன்னார்காடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பழங்குடியினர் ஆயிரக்கணக்கானோர் தங்களது உடைமைகள் அனைத்தையும் இழந்துள்ளனர். முகாம்களில் இருக்கும் மக்கள் பூர்வகுடிகளின் உடை, தோற்றத்தைக் கண்டு முகாம்களுக்குள் அனுமதி மறுக்க, இவர்களை தனியே முகாம்களில் வைப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளைத் தொடங்கியிருக்கிறது கேரள அரசு.

தென்மலை அரிப்பா பகுதியைச் சேர்ந்த ராஜன்-லீலா பழங்குடி தம்பதி, “""மற்ற சனங்க மாதிரிதானே நாங்களும். இங்கே குடியேறிய நாள்முதல் எங்களுக்கும் அரசுக்கும் ஓயாத போராட்டம். எதிர்க்கட்சியாக இருந்தபோது எங்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த பினராயி விஜயன், ஆளுங்கட்சியானதும் மறந்துவிட்டார். அரசு எங்களையும் கணக்கிலெடுத்துக்கொண்டு நிவாரணம் வழங்கவேண்டும். இல்லையெனில் பசிக்காக அரிசி திருடியதாக குற்றம்சாட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட மதுவின் நிலைதான் எங்களுக்கும் வரும்''’என்கின்றனர்.

கேரளாவே வெள்ளத்தில் மூழ்கியிருக்க, முல்லைபெரியாறு அணையில் நிலவரம் சீரடையும்வரை 139 அடி மட்டுமே நீர் தேக்கவேண்டுமென தமிழக அரசுக்கு கடிதம் எழுதி கோரிக்கை விடுத்தார் பினராயி விஜயன். இதற்கிடையில் பெரியாறு அணை பாதுகாப்புக்கு இருக்கும் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சலீமோ, அணையின் உதவிகோட்டப் பொறியாளர் சாம் இருபினிடம், கேரளாவுக்கு அதிகமாக உபரித் தண்ணீரைத் திறந்துவிடச் சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டது சர்ச்சையாகியிருக்கிறது.

அண்டை மாநிலமான கேரளத்துக்கு ஆதரவைத் தெரிவிக்கும்விதமாக, 5 கோடி ரூபாய் நிவாரணம் அறிவித்த தமிழக முதல்வர் எடப்பாடி, பின்பு நிலைமையைக் கவனித்துவிட்டு கூடுதலாக ஐந்துகோடி ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார். தமிழகத்தில் பல்வேறு அமைப்புகளும் கேரள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிவருகின்றனர்.

இன்னும் சில நாட்களில் மழை படிப்படியாகக் குறையுமென இந்திய வானிலை ஆய்வுமையம் ஆறுதல் தகவலை அளித்திருக்கிறது. விஸ்வரூபமெடுத்து நரவேட்டை ஆடிய வெள்ளத்துக்கு, தங்கள் தன்னம்பிக்கையையும் ஒற்றுமையையும் எந்த வெள்ளமும் அடித்துச்செல்ல முடியாதெனக் காட்டும் வகையில் கேரள மக்கள் போரா, அவர்களுக்குத் தமிழகம் உட்பட பல திசைகளிலிருந்தும் உதவிக்கரங்கள் நீள்கின்றன.

-பரமசிவன், சக்தி, நாகேந்திரன், க.சுப்பிரமணியன், ஜீவாபாரதி

கி.வினாயக்பாபு (இளம் பத்திரிகையாளர்)