Skip to main content

இறுதிச்சுற்று

கால் பயத்தில் ராக்கெட் ராஜா!

rackerajaநெல்லையில் தில்லாக வேலைகளை முடித்துவிட்டு, வழக்கிலிருந்து தப்பிக்க மும்பை, புனே, மேற்குவங்காளம் போன்ற வடமாநிலங்களில் பதுங்கிவிடுவார் ராக்கெட் ராஜா. மார்வாடி ஒருவரின் மகளை காதலித்து திருமணம் செய்து கொண்டதால், ராக்கெட் ராஜாவிற்கு வடமாநிலங்கள் அத்துபடி. 2009-ல் நெல்லை எஸ்.பி.யாக இருந்த அஸ்ராகார்க்கும் டி.ஐ.ஜி.யாக இருந்த கண்ணப்பனும், ராக்கெட் ராஜாவை வளைப்பதில் தீவிரமாகி, ஆனைகுடியிலுள்ள ராஜாவின் வீட்டை சலித்தெடுத்தனர். அப்போது சில துப்பாக்கிகளும் லாஞ்சர்களும் சிக்கின. 2017-ல் அருண் சக்திகுமார் எஸ்.பி.யாக பொறுப்பேற்றதும், களியக்காவிளை செக்போஸ்டில் ராக்கெட் ராஜாவின் கூட்டாளி ஒருவனும் ராஜாவின் வீட்டிலிருந்த நான்கு பேரும் சிக்கினார்கள். சிக்கிய ஐவரையும் செமத்தியாக கவனித்ததில், ஐந்து பேருக்கும் கால் எலும்பு நொறுங்கி, நடக்கவே முடியாத அளவுக்கு ஆனது.

இப்போது கூட சென்னை -தேனாம்பேட்டை ஸ்டார் ஓட்டல் ஒன்றில் ராக்கெட் ராஜா தங்கியிருந்த போது, ""உன்னை விட்டுவைக்க மாட்டார்கள். கண்டிப்பா என்கவுன்ட்டர்தான், உயிர் மேல ஆசை இருந்தா சரண்டாயிரு'' என சென்னை போலீஸ் ஒருவர் எச்சரித்த பிறகே, கைதாகியிருக்கிறார். ஆனாலும் கால் எலும்பை நினைத்து, நெல்லை போலீசிடம் ""என்னை ஒப்படைக்காதீர்கள்'' என கெஞ்சி வருகிறாராம் ராக்கெட் ராஜா.

-பரமசிவன்

உயிர் மீண்ட ம.தி.மு.க. தொண்டர்!

இந்த ஆண்டு நடந்து முடிந்துள்ள "நீட்'க்கு திருத்துறைப்பூண்டி மாணவன் கஸ்தூரி மகாலிங்கத்தின் தந்தை கிருஷ்ணசாமி, சிவகங்கை- சிங்கம்புணரி மாணவி தேவி ஐஸ்வர்யாவின் தந்தை கண்ணன் ஆகியோர் பலியாகியுள்ளனர். இந்த உயிர்ப்பலி செய்தியினை டி.வி.யிலும் பத்திரிகைகளிலும் பார்த்துக் கொண்டிருந்தார் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே இருக்கும் முனியன்வயல் கிராமத்தைச் சேர்ந்த ஜாபர் அலி என்ற ம.தி.மு.க.தொண்டர். ஒவ்வொரு வருஷமும் இன்னும் எத்தனை பேரை பலி கொடுக்கப் போறோமா என வீட்டிலிருந்தவர்களிடமும் நண்பர்களிடமும் புலம்பியபடியே இருந்துள்ளார். கடந்த 07-ஆம் தேதி மதியம் திடீரென வீட்டின் தனி அறைக்குள் சென்று தூக்கு மாட்டி உயிரைவிடத் துணிந்தார். நல்லவேளையாக வீட்டில் உள்ளவர்களால் காப்பாற்றப்பட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டார். தகவல் அறிந்ததும் பதறியடித்து நள்ளிரவில் ஓடிவந்த வைகோ, ஜாபர் அலிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறிவிட்டு, எனது தொண்டன் மட்டுமல்ல, ஒவ்வொரு இளைஞனும் நீட்டுக்கு எதிராக போராட வேண்டுமே தவிர, உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடாது'' என அழுத்தமாகச் சொன்னார்.

-பகத்சிங்
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இவ்விதழின் கட்டுரைகள்