அந்த அகால மரணம் சமூக அக்கறை யுள்ள அனைவரையும் கலங்கடித்துவிட்டது. நக்கீரனுடைய கோவை மாவட்டச் செய்தியாளர் அருள்குமார், கடந்த திங்கட்கிழமை (24-01-2022) அன்று, திடீரென மரணமடைந்தது எல்லோரை யும் பேரதிர்ச்சிக்கு ஆளாக்கிவிட்டது. ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்கு மேலாக நக்கீரனில் செய்தியாளராகப் பணியாற்றிவரும் அருள்குமார், கோவையிலும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளிலு முள்ள அரசியல் சீர்கேடுகள், அதனால் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய இடையூறுகள், அந்த இடையூறுகளை ஏற்படுத்தக்கூடிய அரசியல் பிரமுகர்கள், இவர்களைப் பற்றி கட்சி பேதமின்றி துணிச்சலுடன் செய்திகளில் வெளிப்படுத்தியவர். அவர் எழுதிய செய்திகளின் காரணமாக கோவை அரசியலிலும், கோவை மாநகராட்சி நிர்வாகத்திலும் பல மாற்றங்கள் ஏற்பட்டு மக்களுக்கு நன்மை கிடைத்துள்ளது.
அவருடைய புலனாய்வுப் பயணத்தில் மிக முக்கியமான செய்திகள் நிறைய இருக்கின்றன. குறிப்பாக, கேரளாவில் சபரி மலையில் ஆண்டுதோறும், மகர ஜோதி தரிசனம் என்பது மிகவும் முக்கியமானது. அந்த மகர ஜோதி, தானாகத் தெரிவதில்லை என்பதையும், சபரி மலையிலிருந்து பல கிலோ மீட்டர்கள் தொலைவிலுள்ள பொன்னம்பலம் மேடு என்ற பகுதியில்தான் ஏற்றப்படுகிறது என்பதையும் ஆதாரத்துடன் வெளிப்படுத்துவதற்காக, சவாலான பகுதிகளைக் கடந்துசென்று அச்செய்தியை அவர் வெளியிட்டார். மகர ஜோதி சர்ச்சை குறித்து பல ஆண்டுகளாக செய்திகள் வந்தவண்ணம் இருந்தாலும், அதை நேரடியாக அருள்குமார் எழுதிய பிறகுதான் கேரள அரசே, மகரஜோதி தானாகத் தெரிவதில்லை என்பதை ஒப்புக்கொண்டது.
அதுபோலவே, கோவையில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருக்கும் ஜக்கி வாசுதேவின் ஈஷா யோக மையம், யானைகளுடைய வலசைப்பகுதியை ஆக்கிரமித்திருக்கிறது என்பதையும், மலைவாழ் மக்களுடைய வாழ்விடப் பகுதிகளையும் அது ஆக்கிரமித்திருக்கிறது என்பதையும் ஆவண ஆதாரங்களுடன் விரிவான செய்தியாக புலனாய்வு செய்திருந்தார். அதிகாரிகள், முந்தைய ஆட்சியின் அமைச்சர்கள் என இந்த முறைகேட்டுக்குத் துணைபோனவர்கள் குறித்தும் ஆவணங்களுடன் விரிவான செய்தியாக வெளியிட்டார். அதுகுறித்த நக்கீரனின் காணொளியும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
கடந்த கால ஆட்சியாளர்கள்மீது தலைக்கு மேலே கத்தி போல தொங்கிக் கொண்டிருக்கிற கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை முதன்முதலாக அந்த பகுதிக்கே நேரடியாகச் சென்று விரிவாகப் புலனாய்வு செய்து, செய்தியாகக் கொடுத்தவர் அருள்குமார். இன்றைக்கு காவல் துறையின் விசாரணைக்கு நக்கீரனுடைய செய்திகள்தான் பலமான ஆவணங்களாக அமைந்துள்ளன.
எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழ்நாட்டி லுள்ள தாய்மார்கள், இளம்பெண்கள், பொதுமக்கள் அனைவரையும் அதிரச்செய்த அந்த பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தை "அண்ணா அடிக்காதீங்கண்ணா... நானே கழட்டீர்ரேண்ணா" என்று ஒரு பெண் பரி தவிப்புக் குரலுடன் கூறுகின்ற அந்த வீடியோ காட்சியையும், அதுசார்ந்த உண்மைகளையும் முதன்முதலில் வெளிப்படுத்தியது நக்கீரன் செய்தியாளர் அருள்குமார்தான். தமிழகம் முழுவதையும் அதிரவைத்து, எதிர்க்கட்சித் தலைவர் உட்பட அரசியல் தலைவர்கள் அத்தனை பேரும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கக்கூடிய அளவில், பெண்கள் அமைப்புகளும், மாணவர்களும் போராடக்கூடிய அளவிற்கு எழுச்சியை ஏற்படுத்தியது அருள்குமாருடைய செய்தியின் தாக்கம்தான். நக்கீரன் ஆசிரியர், அதைக் காணொளியாக அவரே பேசி வெளியிட்டபோது கோடிக்கணக்கான மக்களிடம் அந்த உண்மை போய்ச் சேர்ந்தது. தற்போது சி.பி.ஐ. விசாரணைக்கும், நக்கீரனின் செய்திகளே ஆவணங்களாக, உறுதுணையாக இருக்கின்றன.
இப்படி பல்வேறு செய்திகளை வழங்கிய கோவை நிருபர் அருள்குமார், சிறந்த எழுத்தாளர், சிறந்த கவிஞரும்கூட. சில மாதங்களுக்கு முன்பு, 'கிளை ஒன்றிலிருந்து மேலெழும் பெரும் பறவை' என்ற தன்னுடைய கவிதை நூலை அவர் வெளியிட்டிருந்தார். நவீன கவிதை வடிவில் தற்போதைய அரசியல் சமுதாயச் சூழல்களையும், தனி மனித வாழ்வின் இருண்மையான பக்கங்களையும் தன்னுடைய எழுத்தாற்றலால் வெளிப்படுத்தியிருந்தார்.
மக்களுக்கு அநீதி எனில் யாரை அம்பலப்படுத்த வேண்டுமென்றாலும், அவர் தயக்கம் காட்டியதே இல்லை. அண்மையில் கோவையில் ஒரு பள்ளியில் பாலியல் தொந்தரவினால் ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்டதையடுத்து, ஆசிரியர் கைது செய்யப்பட்டார். மாணவிக்கும், ஆசிரியருடைய மனைவியான ஆசிரியைக்கும் இடையேயான தொலைபேசி உரையாடல் உட்பட அனைத்துச் செய்திகளும் நக்கீரனில் தொடர்ச்சியாக வெளி யானது. சமரசமின்றி அந்தச் செய்தியை வெளியிட்ட அருள்குமாருக்கு, அந்த ஆசிரியர் குடும்பம் நெருக்கமான உறவினர் குடும்பம் என்பது யாரும் எதிர்பார்க்காதது.
தன் உறவினர்களாக இருந்தாலும், அவர்கள் சமூகத்துக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்றால் அதனைத் தயங்காமல் வெளிப்படுத்தக்கூடிய துணிச்சலும், நேர்மையும், சமரசமற்ற போராளிக்குணமும் கொண்டவரான அருள்குமார், தன்னுடைய உடல்நலக் குறைவினால் 24-01-2022 அன்று காலமாகிவிட்டார். கோவையிலுள்ள செய்தியாளர்கள், பொதுமக்கள், இளைஞர்கள், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்கள் அனைவரும் நேரில் வந்து அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினார்கள். நக்கீரன் ஆசிரியர் உடனடியாக கோவைக்கு விரைந்து சென்று இறுதி மரியாதை செலுத்தியதுடன், அருள்குமாருடைய இரண்டு மகன்களின் கல்விச் செலவையும் நக்கீரன் ஏற்றுக்கொள்ளும் என்ற உறுதியையும், நம்பிக்கை யையும் தெரிவித்து, ஆறுதல்கூறி விடைபெற்றார். சளைக்காத ஒரு போராளியினுடைய இறுதிப்பயணம், அவருடைய சாதனைகளைப் பூக்களாக உதிர்த்தபடி நடந்து முடிந்தது.
-கீரன்