யார் ராஜதந்திரி? -கர்நாடக நிலவரம்!

finalround

கர்நாடக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு 12-ந் தேதி முடிந்த நிலையில், 15-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. பல ஊடகங்கள் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் 90 முதல் 107 வரையிலும், பா.ஜ.க. 70 முதல் 83 இடங்கள், தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் 24 முதல் 35 இடங்கள், சுயேச்சைகள் 4 முதல் 8 வரை என சர்வே முடிவுகள் வெளியிட்டுள்ளது. வாக்கு பதிவுக்கு பிந்தைய எக்சிட்போல் கணிப்பும் காங்கிரசுக்கு சாதகமாகவே பெரும்பாலும் அமைந்துள்ளன. தேர்தல் களத்தில் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் "டிமான்ட்' கட்சியாக உள்ளது. இருபது இடங்களுக்கு மேல் இக்கட்சி வெற்றி பெற்றால் காங்கிரசோ, பா.ஜ.க.வோ ஆட்சி அமைக்க ம.ஜ.த. ஆதரவு அவசியம்; அப்போது குமாரசாமிதான் முதல்வர். அதை ஏற்றுக் கொள்ளும் கட்சிக்கே தங்கள் ஆதரவு என திட்டமிட்டுள்ளார்கள்.

Advertisment

இத்தேர்தலில் காங்கிரஸ் தனி மெஜாரிட்டி பெற்றால் அது முதல்வர் சித்தராமையாவின் அரசியல் ராஜதந்திரம் என்கிறார்கள் கர்நாடக அரசியல்வாதிகள். அதற்கு இரண்டு விஷயங்களை உதாரணமாக கூறுகிறார்கள். ஒன்று, மக்கள் தொகையில் 18.5 சதவீதம் உள்ள லிங்காயத் சமூகத்தினரை அவர்களின் கோரிக்கை ஏற்று தனி மதமாக அறிவிக்க கோரி மத்திய அரசுக்கு முதல்வர் சித்தராமையா பரிந்துரை செய்தது. இந்த லிங்காயத் சமூக வாக்குகள் குறைந்தபட்சம் 13 சதவீதம் நீண்ட காலமாக பா.ஜ.க.வுக்கே சென்றுள்ளது. காங்கிரசுக்கு அதிகபட்சம் 5 சதவீத வாக்குகளே கிடைத்து வந்திருக்கிறது. இந்த தேர்தலில் லிங்காயத் சமூக வாக்குகள் ஏறக்குறைய 14 சதவீதம் காங்கிரஸ் பெறும் என கூறப்படுகிறது. இரண்டாவது, பா.ஜ.க. மற்றும் ம.ஜ.த பலமாக உள்ள 50 தொகுதிகளில் மக்கள் செல்வாக்கு பெற்ற காங்கிரஸ் வேட்பாளர்கள் மற்றும் சில தொகுதிகளில் வாக்கு பலம் உள்ள சுயேச்சைகளையும் காங்கிரஸ் ஆதரித்துள்ளது. இது தான் சித்தராமையாவின் அரசியல் தந்திரம் என்கிறார்கள். எடியூரப்பா தரப்போ, ""மாநில சட்டமன்றத் தேர்தல்களில் ஜெயிப்பது எப்படி என்பது அமித்ஷாவுக்கும் மோடிக்கும் தெரியும். அவர்கள் ஃபார்முலாவில் பா.ஜ.க. ராஜதந்திரத்துடன் செயல்பட்டு ஆட்சி அமைக்கும்'' என்கிறது.

Advertisment

- ஜீவாதங்கவேல்

சிக்காத ஓனர்! சிக்கிய தி.மு.க. புள்ளி!

finalகோவை சூலூர் கண்ணம்பாளையத்தில் ரகசியமாக இயங்கிவந்த குட்கா தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட, ஆலையில் வெளிப்படையாக சோதனை நடத்தவேண்டுமென கோரிய தி.மு.க. ச.ம.உ. கார்த்தி உள்ளிட்ட பத்து பேர் மீது ஏழு பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டது. இவ்வழக்கில் தளபதி முருகேசன் உள்ளிட்ட ஏழுபேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில் நிபந்தனை ஜாமீனை மீறியதாக சென்னை முகப்பேரில் தங்கியிருந்த தளபதி முருகேசன் மீண்டும் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

தன் மீது புதிதாய் வழக்குப் போட வாய்ப்பிருக்கிறது என நினைத்து உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு போடவந்தவரைத்தான் போலீஸ் கைதுசெய்திருக்கிறதாம். சட்டவிரோதமாக குட்கா ஆலை செயல்பட உதவியது, நிலம் வாங்கிக் கொடுத்தது, சட்டவிரோதமாக குடிநீர் இணைப்பு வாங்கித் தந்தது, இதற்காக பல லட்சங்கள் லஞ்சம் வாங்கியது இவற்றையெல்லாம் போலீஸ் கஸ்டடியில் குட்கா ஆலை மேலாளர் ரகுராமன் போட்டுக்கொடுத்துவிட்டாராம்.

Advertisment

ஆனால் டெல்லியிலுள்ள குட்கா ஆலை உரிமையாளர் அமித் ஜெயினுக்கு… மத்திய ஆளுங்கட்சியான பி.ஜே.பி.யில் ஆட்களைத் தெரியுமென்பதால் அவரைக் கைதுசெய்ய வாய்ப்பில்லை என காவல்துறைக்குள்ளே நமுட்டுச் சிரிப்புடன் சொல்கிறார்கள்.

-அருள்குமார்