வடகிழக்கு பருவ மழை தொடங்கி கடந்த ஒருமாதமாக மழை பெய்து வருகிறது. சென்னையின் பல பகுதிகளில் உள்ள குடியிருப்புகளும், டெல்டா மாவட்டங்களில் விளைந்த பயிர்களும், குமரி மாவட்டத்தின் விளைநிலங் கள் -குடியிருப்புகளும் வெள்ளக்காடாக மாற, முதலமைச்சர் தொடங்கி அரசின் அனைத்து தரப்பும் அங்கே நேரடி விசிட் செய்து, பாதிப்புகளை ஆய்வு செய்தனர். தமிழ்நாட்டின் வெள்ள பாதிப்பினை ஆய்வு செய்ய மத்திய அரசின் குழுவும் வருகை தந்தது. பேரணாம் பட்டில் 3 வீடுகள் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்த கொடூரம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. பல இடங்களுக்கும் தேசிய பேரிடர் மீட்பு படை விரைந்து செல்ல வேண்டியிருந்தது.
தொடர்ச்சியான மழை, காற்றழுத்த தாழ்வு மண்டலம் இவற்றால் எந்த நேரத்தில் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்து விடுமோ என்கிற அச்சத்தில், தமிழ்நாட்டின் ஒரு பகுதி மக்கள் வாழ்கிற நிலையில், மழையால் நிரம்பிய நீர் நிலைகளைக் கொண்டாடும் மக்களையும் மற்றொரு புறத்தில் காண முடிகிறது. கடந்த 25 ஆண்டுகளில் 75 சதவீத தமிழக ஏரிகள் நிரம்பியது இந்தாண்டுதான். திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப் பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள ஏரிகள் நிரம்பி கோடி போகின்றன. ஒவ்வொரு கிராம மக்களும் இந்த கோடி போகும் நிகழ்வை, பாரம்பரிய வழக்கப்படி ஏரிக்கு பொங்கல் வைத்து, பூ தூவி, கெடா வெட்டி விருந்துண்டு மகிழ்கின்றனர். ஏரி, கோடி போவதையும், விவசாயிகள் பொங்கல் வைத்து கொண்டாடுவதையும் இன்றைய இளைஞர்கள் வித்தியாசமாக பார்க்கின்றனர்.
ஒவ்வொரு ஊரிலும் மழைநீர் தேக்கி வைக்க அமைக்கப்பட்டது ஏரிகள், குளங்கள் போன்ற நீர்நிலைகள். ஏரித் தண்ணீர் விவசாயத்துக்கும், குளத்துத் தண்ணீரைக் குடிக்கவும் பயன்படுத்தினர். ஏரியின் நடுப்பகுதியில் மதகு வைக்கப்பட்டிருக்கும். ஏரியில் நீர் நிரம்பி கரை உடைப்பு ஏற்படும் என்ற நிலை வந்தாலோ அல்லது கோடைக் காலங்களில் விவசாயம் செய்ய தண்ணீர் தேவைப்பட்டாலோ, ஏரிகளில் இருந்து மதகு வழியாக நீர் வெளியேற்ற திறக்கப்படும். ஏரி கோடி போகுதல் என்பது... "ஏரியின் கரைப்பகுதியின் தொடக்கத்தில் இருக்கும். அதீத மழை பெய்து ஏரி முழு கொள்ளளவை எட்டியதோடு, மதகு திறந்தாலும் தண்ணீர் நிற்காமல் மேடான பகுதி வழியாக தண்ணீர் தானாக வெளியேறுவதே கோடி போதல்' என அழைக்கப்படும்.
ஏரிகள் கோடி போனால் அடுத்த 2 அல்லது 3 வருடங்களுக்கு அந்த ஏரியைச் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள், நூற்றுக்கணக்கான கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து தண்ணீர் தட்டுப்பாடு வராது. அதனால்தான் இந்த கோடி போகும் நிகழ்வை கிராம மக்கள், ஏரியின் கோடி பகுதிக்கு மேளதாளத்துடன் சென்று பூ தூவி, பொங்கல் வைத்து, ஆட்டு கிடாய் வெட்டி கொண்டாடுகின்றனர்.
கடந்த 25 ஆண்டுகளில் மழைக் காலங்களில் பல ஏரிகள் கோடி போனாலும் அது மொத்த ஏரிகளில் 50 சதவீதம்தான். தமிழ்நாட்டில் பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை கட்டுப் பாட்டில் மொத்தம் 14098 ஏரிகள் உள்ளன. 2017-ஆம் ஆண்டு பெய்த மழையின்போது தமிழ் நாட்டில் 1379 ஏரிகள் மட்டுமே நிரம்பி கோடி போயின. கடந் தாண்டு இதே நவம்பர் மாதத்தில் 1700 ஏரிகள் மட்டுமே முழுமை யாக நிரம்பின. இந்தாண்டு தற் போதைய நிலையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டத் தில் மட்டும் 1022 ஏரிகளில் 850 ஏரிகள் முழுவதும் நிரம்பி கோடி போகின்றன. இதேநிலையில்தான் வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கடலூர், கன்னியாகுமரி மாவட் டங்களில் உள்ள 80 சதவீத ஏரிகள் முழுவதும் நிரம்பியுள் ளன. தமிழ்நாடு முழுவதும் அது 70 சதவீதமாகியுள்ளது.
தமிழ்நாட்டில் டெல்டா வுக்கு காவிரி, மதுரை மண்டலத்தில் வைகை, தாமிரபரணி, கொங்கு மண்டலத்தில் மேட்டூர், சிறுவாணி போன்ற ஆறுகள் பாய்கின்றன. இதனால் ஏரிப் பாசனத்தைவிட ஆற்றுப் பாசனத்தைத்தான் அப்பகுதி விவசாயிகள் அதிகம் பயன் படுத்துகின்றனர்.
வடமாவட்டத்தில் பாலாறு, தென்பெண்ணையாறு என இரண்டு ஆறுகள் ஓடி னாலும் அதன் மூலம் விவசாய நிலங்களுக்கு பயன்பாடு மிகவும் குறைவு. சோழர்கள், பல்லவர் கள் ஆட்சிக் காலத்தில் வட தமிழகத்தில் அதிகளவு ஏரியை உருவாக்கினர். போர்ப் படை களுக்காகவும் அந்தக் காலத்தில் பெரிய ஏரிகள் உருவாகின. அப்போது முதல் இப்போதுவரை ஏரி மற்றும் கிணற்று நீர்ப் பாசனத்தை நம்பி விவசாயம் செய்வது வட தமிழக விவ சாயிகள்தான். இதனால் மழை என்றால் மற்ற மாவட்டங்களை விட வட தமிழக மக்கள் பெரும் மகிழ்ச்சிக்கு ஆளாவார்கள். அப்படி மகிழ முடியாத அளவுக்கே கடந்த 25 ஆண்டு களில் மழையிருந்தது. இது குறித்து 80 வயதான கலசப்பாக்கம் முத்துசாமி என்கிற பெரியவர் நம்மிடம், "எனக்கு தெரிஞ்சி கடைசியா 94-ல்தான் அதிக மழை பெய்தது. தொடர்ச்சியாக 10 நாள் பெய்த மழையால் திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் மாவட்டத்தின் சின்ன கிராமங்களில் கூட முட்டிக்கால் அளவுக்கு தண்ணீர் ஓடுச்சி. தண்ணி வடிய மட்டும் ஒரு மாசமாச்சி. இப்போ 2015, 2018 ஆண்டுகளில் சென்னை மூழ்கிடுச்சி. புயல் கடலூர் போன்ற மாவட்டங்களை புரட்டிப் போட்டுச்சின்னு சொன்னாங்க. ஆனா இங்கயெல்லாம் அவ்வளவா மழையில்லை என்பதே எதார்த்தம். இப்போகூட மழை அவ்வளவாயில்லை. அதிகாரிங்க சொல்ற கணக்கெல்லாம் வேற. ஏரியின் பரப்பளவு குறைந்துபோய் சீக்கிரமா தண்ணீர் நிரம்பியிருக்கு'' என்றார்.
தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் போளூர் கே.வி.ராஜ்குமார் நம்மிடம், "வட ஆற்காடு மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரி என்பது தூசி மாமண்டூர் ஏரி. அதற்கடுத்து திருவண்ணாமலை போளூர் பெரிய ஏரி, காஞ்சிபுரத்தில் மாமண்டூர் ஏரி என சில ஏரிகள் உள்ளன. ஏரி நிரம்பினால் அப்போதெல்லாம் பெரிய விழாவே எங்கள் கிராமத்தில் எடுப்போம். இப்போது சில கிராமங்களில் அந்த பாரம்பரியத்தை விடாமல் கோடி போவதை விழாவாக கொண்டாடுகிறார்கள். இப்போது கொண்டாட்டத்தின் அளவு குறைந்துள்ளது.
கோடி போவதை கொண்டாடக் காரணம், வட ஆற்காடு மாவட்டம் முழுவதும் இறவை சாகுபடி, ஏரி பாசனம் மட்டுமே. தஞ்சை, மதுரை, கொங்கு ஜில்லாக்கள் ஆற்று நீர் பாசனம், அணை நீர் பாசனம் வழியாக விவசாயம் செய்யும் பகுதிகள். அதனால்தான் அதிக மழை பெய்தால் கொண்டாடுகிறோம். மற்ற பகுதி நெல் பயிர்களை விட வட ஆற்காடு பகுதி நெல் விவசாயம் முக்கியமானது. காரணம், தஞ்சை பகுதி நெல் மோட்டா நெல் பயிர். இந்த அரிசி பெரியதாக இருக்கும், கேரளா, கர்நாடகாவில்தான் இதனை அதிகம் விரும்பி உண்பார்கள். வடஆற்காடு நெல் விவசாயம் என்பது சன்ன நெல், அதாவது சம்பா, பொன்னி அரிசி நெல் உற்பத்திகளை செய்கிறது. நெற்களஞ்சியம் பகுதி மக்களே இந்த வட ஆற்காடு மாவட்டங்களில் பயிர் செய்யப்படும் நெல் அரிசியைத்தான் பயன்படுத்துகிறார்கள். ஆனால் விவசாயம் என்றால் நம்மைவிட அந்தப்பகுதி விவசாயிகளுக்கே அதிக முக்கியத்துவம் கிடைக்கிறது. நெல் கொள்முதல் பாகுபாடு குறித்து கடந்த வாரம் தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளேன்'' என்றார் விரிவாக.
கோடி போகும் ஏரிகள் போல... விவசாயிகளின் மனதிலும் மகிழ்ச்சி வெள்ளம் பாய்ந்திட வேண்டும்.