Skip to main content

அச்சத்திற்கு இடம்தராத நக்கீரன்! -வாஜ்பாய் நினைவுகள்!

vajpayee

வாஜ்பாய். பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களில், கொள்கையில் தீவிரவாதி என்றாலும் செயல்பாட்டில் மிதவாதி. சுற்றுச்சூழலை அனுசரித்தவர். தமிழர்களின் மனதில் அவருக்கென தனிஇடம் உண்டு. அவர் பிரதமராக இருந்த 98-ஆம் ஆண்டு, அவரின் பிரத்யேக பேட்டி நக்கீரனில் வெளியானது. தமிழ் பத்திரிகைகளில் நக்கீரனுக்குத்தான் பிரதமர் வாஜ்பாய் முதல் பேட்டி தந்தார். அதற்காக நக்கீரன் மேற்கொண்ட இடையறாத பயணமும் பேட்டியின் முக்கிய பகுதிகளும் இங்கே தரப்படுகின்றன.

அந்த 1998 ஃப்ளாஷ்பேக்!

vajpayeeநக்கீரன் கேள்விகளுக்கு பிரதமர் வாஜ்பாயிடம் பதில் வாங்குகின்ற பொறுப்பினை திறம்படச் செய்து முடித்திருப்பவர் நமது நிருபர் பிரகாஷ். "பிரதமருடன் சந்திப்பு' என்கிற மின்னல்பொறி கிளம்பியதும் நக்கீரன் குழு படு சுறுசுறுப்பானது. ஆகஸ்ட் 13-ந் தேதியன்று தமிழக பா.ஜ.க.வின் செய்தித் தொடர்பாளரான ராஜசிம்மனை சென்னை அலுவலகத்தில் இது குறித்து சந்தித்தபோது நம்பிக்கையுடன் வரவேற்றார். அவர் கேட்டுக்கொண்டபடி, தமிழக பா.ஜ.க. பொதுச்செயலாளர் இல.கணேசனிடம் விவரம் தெரிவித்தோம். "நடக்குமா?' என்ற ஐயப்பாடு அவரிடம் காணப்பட்டது. நாம் விடாப்பிடியாக ஆகஸ்ட் 15-ந் தேதி பட்டுக்கோட்டையில் முகாமிட்டிருந்த இல.கணேசனை சந்தித்து மீண்டும் நினைவுபடுத்த, நமது தீவிர முயற்சி அவரைக் கவர்ந்துவிட்டது. ""பிரதமர் அலுவலகத்திற்கு நேரடியாக நீங்கள் கடிதம் எழுதுங்கள். என்னால் முடிந்தவரை உதவுகிறேன்'' என்று நம்பிக்கையூட்டினார்.

தமிழ் பத்திரிகையுலகில் நக்கீரனின் சாதனைகள் அடங்கிய சிறு அறிமுகத்துடன் ஆகஸ்ட் 17-ந் தேதியன்று பிரதமர் அலுவலகத்திற்கு ஃபேக்ஸ் அனுப்பப்பட்டது. அந்தக் கடிதத்தின் நகல் இல.கணேசனிடமும் கொடுக்கப்பட்டது. ஜெய்ப்பூரில் நடந்த பா.ஜ.க.வின் தேசிய செயற்குழு கூட்டத்தில் பிரதமரை சந்தித்த பா.ஜ.க. தலைவர்கள் இல.கணேசனும் கே.என்.லட்சுமணனும் நக்கீரனின் முயற்சிபற்றித் தெரிவிக்க, ""எந்த மாநில மொழி பத்திரிகைக்கும் நான் தனி பேட்டி கொடுத்ததில்லையே'' என்ற தயக்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் பிரதமர்.

இருப்பினும் பிரமோத் மகாஜன் வழியாக இல.கணேசன் முயற்சிகளைத் தொடர்ந்தார்.

ஜெய்ப்பூர் மாநாட்டுக்குப் பின் பிரதமருடன் பிரமோத் மகாஜன் நமது முயற்சி பற்றி தெரிவித்தார். பிரதமர் தனது சிறப்பு பணி அலுவலர் அசோக் டாண்டனை அழைத்தார். ""நக்கீரனுக்கு பேட்டியளிக்க பிரதமர் தயார். உங்கள் கேள்விகளை முன்கூட்டியே அனுப்புங்கள்'' என்று நமக்கு ஃபேக்ஸ் அனுப்புமாறு டாண்டனிடம் பிரதமர் தெரிவித்தார். ஆகஸ்ட் 25-ந் தேதி நமக்கு கிடைத்த ஃபேக்ஸ் செய்தியுடன் இல.கணேசனை சந்தித்தோம். செப்டம்பர் 1-ந் தேதி இதழில் "உங்கள் இல்லம் தேடி நக்கீரனின் மூலம் வருகிறார் ஒரு தேசியத் தலைவர்' என விளம்பரப்படுத்தப்பட்டது.

அதேவேளையில் 9 நாட்கள் பயணமாக வெளிநாடுகளுக்குப் புறப்பட்டார் பிரதமர். உடன் அசோக் டாண்டன். பயணத்திற்குப் பின் டெல்லி திரும்பும் டாண்டனை சந்திப்பதற்காக செப்டம்பர் 2-ந் தேதியன்று டெல்லிக்கு அனுப்பப்பட்டார் நிருபர் பிரகாஷ். 7-ந் தேதி, பிரதமரின் நேரடி உதவியாளர் சத்யசின்ஹாவுடன் ஆலோசனை கலந்துவிட்டு அசோக் டாண்டனை சந்தித்து ஆசிரியர் குழு தயாரித்த 75 கேள்விகளை கொடுத்தார்.

டாண்டன், நிருபர் பிரகாஷை "பிளிட்ஸ்' இதழின் முன்னாள் இணை ஆசிரியரும் பிரதமரின் தகவல் தொடர்பு மற்றும் ஆராய்ச்சி பிரிவின் இயக்குநருமான சுதீந்திர குல்கர்னியிடம் அனுப்பிவைத்தார். குல்கர்னியிடம் ""செப்டம்பர் 15-ந் தேதியன்று சென்னைக்கு பிரதமர் வருவதற்கு முன்பாகவே அவரிடமிருந்து பதில்களை எதிர்பார்க்கிறோம்'' என்று தெரிவித்தார் பிரகாஷ்.

முன்னேற்றப் பாதையில் சென்றுகொண்டிருந்த முயற்சியினிடையே ஒரு பதட்டம். குல்கர்னியின் உதவியாளர் ஒருவர், ""உ.பி. வெள்ள சேதம், பேஸ்ரூபா விவகாரம் இவற்றால் பிரதமர் பிஸியாகிவிட்டார். உங்கள் பேட்டிக்கு அவர் சம்மதிப்பது இயலாத காரியம்'' என பிரகாஷிடம் தெரிவிக்க... அவருக்கோ, தன் காலுக்கு கீழே பூமிப்பந்து நொறுங்குவது போன்ற உணர்வு. இருப்பினும் நக்கீரன் குடும்பத்திற்கே உரிய விடாப்பிடியுடன் முயற்சிகள் தொடர்ந்தன.

இல.கணேசன், ஜனா.கிருஷ்ணமூர்த்தி, பிரமோத் மகாஜன், சத்யசின்ஹா, அசோக் டாண்டன் என அனைவரையும் மீண்டும் தொடர்புகொண்டார் பிரகாஷ். இரண்டுமணி நேரம் கழித்து டெல்லி தமிழ்நாடு இல்லத்திலிருந்த பிரகாசுக்கு போன் செய்த இல.கணேசன், ""வாழ்த்துகள்... பிரதமர் பேட்டியளிக்க சம்மதித்துவிட்டார்'' என்று தெரிவிக்க, நிருபர் பிரகாஷ் உடனடியாக என்னை தொடர்புகொண்டு தகவலை பகிர்ந்துகொண்டார்.

செப்டம்பர் 12-ந் தேதி மற்றும் 13-ந் தேதி மதியம்வரை நமது கேள்விகளுக்குப் பதிலளிக்க நேரம் எடுத்துக்கொண்டார் பிரதமர் வாஜ்பாய். 13-ந் தேதி மதியம் 4 மணிக்கு சுதீந்திர குல்கர்னி மூலம் பிரகாஷின் கைகளுக்குப் பதில் கிடைக்க, அடுத்த அரைமணி நேரத்தில் ஃபேக்ஸ் மூலம் நம் கைகளுக்கு வந்தது. சிறப்புமிக்க இந்த கேள்வி -பதில்களை வாசகர்களுக்கு விரைந்து வழங்கும் நோக்குடன் ஒருநாள் முன்னதாகவே நக்கீரன் இதழ்கள் தயாராயின. பிரதமரின் பதில்களுக்கு முழு ஒத்துழைப்பு தந்த தமிழக பா.ஜ.க. தலைவர்களும் பிரதமர் அலுவலக அதிகாரிகளும் நன்றிக்குரியவர்கள். இந்த பகீரதப் பிரயத்தனத்தை சிரமேற்கொண்டு சிறப்பாக முடித்த நிருபர் பிரகாஷ் பாராட்டுக்குரியவர்.

-(ஆர்.)

(வாஜ்பாயின் ஆங்கிலப் பேட்டியை தமிழில் மொழிபெயர்த்தவர் மூத்த பத்திரிகையாளர் சின்னகுத்தூசி)

நக்கீரன் 29-09-1998

nakkheeran-1998நக்கீரன்: இந்தியாவின் பிரதமராக ஒருநாள் வருவோம் என்று நீங்கள் எப்போதாவது கனவு கண்டதுண்டா?

வாஜ்பாய்:
நாட்டுக்குச் சேவை செய்ய, மக்கள் எப்படிப்பட்ட பொறுப்புகளை எனக்கு அளித்தாலும் அதனை ஏற்க நான் எப்போதும் தயாராகவே இருந்திருக்கிறேன். எனினும் இன்ன பொறுப்புதான் -அதாவது பிரதமர் பதவிதான் வகிக்கவேண்டும் என்று நான் சொந்த முறையில் ஒருபோதும் கருதியதில்லை.

என்னைப் பொறுத்தவரையில் பிரதமர் பதவி என்பது ஒரு அலங்காரப் பதவி அல்ல. இந்திய நாட்டிற்கு தொண்டு செய்ய கிடைத்த நல்லதோர் வாய்ப்பு என்றே நான் கருதுகிறேன்.

கடந்த 40 ஆண்டு காலத்திற்கும் மேலாக பாராளுமன்றத்தில் நான் எதிர்க்கட்சி வரிசையிலேயே அமர்ந்து பணியாற்றியிருக்கிறேன். இப்போதுதான் அரசுக்குத் தலைமை வகிக்கும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. எனினும், எதிர்க்கட்சியில் பணியாற்றிய அந்தக் காலத்திலும் சரி, இப்போதும் சரி... என்னுடைய அணுகுமுறை என்பது எப்போதும் ஒரே மாதிரியானதுதான், அது நான் மக்களின் ஊழியன் என்பதே.

நக்கீரன்: அரசியல் பணிகள் -பொதுத்தொண்டுகளுக்கு மத்தியில் கவிதைகள் எழுத எப்படி முடிந்தது?

வாஜ்பாய்:
முதலில் நான் ஒரு கவிஞன். அப்புறம்தான் நான் அரசியலுக்கு வந்தேன். நான் குவாலியர் நகரத்தில் பிறந்தேன். நான் பிறந்த மண் -கவிதை -இசை போன்ற கலைகளை வளர்த்து பெருமை பெற்ற பூமி. எனது தாத்தா சமஸ்கிருத மொழியில் மிகவும் பாண்டித்தியம் பெற்றவர் என்பதோடு, மிகச்சிறந்த கவிஞராகவும் திகழ்ந்தவர். தாத்தாவைப் போலவே எனது தந்தையும் கவிஞரே.

நக்கீரன்: அரசியலில் ஈடுபட்டதற்காக எப்போதாவது நீங்கள் வருத்தப்பட்டதுண்டா?

வாஜ்பாய்:
ஒருபோதும் இல்லை. அரசியலில் ஈடுபட்டது என்பது நான் விரும்பி ஏற்றுக்கொண்ட காரியமாகும். எனது இளமைப் பருவத்தில் நான் விரும்பி ஏற்றுக்கொண்ட சில இலட்சியங்கள் கொள்கைகளின் அடிப்படையிலேயே நான் அரசியலுக்கு வந்தேன்.

நக்கீரன்: நாட்டின் மிகச்சிறந்த பேச்சாளர்களில் நீங்கள் முதல்வரிசையில் இருக்கிறீர்கள். உங்களைக் கவர்ந்த பேச்சாளர் யார் என்று சொல்ல முடியுமா?

vajpayeeவாஜ்பாய்:
இளமைப் பருவத்தில் என்னை மிகவும் கவர்ந்த பேச்சாளர் எனது தந்தைதான். அவர் கலந்துகொள்ளும் கவி அரங்க நிகழ்ச்சிகளில் கவிதை பாடுவதோடு சொற்பொழிவும் ஆற்றுவார் -கவிதையையும் உணர்ச்சி பாவத்துடன் கலைநயம் ததும்ப படிப்பார். அவரிடமிருந்தே நான் உணர்ச்சிப் பிரவாகத்துடன் சொற்பொழிவாற்ற கற்றுக்கொண்டேன். பிற்காலத்தில் எனது அரசியல் மேடைப் பிரசங்கங்கள் மக்கள் விரும்பிக் கேட்கும் அளவிற்கு அமைந்ததற்கு அப்பாவின் முன்னுதாரணமே காரணம்.

பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஏராளமானவர்களின் பேச்சுகளைக் கேட்டு நான் வியந்திருக்கிறேன்.

கோவா விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்ட தலைவர்களில் ஒருவரான நாத்பை நாடாளுமன்றத்தில் அற்புதமாகப் பேசுவார். அதுபோலவே கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பூபேஷ்குப்தாவும் தலைசிறந்த பேச்சாளராகத் திகழ்ந்தவர்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் அது இந்திய அரசியலுக்கு மிகச்சிறந்த பேருரையாளர்கள் சிலரை அளித்திருக்கிறது.

அண்ணாவின் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது தமிழ் உரைகள் மிக இனிமையானதாகவும், மண்ணின் மணம் கமழ்வதாகவும் இருக்கும்.

ஆங்கிலத்தில் பேசும்போதும் சரி, அவரது பேச்சு சக்தி வாய்ந்ததாகவும் அதேசமயம் தெளிவு மிகுந்ததாகவும் திட்டவட்டமானதாகவும் அமைந்திருக்கும். அவர்பேசி முடித்ததும் நான் அவர் அருகில் சென்று அவரது உரையின் சிறப்புகளைக் கூறி பாராட்டுவேன். அதுபோலவே அவரும் என்னுடைய பேச்சைப் பாராட்டி மகிழ்வார்.

நக்கீரன்: நீங்கள் ஒரு கூட்டணி அரசை அமைக்கத் தேவையான ஆதரவை கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது தமிழ்நாடுதான் தந்தது. இந்த நிலைமைகளுக்கு நேரெதிராக இன்று உங்கள் அரசுக்கான ஆபத்தும் தமிழகத்திலிருந்துதான் கிளம்பியிருப்பதுபோல தெரிகிறது. தமிழகத்தில் இருந்து முளைவிட்டிருக்கும் நடவடிக்கைகள் இங்கே உங்களின் இமேஜை களங்கப்படுத்தியிருக்கிற நிலையில்... இந்தச் சூழலை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?

வாஜ்பாய்:
பா.ஜ.க. தலைமையில் மத்தியில் ஒரு கூட்டணி அரசு உருவாக தமிழக மக்கள் அளித்த மகத்தான வெற்றியை மறக்க முடியாது. இந்த சந்தர்ப்பத்தில் நாம் அனைவரும் ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். தனி ஒரு கட்சியின் ஆட்சி என்ற கட்டத்திலிருந்து மாறி பல்வேறு கட்சிகள் இடம்பெறும் கூட்டணி அரசு என்கிற புதியதோர் யுகம் இப்போது இந்தியாவில் பிறந்திருக்கிறது. கூட்டணி அரசியலுக்கு நாம் எல்லோருமே புதியவர்கள், போதுமான பழக்கமோ பயிற்சியோ இல்லாதவர்கள். நமது ஜனநாயக அனுபவங்களும் பரிசோதனைகளும் புதியதோர் நெருக்கடி மிகுந்த காலகட்டத்தில் புகுந்திருக்கும் நேரம் இது.

நக்கீரன்: பாபர் மசூதி இடிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்கின்றீர்களா.?

வாஜ்பாய்:
பாபர் மசூதி இடிக்கப்பட்ட 1992-ல் மட்டுமல்ல, இன்றும் எப்போதும் எனது கருத்து அது வருந்தத்தக்கது, துரதிர்ஷ்டவசமானது என்பதுதான். அந்தச் சம்பவம் நடந்திருக்கக்கூடாது என்பது மட்டுமின்றி, நடக்க அனுமதிக்கப்பட்டிருக்கவும் கூடாது. அத்தகைய சம்பவங்கள் இந்தப் புனித பூமியில் இனி ஒருபோதும் நடக்காது என்பதும் எனது திடமான கருத்து.

நக்கீரன்: தமிழகத்தில் நிலவும் திராவிட பாரம்பர்யம் பற்றி உங்கள் கருத்து என்ன?

வாஜ்பாய்:
நமது தேசிய பாரம்பரியத்தில் மிகவும் உயர்ந்த -பெருமைமிக்க பாரம்பரியமாக திராவிட பாரம்பரியம் திகழ்கிறது. இந்தியாவின் தனிப்பெருமையாக விளங்கும் நமது ஆலயங்களின் சிற்பக்கலை சிறப்புகளுக்கு தமிழகமே தாயகம் என்பதை யார்தான் மறுக்க முடியும்? தேசபக்தியின் சிறப்பை விளக்கும் வகையில் சமீபகாலத்தில் வெளிவந்த திரைப்படங்கள் தமிழகத்தின் தயாரிப்புகள் என்பதைத்தான் யாரே மறுக்க முடியும்? சமூகநீதிக்காக உருவாக்கப்பட்ட இயக்கங்கள் தற்காலத்தில் பல உண்டு, ஆனால் முதன்முதலில் அப்படிப்பட்ட இயக்கத்தைத் தோற்றுவித்தது தமிழ்நாடுதான் என்பதையும் நாம் மறக்க முடியுமா?

நக்கீரன்: நக்கீரனுக்கும் அதன் வாசகர்களுக்கும் தாங்கள் கூறும் செய்தி என்ன?

வாஜ்பாய்:
அச்சத்திற்கோ -அச்சுறுத்தலுக்கோ இடம்தராத வகையில் தமிழ் மக்களின் ஆசைகளையும் எதிர்பார்ப்புகளையும் எதிரொலிக்கும் ஏடாக நக்கீரன் செயல்பட வேண்டும். காலமெல்லாம் படிப்பின் மூலம் கிடைக்கும் பயனும் மகிழ்ச்சியும் நக்கீரன் வாசகர்களுக்குத் தொடர்ந்து கிடைத்திட வாழ்த்துகிறேன்.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இவ்விதழின் கட்டுரைகள்