தமிழக அரசுக்கு, வேங்கை வயல் விவகாரத் தலைவலியே இன்னும் நீங்கிடாத நிலையில், முதல்வரின் சொந்த மாவட்டத் திலுள்ள அரசுப் பள்ளியின் குடிநீர் தொட்டியில் மனித மலம் கலந்திருப் பதாக எழுந்த விவகாரம் பூதாகர மாகிக்கொண்டிருக்கிறது.
திருவாரூர் அருகேயுள்ள காரியாக்குடி கிராமத்தின் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், கடந்த 11ஆம் தேதி வெள்ளிக் கிழமை, வழக்கம்போல பள்ளிமுடிந் ததும் அனைத்து அறைகளையும், பள்ளி வளாகத்தையும் பூட்டிவிட்டு சென்றுள்ளனர்.
இரண்டுநாள் விடுமுறை முடிந்து திங்கட்கிழமை வழக்கம் போல் காலை உணவுத் திட்டத்தின் கீழ் உணவு சமைப்பதற்காக சமையலர்கள் கார்த்திகாவும், பிரியாவும் வந்து பார்த்ததும் அதிர்ந்துபோனார்கள், காரணம். சமையலறைக் கதவுகள் உடைக்கப் பட்டும், அங்கிருந்த சமையல் பொருட்கள் உடைத்து சேதப்படுத் தப்பட்டும், மளிகைப் பொருட்கள் சிதறியும் கிடந்துள்ளன. பள்ளி வளாகத்தில் இருந்த வாழை மரங்கள் வெட்டி சேதப்படுத்தப் பட்டிருந்தன, தென்னை மரங்களில் இருந்த தேங்காய்களும் பறிக்கப்பட் டிருந்தன.
அதோடு அருகிலேயே இருந்த மாணவர்கள் பயன்பாட்டிற் கான பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி யின் மேல்பகுதி உடைக்கப்பட் டிருந்ததை கண்ட சமையலர்கள், தண்ணீர் தொட்டியில் எட்டிப் பார்க்க, குடிநீரில் மலம் மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து, சக ஆசிரியர்களுக்கும் ஊரிலுள்ள பொதுமக்களுக்கும், திருவாரூர் தாலுகா போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.
உடனடியாக தடயவியல் துறையினர், மற்றும் மோப்ப நாயோடு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். மோப்பநாய் பள்ளி அருகிலுள்ள ஒரு வீட்டிற்குள் சென்று குரைத்துவிட்டு அங்கேயே படுத்துக் கொண்டது. அந்த வீட்டைச்சேர்ந்த விஜயராஜ், விமல்ராஜ், செந்தில்குமார் உள்ளிட்ட நான்கு பேரை தூக்கிச்சென்று விசாரணை நடத்தினர், முதலில் நாங்கள்தான் செய்தோம் என ஒப்புக்கொண்டவர்கள்... பிறகு நாங்க செய்யல, எங்களுக்கு தெரியாது எனக் கதைகூறி வருகின்றனர்.
இதுகுறித்து விசாரித்துவரும் போலீ சாரிடம் பேசினோம். "பள்ளி விடுமுறை என்பதால், பள்ளி சமை யலறையில் சமைப்ப தற்கான பொருட்கள் இருப்பதை தெரிந்து கொண்டு, ஞாயிற் றுக்கிழமை மாலையில், தற்போது பிடிபட்ட நான்கு பேரும் பள்ளிக் குள் ஏறிக்குதிக்க, விமல் ராஜ் என்பவன் கூண்டு மூலம் பிடித்த உடும்பை யோ, கீரியையோ பள்ளி யிலுள்ள சமையல் சமை யலறை பாத்திரத்தை எடுத்து சமைத்திருக் கிறார்கள். பின்னர் பள்ளி வளாகத்தில் மது குடித்துவிட்டு, மது போதையில் வாழை இலையை வெட்டி, சமைத்த கறியைக் கொட்டி சாப்பிட் டுள்ளனர். போதையில் என்ன செய்கிறோம் என்பது தெரியாமல், பள்ளி வளாகத்திலிருந்த பொருட்களை சேதப்படுத்தியிருக் காங்க.
அதைவிடக் கொடுமை, குழந்தைங்க குடிக்கிற தண்ணி டேங்க்ல மலம் மிதந்தது. அவர்கள் அந்த வளாகத்தில் மலம் கழித்துவிட்டு, குடிநீர்த் தொட்டி யில் ஏறி அந்த தண்ணீரிலேயே கழுவியிருக்கணும். அல்லது மலத்தில் விழுந்த தேங்காயை எடுத்துவந்து டேங்க் தண்ணீரில் கழுவியிருக்கணும்... டேங்கில் மலத்தோடு தேங்காயும் மிதந்தது. நால்வரும் சுவரேறிக் குதித்ததை அருகிலுள்ள வீட்டினர் பார்த்திருக்கிறார்கள். நல்லவேளை, திங்கட்கிழமை காலையிலேயே தண்ணீர்த் தொட்டியை பார்த்ததால், அதை குழந்தைகள் குடிக்குமுன் தடுக்கப்பட்டது. இல்லையேல் விவகாரம் வேறுவிதமாக வெடித்திருக்கும். கைதான நான்கு பேரில், விஜயராஜ் என்பவர், திருவாரூர் டி.எஸ்.பி. அலுவலகத்தில் ரைட்டராக பணியாற்றுபவரின் சகோதரர் என்பதுதான் வேதனையின் உச்சம்.
விசாரணை தொடங்கியதுமே, நானும் செந்திலும் தான் எல்லாத்தையும் செய்தோம், எங்களை கைது செய்துக்கோங்க, வேற யாரை யும் காட்டிக்கொடுக்க மாட்டோம் என்றவர் கள், என்ன நடந்ததோ, எங்க பேச்சுவார்த்தை முடிந்ததோ தெரியல, தற்போது நாங்க செய்யல என மறுக்கிறார்கள். விசாரணை அதிகாரியான டி.எஸ்.பி. மணிகண்டனும், குற்றம் செய்ததாக ஒப்புக்கொண்ட விஜய ராஜும் ஒரே சமூகத்தவர்கள் என்பதும்கூட விசாரணை வேறு திசைக்கு செல்வதற்கு காரணம். அதனால் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை'' என்கிறார்கள்.
பள்ளி சமையலர்களோ, "இதுவரை இதுபோல் நடந்ததில்லை. நாங்கள் வந்து பார்த்தபோது கீரி, உடும்பு பிடிக்கும் கூண்டு இருந்தது. அதன் அருகிலிருந்த சாக்குப் பையில் கீரிப்பிள்ளை உரிக்கப்பட்ட முடி இருந்தது. கீரியையோ, உடும்பையோ நெருப்பில் வாட்டி சுட்டு சமைப்பதற்காக சமையலறையை பயன்படுத்தியிருக்காங்க.
சாப்பிட்டதைக்கூட பெரிய பிரச்சினை யாக நாங்கள் பார்க்கவில்லை ஆனால் குழந்தைங்க குடிக்கிற தண்ணி தொட்டியில மலம் போட்டத நெனச்சாலே மனசு பதைபதைக்குது. மலம் கலந்த தண்ணீரை குழந்தைங்க குடிச்சிருந்தால் மிக மோசமான விளைவுகள் ஏற்பட்டிருக்கும்'' என்கிறார்கள் அதிர்ச்சியுடன்.
இதுகுறித்து அந்த கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் கோ.சி.மணி கூறுகையில், "என்னோட குழந்தையும் இந்த பள்ளியில தான் படிக்குது. சாதிய ரீதியாக இங்கு எந்த பிரச்சனையும் நடந்ததில்ல. குடிபோதையில் சமைத்து சாப்பிடலாமென வந்தவர்கள், குடிநீர்க் குழாய்களை உடைத்துவிட்டு தண்ணீர்த் தொட்டிகளில் மலம் கலக்கும் அளவுக்கு ஏன் போனாங்கன்னு தெரியல. குடிபோதை என்பதைத் தாண்டி, மலத்தை கலந்ததை திட்டமிட்டு செய்ததாகவே பார்க்க வேண்டியிருக்கிறது.
தேங்காய்களைப் பறித்ததோடு, இரண்டு வாழை மரங்களை அடியோடு சாய்த்துவிட்டுப் போயிருக்காங்க. இப்படிப்பட்ட அட்டகாசத்தை ஏன் செய்ய வேண்டும்? குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும். தக்க தண்டனை வழங்க வேண்டும். விசாரணை மடைமாறிவிட்டது போல செல்கிறது. குற்றம் செய்தவர்களே ஒப்புக் கொண்ட பிறகு ஏன் தாமதிக்கிறாங்க? யாரைக் காப்பாற்ற நினைக்கிறாங்க? ஒண்ணுமே புரியல'' என்கிறார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகன சந்திரன், "சம்பவம் நடந்த பள்ளியில் காவல் துறை கண்காணிப்பாளர் விசாரணை நடத்தி வருகிறார். விரைவில் குற்றம் செய்த நபர்கள் கைது செய்யப்படுவார்கள். பள்ளி வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்து சிலர் இவ்வாறு செய்துள்ளனர். என்ன நோக்கத்திற்காக செய்துள் ளனர் எனத் தெரியவில்லை. சாதி ரீதியான காரணம் உள்ளதாவென்பது விசாரணை முடிவில் தான் தெரிய வரும்'' என்கிறார்.
விசாரணை அதிகாரியான டி.எஸ்.பி. மணிகண்டனை தொடர்புகொண்டோம், பிறகு பேசுவதாகத் துண்டித்துக் கொண்டார்.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், "குடிநீர்த் தொட்டியில் அசுத்தம் செய்த விவகாரத்தில் யார் யாரெல்லாம் ஈடுபட்டுள் ளார்கள் என விசாரிக்குமாறு காவல்துறைக்கு கண்டிப்புடன் கூறியுள்ளோம். அதன் அடிப்படையில் நடவடிக்கை கடுமையாக இருக்கும். அந்த பள்ளி குடிநீர்த் தொட்டியை உடனே மாற்றி அமைத்துள்ளோம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
மிக மோசமான சமூகக்குற்றத்தை செய்தவர்கள் பிடிபட்ட பிறகும் அவர்களை தப்பவைக்கும் முயற்சியில் காவல்துறை ஈடுபடுவது ஏனோ?