இயற்கையிலேயே தென்மாவட்டங்கள் வாங்கி வந்த வரத்தின் பலனே வற்றாத ஜீவநதியான தாமிரபரணி. ஆனால், அரசின் அலட்சியத்தால் இன்று தண்ணீருக்கு அலையும் அவலத்தில் இருக்கிறார்கள் அப்பகுதி மக்கள்.
கடந்த 2018ஆம் ஆண்டில் கோடையிலும் தாமிர பரணி நீர்பிடிப்பு மழையைப் பெற்று வெள்ளமாய் புரண்டது. அனைத்து அணைகளும் நிரம்பியதோடு உப அணைகளான ராமநதி, கடனாநதி அணைகளும் நிரம்பி, உபரி நீர் அனைத்தும் முக்கடலான முக்கூடலில் சங்கமித்து வெள்ளமாய் கரைபுரண்டது. சுமார் 31 டி.எம்.சி. தாமிரபரணி நீர் யாருக்கும் பயன்படாமல் கடலில் வீணாகக் கலந்தது. அது சமயம் பின்விளைவுகளைச் சுட்டிக் காட்டியது நக்கீரன்.
சுட்டிக்காட்டியது போலவே அந்த வருட வடகிழக்குப் பருவ மழை மாயமாகிப் போனது. மழையும் அற்றுப்போக, கோடையில் நிரம்பிய அணைநீர் ஒருவழியாக 2019 பிப்ரவரி வரை மக்களின் பயன்பாட்டிற்காக தாக்குப்பிடித்தது. தொடர்ந்து மார்ச்சில் அணைகள் வறண்டதால், தென்மாவட்டத் தின் நான்கு மாவட்ட மக்களும் ஒரு குடம் குடி தண்ணீருக்காக அல்லாடினர். தாமிரபரணியை ஒட்டிய நாங்குநேரி, ராதாபுரம் தொகுதிகளில் கடுமையான தண்ணீர் பஞ்சம். இடைத்தேர்தல் அறிவிக் கப்பட்ட நாங்குநேரி தொகுதி வறண்டு காய்ந்தது. அடித்தட்டு மக்களால் குடி தண்ணீரை விலை கொடுத்து வாங்க முடியாத நிலை. மக்களின் துயரறிந்த எதிர்க்கட்சிகள் லாரிகளில் தண்ணீரைக் கொண்டு வந்து மக்களிடம் விநியோகித்தன.
இப்படிப்பட்ட நிலையில் தான் வடகிழக்குப் பருவ மழை ஆரம்பித்த அக்டோபரிலிருந்தே வறண்டு கிடந்த மேற்குத் தொடர்ச்சிமலையின் அனைத்து அணைகளும் நிரம்பத் தொடங்கின. கடந்த நவ. 28, 29 இரண்டு நாளில் தென்மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த 19 செ.மீ. மழையால் அனைத்து அணைகளும் கொள்ளளவை எட்டின. குறிப்பாக, நீர்பிடிப்பு மலையில் கொட்டித் தீர்த்த மழைகாரணமாக தாமிரபரணி வெள்ளமாய் கரை புரண்டது. அனைத்து அணைகளிலும் அணைபாதுகாப்பின் பொருட்டு உபரி நீர் அப்படியே திறந்துவிடப்பட்டது. நிமிடத்திற்கு உபரி நீரான 10 ஆயிரத்து 755 கன அடி நீர் அப்படியே இரண்டு நாட்களாக வெள்ளமாகப் பாய்ந்தோடி, ஸ்ரீவை அணைவழியாக புன்னக்காயல் கடலில் சென்று வீணாகக் கலந்தது.
இப்படி யாருக்கும் பயன்படாமலும் மக்களுக்காக தேக்கி வைக்கப்படாமலும் வீணாகக் கடலில் கலப்பதைக் கண்டு, நெல்லை மாவட்டத்தின் வறண்ட கிழக்குப் பகுதியான நாங்குநேரி, ராதாபுரம் தொகுதிவாசிகள் தங்கள் பகுதி மக்களின் பயன்பாட்டிற்காகவாவது திருப்பியிருக்கலாமே என்று ஆதங்கப்படுகின்றனர்.
நாங்குநேரி சமூக ஆர்வலர் வானமாமலை நம்மிடம் இது குறித்து பேசியபோது, ""இடைத்தேர்தல்ல இங்க வந்து பேசுன முதல்வர் கூட, வெள்ள நீர்க்கால்வாய் திட்டத்த நிறைவேத்தி எங்க பகுதிக்குத் தண்ணிய கொண்டு வர்றோம்னு சொன்னதோட சரி. செய்யல. இப்ப பாருங்க கண்முன்ன தாமிரபரணி நீர் வீணாப்போவுது. இந்தப் பகுதி தண்ணியில்லாம தவிக்குது. வயித்தெரிச்சலா இருக்குய்யா''’என்கிறார் வேதனைமண்டிய குரலில். முழு மையாக நிறைவேற்றப்படாத ’வெள்ளநீர் கால்வாய் சாலை’ திட்டத்தின் உள்ளடிகளை நம்மிடையே விவரித்தார் ராதாபுரம் தொகுதியின் எக்ஸ். எம்.எல்.ஏ.வான அப்பாவு.
""சர்வேயின்படி 2006லிருந்து வருடம்தோறும் சராசரியாக 20 டி.எம்.சி. தாமிரபரணி உபரிநீர் வீணாகக் கடலில் கலக்கிறது. அதை வெள்ளங்குழி, மூலக்கரைப்பட்டி காரியாண்டி வழியாக ராதாபுரத்தின் பக்கமிருக்கும் 200 அடி ஆழம் மணல் திட்டுகளைக் கொண்ட சதுப்பு நிலமான எம்.எல்.தேரியில் கொண்டு வந்து சேர்த்தால் நீர்பிடிப்பாகி 50 கி.மீ. சுற்றளவுக்கு நாங்குநேரி, ராதாபுரம், சாத்தான்குளம் உள்ளிட்ட பகுதிகள் நீர் வளம் பெறும். 50 ஆயிரம் ஹெக்டர் நிலங்கள் பாசனம் பெறும். உப்பு தண்ணீர் ஏறிப்போன கடற்கரை கிராமங்களில் நிலத்தடி நீர் சுத்தமாகி குடிப்பதற்கேற்ற தண்ணீராக மாறும். 1000 குளங்கள் நிரம்பும் என கடந்த 2009ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வர் கலைஞரிடம் சொன்னோம். உடனே அதற்கு ’வெள்ளநீர் கால்வாய் சாலை’ என பெயரிட்டு எஸ்டிமேட் தயார் பண்ணச் சொன்னார் முதல்வர். 369 கோடியில் எஸ்டிமேட் ஆகி உடனே வேலையை ஆரம்பிக்கச் சொன்னார். இரண்டு கட்டமாக மொத்தம் 214 கோடி ஒதுக்கியதில் பாதிவேலை முடிந்து விட்டது. அதற்குள் ஆட்சி மாற்றமானது. கலைஞர் திட்டம் என்பதால் கிடப்பில் போட்டுவிட்டார்கள். நாங்கள் 2012-ல் போராட்டம் பண்ணினோம். நீதிமன்றம் சென்றோம். மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்றார்கள். பலமுறை இழுத்தடிப்பு. பட்ஜெட்டில் முறையாக நிதி ஒதுக்குவார்கள். ஆனா அது வேறு வகைக்குப் போய்விடும். நாங்குநேரி இடைத்தேர்தலில் கூட இதை நிறைவேற்றுவோம் என்று தேர்தல் டிராமா போட்டார்கள். தற்போது கிடப்பில் போட்டுவிட்டார்கள். தற்போதைய சூழலில் எஸ்டிமேட்டும் எகிறிவிட்டது. நாங்குநேரியும், ராதாபுரமும் நீரின்றி இப்போதுகூட காய்கிறது. ஆனா அங்கே தண்ணீர் வீணாகப் போவது கொடுமைதான்'' என்றார் வேதனை தெறிக்க.
நெல்லை மாவட்டக் கலெக்டரான ஷில்பாவிடம் கிடப்பில் போடப்பட்டுள்ள இத்திட்டம் குறித்து கேட்ட போது, ""கருமேனியாறு திட்டப்பணிகள் முடிந்தவுடன் வெள்ளநீர் கால்வாய்ச்சாலை பணிகள் நடக்கும்''’ என்கிறார்.
-பரமசிவன்