மாசுக் கட்டுப்பாட் டுத் துறையின் முன்னாள் சேர்மனான ஐ.எஃப்.எஸ். அதிகாரி வெங்கடாச் சலத்தின் தற்கொலை, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச் சாமி உள்பட அரசின் உயரதிகாரிகள் பலரையும் அதிர்ச்சியடைய வைத்திருக் கிறது. இதன் பின்னணி களை விசாரித்தபோது ஏகத்துக்கும் பகீர் தகவல்கள்.
தமிழக அரசின் வனத்துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, "சேலம் மாவட்டம் ஆத்தூர் அம்மா பாளையத்தைச் சேர்ந்தவர் வெங்கடாச்சலம். இவரது தந்தை வரதராஜன் காங்கிரஸ்காரர். இந்திய ஃபாரஸ்ட் சர்வீசிற்கு 1983-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார் வெங்கடாச்சலம். படிப்பும் திறமையும் கொண்டவர்.
தமிழக அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் இயக்குநராக இருந்து 2018-ல் ஓய்வு பெற்றார் வெங்கடாச்சலம். அப்போது, எடப்பாடியின் வலதுகரமான சேலம் இளங்கோவனின் நட்பு வெங்கடாச்சலத்துக்கு கிடைக்க, எடப்பாடியிடம் அவரை அறிமுகப் படுத்தி வைக்கிறார் இளங்கோவன். மாசுக் கட்டுப்பாட் டுத் துறையின் சேர்மனாக வெங்கடாச்சலத்தை 2019, ஜூனில் நியமிக்கிறார் எடப்பாடி. "ஓய்வு பெற்றவரை ஏன் நியமிக்க வேண்டும்?' என சர்ச்சை கிளம்பியது.
இந்த பதவியின் காலம் 3 ஆண்டுகளாக இருந்தாலும், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கில் (டெகி டகி தாரா எதிர் ராஜேந்திரசிங் பண்டாரி) கொடுக்கப்பட்ட இடைக்கால தீர்ப்பின்படி ஒவ்வொரு வருசமும் பதவிக் காலத்தை நீட்டிக்க வேண்டும் என்கிற சூழல் இருந்ததால்... 2020-ல் வெங்கடாச்சலத்தின் பதவிக் காலத்தை நீட்டித்தார் எடப்பாடி. அந்த பதவிக் காலம் 2021, ஜூனில் முடிவடைந்த நிலையில், தற்போதைய தி.மு.க. அரசு அவருக்கு பணி நீட்டிப்பு வழங்க மறுத் தது. வெங்கடா சலமோ, விதிமுறை களை சுட்டிக்காட்டி, நீதிமன்றத்தில் ரிட் பெட்டிஷன் போட வும் தயாரானார். மேலும், தற்போ தைய அமைச்சருட னும் ஒத்துப்போகத் தயாராக இல்லை. இந்த நிலை யில்தான் அவரது பங்களா, அலுவலகம் என அவர் சம்மந்தப் பட்ட 10-க்கும் மேற் பட்ட இடங்களில் செப்டம்பர் 24-ந் தேதி அதிரடி சோதனை யில் குதித்தது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை. அதில், 2 கோடி ரூபாய் மதிப்புள்ள 6.5 கிலோ தங்கம், 4 கிலோ வெள்ளி, கணக்கில் காட்டப்படாத சுமார் 14 லட்சம் ரொக்க பணம், சந்தன கட்டைகளால் செய்யப்பட்ட 10 கிலோவுக்கும் அதிகமான பொருட்கள் மற்றும் சந்தன கட்டைகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
இதனடிப்படையில், அவர் மீது வன பாதுகாப்பு சட்டம் உள்பட பல்வேறு பிரிவுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்ததும், செப்டம்பர் 26-ந் தேதி வாரியத்தின் சேர்மன் பதவியிலிருந்து வெங்கடாச்சலத்தை நீக்கிவிட்டு, அந்த பதவியை கூடுதல் பொறுப்பாக வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹூவிடம் ஒப்படைத்தது தி.மு.க. அரசு.
இதனையடுத்து, வெங்கடாச்சலம் பதவியில் இருந்தபோது தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட தடையில்லா சான்றிதழ் களை ஆராய்ந்தனர். அப்போது, 700-க்கும் மேற்பட்ட சான்றிதழ் களில் முறைகேடு நடந்திருப்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள். அது வும், சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக சுமார் 200 சான்றிதழ்கள் அவசரம் அவசரமாக கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனை வெங்கடாச் சலத்திடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரித்தபோது, அவர் எந்த பதிலையும் சொல்லவில்லை. "எடப்பாடியும், இளங்கோவனும் சொல்லித்தான் அனைத்தையும் செய்தேன்' என வாக்குமூலம் கேட்ட லஞ்ச ஒழிப்புத்துறை மிரட்டலுக்கும் அவர் ஒத்துழைக்கவில்லை.
அவரை கைதுசெய்து விசாரிக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறை முடிவு செய்தது. இதனை அறிந்துகொண்ட வெங்கடாச்சலம், மிரட்டலுக்கும் கைதுக்கும் பயந்தே தற்கொலை செய்திருக்க வேண்டும்'' என்று விவரிக்கின்றனர் வனத்துறையினர்.
லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரங்களில் விசாரித்த போது, ’"எங்களுக்கு வரும் புகாருடன் இணைக்கப்படும் ஆதாரங்கள், அதன் உண் மைத் தன்மை ஆகியவை களை ஆராய்ந்து, புகாரும் ஆதாரங்களும் உண்மைதான் என தெரிந்த பிறகே ரெய்டு நடத்துகிறோம். அப்படி நடத்தப்பட்டதுதான் வெங்கடாச்சலத்துக்கு எதிரான ரெய்டுகள்.
அதில் பல ஆதாரங்கள் கிடைத்தன. மேலும் புலனாய்வு செய்தபோது முன்னாள் முதல்வர் எடப்பாடி, அவருக்கு நெருக்கமான இளங்கோவன், இவர்கள் இருவருக்கும் நெருக்கமான கொடநாடு கொலை வழக்கில் தொடர்புடைய சஜீவன் ஆகியோரிடம் வெங்கடாச்சலத்துக்கு இருந்த தொடர்புகள் தெரிந்தன. குறிப்பாக, மர வியாபாரியான சஜீவன் மூலமாக சந்தன மரங்களை கொள்ளை யடித்தனர். இதற்கு உடந்தையாக இருந்தது வெங்கடாச்சலம். சட்டத்திற்கு புறம்பாக வெட்டப்பட்ட மரங்களின் மூலம் கிடைத்த பெரும் தொகை எல்லோராலும் பங்கு பிரிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, பல்வேறு நிறுவனங்களுக்கும் கொடுக்கப்பட்ட தடையில்லா சான்றிதழ்கள் மூலம் திரட்டப்பட்ட பல நூறு கோடிகளை முந்தைய ஆட்சியாளர்களிடம் ஒப்படைத்திருக்கிறார் வெங்கடாச்சலம். வனத்துறையின் மாஜி அமைச்சர் கருப்பண்ணன், அப்போதைய வனத்துறை செயலாளர் சம்புக் கல்லோலிகர் ஆகியோரின் சிபாரிசுகளின்படியும் பல தடையில்லா சான்றிதழ்களை தந்துள்ளார். இது தவிர, அ.தி.மு.க. அமைச்சர்கள், அந்த ஆட்சியில் பவர்ஃபுல்லாக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் என பலரின் விருப்பங்களையும் நிறைவேற்றிக் கொடுத்துள்ளார். ரெய்டில் சிக்கியவை பற்றி, அவரிடம் விசாரிக்க முயற்சித்தபோது எந்த ஒத்துழைப்பையும் அவர் தரவில்லை. ஒத்துழைப்பு தராதபோது சம்மன் அனுப்பித்தான் வரவழைக்க முடியும். ஆனால், எந்த சம்மனும் அனுப்பாத நிலையில்தான்... அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். மற்றபடி, அவருக்கு மிரட்டல் என்பதெல்லாம் சுத்த பேத்தல். லஞ்ச ஒழிப்புத்துறை யாரையும் மிரட்டிப் பணிய வைக்காது. ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்''‘என்கின்றன லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரங்கள்.
வெங்கடாச்சலத்தின் தற்கொலை விவகாரத்தை மத்திய-மாநில உளவுத்துறையும் உன்னிப்பாக கவனித்து வருவதால், அத்துறை வட் டாரங்களில் ஒரு ரவுண்ட் நாம் அடித்த போது,”"முன்னாள் முதல்வரின் நம்பிக்கைக் குரியவராக இருந்துள்ளார் வெங்கடாச்சலம். அந்தவகையில் எடப்பாடி, சேலம் இளங்கோவன், முன்னாள் அமைச்சர் கருப்பண்ணன், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆகியோர் சொன்னதைத்தான் வெங்கடாச்சலம் செய்திருக்கிறார். அப்படி செய்து கொடுத்ததில் வெங்கடாச்சலத்துக்குரிய பங்கை கொடுத்திருக்கிறார்கள். லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சிக்கியதும், எடப்பாடியிடமும் இளங்கோவ னிடமும், "நீங்கள் சொன்னபடிதானே நான் நடந்துகொண்டேன். இப்போ சிக்கல் மேல் சிக்கல் எனக்கு வருது. என்னை கைது செய்து விடுவார்கள்னு நினைக்கிறேன்... உதவி செய்யுங்கள்' என கெஞ்சியிருக்கிறார். ஆனால், அரசியல் நட்பில் இருந்த யாருமே உதவ முன்வரவில்லை. இந்த விரக்தியால்தான் முட்டாள்தனமான முடிவை எடுத்துவிட்டார் வெங்கடாச்சலம்''‘’ என்கிறார்கள் உளவுத்துறையினர்.
வெங்கடாச்சலத்தின் தற்கொலை பின்னணியில் லஞ்ச ஒழிப்புத்துறை உயரதி காரிகளின் மிரட்டல்கள் இருப்பதாக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு சில தகவல்கள் சொல்லப்பட்டதும், இந்த விவகாரத்தை கையிலெடுக்குமாறு கராத்தே தியாக ராஜனிடமும் பால்கனகராஜிடமும் ஒப்படைத்திருக்கிறார் அண்ணாமலை. இதில் தீவிர கவனம் செலுத்திய அவர்கள், சில பல ஆதாரங்களைத் திரட்டியுள்ளனர். அதன்படி, "வெங்கடாச்சலத்தின் தற்கொலை குறித்து சி.பி.ஐ. விசாரணை வேண்டும்' என கோரிக்கை வைத்துள்ளனர். விரைவில் இது தொடர்பாக வழக்குப் போடவும் தயாராகிவருகிறது பா.ஜ.க. மாசு கட்டுப்பாட்டுத் துறையின் சேர்மனாக முயற்சிக்கும் அதிகாரிகள், வெங்கடாச்சலத்தை சிக்க வைத்ததாகவும் சில தகவல்களை இவர்கள் சேகரித்துள்ளனர்.
இந்த நிலையில், வெங்கடாச்சலத்தின் தற்கொலை குறித்து பேசியுள்ள எடப்பாடி பழனிச்சாமி,” "வெங்கடாச்சலம் மட்டுமல்ல பல அதிகாரிகள் மிரட்டப்படுகிறார்கள். ஒரு திறமைமிக்க அதிகாரி, இப்படி கோழைத் தனமான முடிவை எடுக்க வாய்ப்பே இல்லை. அவரையும் அவரது குடும்பத்தையும் வரவழைத்து, உண்மைக்கு மாறாக சாட்சியம் பெறுவதே லஞ்சஒழிப்புத் துறையின் நோக்கமாக இருந்திருக்கிறது. அவரது மரணத்தை நாங்கள் சந்தேகிக்கிறோம். தி.மு.க. ஆட்சிக்கு வரும் போதெல்லாம் பலர் மர்மமாக மரண மடைவது வரலாறு. அதிகாரிகளை மிரட்டி வாக்குமூலம் பெறுவதை கைவிடுங்கள். வெங்கடாச்சலத்தின் மரணத்தில் மர்மம் இருப்பதால் வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும்'' என்கிறார்.
வெங்கடாசலம் தற்கொலை குறித்து மீடியாக்களிடம் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜூவால், "இதுவரை கிடைத்த வாக்குமூலம் மற்றும் விசாரணையின்படி அவரது மரணத்தில் சந்தேகமில்லை. அவரது செல்போன், லேப்டாப்களை கைப்பற்றி, தடய அறிவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டும் வரவில்லை. மிரட்டல் கொடுக்கப்பட்டதா எனவும் விசாரிக்கப் படும்''’என்கிறார்.
வெங்கடாச்சலத்தோடு தொடர்புடைய பல ஆதாரங்களை லஞ்ச ஒழிப்புத்துறை சேகரித்து வைத்திருப்பதும், அவரின் மரணத்தின் பின்னணியை போலீசார் தோண்டித் துருவு வதும் எடப்பாடி உள்ளிட்ட மாஜிக்களுக்கு கிலியை ஏற் படுத்தியிருக்கிறது என்கிறார்கள்.