திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் தொகுதி கிராமங்களால் நிரம்பியது. வேலைவாய்ப்புகளைத் தரக்கூடிய தொழிற்சாலைகள் ஏதும் எட்டிப் பார்க்காததால், விவசாயத்தையும், பீடிசுற்றும் தொழிலையும் மட்டுமே அடிப்படை வாழ்வாதாரமாகக் கொண்ட அடித்தட்டு மக்களால் நிறைந்தது. 2 லட்சத்து 44 ஆயிரத்து 714 வாக்காளர்களையும், சுமார் மூன்றரை லட்சம் மக்கள்தொகையையும் கொண்ட இந்தத் தொகுதி மக்களுக்கு, தாமிரபரணியிலிருந்து பாபநாசம்-ஆலங்குளம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் மூலம் சப்ளை செய்யப்படும் தண்ணீர் முழுமையாக எட்டவில்லை.

Advertisment

kalaingar-plan

இந்தப் பிரச்சனைக்கு தீர்வுகாண 2011-ல் துணை முதல்வராகவும், உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் இருந்த மு.க.ஸ்டாலின், ரூ.44.65 கோடி மதிப்பீட்டில் கடையம் பாப்பாக்குடி கீழப்பாவூர் கூட்டுக் குடிநீர்த்திட்டம் மூலம் தண்ணீர் கொண்டுவந்தால் 163 வழியோர கிராமங்கள் பயனடைவதோடு, ஆலங்குளம் தொகுதியில் நிலவும் தண்ணீர்ப் பஞ்சமும் முடிவுக்கு வரும் என்கிற திட்ட அறிக்கையை அப்போதைய முதல்வர் கலைஞரிடம் கொடுத்தார்.

அதனை ஏற்றுக்கொண்ட கலைஞர், அதற்கான ஆரம்பகட்ட ஏற்பாடுகளைச் செய்தார். அந்த சமயத்தில்தான் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு ஜெ. ஆட்சியில் அமர்ந்தார். 2011-ல் சமர்ப்பிக்கப்பட்ட திட்ட அறிக்கைக்கு, 2013-ல்தான் டெண்டர் கோரப்பட்டு, சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம் ஏஜென்சி ஒப்பந்தத்தைப் பெற்றது. 2016-க்குள் திட்டவேலைகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரவேண்டும் என்கிற நிபந்தனையோடு அந்த ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது.

Advertisment

‘புயலுக்குப் பின் அமைதி’ என்பதைப்போல வேகமெடுத்த திட்டப்பணி ஒருகட்டத்தில் படுத்தேவிட்டது. கடையத்தில் அமைக்கப்பட்ட மேல்நிலைத்தொட்டி, பம்ப்பிங் ஸ்டேஷன்களை இணைக்க குழாய்களை பதிக்கவில்லை. அங்கிருந்து மற்ற கிராமங்களை இணைக்கும் பைப்லைன்களும் போடப்படவில்லை. பல இடங்களில் இதுதான் நிலை. இடைகால்-ஆலங்குளம் வழிச்சாலையில் அமைக்கப்பட்ட புதிய பம்ப்பிங் நிலையத்தைச் சுற்றி புதர் மண்டிக் கிடக்கிறது. மூன்று பஞ்சாயத்துகளுக்கு குடிநீர் சப்ளைக்காக அமைக்கப்பட்ட நல்லூர் நீரேற்று நிலையம் காட்சிப்பொருளாக நின்றபடி காற்று வாங்குகிறது.

pungothaiஇப்படியாக, 2016-ல் முடிக்கப்பட வேண்டிய கடையம் கூட்டுக் குடிநீர்த் திட்டம், 2018 முடியப்போகும் நிலையிலும் முற்றுப் பெறாமலிருக்கிறது. இதுவரை 167 நீர்த்தேக்கத் தொட்டிகள், 43 பம்ப்பிங் ஸ்டேஷன்களை அமைத்தவர்கள், பெரும்பாலான நீரேற்றத் தொட்டிகளுக்கான சாலைவழி இணைப்பு பைப்களைப் பதிக்காமலே விட்டிருக்கின்றனர்.

நாரணாபுரம் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த குருவன்கோட்டை, குறிப்பன்குளம் கிராம மக்களான கனகமணி, வேல்மயில், கருவேலன் ஆகியோரிடம் இதுபற்றி பேச்சுக் கொடுத்தபோது, “""தண்ணி கெடைக்காம திண்டாடுறோமுங்க. குடிக்க தாமிரபரணித் தண்ணி வாரத்துக்கு ரெண்டுகுடம்தான் கெடைக்கிது; அவ்வளவும் மண்டி. ஏதோ குற்றாலத்தண்ணி வந்து குட்டையாக் கெடக்கு. அதுலதான் உடம்ப நனைச்சிக்கிறோம். அரசாங்கத்துக்கிட்ட தண்ணிப் பிரச்சினையச் சொன்னா, கெடைக்கிற தண்ணியும் கெடைக்காமப் போயிடுமே… எதுக்கு பொல்லாப்புன்னு அமைதியாக் கெடக்குறோம்''’என்றனர் ஏக்கத்துடன்.

Advertisment

""எங்க தெருவுக்கு வந்த தண்ணி, அடுத்த தெருவுக்கு எட்டமாட்டேங்குது. பத்து நாளைக்கி ஒரு மணிநேர குடிதண்ணியும் சரியா வரல'' என்கிற ஆலங்குளம் ரவிக்குமார், ""மக்கள் குறையை பேரூராட்சில சொல்லப்போனா, அங்க இ.ஓ.வுமில்ல. இந்தத் திட்டம் அஞ்சு வருஷமா இழுத்துக்கிட்டே போவுது. ஏறுன விலைவாசியைப் பாத்தா இனிமே முடியுமான்னு சந்தேகமாக இருக்குதுங்க''’என யதார்த்தத்தைச் சொன்னார்.

இழுபறியாகும் இந்தத்திட்டம் பற்றி தொகுதி எம்.எல்.ஏ. பூங்கோதையிடம் கேட்டபோது... “""இதைப்பற்றி சட்டசபையில் ஐந்துமுறை பேசிவிட்டேன். 2017-ல் நான்குமுறை சிறப்புக் கவனஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்ததோடு, நான்குமுறை துணைக்கேள்வியும் கேட்டேன். அவற்றுக்கெல்லாம், "விரைவில் முடிக்கப்படும்' என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி பதில் சொன்னதோடு சரி. ஐந்தாண்டுகளாக கலெக்டர்களாக இருந்தவர்களிடமும் தொகுதி பற்றி பேசியிருக்கிறேன். தவிர, காண்ட்ராக்ட் கம்பெனியான ஸ்ரீராம் ஏஜென்சி, லாபம் ஈட்டுகிற பல தொழில்களைச் செய்துவருவதால், இதை சப்-காண்ட்ராக்ட்டிற்கு விட்டுவிட்டது''’என்றார் சலிப்புடன்.

kalaingar-plan

ஸ்ரீராம் ஏஜென்சியின் காண்ட்ராக்ட் பிரிவு மேலாளர் தமிழ்குமரன், ""மேல்நிலைத் தொட்டியும், பம்ப்பிங் ஸ்டேஷனும் அமைச்சிட்டோம். ஆனா இ.பி.யில பிரச்சினை முடியல. தவிர இரண்டு பம்பிங் ஸ்டேஷனுக்கு தண்ணி கொண்டுவந்தாலும், மற்ற 27 ஸ்டேஷன்களுக்கு தண்ணி கொண்டுவர முடியாதது பிரச்சினையா இருக்கு. ஒருசில இடங்கள்ல பைப் தொடர்ந்து பதிச்சாலும், பல இடங்கள்ல பைப் பதிக்க முடியல; ஹைவேய்ஸ் பிரேக் பண்றாங்க. சில இடங்கள்ல பாறைகளை உடைக்கவேண்டிய சங்கடமிருக்கு. ஃபண்ட் பிரச்சினை முடிஞ்சி நல்லூர் வரை தண்ணி கொண்டுவந்துட்டோம். டிசம்பருக்குள் முடிச்சிடுவோம்''’என்கிறார்.

ஆனால், குடிநீர் வடிகால் வாரியத்தின் டிவிசன் இன்ஜினியரோ, ""அவர்களுக்கான பிரச்சனைகளை நாங்கள் உரிய துறைகளில் பேசி முடித்துவிட்டோம். ஹைவேய்சில் தலையிட்டு தடைகளையும் அகற்றிவிட்டோம். தாமதத்திற்கான காரணம் தெரியவில்லை. என்ன ஆனாலும் சொன்ன தேதியில் முடித்தாக வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இருக்கிறது''’என்றார் அவர்.

வேண்டாத திட்டங்களைத் திணிப்பதும், அத்தியாவசியமான திட்டங்களை மறப்பதும் இந்த அரசின் கொள்கை முடிவோ?

-பரமசிவன்

படங்கள்: ப.இராம்குமார்