சன்னில் விஷால்!
விஜய்க்கு தூண்டில் போட்டுள்ள சன் டி.வி., "மக்கள் நல இயக்கம்' ஆரம்பித்துள்ள நடிகர் விஷாலுக்கும் வலைவிரித்துள்ளது. "சண்டக்கோழி-2' விஷாலுக்கு 25-ஆவது படம் என்பதால், "விஷால்-25' என்ற நிகழ்ச்சி அக்.02 காந்தி ஜெயந்தி அன்று சன் டி.வி.யில் ஒளிபரப்பானது. அதேபோல் மிக விரைவில் ஞாயிறுதோறும் காலை 11 மணிக்கு சன் டி.வி.யில் ரியாலிட்டி ஷோ ஒன்றைத் தொகுத்து வழங்கப் போகிறார் விஷால்.
மாஜியின் நண்பரை கண்காணிக்கும் உளவுத்துறை!
உயர்கல்வித்துறை அமைச்சராக பழனியப்பன் இருந்தபோது துறையின் முக்கிய காண்ட்ராக்டுகள் அனைத்தும் பழனியப்பனின் நண்பரான நாமக்கல்லைச் சேர்ந்தவருக்கே கொடுக்கப்பட்டது. தற்போது பழனியப்பனும் தினகரன் கட்சியில் இருக்கிறார். அதனால் பழனியப்பனின் காண்ட்ராக்ட் நண்பருக்கு எந்த வேலையும் எடப்பாடி அரசில் கிடைக்கவில்லை. இதனால், கோபமடைந்த அந்த காண்ட்ராக்டர், அரசு ஒப்பந்ததாரர்கள் பற்றியும் உயரதிகாரிகள் பற்றியும்- குறிப்பாக குடிசைமாற்று வாரியத்தைப் பற்றியும் தவறான தகவல்களை அரசுக்கும் பத்திரிகைகளுக்கும் மொட்டைப் பெட்டிசன்களாக அனுப்பிக்கொண்டிருக்கிறார். அவை செய்திகளாவதைக் கண்ட அதிகாரிகளும் ஒப்பந்ததாரர்களும் முதல்வரிடம் முறையிட்டுள்ளனர். இதையடுத்து பழனியப்பனின் நண்பரை கண்காணிக்கத் துவங்கியிருக்கிறது உளவுத்துறை.
-இளையர்.
மீண்டும் வருது ஸ்டிரைக்!
சென்னையில் கடந்த அக். 4-ஆம் தேதி பல்லாயிரக்கணக்கான போக்குவரத்து தொழிலாளர்கள் நிலுவைத் தொகை பாக்கி, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சி செய்து கைதாகினர். ஆனால் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அன்றைய தினம் ஊரிலில்லை. கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாத பட்சத்தில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருக்கிறார்கள். அக்டோபர் 8-ஆம் தேதி வேலைநிறுத்த நோட்டீஸ் கொடுக்கவிருக்கிறார்கள். சென்னையில் போராட்டம் நடைபெறும் என்று முன்னரே அறிவித்திருந்த நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் அரசு ஆசிரியர்கள் சங்கத்தினர் தற்செயல் விடுப்பு எடுத்து மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தினர். 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நவம்பர் 27- ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள்.
-சி.ஜீவாபாரதி