தி.மு.க. இளைஞரணி சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் நடத்தப்பட்ட அறிவுத்திருவிழாவில் இரண்டாம் நாள் நிகழ்வில் இரண்டாவது அமர்வு, தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசகர் கோவி.லெனின் தலைமையில், தி.மு.க.வின் இளம்பேச்சாளர்கள் பங்குபெற நடைபெற்றது.
தலைமையுரையாற்றிய கோவி.லெனின் பேசுகையில், ""அண்ணா மறைவுக்குப் பிறகு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தலைமையேற்ற முத்தமிழறிஞர் கலைஞர், முதல் மாநாடான திருச்சி மாநாட்டிலே ஐம்பெரும் முழக்கங்களை நமக்கு கொடுத்தார். அந்த முழக்கங்களில் முதல் முழக்கம்தான் "அண்ணா வழியில் அயராது உழைப்போம்!' என்பது. பிரான்ஸ் தேசத்திலே மன்னர் இறந்துவிட்டால் அப்போது 'ஃண்ய்ஞ் ண்ள் க்ங்ஹக், கர்ய்ஞ் ப்ண்ஸ்ங் ந்ண்ய்ஞ்' என்று அறிவிப்பார்கள். அதாவது, மன்னர் இறந்துவிட்டார், மன்னர் வாழ்க!' என்பது. மன்னர் இறந்து விட்டார், மன்னர் வாழ்க என்றால் என்ன அர்த்தமென்றால், மன்னர் இறந்திருக்கலாம், ஆனால் அவர் உருவாக்கியிருக்கும் அரசாட்சியின் மரபு தொடரும் என்பதாகும். அதுபோல் அண்ணா மறைந்திருக்கலாம், அவர் உருவாக்கிய கொள்கை யும், இயக்கமும் தொடரும் என்பதற்காகத்தான் "அண்ணா வழியில் அயராது உழைப்போம்' என்ற கொள்கையை கலைஞர் முதல் முழக்கமாக வைத்தார்.
அடுத்தது, "ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம்' என்ற முழக்கம். இந்த திராவிட இயக்கமென்பதே... தந்தை பெரியாரின் கொள்கை என்பதே ஆதிக்கத்தை வீழ்த்த வேண்டும், எவர் மீதும் எவரும் ஆதிக்கம் செலுத்தக்கூடாது, அவரவர் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும்' என்பதுதான். அந்த ஆதிக்கம் சாதி ரீதியாக, பாலின ரீதியாக, மொழி ரீதியாக, எந்த வகையான ஆதிக்கத்தையும் வீழ்த்தி ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோமென்ற முழக்கம்.
மூன்றாவது, "இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்!'. ஏனென்றால், இந்தி மொழியும் ஓர் ஆதிக்கம். அந்த இந்தி மொழியின் ஆதிக்கத்தை தகர்த்தெறியவேண்டு மென்பது, அண்ணாவின் கொள்கை.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/06/dmk75a-2025-12-06-02-18-37.jpg)
அடுத்ததாக நான்காவது முழக்கம், "வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்' என்பது. எந்த ஒரு அரசு மக்கள் நலனைக் காக்காமல், தன்னுடைய சுயநலனுக்கு மட்டும் நிலைக்கிறதோ, நீடிக்கிறதோ, அப்போது அங்கே வறுமை நீடிக்கும். "கலைஞர் ஆட்சியில் நிலச் சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டு, லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு, பட்டினிச் சாவு இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றிக்காட்டியிருக்கும் முழக்கம்தான் வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்' என்ற முழக்கம்.
ஐந்தாவது முழக்கமாக, "மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி' என்பதை கொண்டுவந்தார் கலைஞர். "பாரதமாகிய இந்தியா மாநிலங்களின் ஒன்றியம். இது தனி நாடு கிடையாது. ஒற்றை தேசம் கிடையாது. இது பன்முகத்தன்மை கொண்ட துணைக்கண்டம். பல்வேறு மொழிகளை, பல்வேறு பண்பாட்டைக்கொண்ட பல்வேறு மாநில மக்கள் வாழக்கூடிய ஒன்றியம் இது. இதைத்தான் நம்முடைய அரசியல் சட்டம் சொல் கிறது. அந்த அரசியல் சட்டத்தைக் காப்பாற்று வதுதான் இந்த முழக்கம்' என்று குறிப்பிட்டார்.
"அண்ணா வழியில் அயராது உழைப்போம்' என்ற தலைப்பில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சஞ்சய் பேசும்போது, ""பேரறிஞர் அண்ணா யார்? தலைவர் கலைஞர் சொல்வார், "தலைவரென் பார், தத்துவ மேதையென்பார், நடிகரென்பார், நாடக வேந்தரென்பார், சொல்லாற்றல் சுவைமிக்க எழுத்தாற்றல் பெற்றவரென்பார், மனிதரென்பார், மாணிக்கமென்பார், மாநிலத்து அமைச்சரென்பார், இவை அத்தனையும் தனித்தனியே சொல்வதற்கு நேரமற்று நெஞ்சத்து அன்பாலே அண்ணா என்றழைப்பதற்கு இவரன்னை பெயரிட்டார்' என்பார். அண்ணா வழியென்பதென்ன? என்னைப் பொறுத்தமட்டில், தந்தை பெரியாரின் வழிதான் அண்ணாவின் வழி! அண்ணாவின் வழி தான் கலைஞரின் வழி. கலைஞரின் வழிதான் கழகத் தலைவரின் வழி.
ஏன் அண்ணா வழியில் அயராது உழைக்க வேண்டும்?
2026ஆம் ஆண்டுத் தேர்தல் மும்முனைப் போட்டி, நான்குமுனைப் போட்டி என்றெல்லாம் சொல்கிறார்கள். அது இருமுனைப் போட்டிதான், பெரியாரின் கொள்கையை முன்னெடுக்கின்ற திராவிட முன்னேற்றக் கழக அணிக்கும், ஆரியத்துக்கு அடிபணிந்த, மறைமுக உறவு வைத் திருக்கக்கூடிய கட்சிகளுக்கு மான போர். திராவிடம் வெல்ல, ஆரியம் வீழ எங்கள் கரங்களை வலுப் படுத்துங்கள்'' என்றார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/06/dmk75b-2025-12-06-02-18-57.jpg)
அடுத்ததாக, "ஆதிக்க மற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம்' என்ற தலைப்பில், டெக்சின் ரொ மேரியோ பேசியபோது, ""நிகழ்ச்சி அரங்குக்கு வெளியே பெண் காவலர் கள் இருப்பார்கள். போகும் போது அவர்களுக்கு ஒரு சல்யூட் வைத்துவிட்டுப் போங்கள்! ஒரு பெண்ணால் வீட்டை பார்த்துக் கொள்ளவே தகுதியில்லை எனச்சொன்னபோது, நாட்டையே காக்க முடியுமென்று பெண்களுக்கு காக்கி உடையணிவித்து, அவர்களுக்கு அதிகார மளித்து காவலர்களாக்கியவர் நம்முடைய கலைஞர்! இவ்வுலகில் அடிமைப்படுத்தப்படும் நாட்டுக்காக பேசுவான் தி.மு.க.காரன். நாட்டுக்குள் ஒரு மாநிலம் சிறுமைப்படுத்தப்பட்டால் அந்த மாநிலத்துக்காக பேசுவான். ஏதேனுமொரு மாவட்டமோ, நகரமோ ஒடுக்கப்பட்டால் அந்த மாவட்டத்துக்காக பேசுவான். கிராமம் நசுக்கப்பட்டால் கிராமத்துக்காகப் பேசுவான். கிராமத்தில் பட்டியலின சமூகம் நசுக்கப்பட்டால் அந்த சமூகத்துக்காக பேசுவான். அந்த சமூகங்களிலும் பெண்கள் ஒடுக்கப்பட்டால் அவர்களுக்காக பேசுவான்! எப்போதும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நிற்பதே தி.மு.க.! ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம்'' என்றார்.
"இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்' என்ற தலைப்பில் நாகப்பட்டினத்தை சேர்ந்த அகிலா பேசியபோது, ""1937-ல் தொடங்கிய இந்தித்திணிப்பு என்பது 87 ஆண்டுகள் கடந்தும் அதற்கொரு முற்றுப்புள்ளி வைக்கமுடியவில்லை. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் எட்டாவது அட்டவணையில் 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளாக இருக்கின்றன. இவை 90% மக்களால் பேசப்படக்கூடிய மொழிகள். அப்படியிருக்கும் போது இந்தி மொழிக்கு மட்டும் ஏன் முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்? இந்தி மொழிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மற்ற மொழிகளுக் கும் கொடுப்பீர்களா? என்ற கேள்வி எழுகிறது. பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்க்க தேசிய நீரோட்டத் தில் அனைத்து மக்களும் கலந்துகொள்ள இந்தியை கற்றுக்கொள்ளுங்கள் என்று மகாத்மா பிரச்சாரம் செய்தார். பிரச்சாரம் பிரச்சாரமாக இல்லாமல் திணிப்பாக மாறும்போது தான் அதற்கு எதிர்ப்பு எழுகிறது'' என்று இந்தித்திணிப்புக்கு எதிரான போராட்ட வரலாற்றை விவரித்துப் பேசினார்.
அடுத்ததாக, "வன்முறை தவிர்த்து வறுமை யை வெல்வோம்' என்ற தலைப்பில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ரேவதி பேசியபோது, ""ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலா மென்று அண்ணா சொன்னார். ஒரு ஏழை எப்போது சிரிப்பான்? தனக்கு உணவு, உடை, உறைவிடம் ஆகிய அடிப்படைத் தேவைகள் நிறைவேறிய சூழலிலும், தான் வாழக்கூடிய பகுதி வன்முறைகள் ஏதும் இல்லாத சூழல் இருக்கும் போதும் ஏழை சிரிப்பான். இந்த சூழலை தமிழ் நாட்டுக்கு ஏற்படுத்திக்கொடுத்த இயக்கம் இந்த திராவிட இயக்கம் என்பதை மறந்துவிடக்கூடாது. எல்லோருக்குமான வளர்ச்சி என்பதை இந்தியா சிந்திப்பதற்கு முன்பாகவே தமிழ்நாடு சிந்தித்து விட்டது. அதனால் தான் சாதி, மத ரீதியிலான அடக்குமுறைகளை எதிர்த்து, அவர்களுக்கு தேவையான திட்டங்களையும், சட்டங்களையும் இந்த திராவிட மாடல் அரசு நிறைவேற்றி, வறுமை ஒழிப்பில் முதன்மையான மாநிலமாக தமிழ்நாடு இன்றைக்கு விளங்கிக்கொண்டிருக்கிறது! அண்ணா சொன்னார், இந்தியாவின் வரலாறு கங்கைக்கரை யிலிருந்தல்ல, காவிரிக்கரையிலிருந்து எழுதப்பட வேண்டுமென்று. அந்த முழக்கத்தை நம் தமிழ் நாட்டு முதலமைச்சர் நிறைவேற்றிக்காட்டுகிறார். இன்று நம் முதல்வர் அழைத்தால் பஞ்சாப் முதல்வர் வருகிறார்... கர்நாடக துணை முதல்வர் வருகிறார்... கேரள முதல்வர் வருகிறார். இப்படி இந்தியாவையே தமிழ்நாட்டை நோக்கித் திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறார் முதல்வர்'' என்று தமிழ்நாடு அரசின் பல்வேறு சாதனைத் திட்டங்களை விளக்கிப் பேசினார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/06/dmk7c-2025-12-06-02-19-31.jpg)
"மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி' என்ற தலைப்பில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த தாரணி பேசும்போது, ""இந்த முழக்கம், அண்ணா இருந்தபோதும், கலைஞர் இருந்தபோதும், மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்று தான் இருந்தது. ஏனென்றால் அப்போது, மாநிலங்களுக்கான உரிமையென்பது இருந்தது. மாநிலத்துக்கும், மத்திய அரசுக்கும் சின்னச் சின்ன குளறுபடிகள் தான் இருந்தன. ஆனால் தற்போது மாநில சுயாட்சி எப்படியிருக்கிறது? இங்கு கல்வி கிடைக்கக்கூடாது, வேலைவாய்ப்பு கிடைக்கக் கூடாது, அதற்கு எந்த நிதியும் நாங்கள் தரமாட் டோமென்று ஒரு மாநிலத்தை முழுவதுமாக அழிக்கக்கூடிய நிலையில் மத்தியிலுள்ள அரசு இருக்கிறது. அதனால்தான் இந்த ஐந்தாவது முழக்கத்தை "மாநிலத்தில் சுயாட்சி, அதற்கு பிறகு மத்தியில் கூட்டாட்சி' என்று மாற்றியிருக்கிறார்கள். இன்றைக்கு ஆட்சி செய்துகொண்டிருக்கும் பா.ஜ.க.வும் தேர்தல் ஆணையமும், பா.ஜ.க.வும் அமலாக்கத்துறையும்தான் கூட்டணியில் இருக் கிறார்கள். அரசியலமைப்பில் தனித்து இயங்கக் கூடிய அனைத்து அமைப்புகளையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு மாநிலங்களின் உரிமைகளை சுரண்டக்கூடிய அரசாகத்தான் இன்றைய பா.ஜ.க. அரசு இருக்கிறது'' என்று மாநில சுயாட்சிக்கு எதிரான பா.ஜ.க. அரசின் தவறுகள் அனைத்தையும் சுட்டிக்காட்டிப் பேசினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/06/dmk75-2025-12-06-02-18-19.jpg)