ஒருபக்கம் பட்டாசு விற்பனையை முழுமையாக அனுமதிப்பதா, மறுப்பதா? என உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருக்க... சங்கரா புரத்தில் நடந்த பட்டாசு விபத்து கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களை அதிர்ந்துபோக வைத்திருக் கிறது.
கள்ளக்குறிச்சியிலிருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் உள்ளது சங்கராபுரம். தாலுகா தலைநகரம் என்பதால் தினமும் பல ஆயிரக்கணக் கான மக்கள் வந்துசெல்வதுண்டு. பஸ் ஸ்டாண்ட் அருகில் மும்முனைச் சந்திப்பு பகுதியில் செல்வ கணபதி, முருகன் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். ஆண்டு முழுவதும் எப்போது வேண்டுமானாலும் இவரது கடையில் வெடிகள் கிடைக்கும். அக்டோபர் 26-ஆம் தேதி மாலை 6:30 மணியளவில் மின்கசிவு காரணமாக இவரது பட்டாசுக் கடையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டு பட்டாசுகள் வெடித்துச் சிதறியதோடு அவரது கடையில் இருந்த சிலிண்டர்களும் அருகிலிருந்த ஐயங்கார் பேக்கரி கடை சிலிண்டர் களும் வெடித்துச் சிதறியதில் சங்கராபுரத்தை சேர்ந்த சையத் காலித், ஷேக் பஷீர், ஓய்வுபெற்ற ஆசிரியர் அய்யாசாமி உட்பட 7 பேர் உயிரிழந் துள்ளனர்.
நூற்றுக்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இதில் பலர் கவலைக்கிடமாக உள்ளனர். செல்வகணபதியின் முருகன் ஸ்டோர் அருகிலிருந்த ஐயங்கார் பேக்கரி, மம்மி டாடி ரெடிமேட்ஸ் கடை உட்பட நான்கு கடைகள் இடிந்து தரைமட்டமாகி உள்ளன. இரவு முழுவதும் சங்கராபுரம் நகரில் அழுகுரல்கள் ஓயவில்லை. சங்கராபுரம், திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை நகரங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட தீயணைப்பு வீரர்கள் இரவு முழுவதும் தீயை அணைத்தனர். காலை முதல் இடிபாடுகளை அப்புறப்படுத்தும் பணி தொடங்கியது.
விபத்தை நேரில் பார்த்த நாம் தமிழர் கட்சி பிரமுகர் மாரியப்பன், "செல்வகணபதி பெயரள விற்கு மளிகைக்கடை நடத்திக்கொண்டு மேல்மாடி யில் பட்டாசுக் குடோன் வைத்துள்ளார். உள்ளாட் சித் தேர்தல் வெற்றி, தீபாவளியை முன்னிட்டு தேவைப்படுமென கடந்த சில மாதங்களுக்கு முன்பே சிவகாசியிலிருந்து இரண்டு டன்களுக்கு மேல் வெடி பார்சல்களை குடோனில் அடுக்கி வைத்திருந்திருக்கிறார். வெடி விபத்தின்போது இடி விழுவதுபோன்று சத்தம் எழுந்தது. விபத்துக்குக் காரணமான செல்வகணபதி, அவரது மாமியார் உட்பட பலர் தப்பி ஓடிவிட்டனர். வேலை செய்த ஊழியர்கள் சிக்கிக்கொண்டனர். பட்டாசு விற்பனைக்கு அனுமதி பெற்றிருந்தாலும்கூட அளவுக்கு அதிகமான பட்டாசுகளை கொண்டு வந்து குவித்து வைத்ததுதான் இவ்வளவு உயிர்ப் பலிக்கு காரணம்''’என்றார்.
செல்வகணபதி கடையில் ஏழுபேர் வேலை செய்துள்ளனர். அதில் அன்னம்மாள், சாந்தினி, சிவகாமி ஆகிய மூன்று பெண்கள் அதிர்ஷ்டவச மாக உயிர் தப்பி வந்துள்ளனர். அவர்கள் நம்மிடம்... "பயங்கரமான சத்தத்துடன் வெடித்துச் சிதறி சுற்றிலும் தீப்பிழம்பாக எழுந்தது. முன்பக்க வாசல் வழியாக வந்தோம். அங்கே பட்டாசுகளும் சிலிண்டர்களும் வெடித்து பெரும் தீப்பிழம்பாக இருந்தது. அதனால் பின்பக்கமாக ஓடினோம். பின்பக்க கதவு பூட்டப்பட்டிருந்தது. மரக்கட்டை யை எடுத்து, பக்கத்திலிருந்த ஜன்னலை உடைத்துக் கொண்டு வெளியே வந்தோம். அப்படியும் உடலில் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன''’என்கிறார்கள்.
இரவு பதினோரு மணியளவில் அமைச்சர் வேலு, மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் கள் வந்து பார்வையிட்டுச் சென்ற சிறிதுநேரத்தில் விபத்துக் கட்டடத்திலிருந்து மேலும் ஒரு சிலிண்டர் வெடித்துச் சிதறியது. தீயணைப்பு வீரர்கள் குப்புறப்படுத்து தங்கள் உயிரைப் பாது காத்தனர். தமிழக முதல்வர் ஸ்டாலின், விபத்தில் இறந்தவர்களுக்கு தலா 5 லட்ச ரூபாயும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ஒரு லட்ச ரூபாயும் இழப்பீடு தருவதாக அறிவித்துள்ளார்.
ஜெராக்ஸ் கடை வைத்து நடத்தும் கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் திருப்பதி, "வெடிச் சத்தம் கேட்டவுடன் அக்கம்பக்கம் கடைகளில் பொருட்கள் வாங்க வந்த மக்கள் பதறி ஓடி விபத்தில் சிக்கிக்கொண்டனர். சிலிண்டர் வெடித்து கட்டடங்கள் சிதறியதில் ஐயங்கார் பேக்கரி கடையில் டீ குடிக்க வந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் அய்யாசாமி பலத்த காயமடைந்து இறந்து போனார். பட்டாசு விபத்தில் உடல் கருகி இறந்த வர்கள் எங்களை நிலைகுலைய வைத்துவிட்டனர்.
இந்த விபத்திற்கு காரணம் அதன் உரிமையாளர் செல்வ கணபதிக்கு உடந்தையாக இருந்த வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை அதிகாரிகள்தான். இவர்களுக்கு செல்வகணபதி அவ்வப்போது மாமூல் கொடுத்து வந்துள்ளார். அதனால் அதிகாரிகள் யாரும் அவரது கடையில் சோதனை செய்வதில்லை. கள்ள மார்க்கெட்டில் சிலிண்டரை வாங்கி அதை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளார் செல்வகணபதி. அதுதான் மிகப்பெரிய விபத்திற்கு காரண மாகியுள்ளது. தற்போது வெடி விபத்து நடந்த கட்டடத்தின் அருகிலேயே பெருமாள் நாயுடு வணிக வளாகம் உள்ளது. அங்கும் குடோன்களில் பட்டாசு பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். அதிகாரிகள் அதை ஆய்வு செய்யவேண்டும்
தமிழகம் முழுவதும் பட்டாசுக் கடைகளை நகரப்பகுதியில் நடத்துவதற்கு அரசு அனுமதிக்கக் கூடாது. ஊருக்கு ஒதுக்குப்புறமான மக்கள் நடமாட்டமில்லாத பகுதிகளில் நடத்துவதற்கு உத்தரவிட வேண்டும்''” என்கிறார்.