தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் பாட்டாளி மக்கள் கட்சியில் அதன் நிறுவனரும் மூத்த அரசியல் தலைவருமான டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் டாக்டர் அன்புமணிக்கும் இடையே நடக்கும் அதிகார உரசல்கள், அக்கட்சியின் தொண்டர்களைக் கவலையடைய வைத்திருக்கிறது.
பெரியார், காரல்மார்க்ஸ், அம்பேத்கர் ஆகியோர் வலியுறுத்திய கொள்கைகளை அடி நாதமாகக் கொண்டு 1989-ல் பாட்டாளி மக்கள் கட்சியை உருவாக்கினார் டாக்டர் ராமதாஸ். இக்கட்சியின் முதல் தலைவராக பேராசிரியர் தீரன், பிறகு ஜி.கே.மணி இருந்தனர். தற்போது டாக்டர் அன்புமணி தலைவராக இருக்கிறார்.
பா.ம.க.வின் அரசியல் வரலாற்றில் கிட்டத்தட்ட 24 ஆண்டு காலம் தலைவராக இருந்தவர் ஜி.கே.மணி. அவரை தலைவர் பதவியிலிருந்து விலக்கி விட்டு கடந்த 2022, மே மாதம் பா.ம.க.வின் தலைவராக டாக்டர் அன்புமணியை நியமித்தது அக்கட்சியின் சிறப்பு பொதுக்குழு. தலைவர் பதவியை ஏற்றுக் கொண்டார் அன்புமணி.
அரசியலில் பல்வேறு ஏற்றத்தாழ்வுகள், வெற்றி-தோல்விகளைக் கண்ட பா.ம.க., அன்புமணியின் தலைமையில் பழைய வலிமையைப் பெறுமா? என்கிற கேள்வி எழுந்தது. ஆனால், ஒரே வருடத்தில் தந்தைக்கும் மகனுக்கு மான உரசல்கள் வெடிப்பதால் பா.ம.க.வின் அரசியல் எதிர்காலம் குறித்து கவலையுடன் விவாதிக்கிறார்கள் பா.ம.க.வின் ஆணிவேர்களான அக்கட்சியின் தொண்டர்கள்.
பா.ம.க.வின் மூத்த நிர்வாகிகளிடம் இதுகுறித்து விசாரித்தபோது, "படித்தவர், இளம் தலைவர், மத்திய அமைச்சராக இருந்தபோது அவர் செய்த சாதனைகள், தேர்தல் வியூக நிபுணர்களுடன் இணைந்து, "மாற்றம் முன்னேற்றம் அன்புமணி' என்ற முழக்கத்தால் தமிழகம் முழுவதும் பெற்ற கவனம் ஆகியவற்றையெல்லாம் சீர்தூக்கிப் பார்த்துதான், அன்புமணியை தலைவராக்கினார் ராமதாஸ்.
பா.ம.க.வை தான் வளர்த்தது போல அன்புமணியும் வளர்ப்பார் என்கிற நம்பிக்கை ராமதாசுக்கு தகர்வதால் சமீபகாலமாக அன்புமணி மீது ராமதாசுக்கு அதிருப்தி. அதன் விளைவு பா.ம.க.வில் நீக்கம், சேர்த்தல் என ஏகப்பட்ட பஞ்சாயத்து. இதனால் தைலாபுர தோட்டத்தில் தந்தைக்கும் மகனுமான உரசல்கள் அதிகரித்தபடி இருக்கின்றன.
கட்சியில் ஒருவரைச் சேர்க்கவும் நீக்கவுமான அறிவிப்பு ராமதாசின் பெயரில்தான் அறிவிக்கப் படும். ஆனால், வடக்கு மண்டல செயலாளராக ஏ.கே.மூர்த்தியை நியமிக்க ராமதாசிடம் வலியுறுத்தினார் அன்புமணி. இதற்கு ராமதாஸ் ஒப்புக்கொள்ளாததால் ஆத்திரமடைந்த அன்புமணி, ஏ.கே.மூர்த்தியை நியமிக்கும் உத்தரவை தனது பெயரில் பிறப்பித்தார்.
சமீபத்தில் திருவள்ளூர் மாவட்ட கும்மிடிப் பூண்டி கிழக்கு ஒன்றிய முன்னாள் செயலர் எஸ்.டி.கே. சங்கர், திருவள்ளூர் மாவட்ட இளைஞரணி முன்னாள் செயலாளர் இராச.சங்கர் ஆகியோரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கும் உத்தரவை பிறப்பித்துள் ளார் அன்புமணி. அந்தளவுக்கு, தந்தைக்கும் மகனுக்குமான மோதல்கள் உச்சத்தில் இருக்கின் றன''’என்கிறார்கள்.
திருவள்ளூர் மத்திய மாவட்டச் செயலாள ராக இருந்த அன்புமணியின் ஆதரவாளர் கே.என். சேகரை நீக்கிவிட்டு, கோவிந்தராசுவை மா.செ.வாக சமீபத்தில் நியமித்தார் டாக்டர் ராமதாஸ். கோவிந்தராசுவின் அறிமுகக் கூட்டத்தை நடத்தவும் ராமதாஸ் உத்தரவிட, அவரது தலைமையில் வருகிற 26-ந்தேதி அந்தக் கூட்டம் திருமுல்லைவாயலில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்தன.
அதேசமயம் அன்புமணியின் அறிவுறுத்த லில் அதே நாளில் கே.என்.சேகரை வைத்து போட்டிக் கூட்டம் ஒன்றை நடத்த ரகசியமாகத் திட்டமிடப்பட்டிருக்கிறது. இதற்கான ஏற்பாடு களும் நடக்கின்றன. இதனையறிந்த டாக்டர் ராமதாஸ், தனது தலைமையில் நடக்கும் கோவிந்தராசுவின் அறிமுக கூட்டத்தை தள்ளிவைக்கச் சொல்லியிருக்கிறார்.
அன்புமணியின் ரகசிய உத்தரவில் கே.என்.சேகர் நடத்தும் கூட்டத்தில் என்ன விவாதிக்கப்படுகிறது? எப்படி பேசுகிறார்கள்? என்பதை அறிந்து அதற்கு பதிலடி தருகிற மாதிரி கோவிந்தராசுவின் கூட்டத்தை வைத்துக் கொள்ளலாம் என ராமதாஸ் திட்டமிட்டிருப்ப தால், கோவிந்தராசுவின் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல, திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளராக இந்த மாவட்டத்தைச் சேர்ந்த கடும் உழைப்பாளிகளான 3 இளைஞர்களில் ஒருவரை அல்லது மகளிர்க்கு பிரதிநிதித்துவம் தரும் வகையில் பெண் ஒருவரை நியமிக்க முடி வெடுத்திருந்தார். டாக்டர் ராமதாஸ். இதனை ஏற்க மறுத்ததுடன், ராமதாசுக்கு கடும் அழுத்தம் கொடுத்து, சென்னையைச் சேர்ந்த தனது ஆதரவாளர் பிரகாஷ் என்பவரை மா.செ.வாக நியமிக்க வைத்தார் அன்புமணி.
பிரகாஷின் நியமனம் திருவள்ளூர் மாவட்டத் தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பா.ம.க.வை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்களும் ஆண்களும் தலைமைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை நடத் தினர். திருவள்ளூர் மாவட்டப் பொறுப்பாளரான முன்னாள் எம்.எல்.ஏ. ரவிராஜின் வீடும் முற்றுகை யிடப்பட்டது. மா.செ.வாக நியமிக்கப்படுபவர் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்; குற்றப் பின்னணிகள் இல்லாதவராக இருக்க வேண்டும். ஆனால், குற்றப்பின்னணி கொண்ட சென்னையைச் சேர்ந்தவரை நியமிக்கலாமா? என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட பா.ம.க. மகளிரணியினர் கொந்தளித்தனர்.
இந்த நிலையில், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளராக ராமதாஸ் நியமித்த கோவிந்தராசுவை அழைத்து சமாதானப்படுத்தும் ரகசிய மூவையும் எடுத்துள்ளது அன்புமணி தரப்பு. இதனால் 26-ந்தேதி யாருடைய கூட்டம் நடக்கப் போகிறது என்கிற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் திருவள்ளூர் மாவட்ட பா.ம.க. நிர்வாகிகள்.
பா.ம.க.வின் மேலிடத்தில் நடப்பது என்ன? என்பது குறித்து நாம் மேலும் விசாரித்தபோது, ‘பா.ம.க.வின் எதிர்கால முகம் அன்புமணிதான். அவரை முதலமைச்சராக்கத்தான் அய்யா ராமதாசும் பா.ம.க. தொண்டர்களும் விரும்பு கிறார்கள். அந்த வகையில், 1990 மற்றும் 2000 களில் இருந்த மாதிரி பா.ம.க.வை வலிமையாக்க நினைக்கிறார் ராமதாஸ். பா.ம.க. தலைவராக அன்புமணி இருந்தாலும் கூட, ராமதாஸ் என்ற ஒற்றை தலைவரின் அரசியலுக்கும் ஆளுமைக்கும்தான் பா.ம.க. நிர்வாகிகளும் தொண்டர்களும் உணர்வுபூர்வமாக இருக்கிறார்கள். இந்த நிலையில், பா.ம.க. வலிமையாவதன் மூலம்தான் அன்புமணியை எதிர்காலத்தில் முதலமைச்சராக்க முடியும் என திட்டமிட்டு, பா.ம.க.விலிருந்து விலகியவர்கள், விலக்கப்பட்டவர்கள் என அனைவரையும் மீண்டும் கட்சிக்குள் கொண்டுவர காய்களை நகர்த்தி வருகிறார் ராமதாஸ். ஆனால், இதனைப் புரிந்துகொள்ளாமல் ராமதாசிடமிருந்து ஒட்டுமொத்த அதிகாரத்தையும் தன்னிடம் மாற்றிக்கொள்ள துடிக்கிறார் அன்புமணி.
பழைய ஆட்கள் மீண்டும் கட்சிக்குள் வருவது தனது தலைமைக்கு ஆபத்தாகலாம் என்கிற பயம் அன்புமணிக்கு இருக்கிறது. காரணம், பழைய பா.ம.க.வினர் உள்ளே வந்தால் அவர்கள் தனது சொல்லுக்குக் கட்டுப்படமாட்டார்கள்; அய்யாவின் ஆதரவாளர்களாகத்தான் இருப்பார் கள் என்ற பயம் அன்புமணிக்கு. அதற்கேற்ப அவரை சூழ்ந்துள்ளவர்களும் தூபமிடுகின்றனர். இதற்காகத்தான் தமிழகம் முழுவதும் மாவட்ட சுற்றுப்பயணம் செய்து தனது ஆட்களை நியமிக்கத் துடிக்கிறார் அன்புமணி. ஆனால், இது தேவையற்ற பயம் என்பது அவருக்குப் புரியவில்லை.
வன்னியர் சங்கத்தின் தலைவர் அருள்மொழியிடம் சமீபத்தில் பேசிய அன்புமணி, சங்கத்தில் நான் சொல்கிறபடி மாற்றங்களை செய்யுங்கள் என வலியுறுத்தியுள்ளார். அதற்கு அருள்மொழி, "அய்யாவிடம் விவாதியுங்கள். அவர் என்ன சொல்கிறாரோ அதைத்தான் நான் செய்ய முடியும்'' என்று சொல்லி மறுத்துவிட்டார்.
இது குறித்து ராமதாசிடம் பெரும் விவாதமே நடந்திருக்கிறது. ஆனால், அன்புமணி யின் கோரிக்கையை ராமதாஸ் ஏற்கவே இல்லை. ராமதாஸ் குடும்பத்தைப் பொறுத்தவரை, அவரது குடும்பத்திலுள்ள அனைத்து நேரடி உறவுகளும் அன்புமணிக்கு ஆதரவாக இருக்கிறார்கள். இதனை வெளிப்படுத்தும் வகையில், "உங்களுக்குத்தான் வயசாயிடுச்சுல்ல; அரசியலை விட்டு விலகிடுங்கள். எல்லாத்தையும் அன்புமணி பார்த்துக்குவார்' என வலியுறுத்துகின்றனர். இதனை ஜீரணிக்க முடியாத ராமதாஸ், "எனக்கு வயசாயிடுச்சா? இளைஞராக இருக்கும் அவரு (அன்புமணி) அரசியலில் என்ன சாதிச்சாரு? கட்சிக்குள்ளே கோஷ்டி அரசியலை உருவாக்கி வருவதை தவிர வேறு என்ன செய்ய முடியும்?' என ஏகத்துக்கும் கொந்தளித்திருக்கிறார். இதனால் குடும்பத்தினரால் தனிமைப்படுத்தப் பட்டுள்ளார் ராமதாஸ்.
இந்த நிலையில்தான் கடந்த மாதம் தனக்கு நெருக்கமான சில உறவினர்களிடம் மனம்விட்டுப் பேசிய ராமதாஸ், குடும்பத்திலும் கட்சியிலும் நடக்கும் அரசியலை விவரித்து ஆதங்கப் பட்டுள்ளார்.
அவர்களோ, "இப்போதும் கட்சி உங்களிடம்தான் இருக்கிறது என்பதை நிலைநிறுத்த பழைய ராமதாசாக வெளியே வாருங்கள்' என நம்பிக்கை கொடுத்தனர். அதனை நிரூபிக்கத்தான் தமிழன்னை சிலையை சுமந்து ராமதாஸ் நடத்திய தமிழ் பரப்புரை பயணம். ஆக... தந்தை, மகனுக்குமிடையே நடக்கும் இந்த மோதலில் பா.ம.க.வின் எதிர்காலம் கேள்விக்குறியாகி யிருக்கிறது''’என்று சுட்டிக் காட்டுகிறார்கள் தைலாபுரம் தோட்டத்துக்கு நெருக்கமானவர்கள்.
அன்புமணி தரப்பில் விசாரித்தபோது,
"தகவல் தொழில் நுட்பம் அதிகரித்துள்ள காலம் இது. அதற்கேற்ப அரசியல் செய்ய வேண்டும். இளைஞர்களை ஈர்க்க திட்டமிடல் அவசியம். அதற்கான முன்னெடுப்புகளைத்தான் அன்புமணி செய்கிறார். இதனை உணராமல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதாக அய்யா நினைத்தால் எப்படி?''’என்று கேள்வி எழுப்பு கின்றனர்.
தமிழக மக்களின் நலன்களுக்காக போராடும் பா.ம.க.வில் தந்தை-மகனுக்குமிடையே நடக்கும் மோதல்கள் சரி செய்யப்பட வேண்டும் என்பதே நடுநிலையாளர்களின் கருத்தாக இருக்கிறது.
-செ.சஞ்சய்