"அணையில் மீன் பிடிக்கும் டெண் டர் எடுத்த எங்களை மீன் பிடிக்கவிடாமல் தடுக்கறாங்க. எம்.எல்.ஏ. பெயரைச் சொல்லி 25 லட்ச ரூபாய் கேட்டு மிரட்ட றாங்க'' எனப் புகார் தந்துள்ளார் கள் மகளிர் குழுவினர்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்து ஜவ்வாது மலையின் அடிவாரத்தில் உள்ளது குப்பநத்தம் அணை. இந்த அணையில் மீன் பிடிக்கும் ஒப்பந்தத்தை, மல்லிகாபுரத்தைச் சேர்ந்த சாத்தனூர் அணை மீனவ மகளிர் கூட்டுறவு சங்கத்தினர் பெற்றுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக 70 பேருடன் இயங்கும் இந்த சங் கம், குப்பநத்தம் நீர்த்தேக்க அணையில் 2017 முதல் 2022 வரை மீன் பிடிப்பதற்கான ஒப்பந்தத்தை எடுத்துள்ளது. இந்நிலையில், "எங்களை மீன்பிடிக்க விடாமல் தடுக்கிறார்கள்'' என மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் குழுவின் தலைவர் மனோன்மணி தலைமையில் பெண்கள் சிலர் வந்து புகார் தந்துள்ளார்கள்.
இதுகுறித்து அந்த பெண்களிடம் பேசியபோது, "நாங்கள் மீனவ சமுதாயத்தை சேர்ந்தவர்கள். குப்பநத்தம் அணையில் மீன் பிடிப்பதற்கான டெண்டரில் கலந்துகொண்டு 5 ஆண்டுகள் மீன் பிடிப்பதற்கான ஒப்பந்தத்தைப் பெற்று மீன்களை வளர்த்து, விற்பனை செய்துவந்தோம். கடந்த 2020, 2021ஆம் ஆண்டுகளில், கொரோனாவால் மீன் பிடிக்கக் கூடாது எனத் தடை விதித்ததால் மீன்களைப் பிடிக்கவில்லை, இதனால் எங்களுக்கு பெருத்த நட்டம். மீன்பிடிக்கும் உரிமையை இரண்டு ஆண்டுகள் நீட்டித்து தரவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வேண்டுகோள் வைத்தோம்.
மீன்வளத்துறை, பொதுப்பணித்துறை, நீர்வளத்துறையிடம் கேள்வி எழுப்பிய நீதிமன்றம், எங்களின் கோரிக்கையை பரிசீலனை செய்யவேண்டும் என உத்தரவிட்டது. மீன் வளத்துறை, 2022 முதல் 2024 வரை மீன் பிடிப்பதற்கான உத்தரவை வழங்கியது. இதற் காக 8,60,740 ரூபாய் அரசுக்கு பணம் செலுத்தியிருக்கோம். 10 லட்சம் மீன் குஞ்சுகள் வாங்கி வந்து அணையில் விட்டது, பராமரிப்புச் செலவு என சுமார் 24 லட்ச ரூபாய் செலவு செய்து மீன் வளர்த்தோம். இப்போது மீன் பிடிக்கப்போனால் கல்லாத்தூர் ஊராட்சிமன்றத் தலைவர் சிவானந்தம், மீன் பிடிக்க விடாமல் தடுக்கிறார். செங்கம் எம்.எல்.ஏ. கிரிக்கு 25 லட்ச ரூபாய் பணம் தந்துட்டு மீன் பிடிங்கன்னு சொல்றார். எதுக்குன்னு கேள்வி கேட்டால், சொன்னதை செய்ங்க. அதுவரை மீன் பிடிக்காதிங்க'ன்னு அடியாட்களை வைத்து மிரட்டறார். நாங்க டெண்டர் எடுத்துருக்கோம்னு சொன்னால் அதையெல்லாம் காதுலயே வாங்க மாட்டேங்கிறாங்க.
கடந்த 7ஆம் தேதி கல்லாத்தூரைச் சேர்ந்த சிலரை இரவில் அணையில் இறக்கிவிட்டு திருட்டுத்தனமாக மீன் பிடித்தார்கள். நாங்கள் அவர்களைப் பிடித்துக்கேட்டால், "தலைவர் பிடிக்கச்சொன்னார், புடிக்கறோம். உன்னால முடிஞ்சதை பார்த்துக்க'ன்னு சொல்றாங்க. போலீஸ் 100க்கு கால் செய்தோம். ஸ்பாட்டுக்கு போலீசே வரல. காலையில் 8 மணிக்கு செங்கம் ஸ்டேஷன்லயிருந்து எஸ்.ஐ. பேசினார். நாங்க அணையில் வளர்க்கற மீன்களைப் பிடிக்கறாங்க. போலீஸ் அவுங்க மீது நடவடிக்கை எடுக்காம முறையா அரசுக்கு பணம் கட்டி மீன் வளர்க்கற எங்களை அங்க போகாதீங்கன்னு செங்கம் இன்ஸ்பெக்டர் மிரட்டறார்' என்றார்கள்.
இதுகுறித்து கல்லாத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் சிவானந்தத்திடம் பேசியபோது, "இந்த அணை கட்டுவதற்காக எங்களுடைய ஆயிரக் கணக்கான மக்கள் தங்கள் நிலங்களை இழந்துள்ளார்கள், வீடுகளை இழந்துள்ளார்கள். அதனால் அணையில் மீன் பிடிப்பதற்கான ஒப்பந்தத்தை எங்களுக்கு வழங்கவேண்டும் என அரசிடம் கோரிக்கை விடுத்துவருகிறோம். இந்தாண்டு டெண்டர் நடைபெற்றால் கிராமத்தின் சார்பில் அதில் கலந்து கொண்டு டெண்டரை எடுக்க முடிவு செய் திருந்தோம். ஆனால் வெளியே யாருக்கும் தெரி யாமல் 2 ஆண்டுகள் மீன் பிடிக்கும் உரிமையை இவர் களுக்கே தந்துள்ளார்கள். கொரோனாவால் மீன் பிடிக்கவில்லை எனப் பொய்யான தகவல்களைச் சொல்லி நீதிமன்றம் வழியாக டெண்டரை நீட்டித்துள் ளார்கள். கொரோனாவில் மீன்பிடித்தார்கள், விற்பனை செய்தார்கள். அப்படியிருக்க, பொய்யான தகவல்களைத் தந்து மீன்பிடிக்கும் காலத்தை இரண்டாண்டுக்கு நீட்டித்திருப்பது எப்படி சரியாகும்? அதிகாரிகள் அவர்களுக்கு உடந்தையாக இருக்கிறார்கள், அதனால்தான் தடுக்கிறோம்'' என்றவர், "எம்.எல்.ஏ. பெயரைச் சொல்லி பணம் கேட்டதாகச் சொல்வது சுத்தப்பொய்'' என்றார்.
இது குறித்து செங்கம் எம்.எல்.ஏ. மு.பெ.கிரியிடம் கேட்டபோது, "மீன் பிடிக்க விட மறுக்கிறார்கள் எனச் சொல்லிக்கொண்டு என்னிடம் அவர்கள் சார்பாக ஒருவர் வந்தார். மலைவாழ் மக்களான அந்த மக்கள் அணை கட்டும்போது பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்காக டெண்டர் எடுக்க முடிவு செய்துள்ளார்கள். உங்களால் அது தடுக்கப்பட்டுள்ள கோபத்தில் இருக்கிறார்கள். நீங்கள் அவர்களுடன் பேசி விவகாரத்தைத் தீர்த்துக் கொள்ளுங்கள் எனச்சொல்லி அனுப்பினேன். அவர்கள் எனக்கு பணம் தர முன்வந்தார்கள். நான் பணம் வாங்குவதாக இருந்தால் வாங்கிக் கொண்டு இருந்துவிடப்போகிறேன். நான் பணம் கேட்டதாக வீணாக என்மீது குற்றம்சாட்டு கிறார்கள்'' என்றார்.
"நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம் எங்களுக்கு மீன்பிடிக்கும் உரிமையைத் தாருங்கள்'' என கலெக்டரை சந்தித்து மனு தந்துள்ளார்கள் கல்லாத்தூர் மக்கள். மீன்பிடிக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்யவேண்டுமென நீதிமன்றத்திலும் வழக்கு பதிவு செய்துள்ளார்கள்.