காகிதமில்லா பொது பட்ஜெட் -வேளாண்மைக்குத் தனி பட்ஜெட் என முதல் பட்ஜெட்டில் கவனத்தை ஈர்த்தது மு.க.ஸ்டா-ன் தலைமையிலான தி.மு.க. அரசு. பட்ஜெட் எந்தளவுக்கு மக்களை ஈர்த்துள்ளது?

பொது பட்ஜெட்:

5 லட்சத்து 90 ஆயிரம் கோடி ரூபாய் கடனை முந்தைய அரசு தமிழ்நாட்டின் தலையில் ஏற்றி யிருந்தாலும், 6 மாதத்திற்கான இந்த திருத்த பட்ஜெட்டில் வரிச்சுமை வேண்டாம் என்பது நிதியமைச்சருக்கு, முதல்வர் சொன்ன அறிவுரை. அதனை கருத்திற்கொண்டே பட்ஜெட் தயாரிக்கப் பட்டது.

dmk1stbudget

Advertisment

பள்ளிக்கல்விக்கு 32,599 கோடியும், உயர் கல்விக்கு 5,369 கோடியும் நிதி ஒதுக்கியிருக்கிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். இதனையடுத்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு 18,933 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மக்களைத் தேடி மருத்துவ திட்டத்திற்கு 257 கோடி, சுகாதார சீரமைப்பு திட்டத்துக்கு 116 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மருத்துவ காப்பீட்டுத் திட்டத்திற்காக 1,046 கோடி ஒதுக்கீடு. மருத்துவம்-கல்வி இரண்டும் கொரோனா காலத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட துறைகள். மகளிர் கல்வி முன்னேற்றம், இளைஞர்களின் வேலைவாய்ப்புத் திறன் பயிற்சி, ஆதி திராவிடர் பழங்குடியினர் சிறப்புக் கூறுகள் திட்டம், காவல்துறை கட்டமைப்பு வசதிகள் ஆகியவையும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன. பேருந்துகளில் மகளிர் மற்றும் திருநங்கைகளின் இலவச பயணத் திட்டத்திற்காக 750 கோடி, மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ள நமக்கு நாமே திட்டத்திற்கு 300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளன.

நிதி ஒதுக்கீட்டை கடந்து, ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் வேலை நாட்களை 150 ஆக உயர்த்தியிருப்பது, மகளிர் சுயஉதவிக் குழுக்களின் 2,756 கோடி ரூபாய் கடன்களை தள்ளுபடி செய்திருப்பது, மகளிருக்கான பேறுகால விடுமுறையை 12 மாதங்களாக உயர்த்தியிருப்பது, மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு 20,000 கோடி ரூபாய்க்கான புதிய கடன்களை வழங்க உறுதி செய்வது உள்ளிட்ட பல அம்சங்கள் பாராட்டும்படி இருக்கின்றன என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.

கிராமங்களுக்கான அண்ணா மறுமலர்ச்சி திட்டம், அரசு நிலங்களை முறைப்படுத்த அரசு நில மேலாண்மை அமைத்தல், கால நிலை மாற்றத்தின் தீய விளைவுகளை கட்டுப்படுத்த முதலமைச்சர் தலைமையில் 500 கோடியில் புதிய இயக்கம் உருவாக்குதல், அரசு பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்தல், வெளிச்சந்தையில் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதை தவிர்க்கும் வகையில் 17,909 கோடி ரூபாய்க்கான மின் உற்பத்தி நடவடிக்கை, சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைத்தல், சென்னையில் 165 கோடி மதிப்பீட்டில் புதிய நிதிநுட்ப நகரம் உருவாக்குதல், நெய்வேலியில் தொழில் நுட்ப பயிற்சி நிலையம், காஞ்சிபுரத்தில் மருத்துவ சாதனங்கள் பூங்கா, தூத்துக்குடி -வேலூர் -திருப்பூர் -விழுப்புரம் நகரங்களில் புதிய டைடல் பார்க், கோவையில் 225 கோடி ரூபாய் மதிப்பில் பாதுகாப்பு கருவிகள் உற்பத்தி பூங்கா உருவாக்குதல், நெல்லை -விருதுநகர் -சிவகங்கை -விழுப் புரம் -நாகை மாவட்டங்களில் புதிய தொழிற்பேட்டைகள் ஆகியவை பற்றிய அறிவிப்பு, தொழில் வளர்ச்சிக்கான தொலைநோக்குத் திட்டங்களாகப் பார்க்கப்படுகின்றன.

Advertisment

அ.தி.முக. இதனை ஏமாற்ற பட்ஜெட்டாக விமர்சிக்க... பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், "இந்த நிதிநிலை அறிக்கை இனிப்பு, புளிப்பு, கசப்பு ஆகியவை கலந்த கலவையாக இருக்கிறது''‘என்று தெரிவித்துள்ளார். மக்களின் பார்வை தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை மீதான எதிர்பார்ப்பாக இருந்தது. பெட்ரோல் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு என்பது மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட "மகளிர் உரிமைத்தொகை -நகைக்கடன் தள்ளுபடி ஆகியவை உரிய பயனாளி களின் கணக்கெடுப்புக்குப் பிறகு நடைமுறைப்படுத்தப் படும்' என்ற நிதியமைச்சரின் அறிவிப்பு மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை.

dd

"அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60-ஆகவே தொடரும்' என அறிவித்திருப்பது சர்வீசில் இருக்கும் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியையும், வேலையில்லா பட்டதாரிகளுக்கு அதிருப்தியையும் தந்திருக்கிறது. மாதம் ஒருமுறை மின் ரீடிங் வாக்குறுதியும் நிறைவேறவில்லை.

தி.மு.க. அரசின் முதல் அரையாண்டுக்கான இந்த பட்ஜெட்டில் அரசின் மொத்த வருவாய் செலவினமாக 2,61,188.75 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம் "நடப்பாண்டின் வருவாய் பற்றாக்குறையாக 58,692.50 கோடியாகவும், நிதி பற்றாக்குறை 92,529.43 கோடியாகவும் இருக்கும்' என தெரிவிக்கிறார் நிதியமைச்சர்.

வேளாண் பட்ஜெட்:

துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். தாக்கல் செய்த இந்த பட்ஜெட்டில் வேளாண்மையின் வளர்ச்சிக்காகவும் அதன் சார்பு துறைகளுக்குமாக 34,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப் பட்டிருக்கிறது.

1,245 கோடி ரூபாய் ஒதுக்கீட்டிலான கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் திட்டம் மூலம், 2,500 கிராமங்களில் சாகுபடியின் உற்பத்தி பரப்பை அதிகரிக்கச் செய்து விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த பட்ஜெட்டில் வழிவகை காணப்பட்டுள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேளாண் மண்டல குழுக்கள், இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம், நம்மாழ்வார் -நெல் ஜெயராமன் பெயரில் புதிய அமைப்புகள், முருங்கை ஏற்றுமதிக்காக தனி நிறுவனம், தரிசு நிலங்களை விவசாய நிலமாக்குவது, புரதச்சத்து மிகுந்த தானிய -பயிறு வகைகளை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் நுகர்பொருள் வாணிப கழகங்கள் மூலம் கொள்முதல் செய்து ரேசன் கடைகளிளும் மதிய உணவு திட்டத்திலும் வழங்குதல், திருச்சி -நாகை பகுதியை வேளாண்தொழில் பெருந்தட மாக அறிவித்தல், பனை மரங்களை வெட்ட அரசின் அனுமதி பெறுதல், விவசாயி களின் பிரச்சினைகளைக் களைய தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைப்பது உள்ளிட்டவைகள் வரவேற்பைப் பெற்றுள்ளன.

வேளாண் பட்ஜெட் குறித்து இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் தேசிய தலைவர் விருத்தகிரியிடம் நாம் விவாதித்தபோது, "உணவு தானிய சேமிப்புக்கூடங்களை எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ். திட்டத்தோடு இணைத்திருப்பது பல்வேறு பிரச்சனைகளை களைவதற்கு உதவும். அதேபோல, "15 மாவட்டங்களில் 28 தானிய உலர் களங்கள் அமைத்தல், ஈரோட்டில் 100 ஏக்கரில் மஞ்சள் ஆராய்ச்சி நிலையம் அமைத்தல், சிறுகுறு விவசாயிகளின் கூட்டுப் பண்ணைய திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு' ஆகியவை வரவேற்கப்பட வேண்டியவை. அதேபோல, கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு 2,900 ரூபாயாக உயர்த்தியிருப்பது பரவாயில்லை.

10 மாவட்டங்களில் 10 உழவர் சந்தைகள் அமைப்பது மகிழ்ச்சியைத் தந்தாலும், இதன் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கப்பட வேண்டும். அதேபோல, நீர் வழித்தடங்களை தூர்வார 260 கோடி போதுமானதல்ல. "நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு 2,500 ரூபாயாக உயர்த்துவோம்' என தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டது. அதற்கு மாறாக, 2,060 ரூபாய் என்பது ஏற்கமுடியவில்லை''‘என்கிறார்.

தமிழக பா.ஜ.க.வின் விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜிடம் நாம் பேசியபோது, "வேளாண் நிதிநிலை மத்திய அரசின் திட்டங்களையே பிரதிபலிக்கிறது. எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி, சொட்டுநீர் பாசனம், தரிசு நில மேம்பாடு, தோட்டக்கலை மேம்பாடு ஆகிய திட்டங்கள் மத்திய அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படுபவை. தி.மு.க.வின் தேர்தல் அறிக்கைபடி நெல் -கரும்புக்கான விலையை அறிவிக்காதது ஏமாற்றமே. கரும்பு விவசாயிகளுக்குத் தரவேண்டிய நிலுவைத்தொகை 4,000 கோடியைப் பற்றி எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை. கேரளா அரசு போல "காய்கறிகள், பழங்கள் மற்றும் விவசாயப் பொருட்களுக்கு லாபகரமான விலை அறிவிப்பு செய்யப் படும்' என்ற வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. கோதாவரி -கிருஷ்ணா -காவிரி நதிகளை இணைக் கும் திட்டத்திற்கு மத்திய அரசு 85,000 கோடி ஒதுக்கியுள்ள நிலையில்... மாநில அரசின் பங்களிப்பான 5,000 கோடி குறித்தும் அறிவிப்பு இல்லை. முதன்முறையாக தனி பட்ஜெட் போட்டும் விவசாயிகளை திருப்திப்படுத்தவில்லை வேளாண் பட்ஜெட்''‘என்கிறார்.

டெல்டா விவசாயிகள் உள்ளிட்ட தமிழக விவசாயிகள், வேளாண்மைக்னெ தனி பட்ஜெட்டை வரவேற்பதுடன், அதன் செயல்பாடுகளை எதிர்பார்க்கின்றனர். இதனிடையே, "கடுமையான நிதி நெருக்கடி சூழலில், வரி விகிதத்தை அதிகரிப்பதே முக்கியமான சீர்த்திருத்தம்' என நிதியமைச்சர் சொல்வது, கொரோனா நெருக்கடிகளால் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் மேலும் நெருக்கடியையே உண்டாக்கும்.

"நிதி சீர்த்திருத்தத்தில் முதல்வரும் அமைச்சரும் கூடுதல் கவனம் செலுத்தினாலும், அ.தி.மு.க. அரசைப் போலவே தி.மு.க. அரசும் கடன் வாங்கித்தான் நிதி நிலைமையை சரி செய்ய திட்டமிடுகிறது. அந்த வகையில், அடுத்த அரையாண்டுக்கான வருவாய் பற்றாக்குறையை சமாளிக்க 40,000 கோடி ரூபாய் கடன் வாங்க சம்மதித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்'' என்கிறார்கள்.

நிதியமைச்சர் சொல்வதுபோல அடுத்த இரண்டு ஆண்டுகள் கடுமையாக கடக்க வேண்டிய காலம்தான்.