பா.ஜ.க. பிரமுகர் நடத்திய மோசடி நிதி நிறுவனத்திடம் சிக்கியவர்களை, தன் சாகசத்தால் மீண்டும் ஏமாற்றியிருக்கிறார் ஒரு கில்லாடிப் பெண் மணி. அவரது மோசடி டெக்னிக்கைப் பார்த்து, காவல்துறையே திகைத்துப்போய் இருக்கிறது.
சேலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது ’ஜஸ்ட் வின்’ என்ற நிதி நிறு வனம். ’மோடி விகாஷ் மிஷன்’ என்கிற அமைப்பின் மாநிலத் தலைவர் என்று தன்னை பிரபலப்படுத் திக் கொண்ட பா.ஜ.க.வைச் சேர்ந்த பாலசுப்பிர மணி என்பவரும், அவரது மனைவி தனலட்சுமி, மற்றும் மகன் வினோத், மருமகன் கதிர்வேல் ஆகி யோர் இந்த நிதி நிறுவனத்தை நடத்தி வந்தனர்.
சேலம், வேலூர், நாமக்கல், ஈரோடு, தருமபுரி, திருச்சி என பல மாவட்டங்களிலும் இதற்குக் கிளை அலுவலகங்கள் இருந்தன. இவர் களிடம் ஒரு லட்சம் முதலீடு செய்தால் மாதம் 20 ஆயிரம் ரூபாய் வீதம் 12 மாதங்களுக்குத் தருவார்களாம். இப்படிச் சொல்லியே ஏகத்துக்கும் பணம் வசூலித்திருக்கிறார்கள். யாரையாவது இந்த நிதி நிறுவனத்தில் உறுப்பினராக்கி, பணம் கட்ட வைக்கும் ஏஜண்டுகளுக்கும், 5 ஆயிரம் ரூபாயைக் கொடுத்து அசத்தி இருக்கிறார்கள். அவர்கள் கொடுப்பதாக அறிவித்த அதிக வட்டிக்கு ஆசைப் பட்டு, ஆயிரக்கணக்கானவர்கள் இதில் முதலீடு செய்த நிலையில், பணம் கட்டியவர்களுக்கு முதல் 6 மாதங்கள் மட்டும் சரியாக வட்டி தரப் பட்டுள்ளது. அதன்பின் வட்டி வரவில்லை.
இதனால் பயந்துபோன காரைக்குடியைச் சேர்ந்த தலைமை ஏஜெண்ட் கார்த்தி தலைமை யில் பலரும் காவல்துறையிடம் படையெடுக்கத் தொடங்கினர். குறிப்பாக, 10 ஏஜெண்ட்கள் வந்து, தங்கள் தரப்பைச் சேர்ந்த 117 பேரின் 2 கோடி ரூபாய் பணத்தை ஏமாற்றிவிட்டார்கள் என்று புகார் சொல்ல, இதேபோல் புதுக்கோட்டை சங்கரநாராயணன் ரூ.5 லட்சம் ஏமாந்ததாகவும், திருச்சியை சேர்ந்த முன்னாள் ராணுவவீரர் ஜெயராஜ் ரூ.2 லட்சம் ஏமாந்ததாகவும் சேலம் குற்றப்பிரிவில் கலக்கத்தோடு புகார் கொடுத்தனர்.
இதைத் தொடர்ந்து வழக்கைப் பதிவு செய்த போலீஸ் டீம், 11 இடங்களில் சோதனை நடத்தி, பல ஆவணங்களைக் கைப்பற்றியது. அவற்றை ஆய்வு செய்ததில் சுமார் 400 கோடி ரூபாய் அளவுக்கு இந்த பா.ஜ.க. கும்பல் ஏமாற்றியதைக் கண்டறிந்தனர். உடனே, சென்னையில் பதுங்கி இருந்த பா.ஜ.க. பிரமுகரான பாலசுப்பிரமணி, தனலட்சுமி ஆகியோரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பணம் கொடுத்து ஏமாந் தவர்கள் தரப்பில் விசாரித்த போது... "அந்த பாலசுப்ரமணி, மகா மோசடிப் பேர்வழி. என்மேல நீங்க புகார் தராமல் இருந்தால், உங்கள் பணத்தை நான் செட்டில் செய்வேன். இதையும் மீறி நீங்க புகார் கொடுத்தால், உங்கள் பணத்தை நான் தரமாட்டேன்னு சொன் னார். அதனால் பலரும் புகார் தரலை. சிலர், வெளியில் சொல்ல அசிங்கப்பட்டுக்கிட்டு புகார் கொடுக் கலை. கட்சியில் இருக்கும் பெரிய மனுசன் நடத்துற ஃபைனான்ஸ் கம்பெனியாச்சேன்னு நாங்க நம்பியதுக்கு, எங்க நெத்தியில் நல்லா நாமத்தை குழைச்சிப் போட்டுட்டாங்க'' என்றார் கள் கவலையோடு. இந்த நிலையில், பணம்கட்டி ஏமாந்து பரிதவித்து வந்தவர்கள், இன்னொரு மோசடிப் பேர்வழியிடம் சிக்கியிருக்கிறார்கள்.
இது குறித்து நம்மிடம் பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர், "மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றிய திருச்சியைச் சேர்ந்த உமா, ஜஸ்ட் வின் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களில் ஒருவர். பின்னர் நர்ஸ் வேலையை விட்டுவிட்டு அதில் ஏஜெண்டாகி, சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை ஜஸ்ட் வின்னில் சேர்த்து, லட்ச லட்சமாய் கமிஷன் வாங்கியுள்ளார். சேலம் நிறுவனம் வட்டி தருவதை நிறுத்தியபோது, பணம் கட்டி ஏமாந்தவர்கள் கடந்த ஜூலை மாதம் சேலத்துக்கு சென்று, தகராறு செய்துள்ளனர், அப் போது அங்கு திருச்சி உமாவும் வந்துள்ளார். அங்கே பணத்தைப் பறிகொடுத்தவர்கள் மற்றும் ஏஜென்ட்களோடு உமாவுக்கு லிங்க் உருவாகி இருக்கிறது. இந்த நிறுவனத்தில் அதிக நபர்களைச் சேர்த்துவிட்டதே நான்தான். இவுங்க நம்ம பணத்தை எங்கு முதலீடு செய்து, எப்படி லாபம் சம்பாதிக்கிறாங்கன்னு எனக்குத் தெரியும். நான் இப்போ பலரிடம் பணம் வாங்கி அதே வழியில் முதலீடு செய்திருக்கேன். அதிலிருந்து வரும் லாபத் தின் மூலமாக, இந்த நிறுவனத்தில் பணம்போட்டு ஏமாந்தவங்களுக்கு நானே என் பணத்தை செட்டில் செய்துக்கிட்டு இருக்கேன்னு சொன்னதோடு, தன்னிடம் ஒரு லட்சம் முதலீடு செய் தால் 6 மாதத்துக்கு, மாதந் தோறும் 40 ஆயிரம் ரூபாய் தர்றேன்னு அந்த லேடி தன் பங்குக்கு ஆசை காட்டி இருக்கு. இதை நம்பிய சிலர், அந்த லேடி கிட்ட தலா ஒரு லட்சம் கட்டியிருக்காங்க. அதுவும் ஜஸ்ட் வின் பாணியில், ஆரம்பத்தில் வட்டியைக் கொடுத்து விட்டு, அதற்கப்புறம் கல்தா கொடுத்துடுச்சு. மூணே மாசத்தில் திருவண்ணா மலை மாவட்டத்தில் மட்டும் 1 கோடி ரூபாயை ஏமாற்றியிருக்கு. மத்த மாவட்டத்தில் எவ்வளவுன்னு தெரியல. அந்த கில்லாடிப் பெண்மணி, திருச்சி, மதுரை, காரைக்குடின்னு மாறி மாறி விசிட் அடிக்குது. இருந்தும் அந்தப் பெண்மணி மேல் புகார் கொடுக்க பலரும் தயங்கறாங்க. அது அந்த மோசடிக்காரிக்கு சாதகமாக இருக்கு''’என்கிறார் எரிச்சலாக.
ஏற்கனவே மோசடி வலையில் விழுந்தவர் களே, மீண்டும் மீண்டும் அதுபோன்ற வலைகளில் விழுகிறார்கள் என்றால்...? இப்படிப்பட்ட பேராசைக்காரர்களை என்ன செய்வது?
இதுபோல் மோசடி வலை விரிக்கும் சீட்டிங் பேர்வழிகளை, இன்னும் எத்தனை நாளைக்கு, இங்கிருக்கும் காவல்துறை சுதந்திரமாக உலவவிடும்?