சுருக்குமடி வலைக்கு ஆதரவாக ஒரு பிரிவு மீனவர்களும், அதற்கு எதிராக மற்றொரு பிரிவு மீனவர்களும் போராட்டம், அடிதடி, படகுகளுக்கு தீவைப்பு என இறங்கியதால் கடலோரமே கலவரப்பகுதியாக மாறிக்கொண்டிருக்கிறது.
நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பூம்புகார், திருமுல்லைவாசல், மடவாமேடு உள்ளிட்ட சில கிராம மீனவர்கள், "சுருக்குமடி வலைக்கு அனுமதி வழங்க வேண்டும், இல்லையென்றால் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்" எனத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில், மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டத்தை மீறி கடலில் மீன் பிடிக்கச் செல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்ததோடு, சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தக் கூடாது எனக் கறாராக கூறினர்.
தடைகளை மீறி மீன் பிடித்து வரும் படகுகள் மீது வழக்குப்பதிவு செய்தனர். சுருக்குமடி வலை ஆதரவு மீனவர்களோ, சட்டத்தை மீறி மீன்பிடிப்பவர்கள் மீது மீன்வளத்துறை அதிகாரிகளும் மற்றும் கடலோர அமலாக்க பிரிவு போலீசாரும் நேர்மையாக நடவடிக்கை எடுக்கவில்லை என ஆத்திரமடைந்து பூம்புகார், திருமுல்லைவாசல், மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள், தங்களது விசைப்படகுகளை எடுத்துக்கொண்டு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இதை அறிந்த சுருக்குமடி எதிர்ப்பு மீனவர்களான வானகிரி மீனவர்கள், அவர்களை தடுப்பதற்கு தங்களது பைபர் படகுகளை எடுத்துக்கொண்டு கடலுக்கு சென்றனர். தங்களைத் தடுக்கவருவதைப் பார்த்த திருமுல்லைவாசல் மீனவர்கள், வானகிரி மீனவர்களின் படகில் மோதி விபத்தை ஏற்படுத்தினர். இதில் வானகிரி மீனவ கிராமத்தை சேர்ந்த ராம்குமார், வினோத், சிலம்பரசன் உள்ளிட்ட மீனவர்கள் படுகாயமடைந்ததோடு படகுகளும் முற்றிலுமாக சேதமடைந்தன. இதைக் கேள்விப்பட்ட வானகிரி கிராம மீனவர்கள், தங்களது கிராமத்திற்கு அருகே நிறுத்திவைக்கப்பட்டிருந்த திருமுல்லைவாசல் மீனவர்களுக்குச் சொந்தமான நான்கு பைபர் படகுகளுக்குத் தீ வைத்துவிட்டு தப்பி சென்றனர். இது தொடர்பாக கடலோர காவல் படையினர் வழக்குப்பதிவு செய்து 4 பேரைக் கைது செய்தனர்.
சுருக்குமடி வலைப்பயன்பாடு குறித்து திருமுல்லைவாசல் மீனவர் கிராமத் தலைவர் காளிதாசனிடம் கேட்டோம், "சுருக்குமடி வலை யைப் பயன்படுத்தாதவர்கள் ஆறு பேர் சேர்ந்து ஒரு டன் மத்தி மீன் வகைகளைப் பிடிப்பாங்க, நாங்கள் 60 பேர் சேர்ந்து பெரிய வலையைப் பயன்படுத்தி 6 டன் மட்டுமே பிடிக்கிறோம். சுருக்குமடி வலையால் மீன்வளம் அழிகிறது என்று சொல்வது சுத்தப்பொய், அவர்களின் ஆயிரக்கணக்கான இழுவைப் படகால்தான் கடலுக்கு அடியில் இருக்கும் மீன் குஞ்சு, முட்டை மற்றும் பவளப்பாறைகள் என ஒட்டுமொத்தமும் அழிகிறது'' என்கிறார்.
இதற்கான தீர்வு குறித்து தேசிய மீனவர் சங்க தலைவர்களுள் ஒருவரான நாட்டார் ராஜேந்திரன் கூறுகையில், "மத்திய அரசின் சாகர்மாலாத் திட் டத்தால் மீனவர்களின் ஒற்றுமை சிதைக்கப்பட்டுள் ளது. கடலையே அம்பானி, அதானி குழுமங்களுக் குத் தாரை வார்த்துக் கொடுத்திட நினைக்குறாங்க. அதற்கு மீனவர்கள் ஒற்றுமை தடையாக இருப்பதால் இவர்களுக்கு இடையே பிரச்சனையை ஏற்படுத்திட்டாங்க. சுருக்குமடியைத் தடை செய்தது தவறான வேலை. மீன்பிடித்தொழில் வளர்ச்சிக்காக இதை முதலில் கொண்டுவந்தது நம் அரசாங்கம் தான். குஜராத், கேரளா போன்ற மாநிலங்களில் அந்த வலைகளை பயன்படுத்தினாங்க. கேரளாவில் எதிர்ப்பு வந்ததால் தமிழ்நாட்டில் இதன் பயன்பாடு வந்தது. இந்த பிரச்சனையில் இப்போது மீனவர்கள் இரண்டாகப் பிளவுபட்டுள்ளனர். மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தலையிட்டு மீனவர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்களிடையே ஒற்றுமையை நிலைநாட்டணும்'' என்கிறார்.
மயிலாடுதுறை மாவட்ட மீனவ சமூகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் கூறுகையில், "மீனவர் களுக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சனையைச் சரிசெய்ய வேண்டிய அரசாங்கமும், மீன்வளத் துறையுமே மீனவர்களுக்குள் மோதிக்கொள்ளட்டும்னு வேடிக்கை பார்க்குறாங்க. மீன்பிடிச் சட்டபடி அந்நிய மீன்பிடிக் கப்பல் களை ரத்து செய்யணும்ல. அதுல 1200 குதிரை திறன்கொண்ட இயந்திரம் இருக்கு. அந்த வெளி நாட்டுக்காரங்களுக்கு அனுமதி கொடுத்து, கடலில் உள்ள பெருமணல் வரை சுரண்ட விட்டுட்டு, எங்களுக்கு தடை விதிப்பது சரியா? இவ்வளவு காலமாக அனைத்து வாழ் வியல் பிரச்சினைகளுக்கும் கோர்ட்டுக்குப் போகாமல் பேசித் தீர்த்துக்கொண்ட மீனவர்கள், இப்போ நீ வேற, நான் வேறன்னு ஆகிட்டாங்க. அரசாங்கம் தான் தீர்வுகாண ஒரு வரையறையை உருவாக் கணும். அரசு நேரடியாகத் தலையிட்டு கலைஞர் ஆட்சிக் காலத்தைப்போல ஒரே திறன்கொண்ட இயந்திரங்களை வழங்கணும். மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பே மீனவர்களுக்கு தனி அமைச்சகம் உருவாக்கப்படும்னு சொன்னார்கள். அதைச் செயல்படுத்தி, மீனவர்களின் பிரச்சினை களுக்குத் தீர்வு காணவேண்டும்'' என்கிறார்.