புதுக்கோட்டை மாவட்டம் கத்தக்குறிச்சி கிராமம்... ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்றுவந்த சாந்தியின் சொந்த கிராமம். கத்தக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளியான பொன்.சக்திவேல், தனது வீட்டிற்கு இ.எம்.ஐ. மூலம் ஏ.சி வாங்குவதற்காக புதுக்கோட்டை கீழராஜவீதியில் உள்ள வசந்த் அன் கோ நிறுவனத்தில் தொலைபேசி மூலம் விசாரித்துள்ளார்.

finanacialinstitute

பார்வைத்திறன் குறைபாடுடையவர் என்பது தெரியவந்ததும், பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு நிதி நிறுவனங்கள் இ.எம்.ஐ. கொடுப்பதில்லை எனக்கூறி மறுத்ததும் அதிர்ச்சி யாகியிருக்கிறார். அரசுப் பள்ளியில் மாத வருமானம் பெறும்போது பணம் செலுத்துவதற்கு எந்தச் சிக்கலும் இல்லை. அப்படியிருக்கையில் பார்வைக்குறைபாட்டைக் காரணமாக வைத்து இ.எம்.ஐ. மறுக்கப்பட்டதை ஏற்க இயலாமல், தனது முகநூல் பக்கத்தில் இது குறித்து எழுதி, இதற்கொரு தீர்வு வரவேண்டுமென்று குறிப்பிட்டிருந்தார். அந்த செய்தி வைரலாகி நக்கீர னின் கவனத்துக்கு வரவும், களத்தில் இறங்கினோம்.

Advertisment

ஆசிரியர் பொன்.சக்திவேலின் இல்லத்துக்கு சென்று விசாரித்தோம். "நான் பிறவியிலேயே பார்வை இல்லாதவன். என் தம்பிகள் இருவருக்கும் பார்வை இல்லை. நான் பெருங்களூர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் முதுநிலை தமிழாசிரிய ராகப் பணியாற்றுகிறேன். என் மனைவி முதுகலை பட்டதாரி. அவருக்கும் பார்வை இல்லை. பார்வை இல்லை என்பதை குறையாகக் கருதாமல் படித்து, இன்று அரசு வேலைக்கு வந்திருக்கிறேன். 2 கி.மீ. தனியாக நடந்துசென்று, 2 பஸ் ஏறி பள்ளி வேலைக்குச் சென்று வருகிறேன். தன்னம்பிக்கை தான் என்னுடன் துணைக்கு வருவது. நான் மாநில கிரிக்கெட் வீரர், கால் பந்தாட்ட வீரரும் கூட. விரல்மொழியான் என்ற மின்னிதழின் இணை ஆசிரியராகவும் இருக்கிறேன்.

daf

கடுமையான வெயில் தொடங்கி விட்டதால் புது வீட்டிற்கு ஏசி வைக்க லாம் என்று 17ஆம் தேதி புதுக் கோட்டை வசந்த் அன் கோ நிறுவனத்திற்கு போன் செய்தேன். மாதத் தவணையில் கடன் வசதியுடன் ஏ.சி வேண்டும் என்று கேட்டேன். என்னைப் பற்றி கேட்டார்கள். பார்வை மாற்றுத்திறனாளி என்று சொன்னேன். பார்வை மாற்றுத்திறனாளிக்கு கடன் வசதி கொடுப்பதில்லை, அதனால் உங்கள் மனைவி பெயரில் வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்கள். என் மனைவியும் பார்வை மாற்றுத்திறனாளி தான் என்றேன். அப்ப வேறு யார் பெயரிலாவது வாங்கிக் கொள்ளுங்கள் என்றனர். "நான் வருமானம் ஈட்டுபவன். நான் ஏன் வேறு பெயரில் ஏ.சி. வாங்க வேண்டும்?' எனக்கேட்டபோது, "பஜாஜ் நிதி நிறுவனத்தில் பார்வை மாற்றுத் திறனாளிக்கு கடன் கிடையாது என்று சொல்லிவிட்டார்கள்' என்று கூறினார்கள். இதேபோல இதற்கு முன்பு ஒரு பார்வை மாற்றுத்திறனாளிக்கு வாசிங் மெசின் கொடுக்கவில்லை என்றும் கூறினார்கள்.

Advertisment

அதன் பிறகு நடந்தவற்றை முகநூலில் எழுதினேன். பார்வை மாற்றுத்திறனாளிகளின் கைரேகைப் பதிவையே கையெழுத்தாக ஏற்க வேண்டும். பார்வை மாற்றுத்திறனாளிகளையும் சக மனிதர்களாகவே மதிக்க வேண்டும். மாற்றுத்திறனை காரணம் காட்டக்கூடாது என்று ஆர்.பி.ஐ. கூறினா லும், இந்தியா முழுவதும் பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு இ.எம்.ஐ வழங்குவ தில்லை. எனது முகநூல் பதிவைப் பார்த்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, கோட் டாட்சியர் முருகேசன் ஆகியோர் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் விளக்கம் கேட்டிருப்பதாகத் தகவல் சொன்னார்கள்.

ddf

மாவட்ட நிர்வாகத் தின் கேள்விகளையடுத்து வசந்த & கோ நிறுவன ஊழியர்கள் வீட்டிற்கு வந்து வருத்தம் தெரி வித்ததுடன், விரைவில் நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியுள்ளனர். இந்தப் பிரச்சனையை இத்துடன் முடித்துக் கொள்ள எனக்கு தற்காலிகத் தீர்வாக கடன் கொடுத்துவிடுவார்கள். ஆனால் இந்தியா முழுக்க மாற்றுத் திறனாளிகளுக்கான தீர்வை எதிர்பார்க்கிறேன். இதுதொடர்பாக, தமிழ்நாடு முதலமைச்சர், பிரதமர், நிதி அமைச்சகம், ஆர்.பி.ஐ. எனப் பல துறைகளுக்கும் மனுக்கள் அனுப்பத் தயாராகியிருக்கிறேன். பல்வேறு மாற்றுத் திறனாளிகள் சங்கங்களும் சட்டப் போராட் டத்திற்கு துணையாக வருவதாகக் கூறியுள்ளனர்'' என்றார்.

வசந்த் & கோ நிறுவன ஊழியர்கள் கூறும்போது, "நாங்கள் பொருட்களை மட்டும்தான் விற்பனை செய்கிறோம். எங்கள் நிறுவனத்தில் விற்கும் பொருட்களுக்கு, எச்.டி.எஃப்.சி, பஜாஜ், ஐ.டி.பி.ஐ, ஸ்ரீராம் உள்ளிட்ட 7 நிதி நிறுவனங்கள் கடன் உதவி செய்து கொடுக்கிறார்கள். பார்வை மாற்றுத் திறனாளிகளால் படித்துப் பார்த்துக் கையெழுத்து போட முடியாது என்பதால் நிதி நிறுவனங்கள் கடன் கொடுப்பதில்லை'' என்றனர்.

இது தொடர்பாக மதுரை எம்.பி. தோழர் சு.வெங்கடேசனின் கவனத்திற்கும், கத்தக்குறிச்சி கிராமம் சிவகங்கை பாராளுமன்றத் தொகுதிக்குள் வருவதால், தொகுதி எம்.பி. கார்த்தி சிதம்பரம் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளோம். "ஒரு புகார் மனு அனுப்பினால் உடனடியாக அதற்கான தீர்வைப் பெற்றுத்தரத் தயாராக இருக்கிறேன்'' என்று கார்த்தி சிதம்பரம் கூறினார். அதன்படி, பொன்.சக்திவேல் ஆசிரியரை மனு அனுப்ப வைத்துள்ளோம். விரைவில் இப்பிரச்சனைக்கு நிரந்தரத்தீர்வு எட்டப்பட்டு, பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு நியாயம் கிடைக்குமென்று நம்புகிறோம்.