கடந்த ஒரு மாதமாக பெய்துவரும் கனமழையால் தமிழகம் தத்தளிக்கிறது. சுமார் 15 வருடங்களுக்கு பிறகு ஏரி, கண்மாய்கள் நிரம்பி சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பாலை வனமாகக் காட்சியளித்த மணல் கொள்ளை நடந்த காட்டாறுகளில் கூட இரு கரைகளையும் தொட்டுக்கொண்டு தண்ணீர் சீறிப் பாய்கிறது.
அதே போலதான் புதுக்கோட்டை நகரம் உள்பட மாவட்டத்தில் பல ஏரி, கண்மாய்கள் நிறைந்து உபரி நீராக திறந்துவிடப்படுகிறது. சாலைகளில் தண்ணீர் ஓட... அதில் மீன் பிடித்து மகிழ்ந் தனர் இளைஞர்கள். இப் படியான புதுக்கோட்டை யில்தான் இப்போதுவரை ஒரு சொட்டு தண்ணீர்கூட இல்லாத பெரிய ஏரிகள், குளங்கள் நிறையவே உள்ளன.
கொத்தமங்கலத்தில் காமராஜரால் கட்டப்பட்ட அணைக்கட்டில் இருந்து அன்னதானக்காவேரி கால்வாய் மூலம் கீரமங்கலம், சேந்தன்குடி, நகரம் கிராமங்களை உள்ளடக்கி அமைந்துள்ள மிகப்பெரிய 450 ஏக்கர் பரப்பளவுள்ள பெரியாத்தாள் ஏரிக்கு தண்ணீர் வரும் கால் வாய் ஆக்கிரமிக்கப்பட்டதால், சுருங்கி தண்ணீர் இல்லாமல் இருந்தது.
அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் 500 அடிக்கு கீழே போனதால், சுமார் 1200 அடி ஆழம் வரை ஆழ்குழாய் கிணறு அமைத்து விவசாயம் செய்கிறார்கள். இளைஞர்களாக ஒன்றிணைந்து பொதுமக்கள், தன்னார்வலர்கள், வெளி நாடுவாழ் இளைஞர்களின் பங்களிப்போடு கால்வாய் சீரமைப்பை தொடங்கினார்கள். கொஞ்சம் பலன் தந்துள்ளது. இந்த ஏரிக்கான அன்னதானக் காவேரி கால்வாயில் 2 கி.மீ தூரத்திற்கு அமைச்சர் மெய்யநாதன் சீரமைத்துக் கொடுத்துள்ளார்.
அரிமளம் நகரின் மையப் பகுதியில் உள்ள சிவன்கோயில் ஊரணி, செட்டி ஊரணி, பெரிய குடிதண்ணீர் குளம் உள்பட பொதுமக்கள் பயன் படுத்தும் 7 ஊரணிகளும், 9 பாசனக் கண்மாய்களும் தற்போது நீர்வரத்து வாரிகளைச் சுற்றியுள்ள தைலமரக் காடுகளில் வனத்துறை அடைத்துக்கொண்டதால், தண்ணீர் இல்லாத வறண்ட குளமாக காணப்படுகிறது.
அம்புலி ஆற்றின் தொடக் கம் மாஞ்சன்விடுதி மாஞ்சாக் கண்மாய். சுமார் 400 ஏக்கர் பரப்பளவுள்ள மாஞ்சாக் கண்மாயில் தன்ணீர் இல்லை.
மாஞ்சன்விடுதி விவசாயி கருப்பையா... "எனக்கு விபரம் தெரிஞ்சி கடைசியா 2006-ல்தான் இந்த மாஞ்சக் கண்மாய் நிரம்பியது. இந்த கண்மாய்க்கு பொற்பனைக்கோட்டை பகுதியிலிருந்து பெய்யும் மழைத் தண்ணீர் வாரியில் வந்து நிறையணும். ஆனால் பல வருடங்களாக வனத்துறை தைல மரங்களை வளர்க்க அவங்க நிலங்களில் பெரிய பெரிய வரப்புகளை கட்டி வைத்து விடுவதால் மழைத் தண்ணீர் அங்கேயே தேங்கிவிடுகிறது. அதனால் வாரியில் தண்ணீர் வருவதில்லை. கண்மாயும் நிறையல. 400 ஏக்கர் கண்மாய் விளையாட்டுத் திடலாகத்தான் இருக்கு'' என்றார்.
அரிமளம் பசுமை மீட்புக்குழு மரம் ராமமூர்த்தி, "தைலமர காடுகளால் சுற்றுச்சூழல் பாதிக் கப்பட்டு, புதுக்கோட்டை வறட்சி மாவட்டமாகவே உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் சார்பில் தனபதி அய்யா நீதிமன்றம்வரை போனார். "இனிமேல் தைல மரங்களை நடமாட்டோம்' என்று சொன்னார்கள். 45 ஆயிரம் ஏக்கர் தைல மரங்கள் புதுக்கோட்டை மாவட்டத் தில்தான் உள்ளது.
இதனால் கண்மாய், ஏரி, குளம், ஊரணிகளும் ஒரு சொட்டு தண்ணீர் இல்லாமல் காய்ந்து கிடக்கிறது. பிரசித்தி பெற்ற அரிமளம் சிவன் கோயில் தெப்பத் திருவிழா நடந்து 12 வருசமாச்சு. மாவட்டத்தின் மிகப்பெரிய கவிநாடு கண்மாயே பல வருடங்களுக்கு பிறகு நிரம்பி தண்ணீர் வெளியேற்றப்பட்டபோது, எங்கள் ஊரணிகள் காய்ந்து கிடப்பது வேதனையளிக்கிறது.
வனத்துறையின் வரப்பு களை உடைத்து வாரிகளின் தண்ணீர் வர வழிசெய்யக் கோரி அரிமளம் பசுமை மீட்புக்குழு, வர்த்தக அமைப்புகள், பொதுமக்கள் இணைந்து கடையடைப்பு, ஆர்ப்பாட்டம் செய்தோம். அப்போதைய மாவட்ட ஆட்சியர் வனத்துறை வரப்பு களை தளர்த்த உத்தரவிட்டார். ஆனால் வனத்துறை அந்த உத்தரவை மதிக்கவில்லை. பதிலாக வருவாய்த்துறை அதிகாரிகளையே எங்கள் நிலத்திற்குள் வரக்கூடாது என்று மிரட்டுகிறார்கள்.
இந்த வருடம் பெய்த கனமழைத் தண்ணீர் வீணாகிப் போறதைப் பார்த்து கண்ணீர் தான் வந்தது. அதனால் இப்படி தேங்கும் தண்ணீரை நீர்நிலைகளுக்கு கொண்டுவரும் முயற்சியாக பழ.முத்துக்குமார் குடும்பத்தினர் அளித்த ஒத்துழைப்பால், அவர்கள் நிலத்தில் ஒரு மீட்டர் ஆழம், அகலத்தில் வாய்க்கால் அமைத்துக் கொள்ள பசுமை மீட்புக்குழுவுக்கு ஒரு ஒப்பந்தப் பத்திரமும் எழுதிக் கொடுத் துட்டாங்க. சுமார் 800 மீட்டர் தூரத்திற்கு வாய்க்கால் அமைத்து தண்ணீர் கொண்டு போகும் முயற்சியில் இருக்கிறோம்'' என்றார்.
தண்ணீரைத் தடுக்கும் வனத்துறை ஆக்கிரமிப்புகளை அகற்றி முழுமையாக ஏரி, குளங்களில் தண்ணீரை நிரப்புவதுதான் அரசு நிர்வாகம் எடுக்க வேண்டிய அவசர நடவடிக்கை.