மிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான ஆட்சி அமைந்ததிலிருந்தே, மாநில உரிமைகள் குறித்து ஒன்றிய அரசிடம் தொடர்ந்து கேள்வி எழுப்புகிறது. குறிப்பாக, மத்திய அரசின் அதிகாரத்தை மாநிலங்களுக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும் என்றும் வரி வசூலிப்பதில் மாநிலங்களின் உரிமையும் வருமானமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாட்டு நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தொடர்ந்து பேசிவருகிறார். கடந்த 2014-ம் ஆண்டிலிருந்து தற்போது வரை, தமிழ்நாட்டுக்கு வரி வசூலில் சுமார் 80 ஆயிரம் கோடி ரூபாய்வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சமீபத்தில் புள்ளிவிவரத்தோடு பேட்டியளித்து அதிர்வை ஏற்படுத்தியிருந்தார்.

FM

நிதி அமைச்சர் குறிப்பிட்டதுபோல் மாநிலங்களுக்கு வரி வருமானத்தில் இழப்பு உள்ளதா என்பது குறித்து, பொருளாதார நிபுணர் ஜோதி சிவஞானத்திடம் கேட்டபோது, "இந்தியா என்பது, மாநிலங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்த ஓர் அமைப்பு தான். ஒருங்கிணைந்த அமைப்புக்குத் தலைமையாக மத்திய அரசு செயல்படுகிறது. இதில், நாட்டு மக்களுக்கான திட்டங்களுக்கு செலவழிப் பதில், மத்திய அரசைவிட மாநிலங்களே அதிகம் செய்கின்றன. ஆனால் அதற்கு பதிலீடாகக் கிடைக்கக்கூடிய வரி வருவாயில் பெரும்பங்கை மத்திய அரசே பெற்றுக்கொள்கிறது. இந்த அடிப்படைத் தவறைத்தான் தமிழ்நாட்டு நிதி அமைச்சர் சுட்டிக்காட்டுகிறார்.

பொதுவாக, மத்திய அரசு வசூலிக்கும் வரித்தொகை அனைத்துமே மத்திய அரசுக்கு சொந்தமானதல்ல. ஏனென்றால், மத்திய அரசானது, இந்தியாவின் ஒட்டுமொத்த செலவினங்களில், மூன்றில் ஒரு பங்கு மட்டும் செலவு செய்துவிட்டு, மூன்றில் இரண்டு பங்கை வரியாக வசூலிக்கிறது. அதேவேளை, மாநிலங்கள், மூன்றில் இரண்டு பங்கு செலவு செய்கின்றன. ஆனால் வரியாக, மூன்றில் ஒரு பங்கு மட்டுமே வசூலிக்கின்றன. இதற்கு என்ன காரணமென்றால், நேரடி வரி வருவாய் இனங் களான, வருமான வரி, சுங்க வரி, கார்ப்பரேட் வரி போன்ற வரி வசூல் முழுக்க மத்திய அரசின்வசம் இருக்கின்றன. அதனால் அவர்களுக்கான வரி வரு வாயும் அதிகமாக இருக்கிறது. ஆனால் இத்தகைய வரி வருவாய் அனைத்தும் அவர்களுக்கு சொந்தமல்ல.

Advertisment

மாநிலங்களைவிட அதிகமாக வசூலிக்கக் கூடிய வரி வருவாயை, மாநிலங்களுக்குப் பிரித்தளிக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. இதனை முறைப்படுத்தி நிர்வகிக்கத்தான் நிதிக்குழு இருக்கிறது. இந்த நிதிக்குழு, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆய்வு நடத்தி, மத்திய அரசின் மொத்த வரி வருவாயிலிருந்து மாநிலங்களுக்கு எத்தனை சதவிகிதம் வருவாயைப் பிரித்தளிக்க வேண்டும், அதில், எந்தெந்த மாநிலங்களுக்கு எவ்வளவு சதவிகி தம் பிரித்தளிக்க வேண்டும் என்பதையெல்லாம் கணக்கீடு செய்யும். இதுதவிர, மாநிலங்களின் திட்டங்களைச் செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்வது குறித்தும் இந்த நிதிக்குழு ஆய்ந்து முடிவெடுக்கும்.

FM

14-வது நிதிக்குழு, 2015-16 முதல் 2020-21 வரையிலான ஆண்டுக்கணக்கில், மத்திய அரசின் வரி வருவாயிலிருந்து 42 சதவிகிதத்தை மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டுமென்று பரிந்துரைத்திருந்தது. அதாவது, மத்திய அரசின் வரி வருவாயில், 100 ரூபாய்க்கு 42 ரூபாயை மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும். இதற்கு அடுத்ததாக, 2021-22 முதல் 2025-26 ஆண்டுக் கணக்கில், மத்திய அரசின் வருவாயிலிருந்து 41 சதவிகிதத்தை மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டுமென்றும், 1 சதவிகிதத்தை காஷ்மீருக்கு பகிர்ந்தளிக்க வேண்டுமென்றும் பரிந்துரைத்துள்ளது.

Advertisment

நிதிக்குழு அறிவித்தபடி மாநிலங்களுக்குப் பிரித்துக்கொடுப்பதிலும் ஒரு பிரச்சனை எழுகிறது. தமிழ்நாடு வளர்ந்த மாநிலம் என்று கணக்கிடப்பட்டு, தமிழ் நாட்டுக்கான பங்கைக் குறைத்தும், பீகார், உத்தரப்பிர தேசம், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்கள், வளர்ச்சியடையாத மாநி லங்கள் என்று குறிப்பிட்டு அவற்றுக்கு அதிகமான நிதி ஒதுக்கீடு செய்வதும் பிரச்சனையாகிறது.

இதில் மத்திய அரசு மாநிலங்களுக்குச் செய்யும் இன்னொரு துரோகம் என்னவென்றால், நிதிக்குழு அறிவித்தபடி தர வேண்டிய 42 சதவிகிதத்தைக்கூட முழுமையாகத் தருவதில்லை. அதையே மத்திய அரசானது, 32 சதவிகிதம் அளவுக்குத்தான் மாநிலங்களுக்குத் திருப்பி யளிக்கிறது. இதிலேயே 10 சதவிகிதம் அளவுக்கு மாநிலங்களுக்கு நிதி இழப்பு ஏற்படுகிறது. ஏன் இந்த குழப்பம் ஏற்படுகிறது என்றால், மத்திய அரசானது, செஸ் சர்சார்ஜ் (cess surcharge) என்றொரு வரி வசூலைச் செய்கிறது. இது முழுக்க முழுக்க மத்திய அரசுக்கே கிடைக்கிறது.

இந்த கொரோனா நோய்த்தொற்றுக் காலத்தில், பெட்ரோல் மீதான கலால் வரியை, அப்படியே செஸ் வரியாக மாற்றிக்கொண்டார்கள். இப்படி மாற்றிக்கொள்வதால் இந்த வரியை மாநிலங்களோடு பகிர்ந்துகொள்ளத் தேவையில்லை. இப்படியான வரியால் மாநிலங்களுக்கு இழப்பு அதிகரிக்கிறது. அதுபோக, நிதிக்குழு அறிவித்தபடி முழுமையாகத் தர முடியாத சூழலில், அந்த சதவிகி தத்தைக் குறைத்து, மத்திய ஒன்றிய பட்ஜெட் தாக்கலின் போது, மாநிலங்களுக்கு தருவதாக உறுதியளிக்கும் தொகையைக்கூட முழுமையாகத் தராமல், அதில் கால் பங்கை குறைத்தே ஒதுக்கீடு செய்கிறார்கள். இதன்மூலமும் மாநிலங்களுக்கு வரு வாய் குறைகிறது. மாநில அரசு ஏதேனும் திட்டத்தை அமல்படுத்துவதானால் அதில் மத்திய-மாநில அரசுகள் பங்களிப்பில் செயல்படுத்தப்படும் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் போன்றவற்றுக்கு மாநிலங்கள் அவற்றின் பங்களிப்பைக் கொண்டு திட்டத்தை நடத்துகின்றன. ஆனால் மத்திய அரசோ அது கொடுக்கவேண்டிய பங்கைக் கொடுப்பதில்லை. ஜி.எஸ்.டி. இழப்பீட்டிலும் மாநிலங்களுக்குத் தர வேண்டிய தொகையை மத்திய அரசு முறையாகத் தருவதில்லை.

FM

ஜி.எஸ்.டியைப் பொறுத்தவரை மிகவும் முக்கியமாகக் குறிப்பிடவேண்டிய ஒன்று, மாநிலங்களுக்கு 5 ஆண்டு காலத் துக்கு ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத்தொகை அளிக்கப்படுமென்றும், இந்த 5 ஆண்டு காலத்திலேயே ஜி.எஸ்.டி வருமானம் அதிகரித்துவிடுமென்பதால் அதன் பின்னர் இழப்பீடு தரவேண்டிய அவசியம் வராது என்றும் ஒன்றிய அரசு கூறியது. ஆனால் ஒன்றிய அரசு சொன்னதுபோல் ஜி.எஸ்.டி. வருவாய் அதிகரிக்கவில்லை. ஒன்றிய அரசு சொன்ன 5 ஆண்டு காலக் கெடு, வரும் ஜூலை 22-ம் தேதியோடு முடிகிறது. ஆனால் இழப்பீட்டை மேலும் 5 ஆண்டு காலம் நீட்டிப்பது குறித்து ஒன்றிய அரசு ஏதும் சொல்லவில்லை. அதே நேரத்தில், இழப்பீட்டுத் தொகை வசூலுக்கான 3% கூடுதல் வரிவிதிப்பை மட்டும் அடுத்த 5 ஆண்டு காலத்துக்கு நீட்டித்துவிட்டது.

இதன்படி, அடுத்த 5 ஆண்டு காலத்துக்கு ஒன்றிய அரசுக்கு மட்டும் கூடுதல் வரி வசூலாகும். ஆனால் அதை மாநிலங்களுக்கு பகிர்ந்தளிப்பது குறித்து இதுவரை முடிவெடுக்கவில்லை. இந்த விவகாரம், அடுத்த மாதத்தில் மிகப்பெரிய அளவில் அனைத்து பா.ஜ.க. அல்லாத மாநிலங்களாலும் எழுப்பப்படக்கூடும். அப்போது ஒன்றிய அரசின் நிதி அமைச்சர் என்ன பதிலளிப்பார் என்பது தெரியவில்லை'' என்றார்.

ஒன்றிய அரசு தனக்குக் கிடைத்துள்ள தனி மெஜாரிட்டி யின் பலத்தைக்கொண்டு, மாநிலங்களின் வரி வருமான உரிமையை நசுக்குவது தெளிவாகத் தெரிகிறது. இப்படியான போக்கு தொடர்ந்தபடி இருந்தால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி என்பது தொடர்ச்சியாக கீழ்நோக்கிய பயணத்திலேயே தான் இருக்கும். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியென்பது, ஒன்றிய அரசு தன்னைத் திருத்திக்கொள்வதில்தான் இருக்கிறது.

இந்நிலையில், தி.மு.க அரசின் முதல் ஆளுநர் உரையில், ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தலைமையில் பொருளாதார ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டு, அதனடிப் படையில் தமிழக அரசின் நிதி நிலை குறித்து, வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிதித்துறை சீர்திருத்தத்தின் முக்கியமான தொடக்கமாக இது அமையவேண்டும் என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.

-தெ.சு.கவுதமன்