குறி வைக்கப்படும் பெரியார் சிலைகள்!
திருச்சி சோமரசம்பேட்டையில் 3 வீதிகள் சந்திக்கும் இடத்தில் பெரியார் கைத்தடியோடு நிற்பது போன்ற பிரம்மாண்ட சிலை உள்ளது. இந்த சிலையில் உள்ள பலகையில் தினமும் காலையில் பொன்மொழிகள் எழுதுவதற்காக செபாஸ்டின் என்கிற பொறுப்பாளர் வருவது வழக்கம். அதே போன்று திங்கள் காலை 4:00 மணி அளவில் பொன்மொழிகள் எழுதுவதற்காக அங்கு சென்றபோது பெரியாரின் கைத்தடி கீழே விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து கட்சியின் பொறுப்பாளர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன் பிறகு கட்சி பொறுப்பாளர்கள் எல்லோரும் சோமரசம்பேட்டை இன்ஸ். இராமலிங்கத்திடம் பெரியார் கைத்தடியை உடைத்து சேதப்படுத்திய சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி புகார் கொடுக்க வெகு நேரம் நின்றனர். அதேநாளில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே கவரப்பட்டு பெரியார் சிலைக்கு செருப்பு மாலை போடப்பட்டதால் தி.க.வினர் போராட்டத்தில் இறங்கினர். பெரியார் சிலைக்கு எதிராக ஹெச்.ராஜா ட்விட்டர் பதிவு செய்தபிறகு திட்டமிட்டு இதுபோன்ற விபரீதங்கள் நடக்கின்றன.
-ஜெ.டி.ஆர்.
காப்பாற்றப்படும் ஊழல் அதிகாரி!
""தமிழக பால்வளத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆவின் நிர்வாகத்தில் இணை பொது மேலாளராக இருப்பவர் தமிழ்ச்செல்வன். சுமார் 25 ஆண்டுகாலம் சர்வீஸில் இருக்கும் தமிழ்ச்செல்வன் இம்மாதம் ஓய்வு பெறவிருக்கிறார். ஆவின் தயாரிப்புகளை வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதில் சுமார் 2 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக தமிழ்ச்செல்வன் மீது 2013-ல் விஜிலென்சுக்கு புகார் வந்தது. அதில் உண்மை இருப்பது தெரிந்து, விசாரிக்குமாறு ஆவின்
தலைமைக்கு விஜிலென்ஸ் இயக்குநர் டோங்ரா கடிதம் எழுதியும் எந்த நடவடிக்கையும் இல்லை. பால்பவுடர் விற்பனையில் 60 கோடி அளவுக்கு ஊழல், டீலர்களுக்கு தரப்பட்டுள்ள 74 லட்சம் கடன், விற்பனை வரியில் 40 லட்சம் மோசடி எனப் பல குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள தமிழ்ச் செல்வனுக்கு கோட்டையிலுள்ள உச்சபட்ச உயரதிகாரிகளின் நட்பு இருப்பதால் அவர் மீதான ஊழல்கள் மூடி மறைக்கப்பட்டு அவரது ரிட்டயர்மெண்ட்டில் எவ்வித பாதிப்பும் வராமல் காப்பாற்றுகின்றனர்'' என்கிறார்கள் லஞ்ச ஒழிப்புத் துறையினரும் பால்வளத்துறை அதிகாரிகளும்.
இதுகுறித்து ஆவின் நிர்வாக இயக்குநர் காமராஜ் ஐ.ஏ.எஸ்.சிடம் கேட்டபோது, ""தமிழ்ச்செல்வன் மீதான புகார்கள் குறித்து ஆராயப்படும். ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பவர்களை ஆவின் பாதுகாக்காது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்கிறார் அழுத்தமாக.
-இளையர்
எம்.ஜி.ஆர். விழாவில் அம்மன் சென்ட்டிமெண்ட்!
மூன்று முறை தேதி குறிக்கப்பட்டு, தள்ளி வைக்கப்பட்டு, நான்காவது முறையாக கடந்த 22-ஆம் தேதி நாகர்கோவிலில் நடந்து முடிந்துள்ளது எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா. ஜெயலலிதாவுக்கு இருந்தது
போல் எடப்பாடிக்கும் பாதுகாப்பு பந்தாக்கள் இருக்க வேண்டும் என தலைமையிலிருந்து வந்த உத்தரவுப்படி பல மாவட்டங்களில் இருந்தும் வரவழைக்கப்பட்டிருந்த 3,500 போலீசார், 21-ஆம் தேதி மதியமே நாகர்கோவிலை முற்றுகையிடத் தொடங்கினர். கட்சிக்காரர்களும் நாகர்கோவில் நகர் முழுக்க, இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., பேனர்களை வைத்து திக்குமுக்காட வைத்தனர். எடப்பாடியும் பன்னீரும் தங்குவதற்காக கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையும் இரண்டு ஸ்டார் ஓட்டல்களும் தயாராக வைக்கப்பட்டிருந்தன. 21-ஆம் தேதி மாலை தூத்துக்குடியில் இருந்து கார் மூலம் புறப்பட்ட எடப்பாடி, "தோவாளை வந்ததும் கன்னியாகுமரி வேண்டாம், நாகர்கோவில் கெஸ்ட் ஹவுஸிலேயே தங்கலாம் எனச் சொல்லியதால் அதிகாரிகள் திணறிப் போனார்கள்.
அதே போல் ஓ.பி.எஸ்.சும் கன்னியாகுமரியில் தங்குவதைப் புறக்கணித்தார். இது குறித்து கன்னியாகுமரி ர.ர. ஒருவர் நம்மிடம் பேசிய போது, ""கன்னியாகுமரி வந்தா பகவதி அம்மன் கோவிலுக்குப் போகணும். விழா நடைபெறும் சனிக்கிழமை பகவதி அம்மனை தரிசித்தால் இருவருக்கும் ஆகாதாம். அதனால்தான் நாகர்கோவிலில் ஹால்ட் அடித்தனர்'' என்கிறார். நலத்திட்ட உதவிகள் கிடைக்கும் எனச் சொன்னதால், விழா நடைபெற்ற ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி மைதானம் நிரம்பியிருந்தது. "நாம் இருவரும் சேர்ந்து இருப்பதால் மக்களுக்கு நன்மை கிடைக்கிறது' என்றார் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். நிறைவுரையாற்றிய எடப்பாடியோ, பி.ஜே.பி. உறவு குறித்து எதுவுமே பேசவில்லை.
-மணிகண்டன்