சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகாலம் இருந்தாலும், தேர் தலை எதிர்கொள்ளும் வகையில் ஆட்சி ரீதி யாக சில முடிவுகளை எடுத்துள்ளது தி.மு.க. அரசு. குறிப்பாக, மத்திய மோடி அரசுடன் இணக்கமான சூழலை உருவாக்கும் முயற்சி அதில் முக்கியமானது. "இணக்கத்தை உரு வாக்க முதல்வர் ஸ்டாலின் முயற்சித்தாலும், அவர் தோள் மீது கை போட்டுக் கொண்டே திராவிட மாடல் அரசை அழிக்கத் துடிக் கிறது மோடி அரசு' என்கிறார்கள் அதிகாரிகள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய கோட்டை அதிகாரிகள், "முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசின் நிதிச்சுமை, கடன் சுமை மிக மோசமான கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. மகளிருக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமைத் தொகை, பள்ளி -கல்லூரி மாணவிகளுக்கு நிதி உதவி, மகளிருக்கான இலவச பேருந்து பயணக் கட்டணத்தின் இழப்பை சரிக்கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு நிதி உதவிகள், இலவசங்கள் மற்றும் விரயச் செலவுகளால் தி.மு.க. அரசு எதிர்கொள்ளும் நிதி நெருக்கடிகள் அதிகரித்தபடி இருக்கின்றன.
இதனை சமாளிக்க, மறைமுக கட்டண உயர்வுகள், வரி உயர்வுகள் என பலவற்றை உயர்த்திக்கொண்டிருக்கிறார்கள். இதுதவிர, தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், மாநகராட்சிகள், வாரியங்கள், கழகங்கள் உள்ளிட்ட அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் துறைகளிடமிருக்கும் நிதியை, அரசின் கருவூலங்களுக்கு அனுப்பிவைக்க அரசின் நிதித் துறையால் ஏற்கனவே உத்தரவிடப்பட்டது.
அதன்படி தங்களிடமிருந்த நிதியை அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டதில் சம்பந்தப்பட்ட துறைகளும் இப்போது நிதி நெருக்கடியை சந்தித்துக்கொண்டிருக்கின்றன.
இதனையெல்லாம் கருத்தில்கொண்டு, அனைத்துத் துறைகளின் அரசு செயலாளர் களுடன் ஒரு ஆலோசனைக் கூட்டத்தை சமீபத்தில் கூட்டியிருந்தார் தலைமைச் செயலாளர் முருகானந்தம். அந்த கூட்டத் திலும் நிதி நெருக்கடி குறித்த பல்வேறு காரணிகள் விவாதிக்கப்பட்டன. கூட்டத்தில் பேசிய முருகானந்தம், தேசிய கணக்கு கட்டமைப்பில் உள்ள இருப்புகளை ஊரக வளர்ச்சித் திட்டங்களுடன் தனித்தனியாக மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தியிருந்தார். இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன், அனைத்துத்துறை செயலாளர் களும் டெல்லிக்குச் சென்று மத்திய அரசிடம் தமிழகத்திற்கான நிலுவையிலுள்ள நிதித் தொகையை விரைந்து பெறவேண்டும் என்று அழுத்தம் கொடுத்தார். அதேபோல, மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை ஏற்க மறுத்ததால், பள்ளிக்கல்வித் துறைக்கு மத்தியிலிருந்து கொடுக்கப்பட வேண்டிய நிதியை நிறுத்தியது மோடி அரசு. இதனால், பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம்கூட வழங்க முடியாத சூழலும் உருவானது. இப்படி ஒவ்வொரு துறை சார்ந்தும் நிதி தொடர்பான பிரச்சனைகள் கூடு கட்டிக்கொண்டிருக்கின்றன.
இப்படிப்பட்ட நிலையில்தான், மத்திய மோடி அரசுடன் இணக்கமான சூழலை உரு வாக்குவதன் மூலமே தமிழக அரசின் நிதி நெருக்கடிகளைச் சமாளிக்க முடியும் என்கிற கருத்தினை முதல்வர் ஸ்டாலினிடம் உயரதிகாரிகள் வெளிப்படுத்தினர். முதல்வரும் இதனை ஏற்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். அதனைத் தொடந்துதான், பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்து பள்ளிக்கல்வி, மெட்ரோ உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கான நிதியை விரைந்து அளிக்கவேண்டும் என வலியுறுத்தினார் ஸ்டாலின்.
இதன்மூலம் இணக்கமான சூழலை உருவாக்கும் முயற்சியும் எடுக்கப்பட்டது. சில நிபந்தனைகளுடன் இதற்கு ஒப்புத லளித்தாலும் மத்திய மோடி அரசின் நோக்கம் வேறு மாதிரி இருக்கிறது. குறிப்பாக, தி.மு.க. அரசின் தோளில் கை போட்டுக்கொண்டே தமிழக அரசின் திட் டங்களை தங்கள் வசம் எடுக்கத் திட்ட மிட்டுள்ளனர். முதல்கட்டமாக, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை தங்கள் வசமாக்கியிருக்கிறது மோடி அரசு''’என்று விரிவாகச் சுட்டிக்காட்டுகிறார்கள்.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் மூன்று வழித்தடங் கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதற்கான பணிகள் சென்னை முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது. இந்தத் திட்டத்தின் மொத்த மதிப்பு 63,246 கோடி ரூபாய். இதுவரை இந்த திட்டம் தி.மு.க. அரசின் திட்டமாக இருந்துவந்தது. இனி மத்திய அரசு திட்டமாக மாற்றப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவையை கடந்தவாரம் கூட்டிய பிரதமர் மோடி, அதற்கான ஒப்புதலை பெற்றுள்ளார்.
இதுவரை இந்தத் திட்டத்தின் 90 சதவீத செலவினை தமிழக அரசும், 10 சதவீத செலவினை மத்திய அரசும் ஏற்றுக்கொண்டி ருந்தது. தற்போது, இந்தத் திட்டம் மத்திய அரசின் திட்டமாக எடுத்துக்கொள்ளப்பட்டி ருப்பதால், இந்த திட்டத்திற்காக, ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி, புதிய வளர்ச்சி வங்கி உள்ளிட்ட சர்வதேச நிதி அமைப்புகளிட மிருந்து 32,548 கோடி கடன் பெறுவதற்காக தமிழக அரசு ஒப்பந்தம் போட்டிருந்தது. அந்த கடன் தொகையில் இதுவரை 6,100 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டு செலவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் திட்டமாக மாற்றப் பட்டுவிட்டதால், சர்வதேச நிதி அமைப்பு களிடம் தமிழக அரசு ஒப்பந்தம் மூலம் பெறப்பட்ட கடன்கள், இனி மத்திய அரசின் கடன்களாக மாற்றப்படும். இதற்காக தமிழக அரசால் போட்டுக்கொள்ளப்பட்ட ஒப்பந் தங்கள் மத்திய அரசுக்கு மாற்றப்படவிருக் கின்றன. இதற்கான திருத்தப்பணிகளை மேற்கொள்ளுமாறு தனது அமைச்சக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
அதேபோல, சென்னை மெட்ரோ திட்டத்துக்கான நிதி, இனி மத்திய அரசின் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் மூலம் நேரடியாக செலவு செய்யப்படும். இதன் மூலம், தமிழக அரசின் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடமிருந்த அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் திட்டம், தி.மு.க. அரசின் திட்ட மாக இனி சொல்ல முடியாது.
இதற்கிடையே மேலும் சில நெருக்கடிகளை தி.மு.க. அரசு எதிர்கொள்ள வேண்டியதிருக் கிறது என்கிற தகவல்கள் டெல்லி அதிகாரிகள் தரப்பில் பரவி வருகிறது. இதுகுறித்து நாம் விசாரித்தபோது, "இந்திய தொழிலதிபர்களான அதானியும், அம்பானியும் தான் மோடி அரசுக்கு மிக நெருக்கமானவர்கள். இது உலகமறிந்த உண்மை. இந்த தொழிலதிபர்கள், தமிழகத்தில் முதலீடு செய் வதை தி.மு.க. அரசு விரும்பியதில்லை; அக்கறை காட்டியதும் இல்லை. அவர்களுக்கான முதலீடுகளை தமிழகத்தில் செயல்படுத்த தி.மு.க. அரசு விரும்ப வேண்டும் என்கிற ரீதியில் முதல் வருக்கு நெருக்கடி தந்திருக்கிறது டெல்லி. இதனை ஏற்றுக்கொண்டுள்ளார் முதல்வர்.
அதன் அடையாளமாகத்தான், துணை முதல்வராக உதயநிதிக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டதை வாழ்த்தியதுடன், உதயநிதியின் நிர்வாகத்தில் தமிழகம் சிறப்பான வளர்ச்சியைப் பெறும் என்று பாராட்டியும் இருக்கிறார் தொழிலதிபர் கௌதம் அதானியின் மகன் கரண் அதானி.
மேலும், திருவள்ளூர் மாவட்ட எல்லையில் இருக்கும் அதானி காட்டுப் பள்ளி துறைமுகத்தை விரிவாக்கம் செய்தல், காஞ்சிபுரத்தில் உருவாகும் பரந்தூர் விமான நிலைய திட்டம், ஆளில்லாமல் மின் அளவீடுகளை கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டம், வேலூரில் நீரேற்று மின் திட்டம் ஆகியவைகளை அதானி குழுமத்திற்கு ஒதுக்க தி.மு.க. தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடித்திருக்கிறது மத்திய அரசு. இதற்கு தி.மு.க. அரசும் ஒப்புக்கொண்டிருக்கிறது.
அதற்கு அச்சாரமாகத்தான், இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை வந்த கரண் அதானி, உதயநிதியை சந்தித்துவிட்டுச் சென்றுள்ளார். அதே நாளில், மத்திய கப்பற்படையின் உயரதிகாரி ஒருவர், டெல்லியிலிருந்து சென்னைக்கு புறப்பட்டு வந்து, காட்டுப்பள்ளி துறைமுகத்துக்கு விசிட் அடித்து, சில ஆய்வுகளையும் செய்துவிட்டு டெல்லிக்கு திரும்பியுள்ளார். அதேபோல, அம்பானியின் தொழில் முதலீடுகளுக்காகவும் பேச்சுவார்த்தை நடத்த டெல்லி திட்டமிட்டிருக்கிறது. ஆக, தி.மு.க. அரசுக்கு சில நெருக்கடிகளை உருவாக்கி அதன்மூலம், அதானி, அம்பானிகளை தமிழகத்தில் காலூன்ற வைக்கும் முயற்சியில் வெற்றிபெற்று வருகிறது மோடி அரசு''’என்று விவரிக்கின்றனர் டெல்லி அதிகாரிகள்.