மோடி அரசின் ரபேல் போர் விமான ஊழல்களை அம்பலப்படுத்திய காங்கிரஸ் கட்சிக்கு செக் வைத்திருக் கிறது சி.பி.ஐ. காங்கிரஸ் ஆட்சியின் ஹெலிகாப்டர் ஊழலில் இடைத் தரகராக செயல்பட்ட சர்வதேச புரோக்கர் கிருஸ்டியன் மைக்கேலை சி.பி.ஐ. கைது செய்திருப்பதன் மூலம் இந்த செக்கை வைத்திருக்கிறார் பிரதமர் மோடி!
மன்மோகன் சிங் தலைமை யிலான முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ஜனாதிபதி, பிரதமர் உள் ளிட்ட முக்கிய தலைவர்கள் பயணிப்பதற்காக இத்தாலியை சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடமிருந்து 3,600 கோடியில் 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை கொள்முதல் செய்வதற்காக ஒப்பந்தம் போடப் பட்டது.
இந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம், 450 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இத்தாலி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதனையடுத்து, இந்தியாவிலும் வழக்கு பதிவு செய்தது சி.பி.ஐ. ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கூட்டணியினருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் எழுப்பிய குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து இந்திய விமானப்படையின் முன்னாள் தலைமைத் தளபதி தியாகி, அவரது உறவினர் சஞ்சீவி உள்ளிட்ட சிலரை கைது செய்ததுடன் 2014 ஜனவரியில் ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தையும் ரத்து செய்தார் அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்.
2014-ல் மோடி ஆட்சி வந்ததும் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தின் இந்திய தலைவர் பீட்டர் ஹூலெட்டுக்கும், இந்திய அரசுக்கும் இடைத்தரகராக செயல்பட்ட முக்கிய சூத்திர தாரியான கிருஸ்டியன் மைக்கேலை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சியை எடுத்தது.
நாடு விட்டு நாடு பறந்து கொண்டிருந்த மைக்கேல், கடந்த வருடம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம், மைக்கேலை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவிட்டது. அதன்படி சி.பி.ஐ. எடுத்த பகீரத முயற்சியில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட மைக்கேலை, 5-ந்தேதி டெல்லியில் கைது செய்தனர் சி.பி.ஐ அதிகாரிகள். மைக்கேலை 5 நாள் கஸ்டடியிலும் எடுத்துள்ளது சி.பி.ஐ.! இந்த விவகாரம் காங்கிரஸ் தலைவர்களுக்கு பதட்டத்தை உருவாக்கி யிருக்கிறது.
இதுகுறித்து சி.பி.ஐ.யோடு நெருக்கமான உளவுத் துறையினரிடம் நாம் விசாரித்தபோது, ‘’ ""பிரான்சிலிருந்து இந்தியா தருவிக்கும் ரபேல் போர் விமானங்கள் பேர ஊழலில் மோடி அரசு காங்கிரஸிடம் வசமாக சிக்கியிருக்கிறது. குறிப்பாக, இந்த ஊழல் தொடர்பான பல ஆதாரங்களை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வைத்திருக் கிறார். மேலும், மோடியின் எதிரிகளான முன்னாள் பா.ஜ.க. தலைவர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண்ஷோரி உள்ளிட்டவர்களும் ரபேல் ஊழல்களுக்கு எதிராக காங்கிரசுடன் கைகோர்த்துள்ளனர். இந்த ஊழல் நிரூபிக்கப் பட்டால் ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி பிரதமர் மோடி வரை சிக்கலை ஏற்படுத்தும்.
இதனை தடுப்பதற்காகத்தான் காங்கிரஸ் அரசின் ஹெலிகாப்டர் ஊழலை கையிலெடுத்தது மோடி அரசு. அதற்கேற்ப, சி.பி.ஐ.யின் சிறப்பு இயக்குநராக இருந்த ராகேஷ் அஸ்தானாவிடம் (மோடி மற்றும் அமித் ஷாவுக்கு நெருக்க மானவர்) இவ்வழக்கை ஒப்படைத்தது. அஸ்தானாவும் வழக்கில் வேகமாகப் பயணித்து 90 சதவீதம் பல ஆதாரங்களை சேகரித்திருந்தார்.
குறிப்பாக, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தின் தாய் நிறுவனமான பின்மெக்கா னிக்காவிடமிருந்து 350 கோடி ரூபாயை மைக்கேல் பெற்றிருந்ததையும், ஹெலிகாப்டர் பேரங் களின் போது 25 முறை இந்தியாவுக்கு வந்து சென்றதையும், டெல்லியில் அசோகா ஹோட்டலில் தங்கி அரசியல் தலைவர்கள் மற்றும் உயரதிகாரிகள் பலரை அவர் சந்தித்ததையும் விரிவாக எஃப்.ஐ.ஆரில் பதிவு செய்திருக்கிறார் அஸ்தானா. மேலும், உயரதிகாரிகள் மூலம் போட்டி நிறுவனங்களின் ஒப்பந்தப்புள்ளிகளை தெரிந்துகொண்டு அதனை தனது நிறுவனத்தின் இந்திய தலைவருக்கு மைக்கேல் அனுப்பி வைத்த விபரங்களையும் அஸ்தானா எடுத்துள்ளார். இதன்மூலம் காங்கிரஸ் தலைவர்களுக்கு நெருக்கடி தரலாம் என பிரதமர் மோடியின் அலுவலக உயரதிகாரிகளிடம் தெரிவித்திருக்கிறார் அஸ்தானா.
இதனையடுத்தே, துபாயிலிருக்கும் "ரா' அமைப்பின் உயரதிகாரிகளை பயன்படுத்தியது டெல்லி. ரகசியமாக நடந்த இதனை மோப்பம் பிடித்தார் சி.பி.ஐ.யின் இயக்குநர் அலோக்வர்மா. சோனியா, ராகுல், மன்மோகன்சிங்கிற்கு வேண்டப்பட்டவரான அலோக்வர்மா, இதனை காங்கிரஸ் தலைமைக்கு லீக் செய்திருக்கிறார். ஹெலிகாப்டர் ஊழலில் சோனியாவையும் ராகுலையும் சிக்க வைக்க முயற்சிக்கும் மோடி அரசுக்கு பிரேக் போட வேண்டுமாயின், பா.ஜ.க. ஆதரவு அஸ்தானாவுக்கு பிரேக் போடத் தீர்மானித்துள்ளது காங்கிரஸ்.
பிரபல ஹவாலா தொழிலதிபரான இறைச்சி வியாபாரி மொய்ன்குரோசி வழக்கில் அஸ்தானாவுக்கு 3 கோடி லஞ்சம் தரப்பட்டது என ஹைதராபாத் புரோக்கர் சதீஷ்சனாபாபுவிடம் வாக்கு மூலம் வாங்கி அதனடிப் படையில் அஸ்தானா, துபாயின் ரா அதிகாரி சமந்த் குமார் கோயல் உள்ளிட்டவர் கள் மீது சி.பி.ஐ.யில் வழக்கு பதிவு செய்ய வைத்துவிட்டார் அலோக் வர்மா. இந்த விவகாரம் சி.பி.ஐ. உயரதிகாரிகள் இருவருக்கு மிடையேயான அதிகார மோதல்களாக வெடிக்க, இந்தியா முழுவதும் சி.பி.ஐ.யின் நம்பகத்தன்மை யை கேள்விக்குறியாக்கியது. ரா அதிகாரி மீதே சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்ததில் ரா அமைப்பின் உயரதிகாரிகள் பலருக்கும் கோபம். சி.பி.ஐ. விவகாரம் உச்சநீதிமன்றம் வரை சென்றது. காங்கிரஸ் நிம்மதி அடைந்தது.
ஆனால், மைக்கேலை 5 நாட்கள் கஸ்டடி எடுத்துள்ள நிலையில், அவர் மனம் திறந்து பேசும் ஒவ்வொரு வார்த்தையும் 450 கோடி ரூபாய் ஊழ லில் சோனியா, ராகுல் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களுக்கு அரசியல் ரீதியான சிக்கலை உருவாக்கும்'' என விரிவாக சுட்டிக்காட்டுகிறார்கள்.
இதனை நிரூபிப்பது போலவே, ராஜஸ்தான் மாநில தேர்தலின் கடைசிக்கட்ட பிரச்சாரத்தில் இருந்த பிரதமர் மோடி, "ஹெலிகாப்டர் ஊழலின் இடைத்தரகரான மைக்கேல் கைதின் மூலம் அவர்களின் (ராகுல்) முகமூடிகள் கிழிக்கப்படும்'’ என ஆவேசப்பட்டிருக்கிறார்.
இதுகுறித்து ராகுலின் நம்பிக்கைக்குரிய அகில இந்திய காங்கிரசின் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் பொதுச்செயலாளர் அறிவழகன், ""அகஸ்டா வெஸ்ட்லேண்ட் விவகாரத்தில் ஊழல்கள் நடக்கவில்லை. ஊழல் நடந்ததாக அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் சி.பி.ஐ.யை வழிநடத்தியது மோடி அரசு. ரபேல் போர் விமான ஊழல்களை மூடி மறைக்கவே ஹெலிகாப்டர் ஊழலை பூதாகரமாக்கு கிறார்கள். இந்த பூச்சாண்டிக் கெல்லாம் காங்கிரஸ் பயப்படப்போவ தில்லை. வழக்கின் போக்குகளை பார்த்துதான் விரிவாக பதிலடி தரமுடியும்'' என்கிறார் அழுத்தமாக.
-இரா.இளையசெல்வன்